Wednesday, April 27, 2016

சுட்டுப் போட்டாலும் ....

இன்று காலைடிஃபன் பூரி என முடிவானது.

வழக்கம்போல் எனக்குப் பிடித்தமான‌ சூடான புழுங்கல் அரிசி கஞ்சியும், சுட வைத்த பழைய கத்திரிக்காய் புளிக்குழம்பும், ஏதாவது ஒரு துவையலுட‌ன் ஆரம்பிக்கும் காலைப்பொழுது இன்று தோழியின் மகளின் வேண்டுகோளினால் பூரியில் ஆரம்பமானது .

விடுமுறை என்றதும் நகரத்தின் நெரிசலில் இருந்து தப்பிக்க நான் முதலில் தேர்வு செய்வது என் தோழியின் கிராமத்து வீடுதான். காற்றோட்டமான பெரிய வீட்டைச்சுற்றி பசுமையான வயல்வெளிகளும், ஆரவாரமில்லாத அமைதியும் என்னை அங்கே இழுத்துச் சென்றுவிடும்.

ஆமாம், இப்போது நான் தோழியின் வீட்டில்தான் இருக்கிறேன். நேரம் போவதே தெரியாமல் மீண்டும் மீண்டும் பேசிய கதைகளையே, அலுக்காமல், வாய்வலிக்க, மணிக்கணக்கில் அசை போட்டுக்கொண்டிருப்போம்.

இதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தால் கதையை எப்படி முடிப்பது ? டிஃபனை எப்போது சாப்பிடுவது ? கதையைத் தொடருவோம் :)

திருமணம் முடிந்து ஒருசில மாதங்களே ஆன தோழியின் மகள் நான் வந்தது தெரிந்து நேற்றே என்னைப் பார்க்க வந்துவிட்டாள். தனக்கு 'புஸுபுஸு பூரி எப்படி சுடுவது?" என சொல்லிக் கொடுக்கச்சொன்னாள்.

ஏற்கனவே சமையலில் தகறாறு. எனக்கில்லை, தோழியின் பெண்ணிற்குத்தான்.

"சமைக்கவேத் தெரியவில்லை' என புகுந்த வீட்டில் இருந்து பேச்சுக்கள் வருவதாக தோழி சொன்னதும், " அதானே, படிச்சிட்டு வேலைக்கும் போகணும், சமையலிலும் புலியா இருக்கணும்னா எப்படி?" என புதுமணப் பெண்ணிற்காக வக்காலத்து வாங்கினேன்.

"நான் ஊருக்குப் போவதற்குள் மாப்பிள்ளை வந்தால் கேட்டுவிடுகிறேன்" என்று அம்மாவுக்கும், பொண்ணுக்கும் கிலியை உண்டாக்கினேன் :)))

பேசிக்கொண்டே உருளைக்கிழங்கு & பச்சைப் பட்டாணியை வேகப்போட்டேன். கிழங்கு வெந்துகொண்டிருக்கும்போதே பூரிக்கு பதமாக மாவைப் பிசைந்து, உருண்டைகள் போட்டு மூடிவிட்டு, குருமாவை அடுப்பில் ஏற்றிவிட்டு, வாணலில் எண்ணெய் காய்ந்ததும் பூரி போடத் தயாரானேன்.

இவை எல்லாவற்றையும் புதுமணப்பெண் அருகிருந்து பார்த்துக்கொண்டே இருந்தாள்.

பூரி உருட்டும் கட்டைதான் என்னோட சாய்ஸ். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்ததோ பூரி ப்ரெஸ். தோழியின்மகளும் சமையலும் மாதிரி எனக்கும் இந்த பூரி ப்ரெஸ்ஸுக்கும் ஆகாது. எனவே நான் ப்ரெஸ் பண்ணுவதிலிருந்து ஒதுங்கிக்கொண்டேன்.

'நேற்று பிரியாணிக்கு எலுமிச்சையை நீளவாக்கில் நறுக்கிக்கொடுத்து ஆச்சரியப்பட வைத்தவள்'  இப்போது, தான் பூரியை ப்ரெஸ் பண்ணித்தருவதாக சொன்னதும் பயந்தே போனேன்.

'சமையல் கற்றுக்கொள்ளும்போது இதெல்லாம் சகஜம்தானே' என பணிந்தேன்.

