இன்றைக்கும் கௌரி தோசை ஊற்றும்போது அவள் அம்மாகூட அவளின் நினைவுக்கு வரமாட்டார், எதிர் வீட்டு 'பெரியம்மா'தான் வந்துவந்து போவார்.
கௌரி சின்ன பிள்ளையா இருந்தப்போ அவளின் வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு பெரியம்மா இருந்தார். ஆறோ ஏழோ ஆண் பிள்ளைகள். வீட்டில் போதிய வருமானம் கிடையாது, நிலம் கொஞ்சமாகத்தான் இருந்தது.
அதனால் அந்த பெரியம்மா வீட்டு வாசலிலேயே இட்லி & தோசைக் கடை போட்டுவிட்டார். காலையில் மட்டுமே வியாபாரம் நடக்கும்.
அந்தப் பெரியம்மாவால், இந்தக் கடையில் வந்த வருமானத்தில் சேமிக்க முடிந்ததோ என்னவோ, அந்த அண்ணன்களுக்கு ஓரளவுக்கு சாப்பாடு கொடுத்திருப்பார் என நம்பலாம்.
அந்த அண்ணன்களில் கொஞ்சம் பெரியவர்களாக இருப்பவர்கள் தோட்டத்து பக்கமுள்ள ஒரு பெரிய முள்வேலி மரத்தை அடியோடு வெட்டி இழுத்து வந்து ஒரே அளவாக நறுக்கி, நுனியில் உள்ள குச்சிகளைத் தனியாகவும், அடிப்பகுதியில் கொஞ்சம் பருமனாக உள்ள குச்சிகளைத் தனியாகவும் வாசலில் ஒரு ஓரமாக வரிசையாக பரப்பி விடுவர்.
அவை வெய்யிலில் தினமும் காய்ந்துகாய்ந்து விறகாகி எரியத் தயாராகிவிடும்.
வயலுக்குப் போய் திரும்பும் பெரியப்பா வாழையிலைக்கு பதில், பெரிய வாய்க்காலில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் முளைத்திருக்கும் தாமரையைப் போன்றே படர்ந்திருக்கும் ஒரு கொடியின் இலைகளைக் காலையிலேயேப் பறித்து வந்து, கழுவித் தண்ணீரை வடிய வைப்பார்.
எல்லோரது வீட்டைப் போலவே அவர்களுக்கும் பெரிய வாசல் இருந்தது . வாசலில் மண்ணாலான ஒரு ரெட்டை அடுப்பும், ஒரு ஒத்தை அடுப்பும் இருக்கும்.
காலையிலேயே ரெட்டை அடுப்பில் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒன்றாக மண் தோசைக்கல் காய்ந்துகொண்டிருக்கும். ஒத்தை அடுப்பில் அலுமினிய இட்லி குண்டான் இருக்கும்.
அந்த முள் விறகு சொல்லி வைத்தாற்போல் நின்று, நிதானமாக எரியும். லேசான ஒரு பரபரப்பு அங்கே தென்பட ஆரம்பிக்கும்.
பெரியம்மா இட்லியை ஊற்றியதோ, வெந்ததும் எடுத்ததோ எதுவும் அவளுக்கு நினைவில்லை. ஆனால் இரண்டு தோசை கல்லிலும் மாறிமாறி தோசை ஊற்றி திருப்பிப்போட்டு எடுத்து அடுக்கியதுதான் இன்னமும் அவளின் நினைவில் இருக்கிறது.
தோசை மெத்து மெத்தென்று, கொஞ்சம் சிவந்தாற்போல் இருக்கும்.
தொட்டு சாப்பிட சிவப்பு மிளகாய் & பொட்டுக்கடலை வைத்து அரைக்கப்பட்ட சிவப்பு நிற சட்னியும், பச்சை மிளகாய் & பொடுக்கடலை வைத்து அரைக்கப்பட்ட பச்சை நிற சட்னியும் தயாராய் கிண்ணங்களில் இருக்கும்.
சட்னி கெட்டியா இருக்காது, தண்ணீராகத்தான் இருக்கும். சட்னி முழுவதும் தாளித்த கடுகு நிறைய மிதந்துகொண்டு இருக்கும்.
