Sunday, February 1, 2015

இருவருமே வேறு வேறு !!

கோடை விடுமுறை முடிந்து இன்றுதான் பள்ளி துவங்குகிறது. இதற்கான ஆயத்தங்கள் வீடு முதல் கடை வரை ஓரிரு வாரங்களுக்கு முன்பிருந்தே களைகட்டத் தொடங்கிவிட்டன.

இனி தெரு முழுவதும் பட்டாம்பூச்சிகளாய் பள்ளிப் பிள்ளைகள் பறந்து வருவதும், போவதுமாக வண்ணமயமாகிவிடும்.

நாங்களும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாமல் விட்டால் எப்படி ? எங்கள் பாப்புவிற்கும் இன்றுதான் பதினோறாம் வகுப்பிற்கான முதல்நாள்.

'அதற்குள் என் பெண் பதினோறாம் வகுப்பு படிக்கப் போகிறாளா !!' என எனக்குள் ஒரே ஆச்சரியம்.

(" வயச குறைப்பீங்கன்னு தெரியும், ஆனால் இப்படி அநியாயத்துக்கு பாப்பாவின் வகுப்பையும் சேர்த்தில்ல குறைச்சிட்டீங்க" _______ மனக்குமுறல் கே  க்  கு  து. மேற்கொண்டு படிச்சாதானே எதுக்காக குறைச்சேன்னு தெரியும் !)

எல்லா அம்மாக்களையும் போலத்தானே நானும். பிள்ளைகள் சீக்கிரமே வளர்ந்துவிட வேண்டும் என நினைப்பதும், பிறந்தநாள் & ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு மாறும்போதும் வியந்து 'அதுக்குள்ளே வளந்துட்டாங்களே' என வியப்பதும் வாடிக்கைதானே.

என் பெண்ணைவிட நான்தான் அன்று அதிக சந்தோஷமாக இருந்தேன். பின்னே இருக்காதா? இனி மதிய உணவுக்கு சாப்பாடு கட்ட வேண்  டிய  தில்  லைஐஐ ! வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்கொள்வதாக மகள் சொன்னதுதான் அதற்கு காரணம்.

அன்று மகள் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றதும், ஓடிப்போய் ஃப்ரிட்ஜில் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த சென்ற வருட‌ காகிதங்களை எல்லாம் வழித்தெடுத்துவிட்டு, சுத்தம் செய்து (வெளிப்பக்கம் மட்டும்தான்) தயாராக வைத்திருந்தேன்.


இன்று பள்ளியிலிருந்து எடுத்து வரும் முக்கியமான காகிதங்களை ஃப்ரிட்ஜில் ஒட்டிவைக்க வேண்டும். அவற்றுள் அதிமுக்கியமானது தொலைபேசி, அலைபேசி எண்களுடன் கூடிய அவளுடைய‌ தோழிகளின் பெயர்கள். ஒரு அவசரம் என்றால் உதவுமே என, இது எனக்கானது .

இதில் சில பெயர்கள் இன்று காணாமல் போயிருக்கும், சிலர் புதிதாக முளைத்திருப்பார்கள். சிலர் தொடர்ந்து இடம் பெற்றுக்கொண்டே இருப்பார்கள்.

நான் இந்த காகிதத்தை ஒட்டும்போதே ஒரு நோட்டமிடுவேன். வேறெதற்கு ? நம்ம ஊர் பிள்ளைகள் யாராவது தென்படுகிறார்களா என்பதற்குத்தான்.

இதில் என் பெண்ணிற்கு உடன்பாடில்லை. இருந்தாலும் என்னால் இந்தப் பழக்கத்தை விடமுடியாது.

இங்கே ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு சீஸன் உண்டு. பள்ளியில் கல்வியாண்டின் முதல் பாதியில் டென்னிஸ் விளையாடுவார்கள். இரண்டாம் பாதியில்தான் பேட்மிண்டன் ஆரம்பிக்கும். இந்த வருடமும் அப்படியே.