" ஒன்னும் சரி இல்லையே " என நினைத்தாலும், முதல் பூரியைப் போட்டு எடுத்தேன், ஏதோ எல்லடை கணக்காய் மொறுமொறுவென தகடையாக வந்தது. இரண்டாவதும் அப்படியே.

இப்போது பூரி போடுவதை நிறுத்திவிட்டு, அவள் ப்ரெஸ் பண்ணுவதைக் கவனித்தேன். உருண்டையை எடுத்து அதை நசுக்கி, நண்டுகுண்டலாக்கி, வைத்து அழுத்திக் கொடுத்தாள்.

"உனக்காகத்தானே, ஈஸியா இருக்கணும்னு, நான் உருண்டைகள் போட்டு வச்சிருக்கேன், நீ ஒன்னும் செய்யாமல் அப்படியே வைத்து ப்ரெஸ் பண்ணிக்கொடு" என்று சொல்லியும் சரிவரவில்லை.

பார்த்தேன், பூரிக்கு அழகே அதன் உப்பிய வடிவம்தானே. அதுதானே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சுண்டி இழுக்கிறது ! அதன் பிற‌குதானே உருளைக்கிழங்கு குருமா, சுவை எல்லாம். அந்த வடிவமே இங்கு அடிபட்டுப் போகும்போது?

"பூரி போடும் ஆளை எப்படி மாற்றுவது?" என யோசிக்கும்போதே அவளது மாப்பிள்ளையிடமிருந்து ஃபோன். நல்லவேளை தப்பிச்சேன். அவளும்தான்.

தோழி எப்போதும் பிஸி.  இப்போதுகூட வயல்வேலை விஷயமாக வெளியில் அவரைப் பார்க்க வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

எனவே பள்ளியில் படிக்கும் தோழியின் இளைய மகளிடம் போடச் சொன்னேன்.

சும்மா சொல்லக்கூடாது, அவள் போட்டுக்கொடுத்ததில் அழகழகா குண்டுகுண்டு பூரிகளை சுட்டெடுத்து, ஒரு பெரிய தட்டில் ரோட்டோர கடைகளில் அடுக்கி வைப்பதுபோல் அழகழகாக‌ அடுக்கி வைத்துவிட்டு, "எங்களை நம்பினால் நீங்கள் பட்டினிதான் கிடக்க வேண்டியிருக்கும், அதனால் சாப்பிட்டுவிட்டு எடுத்து மூடி வையுங்க, நானும் அம்மாவும் பிற‌கு வந்து சாப்பிடுகிறோம்" என சொல்லிவிட்டு நானும் தோழியுடன் போய் சேர்ந்துகொண்டேன்.

பிள்ளைகள் சாப்பிட ஆரம்பித்தார்கள். சாப்பிட்டு முடித்து, வெளியில் வந்து, " பூரி சூப்பரா இருந்துச்சு" என சர்டிஃபிகேட் கொடுத்தனர்.

"எல்லாமும் உன் கைவண்ணம், நீ செய்து எதுதான் நல்லாருக்காது ! " எனக்கு நானே மனதளவில் பெருமையுடன் தோளில் தட்டிக்கொண்டேன்.

நானும் தோழியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சாப்பிட உள்ளே வந்தோம். தட்டு நிறைய இருந்த பூரிகள் இப்போது ஒரு சிறிய பாத்திரத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அதிலிருந்து இரண்டு பூரிகள் மட்டும் வெளியே தலைகாட்டிக்கொண்டிருந்ன.

"நாம இருக்கறதையே மறந்து பசங்க காலி பண்ணிட்டாங்களா ! " என சொலிக்கொண்டே தோழி சாப்பிட உட்கார்ந்தார். எனக்கும் ஆச்சரியம்தான் !

தோழிக்காக இரண்டு பூரிகளைத் தட்டில் எடுத்து வைக்கும்போதுதான் கவனித்தேன், பிள்ளைகள் காலி பண்ணிவிட்டதாக நினைத்த, காணாமல் போன‌ அவ்வளவு பூரிகளும் ஒரு சிறிய பாத்திரத்தில் அமுக்கி வைக்கப்பட்டிருப்பதை.

மாப்பிள்ளை சாரைப் பார்த்து கேட்பதாகச் சொன்ன சில‌ கேள்விகளை இப்போது மனதளவில் வாபஸ் வாங்கிக்கொண்டேன்.