Wednesday, April 30, 2014

எங்க ஸ்கூல், எங்க டீச்சர் !!

                                                                   படம் உதவி:கூகுள்

சென்ற வாரம் வியாழக்கிழமை(04/24/14) மதியம் 1:50 க்கெல்லாம் தயாராக இருந்தேன், எப்படியும் 1:51க்கு மகளிடமிருந்து ஃபோன் வருமென்று. ஆம், கல்லூரிக்கு போனபிறகு முதன்முதலாக அன்றுதான் அவளுக்குப் பிடித்த music வகுப்புக்கு போயிருக்கிறாள்.

புது இடம், புது சூழல் ....... சாப்பாடு உட்பட அனைத்தும் புதிது. நேரம் ஒத்து வராததால் முதல் இரண்டு quarter ரிலும் flute வகுப்பில் சேர முடியவில்லை. சூழ்நிலையை ஓரளவுக்கு சமாளிக்கக் கற்றுக்கொண்ட பிறகு முதல் flute class அன்றுதான் !

வாரத்தில் ஒருநாள் வியாழன் அன்று 1:00 முதல் 1:50 வரை ம்யூஸிக் வகுப்பு. முடிந்ததுமே 10 நிமிட இடைவேளையில் அடுத்த‌ வகுப்புக்குப் போக ...... இல்லையில்லை ஓட வேண்டும். ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு இடத்தில் !

முதல்நாள் ம்யூஸிக் வகுப்பு முடிந்தவுடன் என்னக் கூப்பிடுவாள் என்பது எனக்குத் தெரியும். அதனால் ஏற்கனவே அவளிடம் சொல்லி வைத்திருந்தேன், எல்லா வகுப்புகளும் முடிந்த பிறகுதான் என்னை அழைக்க வேண்டுமென்று.  இருந்தாலும் ம்யூஸிக் வகுப்பாயிற்றே ! உடனே கூப்பிடுவாள் என்றுதான் காத்திருந்தேன்.

நினைத்த மாதிரியே அழைப்பும் வந்தது.

"அம்மா,யூ நோ வாட்? " என்றாள் உற்சாகத்துடன்.

"எங்க புது ம்யூஸிக் டீச்சரைப் பற்றி உனக்கொரு சர்ப்ரைஸ், என்னன்னு சொல்லு பார்க்கலாம்" என்றாள் அதே உற்சாகத்துடன்.

ம்யூஸிக் டீச்சரைப் பற்றிய சர்ப்ரைஸ் என்றால் ........ ?

அவர் என்னுடைய வகுப்புத் தோழியாக இருந்திருக்கவும் சான்ஸ் இல்லை. நான் அவரது ஆசிரியையாகவோ அல்லது அவர் எனக்கு ஆசிரியையாகவோ இருந்திருக்கவும் சான்ஸேஏஏஏ இல்லை . ஏனென்றால் நான் ம்யூஸிக் வகுப்புக்கே போனதில்லை. விருப்பம் இருந்திருந்தாலும் வசதி வாய்ப்புகள் வாய்த்திருக்க வேண்டுமே !

"நேரமாகுது பாரு, நீயே சொல்லிடு" என்றேன்.

அவளும் ஓடிக்கொண்டே, "அம்மா, அவங்க எங்க 'ஹைஸ்கூல்'ல படிச்சாங்களாம்மா" என்றாள்.

"ஓ, அப்படியா ! எப்போ ?" என்றேன்.

"80 களில் படித்தார்களாம், நாங்க ரெண்டு பேரும் எங்க ஸ்கூலைப் பற்றி நிறைய பேசினோம், சரிம்மா, நேரமாயிடுச்சு, மீதி விஷயத்தை ஈவ்னிங் வந்து சொல்கிறேனே "  என்றாள் சந்தோஷமாக !

நானும் அவள் சந்தோஷத்தில் பங்குகொண்டு ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நாம் எல்லோருமே உறவுகளைத் தாண்டி சில விஷயங்களில், சிலவற்றில் உரிமை கொண்டாடத்தான் செய்கிறோம். அவற்றுள் நாம் படித்த பள்ளியும், நம்முடைய ஆசிரியரும் முதலிடம் பெறுவர்.

எத்தனை வருடங்களானாலும் 'எங்க ஸ்கூல், எங்க டீச்சர், எங்க க்ளாஸ் ரூம், எங்க காலேஜ்' என்றுதான் சொல்லுவோம்.

எங்கோ ஒரு மூலையில் இருந்து இங்கு வந்து, தான் படித்த இந்த ஊர் பள்ளியை மகள்  'எங்க ஸ்கூல்'  என்றதும் 'எவ்வளவு உரிமையுடன் சொல்கிறாள்' என்று நினைத்துக்கொண்டேன்.

பிறகு வீட்டுக்காரருக்கு மெஸேஜ் அனுப்பினேன், " நம்ம‌ பாப்பா ஸ்கூல்ல படிச்சவங்கதானாம், அவங்க ம்யூஸிக் டீச்சர்" என்று.

அட, இப்போது நான்கூட எங்க(!) பாப்பு படித்த‌ பள்ளியை உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டேனே !!

Thursday, April 24, 2014

இந்தப் பூ ! எந்தப் பூ ? ______ 1


இந்தப் பூ எந்தப் 'பூ'ன்னு டக்குனு சொல்லுங்க பார்க்கலாம் !  ம் ......... எங்களுக்கும் ஐடியா வருமில்ல !


ஒருவேளை Stanford பக்கத்துல இருக்கறதாலயோ அல்லது Harvard ரொம்ப தூரத்துல இருக்கறதாலயோ என்னவோ தெரியலீங்க, இப்படியெல்லாம் ஐடியா வந்து கொட்டுது.


இன்று ஒரே ஒரு க்ளூ மட்டும் :  இந்தப் பூவின் செடி முழுவதையும் நாம் சமையலில் பயன்படுத்திக்கொள்வோம்.