நிறைய பேர் சாப்பிட வருவார்கள். இலையில் தோசையை வைத்து, பக்கத்தில் சட்னியை ஊற்றிக் கொடுத்ததும் ஆர்வமாய் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு மண் தரைதான் இருக்கை.
இவை எல்லாவற்றையும் தன் வீட்டுத் திண்ணையில் இருந்து நோட்டமிட்டுக்கொண்டிருப்பாள் அக்குட்டிப் பெண்.
உள்ளிருந்து அம்மா 'சாப்பிட வா சாப்பிட வா 'என எத்தனை முறை கூப்பிட்டாலும் கௌரியின் காதிலேயே விழாது.
கிட்ட வந்து 'வா' என்றதும் "அதுதான் வேண்டும்" என எதிர் வீட்டைத்தான் கையால் காட்டுவாள்.
'சரி வா நான் சுட்டுத் தரேன்' என்றாலும் பிடிவாதமாக மறுத்துவிடுவாள். அவளின் பிடிவாதம்தான் பேர்போன ஒன்றாயிற்றே.
அம்மா ஒரு ஆளைத்தேடி, அனுப்பி, வாங்கி வரச்சொல்லி சாப்பிடக் கொடுப்பார். கூடவே கொஞ்சம் திட்டும் விழும்.
அந்த தோசையும், பெரியம்மா கொடுத்த (தண்ணீர்)சட்னியும் சேர்ந்த சுவை, வீட்டில் அம்மா சுட்டுத்தரும் பஞ்சுபஞ்சாய் இருக்கும் இட்லியிலும், மொறுமொறு தோசையிலும், கெட்டி தேங்காய் சட்னியிலும், சுவையான சாம்பாரிலும் அவள் பார்த்ததே இல்லை.
அவ்வளவு ஏன், இப்போது அவள் சுடும் இந்த தோசையிலும் அது கிடைக்கவில்லையாம் !
தோசைக் கதை சூப்பர்..சிறு வயது நினைவுகளை என்ன வந்தாலும் ரீப்ளேஸ் செய்ய முடியாது சித்ராக்கா! இப்ப கௌரி மீண்டும் ஊருக்குப் போய் அங்கே அதே பெரியம்மா அதே தோசையைச் சுட்டுக் கொடுத்தாலும் அந்தச் சுவை கிடைக்காது. எல்லாம் "அதே"-வாக இருந்தாலும் இப்ப கௌரி சின்னப் பிள்ளை இல்லையே!! :)
ReplyDeleteசில நினைவுகள் நம் மனதோடு ஃப்ரீஸ் ஆகிரும்..திரும்ப கிடைக்கவே கிடைக்காது. அவ்வப்போது இப்படி அசை போட்டுப் பாத்துக்க வேண்டியதுதான்.
ஆமாம், முற்றிலும் உண்மைதான், ஏனோ ஒரு சிலர் மட்டும் இப்படி ஆழமா பதிஞ்சு போயிடறாங்க !!
Deleteவருகைக்கு நன்றி மகி!
வீட்டுல சாப்பிடுவதை விட இந்தமாதிரி சாப்பாடு கூட ருசிக்கும். நிஜக்கதை மாதிரியெல்லோ இருக்கு. எனக்கு நீங்க எழுதின விடயங்கள் அப்படியே காட்சியாய் மனக்கண்ணில் வந்தது. அருமையா எழுதியிருக்கிறீங்க சித்ரா. தோசையை வர்ணிச்சதிலே எனக்கு தோசை சாப்பிடும் ஆசை வந்துவிட்டது. ஹா..ஹாஹா. இன்னைக்கு தோசைதான் வீட்டில.......
ReplyDelete(படத்தில் தோசையை காட்டியே ஞாபகப்படுத்திட்டீங்க.லோங் டேஸ் தோசை சாப்பிடேல்லை என.)
'நிறைய செய்யும்போது நல்லாருக்கும்'னு சொல்லுவாங்க, அப்படியாகக்கூட இருக்கலாம்.
