Monday, January 19, 2015

ரோ ஜா, ரோ ஜா ..... !!


மேலேயுள்ள இரண்டு பூக்களும் வீட்டுக்கார‌ரிடமிருந்து கடன் வாங்கியவை !

முன்பெல்லாம் பூக்களை அப்படியே நேராக‌ எடுப்பேன். இப்போது பக்கத்திலிருப்பவரைக் காப்பியடித்து(பள்ளிப் பழக்கம் போகமாட்டிங்கிது), கொஞ்சம் பக்கவாட்டிலிருந்தும் எடுக்கக் கற்றுக்கொண்டேன்.  ஹா ஹா, எவ்ளோ அழகா வந்திருக்கு !!

                                                 பூவிலிருந்து மேலெழும் தேனீ !


                            நானும், அலைபேசியும் சேர்ந்து ஏற்படுத்திய 'பூ கிரகணம்' !!

                                               முழுவதுமாகப் பூத்துவிட்ட பூக்கள் !


 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெயில் இப்போதான் கொஞ்சம் எட்டிப்பாக்குது, ஒரு 'வாக்' போயிட்டு வந்திடுறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday, January 14, 2015

பொங்கல் வாழ்த்து !


உங்கள் அனைவருக்கும் இனிய, மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

அப்பா வாங்கி வரும் பொங்கல் வாழ்த்துக்களைப் பங்குபோட்டு எடுத்து, வீட்டிலேயே இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும், பக்கத்து வீட்டில் இருக்கும் தாய்மாமாவுக்கும், எதிர் வீட்டிலிருக்கும் சித்தப்பா பிள்ளைகளுக்கும், உடன் படிக்கும் தோழிகளுக்கும் அவரவ‌ர்களின் முகவரியை எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பிவிட்டு, அவர்களிடமிருந்து நமக்காக வரும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்ள, தபால்காரர் வரும் நேரத்திற்கு வாசலிலேயேக் காத்திருந்து மகிழ்ந்தது ஒருகாலம்.

இப்போது வலைப்பூ மூலமாக உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை சொல்வதிலும் ஒரு மகிழ்ச்சி. 

பொங்குக, பொங்கலோ பொங்கல் !!

Monday, January 5, 2015

தேங்காய் படுத்திய பாடு !


"அங்கு மண்ணெல்லாம் எப்படி இருக்கு?,என்னென்ன மரம் செடிகளைப் பார்க்க முடிகிறது?, என்னென்ன பறவைகள் & விலங்குகள் இருக்கின்றன‌? " என்று ஏதோ இயற்கை சூழலை ஆராய்ச்சி செய்ய வீட்டுக்காரர் அமெரிக்கா போனதுபோல் இது மாதிரியான கேள்விகளைத்தான் முதலில் கேட்டு வைத்தேன்.

அவரிடமிருந்து எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான், "வந்து பாக்கதான போற", என்பதுதான் அது.

என‌க்கோ வெளிநாடு என்பதைப் பற்றி ஒரு ஐடியாவும் கிடையாது. நெருங்கிய உறவினரில் யாராவது போய் இருந்தால்தானே தெரிந்துகொள்வதற்கு.

ஒரு நல்ல நாளில் இங்கு வந்தாச்சு. மரம், செடி, கொடிகளைத் தவிர மற்றவற்றை பார்ப்பது சிரமமாய் இருந்தது.

வீட்டிலிருந்த ஆளுயர ஃப்ரிட்ஜில் என்ன இருக்கும் எனும் ஆவலில் திறந்து பார்த்தால் ராட்சஸ சைஸில் கோஸ், காலிஃப்ளவர், சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிற பெரிய வெங்காயங்கள் போன்றவை ஆக்கிரமித்திருந்தன.

விலை அதிகம் என்பதாலோ அல்லது அதிலிருந்து ஒரு வாசனை வரும் என்பதாலோ அல்லது அதை சமைக்கவே தெரியாது என்பதாலோ என்னவோ எங்க‌ அம்மா காலிஃப்ளவரை சமைத்ததேயில்லை. மேலும் அதில் 'புழு' வேறு இருக்கும் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருந்ததால் அதைத் தொடவே பயம்.

வந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குப் போனோம். கடையின் பெயரைப் பார்த்ததும் ( Albertsons ) son க்கு முன்னால் '&' போடாமல் விட்டிருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் safeway ( நினைத்ததென்னவோ sefe ) போகலாம் என்றார். ஸ்பெல்லிங்கைக் கேட்டுத் தெரிந்துகொண்டு , "இப்படி கூடவா பேர் வைப்பாங்க !" என மனதில் எண்ணம்.

இவரைக் கேட்டாலோ, "ஏதோ தெரியாம‌ வச்சிட்டாங்க, மன்னிச்சு விட்டுடு " என்பார்.

இதுவரை வெங்கடேஸ்வரா மளிகை ஸ்டோர், முரளி & சன்ஸ் ஆயில் மில், மீனா மெடிக்கல் இப்படியான பெயர்களையேப் பார்த்துப் பழகிய என‌க்கு இதெல்லாம் புதிதாகவே இருந்தன.