முக்கியமாக‌ இதன் முற்றிய காய்களைக்கூட விடமாட்டோம். 'காய்'க்கு பதிலாக வேறொரு வார்த்தையைப் போட்டிருக்கலாம், போட்டால் எளிதாகக் கண்டுபிடித்து விடுவீர்களே !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பதிவின் நீட்சி !!

                                          ஆமாங்க, இது கொத்துமல்லி பூவேதான் !


காமிராவில் பலமுறை முயற்சித்தும் படங்கள் கலங்களாகத்தான் இருக்கும். நேற்று செல் ஃபோனில் எடுத்துப் பார்த்தேன். பிடித்த மாதிரியே படங்கள் பளிச்.


கொத்துமல்லியின் இலை, விதை தவிர‌, பூவை யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்று நினைத்தே பதிவிட்டேன். அதை ஏற்கனவே நுணுக்கமாகப் பார்த்து ரசித்திருக்கும் ஜெயராஜு, ஏஞ்சலின் ஆகிய‌ இருவரின் முயற்சிக்கும் நன்றிங்க.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆஹா, இங்கு நேற்று நள்ளிரவிலிருந்தே மழை பெய்து கொண்டிருப்பதால் மீண்டும் கோடை ஸாரி ....... வசந்தம் குளிர்ந்துவிட்டது !


                                   இன்றைய இயற்கை ஷவரில் குளித்துவிட்டு .........

Monday, April 21, 2014

எங்கள் வீட்டுத் தோட்டம் _________ தக்காளி

இந்தப் பதிவை போடலாமா வேண்டாமா என்பதில் குழப்ப நிலை நீடித்ததால் பல மாதங்களுக்குப் பிறகு வெளிவருகிறது. பதிவு கொஞ்சம் சோகமானது, அதனால்தான் :((

ஒரு தொட்டியில் மண்ணை நிரப்பி, உழவர் சந்தையில் இருந்து வாங்கிவந்த தக்காளிப் பழத்திலுள்ள விதைகளைத் தூவிவிட்டு தண்ணீர் தெளித்துவிட்டேன்.


                                      தொட்டி நிறைய செடிகள் முளைத்து வந்தன.


ஒரு தொட்டியில் ஒரு செடி நடலாம். ஆனால் நான் பல செடிகளை நட்டு வைத்தேன். செடிகளைக் கீழே போட மனமில்லை. அப்படியும் நிறைய செடிகள் மீதமாயின. ஏனோ தெரியவில்லை, மேலேயுள்ள இரண்டு தொட்டிகளில் உள்ள செடிகள் இறந்துவிட்டன. பிறகு புது மண் வாங்கிவந்து நிரப்பி மீதமுள்ள செடிகளை நட்டு வைத்தேன்.

எல்லோரும் நன்றாகவே வளர்ந்தனர்.

 தொட்டியிருக்குமிடம் தெரியாமல் சுற்றிலும் படர்ந்துவிட்டனர்.


                                                                    பூக்கள் பூத்தன.

பிஞ்சுகள் விட்டு ........


                                                    நிறைய   காய்களும் காய்த்தன.

காய்த்த காய்கள் பழுக்கவும் ஆரம்பித்தன.

இதுவரை எல்லாமே நல்லாத்தான் போய்கிட்டிருந்தது. ஆனால் நன்கு பழுக்க ஆரம்பித்ததும்தான் பிரச்சினையும் ஆரம்பித்தது. நல்ல சிவப்பாக இருக்கும்போது பறிக்கலாம் என விட்டு வைத்ததுதான் தவறு. அடுத்தடுத்து ஒவ்வொரு பழமாகக் காணாமல் போன‌து.

நான்கூட ஏதோ பறவைதான் வந்து காலி பன்ணுவதாக நினைத்தேன். சில நாட்களில் தொட்டிகள் எல்லாம் கீழே சாய்ந்திருக்கும். செடியின் வெயிட் தாங்காமல்தான் என்று நானே நினைத்துக்கொண்டேன்.


பிறகு ziploc போட்டும் பார்த்தேன்.

ஒருநாள் காலை பேட்டியோவில் ஒரு தொட்டிக் கருகில் குண்டா கறுப்பா ஒன்று அசையவும், கதவைத் திறந்து வெளியே போய் பார்த்தால் ஒரு பெரிய எலி. ஒரே ஓட்டம் உள்ளே வந்துவிட்டேன். பார்த்து பல வருடங்கள் ஆன நிலையில் பார்த்ததும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆக‌ பழங்களை காலி பண்ணியது எலி என்பது தெரிஞ்சு போச்சு.


இனி செடிக‌ள் இங்கிருந்தால் எலிகளின் வரவு அதிகரிக்கும் என நினைத்து செடிகளை அகற்றிவிட்டேன். நிறைய பிஞ்சுகள் இருந்தன. அதுவுமல்லாமல் சிறு பிஞ்சுகளிலும் எலியின் பல் பதிந்திருந்ததால் எதையும் பயன்படுத்தவும் முடியாது.

ஒருசமயம் மேல் வீட்டில் இருந்தபோது தக்காளி வைத்து சூப்பராக வந்தது. அந்த ஆசையில்தான் இந்த முறையும் வைத்தேன்.

இனி தக்காளி வளர்ப்பதாக இருந்தால் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வளர்க்கக் கூடாது என்பது புரிந்தது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற வருடம் போட்ட விதைகளிலிருந்து தப்புச் செடிகள் இன்னமும்  வந்துகொண்டேதான் இருக்கின்றன.

தக்காளி , மிளகாய், கத்தரிக்காய், இவற்றையெல்லாம் ஒரு இடத்திலிருந்து பிடுங்கி வேறோர் இடத்தில் நட்டால்தான் நன்றாக வளருமாம். நடும்போது வேருக்கு மேலேயுள்ள ஒருசில கணுக்களில் உள்ள இலைகளை முழுவதுமாக நீக்கிவிட்டு அப்பகுதி நன்றாக‌ மண்ணில் மூடும்படி நட்டால், அவ்விடங்களில் இருந்து வேர் வளர்ந்து நன்கு காய்த்து, பழங்களும் சுவையாக இருக்குமாம்.

