Thursday, October 8, 2015

பெரியம்மா சுட்ட தோசை !!


இன்றைக்கும் கௌரி தோசை ஊற்றும்போது அவள் அம்மாகூட அவளின் நினைவுக்கு வரமாட்டார், எதிர் வீட்டு 'பெரியம்மா'தான் வந்துவந்து போவார்.

கௌரி சின்ன பிள்ளையா இருந்தப்போ அவளின் வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு பெரியம்மா இருந்தார். ஆறோ ஏழோ ஆண் பிள்ளைகள். வீட்டில் போதிய வருமானம் கிடையாது, நிலம் கொஞ்சமாகத்தான் இருந்தது.

அதனால் அந்த பெரிய‌ம்மா வீட்டு வாசலிலேயே இட்லி & தோசைக் கடை போட்டுவிட்டார். காலையில் மட்டுமே வியாபாரம் நடக்கும்.

அந்தப் பெரியம்மாவால், இந்தக் கடையில் வந்த‌ வருமானத்தில் சேமிக்க முடிந்த‌தோ என்னவோ, அந்த அண்ணன்களுக்கு ஓரளவுக்கு சாப்பாடு கொடுத்திருப்பார் என நம்பலாம்.

அந்த அண்ணன்களில் கொஞ்சம் பெரியவர்களாக இருப்பவர்கள் தோட்டத்து பக்கமுள்ள ஒரு பெரிய முள்வேலி மரத்தை அடியோடு வெட்டி இழுத்து வந்து ஒரே அளவாக நறுக்கி, நுனியில் உள்ள குச்சிகளைத் தனியாகவும், அடிப்பகுதியில் கொஞ்சம் பருமனாக உள்ள குச்சிகளைத் தனியாகவும் வாசலில் ஒரு ஓரமாக வரிசையாக பரப்பி விடுவர்.

அவை வெய்யிலில் தினமும் காய்ந்துகாய்ந்து விறகாகி எரியத் தயாராகிவிடும்.

வயலுக்குப் போய் திரும்பும் பெரியப்பா வாழையிலைக்கு பதில், பெரிய வாய்க்காலில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் முளைத்திருக்கும் தாமரையைப் போன்றே படர்ந்திருக்கும் ஒரு கொடியின் இலைகளைக் காலையிலேயேப் பறித்து வந்து, கழுவித் தண்ணீரை வடிய வைப்பார்.

எல்லோரது வீட்டைப் போலவே அவர்களுக்கும் பெரிய வாசல் இருந்தது . வாசலில் மண்ணாலான ஒரு ரெட்டை அடுப்பும், ஒரு ஒத்தை அடுப்பும் இருக்கும்.

காலையிலேயே ரெட்டை அடுப்பில் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒன்றாக ம‌ண் தோசைக்கல் காய்ந்துகொண்டிருக்கும். ஒத்தை அடுப்பில் அலுமினிய இட்லி குண்டான் இருக்கும்.

அந்த முள் விறகு சொல்லி வைத்தாற்போல் நின்று, நிதானமாக எரியும். லேசான ஒரு பரபரப்பு அங்கே தென்பட ஆரம்பிக்கும்.

பெரியம்மா இட்லியை ஊற்றியதோ, வெந்ததும் எடுத்ததோ எதுவும் அவளுக்கு நினைவில்லை. ஆனால் இரண்டு தோசை கல்லிலும் மாறிமாறி தோசை ஊற்றி திருப்பிப்போட்டு எடுத்து அடுக்கியதுதான் இன்னமும் அவளின் நினைவில் இருக்கிறது.

தோசை மெத்து மெத்தென்று, கொஞ்சம் சிவந்தாற்போல் இருக்கும்.