அதேபோல் எந்தக் கடையில் பார்த்தாலும் காய்கள் பலநாள் குளிரில் அடிபட்டு வாடி வதங்கிப்போய் இருந்ததே தவிர ஃப்ரெஷ்ஷாக எதுவுமில்லை. தேங்காயைத் தேடிப் பார்த்தால் கிடைக்கவேயில்லை.(இப்போது இது எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது)

ஊரில் இருந்தவரை தினமும் தேங்காய் சேர்க்காமல் சமையல் இல்லை என்பதால், "தேங்காய் வேணும், எங்கு கிடைக்கும் ?" என்றேன்.

"கோகனட் ஹில் போனால் கிடைக்கும், சனிக்கிழமை போகலாம்", என்றார்.

நாங்கள் இருக்கும் ஊரைச் சுற்றிலும் தூரத்தில் மலைகள் இருப்பது தெரியும் என்பதால் அங்குள்ள ஏதோ ஒரு மலையில்தான் இந்த 'கோகனட் ஹில்' இருக்க வேண்டும். அப்படி போனால் "நிறைய இளநீரும், தேங்காய்களும் வாங்கி வர வேண்டும்" என எண்ணினேன்.

இவரிடமிருந்து எந்த  விவரமும் கிடைக்கப் போவதில்லை என்பதால் அமைதி காத்தேன்.

சனிக்கிழமை காலையும் வந்தது. 'கோகனட் ஹில்'லுக்கும் கிளம்பியாச்சு. கிளம்பிய சில நிமிடங்களிலேயே சில கடைகள் இருந்த வளாகத்திற்குள் வண்டி நின்றது.

"இறங்கி வா போகலாம்" என்றார் இவர்.

"ஓ, ஒருவேளை அதற்கான நுழைவுச் சீட்டை இங்குதான் வாங்க வேண்டுமோ" என எண்ணிக்கொண்டே உள்ளே நுழையும் முன் மேலே எழுதியிருந்த கடையின் பெயரைப் பார்த்துவிட்டேன்.  "Coconut Hill" என்றிருந்தது. அட‌, இது நம்ம ஊர் கடை ! கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அதிலிருந்து பெயரை வைத்து எடைபோட மறந்தேன்.

அதன்பிறகு சில மாதங்களில் நம்ம ஊர் பெண் ஒருவர் அறிமுகமானார். அவர் இங்கு வந்து ஒன்றிரண்டு வாரங்களே ஆகியிருந்தன. இரண்டொரு நாளில் நெருங்கிய‌ தோழிகளாகிவிட்டோம்.

ஒரே குடியிருப்பு வளாகம் என்பதால் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம்.

"எந்த ஊர்?, எங்க இருக்கீங்க? " என்ற முக்கியமான கேள்விகளுக்குப் பின் அதி முக்கிய கேள்வியான "இன்னைக்கு உங்க வீட்ல என்ன சமையல் ? " என்ற கேள்வி பிறந்தது.

அவர் ஏதோ ஒரு குழம்பைச் சொன்னார். நான் பதிலுக்கு "வாழைப்பூ & முருங்கைக் கீரை சாம்பார்" என்றேன்.

அவர் ஆச்சரியமாகி "வாழைப் பூ, முருங்கைக் கீரை எல்லாம்கூட‌ இங்கு கிடைக்குதா? எங்கு வாங்கினீங்க? " என்றார்.

நான் எதேச்சையாக "கோகனட் ஹில் போய் வாங்கி வந்தேன்" என்றேன்.

அவரோ "இங்கு ஃப்ரெஷ் கோகனட்டே கிடைக்காதாமே. ஆனா நீங்க கோகனட் ஹில் போய் வாங்கி வந்தேன்னு சொல்றீங்க. அது எங்கிருக்கு? இங்கிருந்து எவ்வளவு தூரம்?" என்றார் ஆவலாக.

"ஆஹா, நம்மை மாதிரியே ஒரு ஆள் கிடைசிருக்காங்க, இவங்கள லேசுல விட்டுடக் கூடாது" என உள்ளே உறங்கிக்கொண்டிருந்த மன‌ பூதம் எதிரில் வந்து நாட்டியமாடியது.,

நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து நடந்து போகும் தூரம்தான். ஆனாலும் "யான் பெற்ற இன்பத்தை நீயும் பெற வேண்டாமா" என்ற நல்ல்ல்ல எண்ணத்தில், "நானும் உங்கள மாதிரிதானே புதுசா வந்திருக்கேன், இடமெல்லாம் சரியா தெரியல, கண்டிப்பா உங்க வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சிருக்கும், வந்ததும் கேட்டுட்டு சொல்லுங்க‌", என்றேன்.

மாலை நெருங்க நெருங்க கண்டிப்பாக அந்தத் தோழியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும் என‌ எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

நினைத்த மாதிரியே தொலைபேசி அழைக்கவும் எண்ணைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன் அந்தத் தோழியின் அழைப்புதானென்று.

அவரின் செல்லக் கோபத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் விரைந்து அழுத்தினேன் talk பட்டனை.