இன்று காலை வேறோர் இடத்தில் நடுவதற்கு தயாராகவுள்ள நிலையில் .......

புது இடத்தில் நடப்பட்டுள்ளதால் சோர்வினால் இன்று ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்காதாம். நாளை எடுத்துப் போட்டுவிடுகிறேன்.


நானே விட்டாலும் இவர்கள் விடமாட்டார்கள் போலும். இரண்டு நாட்களுக்கு முன் எட்டிப் பார்த்துள்ள மற்றுமொரு தப்புச்செடி.  :)))

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

04 / 23 14

 குட்டிச் செடியும், புது இடம் பிடித்துள்ள பெரிய செடியும்  ......

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Saturday, April 19, 2014

சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூல் !!


வசந்தகால விடுமுறையில் மகள் வீட்டுக்கு வந்தபோது " இந்த ஊர் சாப்பாடு சாப்பிட்டு போரடிச்சிடுச்சும்மா, அதனால தினமும் இல்லையென்றாலும்,  வாரத்துல ரெண்டு மூனு தடவையாவது நம்ம‌ சாதம் வச்சு சாப்பிடப் போறேன், கோடை விடுமுறையில் சாதம், சாம்பார் & உருளைக்கிழங்கு செய்யச்சொல்லி கற்றுக் கொடும்மா" என்று கேட்டிருக்கிறாள்.

அதனால‌ அடுத்த வருடத்துக்கான ஹவுஸிங் செலக்ட் பண்ணும்போது கிச்சனுடன் கூடிய அப்பார்ட்மெண்ட் செலக்ட் பண்ணியாச்சு.

இந்த இடத்தில் ////////////// "மகளுக்கு காரம் சாப்பிட்டப் பழக்கம் போய்விட்டதா? அதெல்லாம் கொஞ்சநாளைக்குத்தான். நம் உடம்பில் பழகிய காரம் அவ்வளவு எளிதில் போகாது. மறுபடி காரம் சாப்பிட ஆரம்பித்துவிடுவாள் பாருங்கள்" //////////////////// என்று ரஞ்சனி அவர்கள் ஏற்கனவே இங்கு சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. உண்மைதான் . ஒரு பெரிய கவலை விட்டது.

இதன்மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், எங்க பாப்புவுக்கு ஜூன் மாதத்தில் சமையல் சொல்லிக் கொடுக்கப் போகிறேன்.

"அதுக்கு இப்போ இன்னாவாம் ?" என்று கேட்கிறீர்களா ! வெயிட் வெயிட் !

சமையல் கத்துக்கணும்னா சும்மாவா ?  அரிசி, பருப்பு & காய்கறி எல்லாம் வாங்க காசு வேணாமா ?  அதுக்குத்தான் இந்த‌ ஐடியா. 'சம்மர்'ல சமையல் வகுப்பு நடத்தலாம்னு இருக்கேன்.

சமையல் வகுப்பில் சேர‌ விருப்பமுள்ளவர்கள் அடுத்த பக்கத்திலுள்ள விண்ணப்பத்தினைப்  பூர்த்தி செய்து அனுப்பலாம். குறைவான எண்ணிக்கையிலேயே இடங்கள் உள்ளதால்,  first come, first served basis ல் தேர்வு செய்யப்படுவார்கள். அதனால‌ முன்கூட்டியே அப்ளை பண்ணுவது நல்லது.

என்னவொன்று, அமெரிக்காவில் வகுப்புகள் நடக்கறதால சிலபல ஆயிரம் (டாலர்கள்) செலவாகும். செலவானாலும் 'கற்றுவிடலாம்'  என்ற‌ நம்பிக்கையுடன் இருக்கலாம்.

வகுப்பில் யார் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம். வயது வரம்பெல்லாம் இல்லை. "ஆறு மாதம்தானே முடிஞ்சிருக்கு, எங்க பாப்புவ சேர்த்துப்பாங்களோ ? " என்ற சந்தேகமெல்லாம் வேண்டவே வேண்டாம். கண்டிப்பா சேத்துக்குவேன், ஆனா ஃபீஸ் மட்டும் டபுளா pay பண்ணணும். அம்மா & பொண்ணு ரெண்டு பேருமா சேர்ந்தாங்கன்னா மொத்த கட்டணத்துல 10% சலுகை உண்டு. குடும்பத்தோட வர்றதுன்னா 25% சலுகை வழங்கப்படும்.

இதுமாதிரி நிறைய rules & regulations எல்லாம் இருக்குங்க‌. அதையெல்லாம் பணம் கட்டிய பிறகு மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.

சமைக்கும் பாத்திரத்தை 'டொப்'புன்னு வச்சிங்கின்னா அதுக்கு தனியா ஃபைன். பக்கத்து வீட்டுக்கு காது கேக்குற மாதிரி பேசி 'அப்பார்ட்மெண்ட் ஆஃபீஸ்'ல மாட்டி விட்டுட்டிங்கின்னா அதுக்கு தனியா ஃபைன். சாப்பிடவே முடியாத அளவுக்கு தீச்சிட்டிங்கன்னா அதுக்கு தனியா ஃபைன் ....... இப்படியா பல 'ஃபைன்'க‌ள் இருக்கு.

இவற்றை எல்லாம் வகுப்பினுள் நுழையும்முன் நான்கைந்து பக்கங்களில் படிக்கவே முடியாத பொடீஈஈஈ எழுத்துக்களில் இருக்கும் அந்த தாளில் உங்களை கையெழுத்து போடச் சொல்லி வாங்கி வைத்துக்கொள்வேன்.

அட, அதுக்குள்ள விண்ணப்பங்கள் மலைபோல குவிஞ்சு கிடக்கே ! உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்து, வகுப்பில் இடம் கிடைத்தால் .......... அங்கு உங்களை சந்திக்கிறேன் !! 

Tuesday, April 15, 2014

வெட்கத்தில் ஒரு குளியல் !