Delete"நிஜக்கதை மாதிரியெல்லோ இருக்கு" __ :D
இவை எல்லாவற்றையும் பக்கத்து வீட்ல உக்காந்து பார்த்ததால தெரிந்தது :)
"லோங் டேஸ் தோசை சாப்பிடேல்லை" ___ எப்படி முடியுது ? அப்படின்னா சீக்கிரம் போய் சுடுங்க. நன்றி ப்ரியா !
எங்க பார்த்தாலும் தோசையா? நல்ல நினைவுகள் அக்கா. எனக்கு அப்பாவின் அம்மா சுடும் தோசை ஞாபகம் வந்து விட்டது. காலையில் சுட்டு பள்ளிக்கு அனுப்பினார்கள். இடையில் பள்ளியிலிருந்து அழைத்து சென்றார்கள் அவர்கள் இறந்து விட்டார்கள் என .மறக்க முடியாத இழப்பு.
ReplyDeleteபாட்டியுடனான பேத்தி உறவு மறக்க முடியாததுதான். உங்க பாட்டியின் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி & நன்றி அபி.
Deleteவணக்கம்
ReplyDeleteபார்த்தவுடன் ஆசைதான் வருகிறது... தொடர்ந்து சிறப்பாக அசத்த எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எடுத்துக்கோங்க, இட்லி, தோசை எல்லாம் பிடித்தமான ஒன்றாச்சே.
Deleteவாழ்த்துக்களுக்கு நன்றி ரூபன் !
இந்தமாதிரி,இந்த அளவு,பொத்தல்களான மெத்தென்ற தோசைதான் வயதானவங்கள் விரும்புவது. தினம் இந்த தோசை இந்தியா வருகிரது..
ReplyDeleteகௌரி தோசைக்காசைப் பட்டதுபோல கடை பக்ஷணங்களுக்கு ஆசைப்பட்ட எத்தனையோ பெயர்களின் ஞாபகம் வருது. அன்புடன்
காமாக்ஷிமா,
Deleteஆமாம்மா, இட்லிக்கு அடுத்து பெரியவங்களுக்கு இப்படி கொஞ்சம் மொத்தமான தோசை என்றால் சாம்பாரில் ஊறி சாப்பிட வசதியா இருக்கும். சில திண்பண்டங்களை சில கடைகளில் வாங்கினால்தான் நன்றாக இருக்கும். இப்படியும் தேடிப்போய் வாங்குவதுண்டு. வரும் ஞாபகத்தை புது ப்ளாகில் எழுதுங்க, நீங்க விருப்பப்பட்டு வாங்கி சாப்பிட்டதை நாங்களும் தெரிந்துகொள்கிறோம். அன்புடன் சித்ரா.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......வாயூற வச்ச பதிவு சித்ரா!.
ReplyDeleteஉண்மைதான் என்னதான் வீட்டில் பார்த்துப் பார்த்து செஞ்சாலும்
சில பதார்த்தங்கள் வெளியே அவர்கள் செய்து தரும்போது சுவையே அலாதி!
முன்பு வீட்டில் என் பிள்ளைகள் சிறுவயதில் யாரேனும் வீட்டுக்குச் சென்று அங்கு அவர்களிடம் சாப்பிட்டு வந்தால் (பிரமாதமா இல்லாம எனக்கிருக்கும்) ப்பா.. செம டேஸ்ட் என்று உருகி உருகிச் சொல்வார்கள். (நான் அதைவிட எத்தனை பாடுபட்டு திறமா செஞ்சு கொடுத்திருப்பேன். அப்பெல்லாம் உறுஞ்சி உறுஞ்சிச் சாப்பிடுவினம்) ஆனா அதுபோல் செய்மா என்றும் கட்டளை பிறக்கும்.
அப்படித்தான் மா. சில சுவைகளும் அழகும் மனதைப் பொறுத்தது!
கூட்டமா உட்கார்ந்து சாப்பிடும்போது குட்டீஸுக்கு ஒரு உற்சாகம் வந்துவிடும், அது சாப்பாட்டிலும் எதிரொலிக்கத்தானே செய்யும்.
