Wednesday, February 25, 2015

நீர் பாசனத் தொட்டி !


வீட்டுக்காரர் 'க்ளிக்'கியது.
சின்ன வயசுல கொல்லிக்குப் போனால் கரண்ட் இருந்து தண்ணீர் இறைக்கும்வரை கண்டுகொள்ளமாட்டோம். ஆனால் கரண்ட் நின்றதும் 'பைப்'பில் வரும் தண்ணீர் அளவு குறைந்து விட்டுவிட்டு வந்து கடைசியில் நின்றுவிடும். அந்நேரம் ஓடிப்போய் அத்தண்ணீரை போட்டி போட்டுக்கொண்டு இஷ்டத்திற்கும் குடிப்பது.

இப்போது அந்த நினைவுகளுடன், ரசித்துக்கொண்டிருந்தபோது 'பைப்'பில் இருந்து வந்த கடைசி சொட்டுத் தண்ணீரைக்  காத்திருந்து இவர் 'க்ளிக்'கியது.

Friday, February 20, 2015

புறா !


எங்க வீட்டுக்கு அவ்வப்போது புறாக்களின் வருகையும் இருக்கும். குட்டிக் குருவிகளைப்போல் இல்லாமல் இவர்கள் தைரியமாக 'போஸ்' கொடுப்பார்கள்.
 
நல்ல தூக்கம்போல ! வந்தாங்கன்னா ஒரு குட்டித்தூக்கம் போடாமப்  போகமாட்டாங்க.

எங்க வீட்டிலிருந்து ஒருவரும், பக்கத்து வீட்டு மரத்திலிருந்து ஒருவரும் 'காஸிப்'பிக்கின்றனர்.

                               'காஸிப்'பித்தவர் பறந்துவிட, இவர் மட்டும் தனியே !

           இந்த மண்ணை எல்லாம் கலைத்துவிட்ட அந்த நபர் வேறுயாருமல்ல,

                                                                         இவரேதான் !!

Friday, February 13, 2015

யாருக்காகக் காத்திருக்கிறார் ???


" சொன்னா சொன்ன நேரத்துக்குக் கெளம்புறதில்ல. இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்தான் டைம், அதுக்குள்ள வரலன்னா, பேசாம விட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் " .

உங்களை மாதிரியேதான் நானும், இவரைக் காத்திருக்க வைப்பவரைக் காத்திருந்து, பார்க்கப் போகிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                       இதோ வந்துட்டேஏஏன், கொஞ்சம் லேட்டாயிடுச்சு, ஸாரி !!

 இரண்டு வேடங்களையும் ஏற்று நடித்துக் கொடுத்தவர் ஒருவரே !!
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, February 9, 2015

புயலுக்குப் பின்னே ..... !!


வெள்ளியன்று பலத்த காற்றுடன் ஆரம்பித்த மழை ஞாயிறு இரவு வரை சில நேரம் விட்டுவிட்டும், ப‌ல நேரம் தொடர்ந்தும் பெய்து நிலத்தை மட்டுமல்லாது, மனதையும் நனைத்தது.

                                                   துளிதுளி துளிதுளி மழைத்துளி !

                                 மழைத் துளியைக்கூட விட்டு வைக்காத காற்று !
         'காற்றுடன் மழை'ன்னு நான் சொன்னதை இப்பவாச்சும் நம்புறீங்களா ! 

                                                          மழைத்துளி 'மத்தாப்பூ'வாய்

                    இவ்வளவு மழையும் பெய்த பிறகு வானவில் வராட்டி எப்படி ?

ஞாயிறு மாலை ஒரு முடிவுக்கு வந்ததுபோல் வானவில் தோன்றினாலும் கூடவே மழையும் பெய்துகொண்டுதான் இருந்த‌து.

 மழையின்போது காலை நேர வானம்
                                   திடீர் வெயிலும், இருட்டிய மேகமூட்டத்துடனும்,

                        நேற்று காலை மரத்தின் பின்னனி மட்டும் பளிச்'சென !

                                    இன்று காலை அழகிய நிலவுடன் அமைதியாக !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 இன்று இன்னும் கொஞ்சம் 'பளிச்' நிலவுடன்.
பயந்துடாதீங்கோ, அமாவாசை வரைக்கும்லாம் அப்டேட் பண்ணும் ஐடியா ஏதும் இல்லீங்கோ !

Thursday, February 5, 2015

கன்றுக்குட்டி !!

                    
                                                              கொள்ளை அழகுடன் !

                                                    என்னைப் பார்க்கவில்லையாம் !

                                                             அவிழ்த்து விடேன்  !!