நான் என் மகளை அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு சென்றேன். 'ஜெட் லாக்'காவது ஒன்னாவது, எப்போதும்போல் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு உறவுகளின் வீடுகளுக்குப் பயணமானேன்.

முதல் பயணம் தம்பியின் வீடு. அங்குதான் இரண்டு குட்டீஸ்கள் இருக்கிறார்கள். சென்ற முறை போனபோது அவர்களது பெண் ப்ரியா மூன்றாம் வகுப்பிலும், பையன் அர்ஜுன் முதல் வகுப்பிலும் அடியெடுத்து வைத்திருந்தார்கள். இரண்டு வருடங்களுக்குப் பின் இன்றுதான் பார்க்கப் போகிறோம்.

அவர்கள் பள்ளிக்கு செல்லுமுன் சென்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாய் இருந்தேன். எவ்வளவு முயற்சித்தும் கிளம்பிப் போக காலை பத்து மணிக்குமேல் ஆகிவிட்டது.

"அக்கா வர்றதால இன்னிக்கு  நாங்க ஸ்கூலுக்குப் போகமாட்டோம்" என்று காலையிலேயே அடம் பிடித்தார்களாம். பிறகு மிரட்டி & உருட்டி அனுப்பியிருக்கிறார்கள்.

பள்ளி வேன் மாலை நான்கு மணிக்குத்தான் வரும் என்றாலும் என் மகள் இரண்டு மணிக்கே பால்கனியில் போய் நின்று அவர்கள் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த வெயிலிலேயே தவமிருந்தாள்.

கடிகாரத்தின் முட்கள் மணி நான்கை நெருங்க நாங்களும் பால்கனிக்கு விரைந்தோம்.  "இந்த வேன் இல்ல, அந்த வேன் இல்ல" என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போதே " இதோ வேன் வந்தாச்சு" என்று தம்பி  சொல்லவும், முதலில் இறங்கியது அவர்களின் மகள். நிறையவே மாற்றம் தெரிந்தது.

இறங்கியதும் அவள் கண்கள் வீட்டை நோக்கி அலைபாய்ந்தன‌. ஆச்சரியத்துடன் "ஹை, அக்கா வந்துட்டாங்க" என்று சொல்லிக்கொண்டே மேலே ஓடி வந்தாள்.

ஆனால் பையன் இறங்கியவன்தான், திரும்பவே இல்லை. இவர்கள் கூப்பிட்டும் அங்கேயே நடு சாலையிலேயே டென்னிஸ் விளையாட ஆரம்பித்துவிட்டான். பைக்குகளும், ஆட்டோக்களும் பறந்துகொண்டிருந்தன.

தம்பியோ, "நான் கீழ வரணுமா, இல்ல நீயே மேல வந்திடுறியா ?" என்றதும் பின்பக்கமாகவே(backward)  நடந்து வந்தான். மூன்றாவது மாடியிலுள்ள வீட்டுக்கும் படிகளில் அப்படியேதான் ஏறி வந்தான்.

வந்தவன் யாரையும் பார்க்காமல் ஓடிப்போய் சோஃபாவில் ஏறி கவிழ்ந்து படுத்துக்கொண்டு அதிலிருந்த தலையணைகளை மேலே போட்டு மூடிக்கொண்டான். எவ்வளவு கூப்பிட்டும் காதிலேயே வாங்காத மாதிரி என்னமாய் நடிக்கிறான் !

இரண்டு அக்காக்களும் அவனருகிலேயே விளையாடிக்கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தான், பிறகு தன்னுடைய பைக், ஹெலிகாப்டர், கார் என பலவற்றைக் கொண்டுவந்து கடைபரப்பி தனியாகவே முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டே, யாரையும் நிமிர்ந்துகூட பார்க்காமல் விளையாடினான். இவர்கள் பேச்சுக் கொடுத்தாலும் அவன் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

பிறகு தம்பியின் மனைவி வந்து, "இதுக்கு மேல அழுக்காக்க இதுல ஒன்னுமில்ல, போய் குளிச்சுட்டு ட்ரெஸ் மாத்திட்டு வா, சாப்பிடலாம்" என்று தன் மகனின் வெள்ளை நிற யூனிஃபார்ம் அநியாயத்துக்கு செம்மண் நிறமாகி இருப்பதைப் பார்த்துக்கொண்டே சலிப்புடன் சொன்னார்.

ஓடிப்போய் குளித்தான். அவன் குளித்து முடித்து வருவதற்குள் எங்களின் ஆலோசனைப்படி இரண்டு அக்காக்களும் சமையலறை கதவின் பின்னால் ஒளிந்துகொண்டனர்.

பாத்ரூமிலிருந்து வந்தவன் லிவிங் ரூம் சென்று பார்த்தான். அக்காக்களைக் காணவில்லை. பிறகு படுக்கையறைகளில் சென்று தேடினான். அங்கும் இல்லை. இன்னொரு பாத்ரூமுக்கு ஓடினான். பால்கனியில் தேடிவிட்டு, மொட்டை மாடிக்கு விரைந்தான். அங்கும் அவர்களைக் காணாமல் சமையல் அறையிலிருந்த த‌ன் அம்மாவிடம் கேட்டான், "அம்மா , ரெண்டு அக்காவும் எங்கம்மா? என்று.

"புது அக்காகிட்ட நீதான் பேசமாட்டிங்கிற, கோபமா இருக்க, அதான் கோச்சிகிட்டு அவங்க ஊருக்குப் போயிட்டாங்க" என்றார்.

"அத்த மட்டும் இங்க இருக்காங்க ?" என்று எனக்குக் கேட்காத அளவில் குரலைத் தாழ்த்தி கேட்டான்.

"அவங்க பெரியவங்க, கண்டுக்கல, ஆனா அக்காகூட பேசணுமா இல்லையா?" என்று கேட்கவும், சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு "எனக்கு அக்கா வேணும்" என்று 'ஓ'வென அழத் தொடங்கினான்.

அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கதவிடுக்கில் ஒளிந்திருந்த இரண்டு அக்காக்களும் "ஹேஏஏஏ" என சத்தம் போட்டவாறே ஓடிவந்து அவனை கட்டிப் பிடித்துக்கொண்டனர்.

இவ்வளவு நேரமும் தண்ணீரில் குளித்தது போதாதென்று, இப்போது வெட்கத்திலும் குளித்துக்கொண்டிருந்தான் அந்தக் குட்டிப் பையன்.

Thursday, April 10, 2014

நடைப் பயிற்சி !!


மூன்று வருடங்களுக்குமுன் ஒரு சமயம் உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது. மருத்துவரை சந்திக்க நேரம் கேட்டதற்கு, 'ஒரு வாரத்திற்கும் மேலாகும்' என்று சொல்லி ஒரு தேதியைக் கொடுத்தனர்.

எங்க அம்மாவுக்கு diabetes இருப்பதால், அவருடன் எனக்கு இருக்கும் பிரச்சினையை முடிச்சு போட்டு 'ஓகே, சர்க்கரை வந்தாச்சு, அதுல சந்தேகமே இல்லை' என்ற முடிவுக்கு வந்து, எங்கம்மா என்னென்ன சாப்பிடுவாங்க, சாப்பிடமாட்டாங்க என்பதெல்லாம் ஏற்கனவே அத்துப்படி ஆனதால் உணவில் எனக்கு நானே ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவர பெரிய லிஸ்ட் ஒன்றைத் தயார் செய்துகொண்டிருந்தேன்..

எனக்கு இனிப்பு மீதெல்லாம் அந்தளவுக்கு விருப்பம் கிடையாது. ஆனால் இப்போதோ சர்க்கரையை அள்ளிஅள்ளி சாப்பிட வேண்டும்போல் இருந்தது. இனிப்பு நிறைந்த பழங்களை சுவைக்க வேண்டும்போலும் இருந்தது. 'சர்க்கரை என்றால் இப்படித்தான் நினைக்கத் தோன்றுமோ' என்றெல்லாம்கூட‌ நினைத்தேன்.

ஊரில் தமுக்கு அடித்து சொல்லாததுதான் குறை. இதுதான் சாக்கு என்று எல்லோருக்கும் ஃபோனைப் போட்டு சர்க்கரை வந்துவிட்டதாகவே சொல்லி புரளியைக் கிளப்பிவிட்டேன். அம்மாவும், ஒரு அக்காவும் தீர்மானமாகச் சொன்னார்கள்  'நீ வேணா பாரு, அப்படியெல்லாம் இருக்காது' என்று. இவர்கள் வாய் முகூர்த்தம் பலிக்க வேண்டுமே !

மருத்துவரைப் பார்க்க வேண்டிய நாளும் வந்தது, போனேன்.

நான் சொன்ன பிரச்சினையையும், அம்மாவுக்கு சர்க்கரை இருப்பதையும் வைத்து, 'ஒருவேளை சர்க்கரையால்கூட(type 2 diabetes) இந்தப் பிரச்சினை இருக்கலாம். ஆனால் இதனால்தான் என்று உறுதியாக சொல்ல முடியாது. எதற்கும் ப்ளட் டெஸ்ட் எடுத்திட‌லாம்' என்று அதற்கு பரிந்துரை செய்தார்.

'டைப் 2 டயாபடீஸாக இருந்தால், மருந்து மாத்திரையில் கண்ட்ரோலுக்கு கொண்டு வரலாம். அல்லது உடற்பயிற்சி செய்து உணவுப் பழக்கத்தை மாற்றி, உடல் எடையைக் குறைப்பதன் மூலமும் கண்ட்ரோலில் வைத்திருக்கலாம்' என்றார். இப்போதுதான் இப்படியான ஒரு விஷயத்தைக் கேள்விப்படுகிறேன்.

"அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்க மருந்து எடுத்துக்கறீங்களா அல்லது லைஃப் ஸ்டைலை மாத்திக்கிறீங்களா" என்று கேட்டார்.

நான் மருந்து எடுத்துக்கொள்வதாக சொன்னேன், இவரோ 'லைஃப் ஸ்டைலை மாத்திக்கோ' என்றார்.

மருத்துவர் புன்னகைத்தவாறே(!), முடிவெடுக்க சிறிது அவகாசம் கொடுத்தார்.

'சரி'யென நானும் சொல்ல, லைஃப் ஸ்டைலை மாற்றிக்கொள்ள வேண்டிய‌ சில விஷயங்களை மருத்துவர் சொன்னார். அதைத்தான் அப்படியே கீழே எழுதியுள்ளேன்.

["ஒருவேளைக்கு ஒரு தானிய உணவைத்தான் எடுத்துக்கொள்ளணும். பல‌ தானிய உணவு வேண்டாம். ஒவ்வொரு வேளைக்கும் தானியத்தை மாற்றிமாற்றி சாப்பிட வேண்டும். உதாரணத்திற்கு ஒருவேளை அரிசிச் சாப்பாடு என்றால் அடுத்த வேளை கோதுமை, அதற்கடுத்த வேளை கேழ்வரகு, இப்படி மாற்றி சாப்பிட வேண்டும். சாதாரண அரிசியைவிட ப்ரௌன் ரைஸ் நல்லது.