Deleteசரியாச் சொன்னீங்க, மனதால்தான் அழகு & சுவை கூடுவதெல்லாம். அந்த மண் தோசைக்கல்லில் சுட்ட தோசை வாசமும், சட்னியின் தாளித்த வாசமும் இன்னமும் இருக்கிறது.
நன்றி இளமதி !
ஆஹா... இப்பவே தோசை சாப்பிட்டாகணும் - அதுவும் சிவப்பு மிளகாய், பொட்டுக்கடலை சட்னியோட!
ReplyDeleteசெய்து சாப்பிட்டாச்சா !! இந்நேரம் சாப்பிட்டிருக்கணும் :)
Deleteநன்றி வெங்கட் !
எனக்கும் தோசைன்னா தர்மபுரியில் இருந்தப்போ குரும்பட்டி தோசை சால்னா தான் இன்னும் நினைவில் இருக்கு .ஒரு பாட்டி செய்வாங்க அப்பாவுடன் ஜீப்பில் சென்று வாங்கி வருவோம் .
ReplyDeleteஎந்த 5 நட்சத்திர ஹோட்டலிலும் அந்த சுவை இதுவரை எனக்கு கிடைக்கவில்லை .சில விஷயங்கள்
நெஞ்சில் ஆழ பதிந்துவிடும் அதுபோலதான் இந்த தோசையும் நமக்கு .
அப்புறம் அந்த தோசை அப்படியே தள்ளுங்க எனக்கு .மெத்து மெத்துன்னு இருக்கு இங்கே இனிமே மாவு புளிக்காது வெயில் போச்சு .
ஓ, உங்களுக்குக் குரும்பட்டி தோசை சால்னாவா :) ரெண்டு தோசை இருக்கே, எடுத்துக்கோங்க !
Deleteமாவு அரைச்சு ஓவன்ல வச்சு லைட் போட்டு வச்சா புளிச்சிடப் போவுது. இதுக்காகக் கவலப்பட்டு தோச சாப்டாம இருக்க முடியுமா ? சீக்கிரம் தோசை சுட்டு விண்டர் தோசைனு உங்க ப்ளாக்ல போடுங்க.
நன்றி ஏஞ்சல் !
தோசையும், அதைப் பற்றி எழுதிய விதமும், ஆஹா.... சுவையில் ஒன்றையொன்று மிஞ்சி விட்டன . உங்கள் இளமைக்கால நினைவுகள், என்னையும் பல வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்று விட்டன. அதற்காக உங்களுக்கு நன்றி.
ReplyDeleteசுவையான தோசைப் பதிவு . வாழ்த்துக்கள்!
ஆமாம் .... நான் ஏற்கனவே எழுதிய கமெண்ட் உங்களை வந்தடையவில்லையோ?
ராஜலக்ஷ்மி,
Deleteஎங்கே எதைப் பார்த்தாலும் அதனோடு தொடர்புடைய யாராவது ஒருவர் நினைவுக்கு வந்து விடுகிறார் ஹா ஹா !!
வரலையே, ஸ்பேமிலும் பார்த்தேன், காணோம் .
உங்களின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி !
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அந்த சிவப்புச் சட்னி.....உடன் தோசை ரொம்ப சுவையாகச் சுட்டு இருக்கின்றீர்கள்! சுவைத்தோம்...ரசித்து!
ReplyDeleteஎன்ன கொஞ்சம் ஆறிப்போச்சு தாமதமாக வந்ததால்..ஹஹ்ஹ
ReplyDeleteசகோ துளசி & கீதா,
Deleteநீங்க நம்பி, தைரியமா, லேட்டா வரலாம், எப்போ வந்தாலும் அப்போதே சுடச்சுட சுட்டுத் தரப்படும், சிவப்புச் சட்னியுடன் . ஹா ஹா ஹா :)))
தோசை பார்த்து ஆசை...(தொடர்கிறேன்)
ReplyDeleteவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி சுவாதி!
Deleteஅடடா , நாங்களும் பெரியம்மா தோசைக் கடைக்கு போய் வந்தோம் சித்ராக்கா.
ReplyDeleteஹா ஹா ! நன்றி அனிதா :)
Delete