கோடையில் ஊருக்குப் போயிருந்த சமயம் ஒரு உறவு வீட்டிற்கு முதல்முறை போன‌போது அம்மாவின் வயிற்றில் இருந்தவர், மூன்று வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அவ்வீட்டிற்கு சென்ற‌போது இப்படி ஜம்மென்று கொள்ளை அழகுடன் இருந்தார்.

பார்த்ததும், 'அட, நம்ம பிரேம்குமார் மாதிரியே இருக்கே' என்று க்ளிக்'கிக்கொண்டு வந்தேன்.

டிசம்பர் மாதம், விடுமுறையில் வீட்டிற்கு வந்த மகளுடன் ஊரில் எடுத்த புகைப் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, "அம்ம்ம்மா, கேமராவுல இது எப்படி வந்துச்சு?" என்ற மகளின் ஆச்சரியக் கேள்வியால், 'வீட்டுக்குள் இருந்த மகளைத் தோட்டத்திற்கு அழைத்துபோய் காட்டாமல் விட்டுவிட்டேனே' என்று என்னையே நான் நொந்துகொண்டேன்.

" ..... அவங்க வீட்டிற்கு போயிருந்தபோது, எங்க பிரேம்குமார் மாதிரியே இருக்கவும் 'க்ளிக்'கினேன்", என்றேன்.

உங்களை மாதிரியேதான் மகளும், "யாரும்மா உங்க பிரேம்குமார் ?" என்று கேட்டாள்.

ஆமாம், யார் அந்த 'பிரேம்குமார்' ?

நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது எங்கள் வீட்டிற்கு மாடு ஒன்றின் திடீர் வருகை. வந்த‌ சில நாட்களிலேயே அது கன்று ஒன்றை ஈன்றது. அச்சு அசலில் படத்தில் இருக்கும் இந்த கன்று போலவேதான் இருந்தது அது.

அதுக்கு நான் வைத்த பெயர்தான் பிரேம்குமார். அப்போது நான் படித்துக்கொண்டிருந்த‌ துப்பறியும் கதையின் நாயகனின் பெயர்தான் அது.

எங்கிருந்து கூப்பிட்டாலும் முழு பெயெரோ அல்லது பிரேம் என்றாலோ அக்கன்று 'டக்'கென திரும்பிப் பார்க்கும். வளர்ந்த பிறகும் அப்படியேதான்.

இப்போதும் நாங்கள் சகோதரசகோதரிகள் ஒன்றாகக் கூடினால் எங்க 'பிரேம்' பற்றி பேசாமல் இருக்கமாட்டோம்.

பெயர் வைப்பதை இத்துடன் நிறுத்தமாட்டேன். பிடித்தவர்களின் வீட்டில் குழந்தை பிறந்தாலும் அவர்களின் குழந்தைக்கு ஒரு பெயரை வைத்துவிடுவேன். யார்யாரெல்லாம் வளர்ந்த பிறகு என்னைத் திட்டினாங்களோ !

ஆண் குழந்தை என்றால் பெரும்பாலும் கதையின் நாயகனாகவே இருப்பார்கள். பெண் குழந்தையாக இருந்தால் உடன் படித்த & பிடித்த‌ தோழிகளின் பெயராக இருக்கும்.

இப்படித்தான் அண்ணனின் மூன்று குழந்தைகளுக்கும் பெயர் வைத்தேன். நல்லவேளை, எங்க‌ அப்பா எல்லா பெயர்களையும் மாற்றி வைத்துவிட்டார். ஆனாலும் பெண்ணுக்கு மட்டும் நான் வைத்த பெயரே இன்றளவும் கூப்பிடும் பெயராக உள்ளது.

மாடு என்றாலே பெரும்பாலும் 'லஷ்மி'னுதான் பேர் வைப்பாங்க. ஆனால் நான் கொஞ்சம் வித்தியாசமாக இல்லையில்லை அதிவித்தியாசமாக, ஆமாங்க 'லஷ்மி' என பெண்ணின் பெயரை வைக்காமல் 'பிரேம்குமார்' என ஆணின் பெயரை வைத்திருக்கிறேன் என்பது சமீபத்தில்தான் தெரிந்தது.

நான் பயம் இல்லாமல் பழகிய‌து கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டி, கோழிக்குஞ்சு இவைகள் மட்டுமே. இவர்களின் கொள்ளை அழகில் மயங்கிவிடுவேன்.

கன்றுக்குட்டியும், ஆட்டுக்குட்டியும் திடீர்திடீர் என எழுந்து குதிக்க ஆரம்பித்து விடுவார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் நம் கால் விரல்களைப் பதம் பார்த்துவிடுவர். கோழிக் குஞ்சுகளின் கண்களுக்கு மை தீட்டிய மாதிரியே இருக்குமே, அது மனதைக் கொள்ளைகொள்ளும்.

ஆனாலும் இவர்களின் அம்மாக்கள் இவர்களை நாம் தொடுவதைப் பார்த்துவிட்டால் தீர்ந்தோம்.