(சாதம் கொஞ்சம்+சப்பாத்தி என்றில்லாமல் சாதம் சாப்பிடப்போகிறீர்களா சாதம் மட்டுமே போதும். சப்பாத்தி என்றால் சப்பாத்தி மட்டுமே போதும். இதிலும் அதிலுமாகக் கலந்து சாப்பிட வேண்டாம் என்பதுதான் அது)

இதுவரை இனிப்பு நிறைய சாப்பிட்டால் அதைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். அதுபோலவே எண்ணெயில் பொரித்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

(கவனிக்கவும், "சுத்தமாக சாப்பிடவேக் கூடாது, தொடவேக் கூடாது,  தொட்டால் கை மேலேயே போட்டுடுவேன்" என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தாமல் நாசூக்காக சொல்லி புரிய வைத்தார். எந்நேரமும் மிக்ஸர், முறுக்கு, எல்லடை, பகோடா, பஜ்ஜி என நொறுக்கிய‌ எனக்கு இதை விட முயற்சித்தபோது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது) 

பழங்களிலும் கேலரி அதிகமிருப்பதால் ஒரு நாளைக்கு ஒரு பழம் போதும். உதாரணத்திற்கு ஆப்பிள் என்றால் அன்றைக்கு ஒரு ஆப்பிள் போதும். அதுபோலவே மற்ற பழங்களும். (உதிரிப் பழமானால் உதாரணத்திற்கு செர்ரி என்றால் ஒரு கையளவு எடுத்துக்கொள்வேன்)

முக்கியமாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது கையைக் காலை வீசி fast walking செய்ய வேண்டும். முடிந்தால் jogging செய்யுங்கோ. ரொம்ப நல்லது. இதுக்கெல்லாம் புரோட்டின் அவசியம், முட்டை எடுத்துக்கோங்க, 'டோஃபு'வில் ப்ரோட்டின் இருப்பதால் அதையும் சேர்த்துக்கலாம்.அசைவ சாப்பாடு சாப்பிடுவதாக இருந்தால் மீன், சிக்கன் எடுத்துக்கலாம்.

ப்ளட் டெஸ்ட் ரிஸ‌ல்டில் சர்க்கரை இருந்தாலும் இல்லாட்டியும் இதை ஃபாலோ பண்ணுங்க. அடுத்த ஆறு மாதம் கழித்துப் பார்க்கும்போது உங்கள் எடையில்
10lbs  குறைத்துப் பார்க்கவேண்டும்" என்றார்]


சொல்லிவிட்டார், ஆனால் குறைப்பது யார் ? ஆனாலும் மருத்துவர் சொன்னதையெல்லாம் விடாமல் ஃபாலோ பண்ணி 6 மாதத்தில் 9 lbs  குறைத்தேனே !

"டைப் 2 டயாபடீஸ் உள்ளவர்களுக்கென லைஃப் ஸ்டைலை மாற்றிக் கொள்வதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மருத்துவமனையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஒரு வகுப்பு போனால் போதும்" என்றும் சொன்னார்.

நான் 'போகிறேன்' என்றேன்.

'ரிசல்ட் வந்ததும் போகலாம்' என்றார். (போக வேண்டிய சூழல் ஏற்படவில்லை)

A1c (கடந்த 3 மாத ரீடிங்)  ரிஸல்டில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நார்மல் என்றதும் மருத்துவர் என்னை தொலைபேசியில் அழைத்து விவரங்களைக் கூறி  "நான் சொன்னவற்றை கவனத்தில் கொள்ளுங்கள், அதுவே போதும்" என்றார்.

அன்று மருத்துவர் சொன்னவை இன்றும் கவனத்தில் உள்ளது.  நடைப் பயிற்சி. போகாமல் விட்டால் அன்று ஏதோ ஒன்றை செய்யாமல் விட்டதுபோல் இருக்கும். காலையிலேயே போய் வந்துவிடுவேன். அதிலும் குளிர்காலத்தில் வெயிலைத் தேடித்தேடிப் போவது ரொம்பவே பிடிக்கும்.

நம்ம ஊரில் ஏன் இதுமாதிரி சொல்வதில்லை !  போனால் மருந்து மாத்திரை இல்லாமல் வெளியே வர முடிவதில்லை.  ஒருவேளை அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இது அமையலாம் !

எனக்கு வந்த பிரச்சினைக்குக் காரணம் வைட்டமின் டி குறைபாடு. பெரும்பாலும் ஆசியாவிலிருந்து குளிர் பிரதேசத்தில் வந்து வசிப்பவர்களுக்கு இது வருமாம். சப்ளிமெண்ட் எடுத்த பிறகு சரியாகிவிட்டது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(பி.கு)


"நோ :) நாங்க காலை பார்த்தா தான் நம்புவோம் சித்ரா :)" _________ என்று சொன்ன பிறகும் காலைப் போடாட்டி எப்படிங்க !!

"அதுக்கு எதுக்கு ரெண்டு எடத்துல ?"

"ஒரு கால்தானே இருக்கு, இன்னொரு கால் எங்கேன்னு" யாரும் கேட்டுடக் கூடாது பாருங்க, அதுக்குத்தான் !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, April 7, 2014

அழகு வானம் !!இங்கு வானம் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலே படத்திலுள்ளதுபோல் ஒரே நீல நிறம்,

அல்லது கீழேயுள்ளதுபோல் மங்கலான வெள்ளை நிறம், இவையிரண்டும்தான் மாறிமாறி வரும்.அப்படியே மேகங்கள் உருவானாலும் வானவூர்திகள் அவற்றினிடையே இங்குமங்குமாகப் புகுந்து நேர்நேர்(தேமா இல்லீங்கோ !) கோடுகளாக்கிவிடும்.

சில நாட்களில்தான் மேகக் கூட்டங்களை யாரும் கலைத்து விடாமல் வெள்ளியைக் கொட்டிவிட்டதுபோல் அல்லது பஞ்சை பொதிந்து வைத்ததுபோல் அழகாகக் காட்சியளிக்கும்.

அப்படியான ஒரு வெள்ளிக்கிழமை(போன வெள்ளிதான்) காலை நான் பூங்காவில் 'வாக்' போனபோது, வானத்தின் காட்சிகள் மாறியதை இங்கே பாருங்கோ ......... !!


இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. லேசாக மஞ்சள் வெயில் அடிக்க ஆரம்பித்ததும் மேகங்கள் கறுத்து, லேசான‌ தூறலும் வந்தாச்சு. வந்து வீட்டுக்குள் நுழைவதற்குள் பலத்த தூறல். தூறலில் நனைவதில்தான் எத்தனை சுகம் !


Sunday, April 6, 2014

சென்ற வாரம் பெய்த மழையில், இன்று பூத்த புகைப்படங்கள் !!