அந்த சமயத்தில் முதல்நாள் பேட்மிட்டன் முடிந்து வந்ததும், " அம்மா, புது தோழி கெடச்சிருக்கா, பேர்கூட ழா(ரா)ம்யா" என்றாள்.

 ழகரமும், ரகரமும் இணைந்து புதுவிதமாக இந்தப் பெயரும் காதுகளுக்கு இனிமையாகத்தான் ஒலித்தது.

" பெயரைப் பார்த்தால் ... ", என்று நான் முடிக்குமுன், "ஆமாம்ம்மா, பார்ப்பதற்கு நம்ம ஊர்(நாடு) மாதிரியேதான் இருக்கா" என்றாள்.

மகளுக்குத் தெரியும் அம்மா அடுத்து என்ன கேட்பாங்க என்று. அதனால் அவளே முந்திக்கொண்டு பதில் சொல்லிவிட்டாள்.

"ஆனால் அவளுக்கு  நம்மையும், நம் ஊரையும்,  பிடிக்காதாம்", என்றாள்.

"ஒருவேளை இங்கேயே பிறந்து வளர்ந்ததால்கூட இருக்கலாம், நாளானால் சரியாயிடும்" என்றேன். ஆனால் இது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

பிரிதொரு நாள் அவள் இலங்கை என்பதை அறிந்தேன்.

'ஒருவேளை, அங்குள்ள பிரச்சினைகளால் ஏற்பட்ட மாறாத வடுக்களால் அப்படி சொல்லியிருக்கலாம்' என்றேன். அவள் இலங்கைத் தமிழர் என்ற முடிவுக்கு நானே வந்துவிட்டேன்.

வழக்கம்போல் நாட்கள் விரைந்து ஓடியதில் மகள் பனிரெண்டாம் வகுப்புக்கு வந்துவிட்டாள். புதிய காகிதங்களுக்காக‌ மீண்டும் ஃப்ரிட்ஜின் வெளிப்பக்கம் சுத்தமாக்கப்பட்டது.

மாலையில் நாங்கள் இருவரும் அன்றைய சுவாரசியமான நிகழ்வுகளை அலசிக்கொண்டே காகிதங்களை ஒட்டினோம்.

வழக்கம்போல நானும் ஃபோன் நம்பர்கள் உள்ள காகிதத்தை நோட்டம் விட்டேன். அதில் 'ழா(ரா)ம்யா'வின் பெயர் புதிதாக முளைத்திருந்தது.

கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன். இப்போது 'பிடிக்காது' என்பதன் அர்த்தமும் விளங்கிய‌து.

அங்குள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் பெயரின் கடைசி எழுத்து, அதேபோல் அங்கிருக்கும் அரசியல்   வாதிகளின் பெயரின் கடைசி எழுத்திலும் அகரம் அல்லது ஏகாரம் மிகுந்திருக்குமே அந்தப் பெயரைப் போலவே இருந்தது அப்பெண்ணின் லாஸ்ட் நேம்.

கல்லூரிக்குப் பறந்துவிட்டாலும்  இன்றளவும் இருவரின் நட்பும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

கல்லூரி வாசத்தினால் இப்போது கொஞ்சம் மனப்பக்குவம் வந்திருக்கும் என்றே நினைக்கிறேன். வந்திருக்க வேண்டும்.

மீண்டும் நாட்கள் உருண்டோடியதில் ஒரு வருட கல்லூரி வாசம் முடிந்து மகளுக்குக் கோடை விடுமுறை வந்தது. ஊருக்குப் போனோம். அங்கே நெருங்கிய உறவில் குட்டிப் பூ ஒன்றின் வரவு எங்களை மிகவும் மகிழ்வித்தது.

நீண்ட நேரத்திற்கு குழந்தையின் அழகில் மயங்கியும், பேச்சு சுவாரசியத்தில் மூழ்கியும் இருந்த நான் நினைவு மீண்டு,  "பாப்பாவுக்கு என்ன பேர் வச்சிருக்கீங்க?", என்றேன்.