மாடு கயிறை அறுத்துக்கொண்டு முட்ட வந்துவிடும். ஆடு அந்தளவிற்கு இல்லையென்றாலும் அதுவும் கோபப்படும். கோழி சொல்லவேத் தேவையில்லை, பறந்துபறந்து அடிக்கும்.

ஆனால் இவற்றை வளர்ப்பவருடன் நாம் ஒட்டிக்கொண்டு சென்றால் ஓரளவுக்குப் பிரச்சினை இருக்காது. இதுமாதிரி நிறைய வீடுகளுக்கு படையெடுத்திருக்கிறேன்.

இப்போது இவர்கள் எல்லோரும் எங்கேயோ போய்விட்டார்கள், பார்க்கவே முடியவில்லை !

Sunday, February 1, 2015

இருவருமே வேறு வேறு !!

கோடை விடுமுறை முடிந்து இன்றுதான் பள்ளி துவங்குகிறது. இதற்கான ஆயத்தங்கள் வீடு முதல் கடை வரை ஓரிரு வாரங்களுக்கு முன்பிருந்தே களைகட்டத் தொடங்கிவிட்டன.

இனி தெரு முழுவதும் பட்டாம்பூச்சிகளாய் பள்ளிப் பிள்ளைகள் பறந்து வருவதும், போவதுமாக வண்ணமயமாகிவிடும்.

நாங்களும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாமல் விட்டால் எப்படி ? எங்கள் பாப்புவிற்கும் இன்றுதான் பதினோறாம் வகுப்பிற்கான முதல்நாள்.

'அதற்குள் என் பெண் பதினோறாம் வகுப்பு படிக்கப் போகிறாளா !!' என எனக்குள் ஒரே ஆச்சரியம்.

(" வயச குறைப்பீங்கன்னு தெரியும், ஆனால் இப்படி அநியாயத்துக்கு பாப்பாவின் வகுப்பையும் சேர்த்தில்ல குறைச்சிட்டீங்க" _______ மனக்குமுறல் கே  க்  கு  து. மேற்கொண்டு படிச்சாதானே எதுக்காக குறைச்சேன்னு தெரியும் !)

எல்லா அம்மாக்களையும் போலத்தானே நானும். பிள்ளைகள் சீக்கிரமே வளர்ந்துவிட வேண்டும் என நினைப்பதும், பிறந்தநாள் & ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு மாறும்போதும் வியந்து 'அதுக்குள்ளே வளந்துட்டாங்களே' என வியப்பதும் வாடிக்கைதானே.

என் பெண்ணைவிட நான்தான் அன்று அதிக சந்தோஷமாக இருந்தேன். பின்னே இருக்காதா? இனி மதிய உணவுக்கு சாப்பாடு கட்ட வேண்  டிய  தில்  லைஐஐ ! வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்கொள்வதாக மகள் சொன்னதுதான் அதற்கு காரணம்.

அன்று மகள் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றதும், ஓடிப்போய் ஃப்ரிட்ஜில் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த சென்ற வருட‌ காகிதங்களை எல்லாம் வழித்தெடுத்துவிட்டு, சுத்தம் செய்து (வெளிப்பக்கம் மட்டும்தான்) தயாராக வைத்திருந்தேன்.


இன்று பள்ளியிலிருந்து எடுத்து வரும் முக்கியமான காகிதங்களை ஃப்ரிட்ஜில் ஒட்டிவைக்க வேண்டும். அவற்றுள் அதிமுக்கியமானது தொலைபேசி, அலைபேசி எண்களுடன் கூடிய அவளுடைய‌ தோழிகளின் பெயர்கள். ஒரு அவசரம் என்றால் உதவுமே என, இது எனக்கானது .

இதில் சில பெயர்கள் இன்று காணாமல் போயிருக்கும், சிலர் புதிதாக முளைத்திருப்பார்கள். சிலர் தொடர்ந்து இடம் பெற்றுக்கொண்டே இருப்பார்கள்.

நான் இந்த காகிதத்தை ஒட்டும்போதே ஒரு நோட்டமிடுவேன். வேறெதற்கு ? நம்ம ஊர் பிள்ளைகள் யாராவது தென்படுகிறார்களா என்பதற்குத்தான்.

இதில் என் பெண்ணிற்கு உடன்பாடில்லை. இருந்தாலும் என்னால் இந்தப் பழக்கத்தை விடமுடியாது.

இங்கே ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு சீஸன் உண்டு. பள்ளியில் கல்வியாண்டின் முதல் பாதியில் டென்னிஸ் விளையாடுவார்கள். இரண்டாம் பாதியில்தான் பேட்மிண்டன் ஆரம்பிக்கும். இந்த வருடமும் அப்படியே.