இங்குள்ள‌ நீர் ஆதாரங்களில் போதிய நீர் இல்லாததால் தண்ணீர் சிக்கனம் கருதி செடிகளுக்கு வாரத்தில் இரண்டு தடவை தாண்ணீர் பாய்ச்சலாமா அல்லது ஒரு தடவையே போதுமா, தண்ணீர் பாய்ச்ச‌ குழாய்களைப் பயன்படுத்தாமல் ஸ்ப்ரிங்லர் பயன்படுத்தவும், நீர் அதிகம் தேவைப்படும் செடிகளை அகற்றிவிட்டு நீர் குறைவாகத் தேவைப்படும் செடிகளை வைக்கவும், அப்படி வைத்தவர்களின் பேட்டிகளையும் ஒளிபரப்பினார்கள்.


இதற்கிடையில் கடந்த இரண்டு வாரங்களாக‌ மழை வந்து இலவசமாகவே 'போதும் போதும்' எனுமளவுக்கு செடிகளை நனைத்துவிட்டது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நல்ல மழை நேரத்தில், இரண்டு வாரங்களுக்கு முந்தைய ஞாயிறன்று, எங்க பாப்பாவுடன் ஷாப்பிங் முடிச்சுட்டு, In_N _ Out _ ல் பர்கர் & ஃப்ரென்ச் ஃப்ரைஸ் வாங்கிக்கொண்டு, பக்கத்திலுள்ள பூங்காவில் காரில் இருந்தவாறே ஜாலியாக ஊர் கதைகளை பேசிக்கொண்டே சாப்பிட்டபோது எடுத்தவைதான் கீழேயுள்ள படங்கள் ..............(ஹும்)


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கடந்த‌ வெள்ளிக் கிழமை(04/04/14) காலை நான் 'வாக்' போனபோது
பூங்காவிலுள்ள‌ ஈரம் மிகுந்த நடைபாதையில் காலை சூரியனின் கதிர்கள் பட்டு சிறிது மேடான பகுதி மெல்ல மெல்ல‌ ஈரம் காய்வதால் கட்டம் கட்டமாக இருப்பதுபோல் தெரிகிறது. இதைப் பார்த்தபோது சின்ன வயசுல ஈர மண்ணில் கட்டங்கட்டமாக கோடு போட்டு சில்லு(அ)நொண்டி விளையாடியது நினைவுக்கு வந்தது.


ஹைய்யோ, படத்துல(தாங்க‌)  நான் விழுந்திருக்கிறேன் !  எங்கள் ஊரில் மழை பெய்ததையும் ........................... அடாது மழையிலும் விடாது நான் 'வாக்' போகிறேன் என்பதையும் ............................................ இப்பவாச்சும் நம்புறீங்களா !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, April 4, 2014

இன்பச் சுற்றுலா _ 2என்னுடைய மெட்றாஸ் கனவு மூன்றாம் வகுப்பில் பலித்துவிட்டது. மகளின் சோகம் அப்பாவையும் தாக்கியிருக்க வேண்டும். அதனால் அழைத்துக்கொண்டு சென்றார்களோ அல்லது என் தொந்தரவு தாங்க முடியாததால் கூட்டிச் சென்றார்களோ என்னவோ தெரியாது.

அப்பா, அம்மா, தம்பி & நான் என நான்கு பேரும் சென்னையில் உள்ள‌ ஒரு உறவினர் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்து விமான நிலையம், துறைமுகம், விலங்கியல் பூங்கா, அண்ணா சமாதி, பாம்புப் பூங்கா, முதலைப் பண்ணை என சுற்றிப் பார்த்தது நினைவிருக்கிறது.

இருந்தாலும் சகோதரி பார்த்ததாக சொன்ன மஹாபலிபுரமும், வேடந்தாங்கலும் பார்க்க முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான்.

[ஒன்பதாம் வகுப்பு படித்தபோது போன மெட்றாஸ் டூரில் மஹாபலிபுரம் பார்த்தாச்சு. ஆனால் இன்னமும் வேடந்தாங்கல் மட்டும் பார்க்க வேண்டிய லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது]

என்னையும்(ஆறாம் வகுப்பு), என் சகோதரியையும்(எட்டாம் வகுப்பு) விடுதியுடன்கூடிய‌ ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டனர். அந்தப் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் சுற்றுலா செல்வார்கள் போலும். நாங்கள் போன வருடத்திலும் ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு ஊருக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடானது.

ஆறாம் வகுப்பு பிள்ளைகள் பாண்டிச்சேரிக்கும்( ரூ 5) , எட்டாம் வகுப்பு பிள்ளைகள் சாத்தணூர் அணைக்கும்( ரூ 10) செல்வதாக ஏற்பாடு. விடுதிப் பிள்ளைகளுக்கு மட்டும், கட்ட‌ வேண்டிய பணத்தில் கொஞ்சம் குறைத்ததால் எனக்கு ரூ 3 ம், என் சகோதரிக்கு ரூ 5 ம் கொடுத்தால் போதுமானது. எனக்கோ இரண்டாம் வகுப்பில் கேள்விப்பட்ட 'டூர்' கனவு இப்போது நிறைவேறப் போகிறது என்பதில் தனி சுகம்.

இதுவரை எல்லாமே நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது.

என் சகோதரிதான் எல்லாவற்றிலும் முடிவெடுப்பார். அதுபோலவே இப்போதும் ஒரு முடிவெடுத்தார். நீண்ட யோசனைக்குப் பிறகு, அப்பா நமக்காக நிறைய செலவு செய்கிறார், அதனால் அவரிடம் நாம் பணம் கேட்க வேண்டாம். வேறு யாரிடம் கேட்பது? உள்ளூரில் ஏகத்துக்கும் சொந்தங்கள் இருந்தாலும் சகோதரி தேர்ந்தெடுத்தது புதிதாக திருமணமாகிச் சென்றுள்ள எங்கள் பெரிய அக்காவிடம் !