"ரம்யா" என்றார் குழந்தையின் அம்மா.

ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேரக் கண்களில் தேக்கியவாறு மகளைப் பார்த்து முறுவலித்தேன்.

புரிந்துகொண்டவளாய் "அம்ம்ம்மா, that's okay, இவள் ரம்யா, அவள் ழா(ரா)ம்யா," என்றாள் மகள்.

வீட்டில் ஃப்ரிட்ஜின்மேல் ஒட்டியிருந்த‌ காகிதம்,  'அவர்களால் உச்சரிக்க முடியாமல்தானே ரம்யா, ழா(ரா)ம்யாவானாள்' என‌ மனக் காற்றில் அசைந்தாடி காட்டிக்கொண்டிருந்தது.

21 comments:

  1. மீண்டும் பழைய நினைவுகளை மீட்டுவதில் ஒரு தனி சுகம் ..
    ம்ம்ம் இந்த செல்லங்கள் சீக்கிரம் வளர்கிறார்களே என்ற ஆதங்கம் எனக்குமுண்டு ...என் மகள் அவ கின்டர் கார்டனில் புது தம்பி வந்திருக்கான் அவன் பேர் அட்டிஷான் என்றாள் :) கடைசியில் என்ன காமெடி தெரியுமா
    ஆதி ஈசன் என்ற அழகிய நாமத்தை ஜெர்மன்காரங்க எப்படி கூப்பிட்டங்களோ அப்படியே சொல்லியிருக்கா குழந்தை :)

    ReplyDelete
  2. வாங்க ஏஞ்சலின்,

    உங்க செல்லத்தின் கண்டுபிடிப்பான 'அட்டிஷான்'னும் சூப்பரா இருக்கே ஏஞ்சல்.

    எனக்கு கடையிலுள்ள குட்டிகுட்டியான அழகான ட்ரெஸ் & விளையாட்டுப் பொருள்களைப் பார்க்கும் போதெல்லாம் 'அடடா, நம்ம பாப்பா சீக்கிரமே வளந்துட்டாளே!' என ஒரு ஆதங்கம் வரும். நேற்றுகூட‌ காஸ்ட்கோ போனபோது அந்த செஷனில் கொஞ்சம் நேரம் நின்று பார்த்துகொண்டே இருந்தேன். உங்க பழைய நினைவுகளையும் பகிர்ந்ததில் நன்றி ஏஞ்சலின்.

    ReplyDelete
  3. வணக்கம்
    நினைவுகளை மிக அருமையாக தொட்டுச்சென்றீர்கள்.. மகளின் திறமைக்கு முதலிடம் சொல்லிய விதம் நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன்,

      உங்கள் வருகையில் மகிழ்ச்சியும், நன்றியும்.

      Delete
  4. என்னமா காலங்கள் கடந்துவிட்டன. என் மகனும் சின்னதில் மூச்சு விடாம நல்லாபேசுவார். கின்டர் கார்டன் போனபோது ஆரம்பத்தில் டொச் வரவில்லை.தமிழ்தான் பேசுவார்.வீட்டுக்கு வந்தால் சொல்லுவார் எங்கட ஸ்கூல்ல (தமிழ்)சேருங்கப்பா என. மாலையில் இவர் வீட்டுக்கு வந்ததும் காலை எழுந்ததிலிருந்து கி.கார்டன் விட்டு வந்தது வரை ஒன்று விடாம சொல்வார்.அப்பழக்கம் இன்று வரை தொடருது. இங்கு DA என வந்தால் டா என உச்சரிக்கனும். அவர் ஆங்கிலத்தில் வந்தாலும் டே என சொல்லமாட்டார். டா என்றுதான் சொல்வார். உதா> சன்டே என்பதை சன்டா என்பார். இப்பவும் சிலவேளை வரும். இந்த வாரம் அவர் ஆஸ்திரியாவில். அவரைப்பற்றியே நாங்க மீட்க. நீங்களும் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியிருக்கிறீங்க. நன்றி சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியசகி,