அந்த சமயத்தில் முதல்நாள் பேட்மிட்டன் முடிந்து வந்ததும், " அம்மா, புது தோழி கெடச்சிருக்கா, பேர்கூட ழா(ரா)ம்யா" என்றாள்.

 ழகரமும், ரகரமும் இணைந்து புதுவிதமாக இந்தப் பெயரும் காதுகளுக்கு இனிமையாகத்தான் ஒலித்தது.

" பெயரைப் பார்த்தால் ... ", என்று நான் முடிக்குமுன், "ஆமாம்ம்மா, பார்ப்பதற்கு நம்ம ஊர்(நாடு) மாதிரியேதான் இருக்கா" என்றாள்.

மகளுக்குத் தெரியும் அம்மா அடுத்து என்ன கேட்பாங்க என்று. அதனால் அவளே முந்திக்கொண்டு பதில் சொல்லிவிட்டாள்.

"ஆனால் அவளுக்கு  நம்மையும், நம் ஊரையும்,  பிடிக்காதாம்", என்றாள்.

"ஒருவேளை இங்கேயே பிறந்து வளர்ந்ததால்கூட இருக்கலாம், நாளானால் சரியாயிடும்" என்றேன். ஆனால் இது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

பிரிதொரு நாள் அவள் இலங்கை என்பதை அறிந்தேன்.

'ஒருவேளை, அங்குள்ள பிரச்சினைகளால் ஏற்பட்ட மாறாத வடுக்களால் அப்படி சொல்லியிருக்கலாம்' என்றேன். அவள் இலங்கைத் தமிழர் என்ற முடிவுக்கு நானே வந்துவிட்டேன்.

வழக்கம்போல் நாட்கள் விரைந்து ஓடியதில் மகள் பனிரெண்டாம் வகுப்புக்கு வந்துவிட்டாள். புதிய காகிதங்களுக்காக‌ மீண்டும் ஃப்ரிட்ஜின் வெளிப்பக்கம் சுத்தமாக்கப்பட்டது.

மாலையில் நாங்கள் இருவரும் அன்றைய சுவாரசியமான நிகழ்வுகளை அலசிக்கொண்டே காகிதங்களை ஒட்டினோம்.

வழக்கம்போல நானும் ஃபோன் நம்பர்கள் உள்ள காகிதத்தை நோட்டம் விட்டேன். அதில் 'ழா(ரா)ம்யா'வின் பெயர் புதிதாக முளைத்திருந்தது.

கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன். இப்போது 'பிடிக்காது' என்பதன் அர்த்தமும் விளங்கிய‌து.

அங்குள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் பெயரின் கடைசி எழுத்து, அதேபோல் அங்கிருக்கும் அரசியல்   வாதிகளின் பெயரின் கடைசி எழுத்திலும் அகரம் அல்லது ஏகாரம் மிகுந்திருக்குமே அந்தப் பெயரைப் போலவே இருந்தது அப்பெண்ணின் லாஸ்ட் நேம்.

கல்லூரிக்குப் பறந்துவிட்டாலும்  இன்றளவும் இருவரின் நட்பும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

கல்லூரி வாசத்தினால் இப்போது கொஞ்சம் மனப்பக்குவம் வந்திருக்கும் என்றே நினைக்கிறேன். வந்திருக்க வேண்டும்.

மீண்டும் நாட்கள் உருண்டோடியதில் ஒரு வருட கல்லூரி வாசம் முடிந்து மகளுக்குக் கோடை விடுமுறை வந்தது. ஊருக்குப் போனோம். அங்கே நெருங்கிய உறவில் குட்டிப் பூ ஒன்றின் வரவு எங்களை மிகவும் மகிழ்வித்தது.

நீண்ட நேரத்திற்கு குழந்தையின் அழகில் மயங்கியும், பேச்சு சுவாரசியத்தில் மூழ்கியும் இருந்த நான் நினைவு மீண்டு,  "பாப்பாவுக்கு என்ன பேர் வச்சிருக்கீங்க?", என்றேன்.

"ரம்யா" என்றார் குழந்தையின் அம்மா.

ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேரக் கண்களில் தேக்கியவாறு மகளைப் பார்த்து முறுவலித்தேன்.

புரிந்துகொண்டவளாய் "அம்ம்ம்மா, that's okay, இவள் ரம்யா, அவள் ழா(ரா)ம்யா," என்றாள் மகள்.

வீட்டில் ஃப்ரிட்ஜின்மேல் ஒட்டியிருந்த‌ காகிதம்,  'அவர்களால் உச்சரிக்க முடியாமல்தானே ரம்யா, ழா(ரா)ம்யாவானாள்' என‌ மனக் காற்றில் அசைந்தாடி காட்டிக்கொண்டிருந்தது.