'எவ்வளவோ உறவுகள் இருக்கும்போது எதற்காக இவர்களைத் தெரிவு செய்ய வேண்டும்', என்பதை சொல்லிக்காட்டி பின்னாளில் கிண்டல் செய்வேன்.

வழக்கம்போல ஒரு இன்லேண்ட் கவரில் முதல் முழு பக்கத்தில் அவர் எழுதிவிட்டு எனக்கு கடைசி பக்கத்தைக் கொடுத்து அதில் நான் என்ன எழுத வேண்டும் என்பதையும் சொன்னார்.

அக்காவைத் தவிர யாரையுமே தெரியாத அவங்க வீட்டுக்கு, எல்லோரையும் விசாரித்து, விஷயத்தைச் சொல்லி ரூ3 + ரூ5= ரூ8 வேண்டுமென கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தோம்.

தினமும் அப்பா எங்களைப் பார்க்க வருவார். அன்றும் அப்படியே வந்தார். ஆனால் முகத்தில் கொஞ்சம் கோபம் தெரிந்தது. அக்கா வீட்டிற்கு போனபோது அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார் என்பது பிறகுதான் தெரிந்தது.

"டூருக்கு பணம் வேணும்னு என்னிடம் கேட்டால் நான் கொடுக்கப் போறேன், இதுக்காக அவங்க வீட்டுக்கெல்லாம் கடிதம் போடக்கூடாது, அதெல்லாம் தப்பு" என்றார். எங்களுக்குக் கொஞ்சம் சங்கடமாகிவிட்டது அதாவது அசிங்கமாகிவிட்டது. இதில் என்னுடைய பங்கு துளிகூட இல்லை.

அதன்பிறகு அவர்கள் வீட்டிலிருந்து யாராவது வந்தால் நாங்கள் இருவரும் தம்பியுடன் சேர்ந்து கிசுகிசுப்போம். அவர்களைப் பார்க்க கொஞ்சம் கூச்சமாகவும் இருக்கும்.

ஏதோ சின்னப் பிள்ளைங்க தெரியாமக் கேட்டுட்டாங்க ...... சரி, போனால் போகிறது ............ என் சகோதரிக்குக் கொடுக்க வேண்டாம், ஆனால் எனக்குக் கொடுக்கணுமா இல்லையா ? நீங்களே சொல்லுங்க ! அதை எப்படி கந்துவட்டி, மீட்டர் வட்டி, மைல் வட்டி எல்லாம் போட்டு வசூல் பண்ணினேன் என்பது பதிவை முழுவதும் படிக்கும்போது தெரிந்துவிடும் !    ம்  யாரு ? ........ சித்ராவா ........ !

டூர் பணம் கட்டியாகிவிட்டது. கைச்செலவுக்கும் கொஞ்சம் பணம் வைத்துக்கொண்டோம்.

ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பேருந்து வரும் என்றும், அதற்குள் எல்லோரும் தயாராகிவிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அவ்வளவுதான் விடியவிடிய தூக்கமில்லை. பக்கத்திலிருக்கும் பாண்டிச்சேரிக்குத்தான் போகப்போகிறோம் என்பது தெரியாமல் ஆட்டம்.

பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும், ஒரே தூக்கம். தூங்க ஆரம்பிக்கும்போதே "பாண்டிச்சேரி வந்தாச்சு, எல்லோரும் இறங்குங்க" என்று சொன்னார்கள்.

அரவிந்தர் ஆசிரமம், வானொலி நிலையம், சட்டசபை, ப்ளாஸ்டிக் தொழிற்சாலை என எங்கெங்கோ சுற்றிவிட்டு பாரதி பூங்காவில் மதிய உணவாக புளிசாதம் & முட்டை , உருளைக்கிழங்கு பொரியலுடன் சூப்பர் சாப்பாடு சாப்பிட, தூக்கம் சுகமாக வந்தது.

நீண்ட‌ நேரம் அங்கே விளையாடவிட்டு, எங்களைக் கவனித்துக்கொள்ள வந்த வார்டன்கள் அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சுகளில் படுத்துத் தூங்கியேவிட்டனர். பிறகு கடற்கரைக்கு அழைத்துச் சென்று, மாலை ஷாப்பிங் முடித்து, இரவு உணவை ஒரு ரெஸ்டார‌ண்டில் முடித்துவிட்டு தங்குமிடம் வந்துசேர நள்ளிரவாகிவிட்டது.

இந்த சுற்றுலாவில் அந்த ப்ளாஸ்டிக் தொழிற்சாலையில் நான் வாங்கி வந்தது இளம் பச்சை நிறத்தில் மூடியுடன் கூடிய ஒரு சிறு ப்ளாஸ்டிக் டப்பா. டூர் போக‌ ரூ 3:00 என்றால் இந்த டப்பாவின் விலையோ ரூ 1:50.

இதுதான் பள்ளியில் நான் போன முதல் இன்பச் சுற்றுலா. அதன்பிற‌கு பல சுற்றுலாக்கள் போனாலும் இதனை மட்டும் துளியும் என்னால் மறக்க முடியாது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருமணமான புதிதில் வீட்டுக்காரர் என்னிடம் , " நீங்க ஏதோ டூர் போகணும்னு, பணம் கேட்டு எங்க வீட்டுக்கு லெட்டர் போட்டிருந்தீங்க, இல்ல ? " என்று கேட்டார்.  'க்ர்ர்ர்ர்' என்றிருந்தாலும் அப்போதைக்கு நான் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் இப்போது அடிக்கடி நான் சொல்வது, " அப்போதே அந்த மூணு ரூபா கடன அடைச்சிருந்தீங்கன்னா, இப்போ இவ்ளோ செலவு செய்ய‌ வேணாமில்ல" என்பேன். ஹா ஹா ஹா :))))))

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(பி.கு)

"சித்ராஆஆஆ எனக்கொரு உம்ம தெரிஞ்சாகணும் !"

ஆமாங்க  ஆமாம்,  நீங்க நெனச்சது 100% சரிதான்.  மீண்டும் ஹா ஹா ஹா :))))))

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~