      மூச்சுவிடாம பேசுவார், அதுவும் மழலையில் எனும்போது எவ்வளவு இனிமையாக‌ இருந்திருக்கும் ! உங்க மகன் ஸ்கீ விளையாட்டுப் போட்டிக்குப் போயிருப்பார் என்றே நினைக்கிறேன், அவருக்கு வாழ்த்துக்கள்! இங்குள்ள ஒரு சானலில் ஜெர்மன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்போது உங்களைத்தான் நினைத்துக்கொள்வேன். நன்றி ப்ரியசகி.

      Delete
  5. அருமையான பதிவு, "ரம்யா" என்றார் குழந்தையின் அம்மா.ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேரக் கண்களில் தேக்கியவாறு மகளைப் பார்த்து முறுவலித்தேன்.

    நல்ல ஒரு நெகிழ்ச்சியான நினைவுகள்.

    ReplyDelete
    Replies
    1. ராஜேஷ் வாங்கோ, அவை நெகிழ்ச்சியான தருணங்கள்தான். வருகையில் மகிழ்ச்சியும், நன்றியும்.

      Delete
  6. நீங்கள் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளராக மாறிக்கொண்டு வருகிறீர்கள். சுவாரஸ்யமாக ரம்யா, ழாம்யா பற்றி எழுதியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரஞ்ஜனி வாங்க வாங்க, சின்ன வயசுல படிச்ச ஏகப்பட்ட கதைகளின் பாதிப்பாக இருக்குமோ ! தெரியல. அதிலும், ஒரு பக்க, அரைப்பக்க கதைகள் என்றால் விடமாட்டேன். உங்கள் வருகையில் மகிழ்ச்சியும், நன்றியும்.

      Delete
  7. ம்ம்ம் நம் குழந்தைகள் வளர்ந்து வருவது போல் அவர்களுடனான நினைவுகளும், நிகழ்வுகளும் நம்முடனேயே பயணிக்கின்றன ....ஒரு டயரி போல.....உங்கள் பதிவு இங்கும் அதே போல மீட்டது....

    ReplyDelete
    Replies
    1. கீதா,

      நீங்கள் சொல்வதுபோல நினைவுகளை மன டைரியிலிருந்து மீட்டெடுப்பது போல‌த்தான் உள்ளது. உங்கள் வருகையில் மகிழ்ச்சியும், நன்றியும்.

      Delete
  8. பிறகு வந்து படித்து கருத்திடுகிறேன் சகோ.

    ReplyDelete
    Replies
    1. உமையாள்,

      அவசரமில்லை, காத்திருக்கிறேன், நீங்க வலைச்சர வேலைகளை முடிச்சுட்டு பொறுமையா வாங்க, சரியா !

      Delete
  9. Replies
    1. வருகைக்கும், ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  10. நினைவுகளை மீட்டெடுப்பதில் ஒரு சுகம் - அதிலும் குழந்தைகளோடான நம் அனுபவங்களை மீட்டெடுப்பது அலாதியான சுகம்.

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  11. நினைவுகளை அசைபோடும் இனிமையே தனி.

    எங்கள் வீட்டு ரம்யா, இந்தாண்டு படிப்பது பத்தாம் வகுப்பில்.

    ReplyDelete
    Replies
    1. ஓ, உங்க வீட்டிலும் ஒரு ரம்யா செல்லமா ! வருகைக்கு நன்றி ஆறுமுகம்.

      Delete
  12. குழந்தைகள் கிடுகிடுவென்று வளர்ந்து விடுகிறார்கள். நாம் தான் இன்னும் அவர்களின் மழலைமொழியில் பேசிக் கொண்டிருப்போம்.....:))) நான் என் மகளின் ரைம்ஸை எல்லாம் இப்போதும் அவள் அன்று சொன்ன விதத்தில் சொல்லிக் கொண்டிருப்பேன்....:))

    ரம்யா - ழாம்யா அருமை...

    ReplyDelete