தொட்டு சாப்பிட சிவப்பு மிளகாய் & பொட்டுக்கடலை வைத்து அரைக்கப்பட்ட சிவப்பு நிற சட்னியும், பச்சை மிளகாய் & பொடுக்கடலை வைத்து அரைக்கப்பட்ட பச்சை நிற சட்னியும் தயாராய் கிண்ணங்களில் இருக்கும்.

சட்னி கெட்டியா இருக்காது, தண்ணீராகத்தான் இருக்கும். சட்னி முழுவதும் தாளித்த கடுகு நிறைய மிதந்துகொண்டு இருக்கும்.

நிறைய பேர் சாப்பிட வருவார்கள். இலையில் தோசையை வைத்து, பக்கத்தில் சட்னியை ஊற்றிக் கொடுத்ததும் ஆர்வமாய் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு மண் தரைதான் இருக்கை.

இவை எல்லாவற்றையும் தன் வீட்டுத் திண்ணையில் இருந்து நோட்டமிட்டுக்கொண்டிருப்பாள் அக்குட்டிப் பெண்.

உள்ளிருந்து அம்மா 'சாப்பிட வா சாப்பிட வா 'என எத்தனை முறை கூப்பிட்டாலும் கௌரியின் காதிலேயே விழாது.

கிட்ட வந்து 'வா' என்றதும் "அதுதான் வேண்டும்" என எதிர் வீட்டைத்தான் கையால் காட்டுவாள்.

'சரி வா நான் சுட்டுத் தரேன்' என்றாலும் பிடிவாதமாக மறுத்துவிடுவாள். அவளின் பிடிவாதம்தான் பேர்போன ஒன்றாயிற்றே.

அம்மா ஒரு ஆளைத்தேடி, அனுப்பி, வாங்கி வரச்சொல்லி சாப்பிட‌க் கொடுப்பார். கூடவே கொஞ்சம் திட்டும் விழும்.

அந்த தோசையும், பெரியம்மா கொடுத்த‌ (தண்ணீர்)சட்னியும் சேர்ந்த சுவை, வீட்டில் அம்மா சுட்டுத்தரும் பஞ்சுபஞ்சாய் இருக்கும் இட்லியிலும், மொறுமொறு தோசையிலும், கெட்டி தேங்காய் சட்னியிலும், சுவையான சாம்பாரிலும் அவள் பார்த்ததே இல்லை.

அவ்வளவு ஏன், இப்போது அவள் சுடும் இந்த தோசையிலும் அது கிடைக்கவில்லையாம் !

Wednesday, October 7, 2015

போலாம் ரைட் !!

புதுக்கோட்டை ! புதுக்கோட்டை ! புதுக்கோட்டை ! சீக்கிரம்சீக்கிரம், இன்னும் மூனே மூனு நாள்தான் பாக்கி இருக்கு, வர்றவங்களாம் வந்து பேருந்துல‌ ஏறுங்க, வலைப்பதிவர் திருவிழாவுக்குப் போகலாம் !!

என‌க்கும் இந்த வண்டியில ஏறி புதுக்கோட்டை போய் இறங்க ஆசைதான், ஒரு முறையேனும் இந்த வாய்ப்பு வராமலா போயிடும் !!


வழக்கம்போல் ஊரில் நடக்கும் வீட்டு விசேஷங்களில் நேரில் சென்று கலந்துகொள்ள இயலாத நிலைதான் இந்த நம்முடைய வலைப்பதிவர் திருவிழாவிலும் ஏற்பட்டிருக்கிற‌து என்னைப்போன்ற ஒருசிலருக்கு. மனதைத் தேற்றிக்கொள்வோம் !

வலையுலகம் முழுவதும் விழா பற்றிய பேச்சாகவே இருப்பதால் விழா ஏகத்துக்கும் களைகட்டியிருப்பது தெரிகிறது.

விழா சிறப்பாக நடைபெற இரவுபகல் பாராமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கும், விழா முடியும்வரை இருந்து செய்யப்போகும் விழாக் குழுவினருக்கு பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் !