Friday, May 30, 2014

வெள்ளை ரோஜா


தொலைவிலிருந்து பார்ப்பதற்கு இந்த‌ ரோஜா பளீர் வெண்மையாக இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும்போது மையப் பகுதியில் சிறிது இளம் மஞ்சள் நிறத்துடனேயே உள்ளது.


                        " அரளியில் மட்டும்தான் தேனீக்கள் வருவாங்க‌ளா என்ன !


                                               ரோஜாவையும் விடமாட்டோமில்ல !


அன்றலர்ந்த பூக்களில்தான் மஞ்சள் நிறம் தெரிகிறது. அவற்றைத்தான் தேனீக்கள் வட்டமிடுகின்றன.


பூத்து ஒன்றிரண்டு நாட்கள் ஆன நிலையில் நடுவிலுள்ள மகரந்தப் பகுதி மஞ்சள் நிறத்திலிருந்து கொஞ்சம் நிறம் மாறுகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                                           வெள்ளை ரோஜாவில் இதுவும் ஒருவகை.

       செடியின் பசுமையை மறைத்திருக்கும் அழகான‌ வெள்ளை ரோஜாப் பூக்கள்.


                            பூத்து சில நாட்களில் அழகான பிங்க் நிறத்துக்கு மாறி ...........


                                                            பின் உதிர்ந்துவிடுகின்றன !

குடைக்குள் ஒரு நினைவு !

'அன்னையர் தினம்' கொண்டாடும் இந்த மே மாதத்தில் அப்பாவைப் பற்றிய ஒரு நினைவு.

எங்களுடையது கிராமத்து வாழ்க்கைதான் என்றாலும் அப்பா எங்களை, முக்கியமாகப் பெண் பிள்ளைகளை படிக்க வைக்கத் தவறவில்லை. படித்தவர்கள் படித்துவிட்டு வேலைக்கும் போனார்கள். இதில் விளையாட்டுத்தனமாக விட்டுவிட்டு வருத்தமடைந்த‌வர்களும் உண்டு.

அப்படித்தான் நான் வேலைக்குப் போன இடத்தில் எங்களுக்குள்ளாகவே  (சுமார் 50 பேர்) சிறிது தொகையை சீட்டுப்பணம் மாதிரி விட்டு அதில் வரும் லாபத்தை எல்லோருக்கும் போய் சேருகிற மாதிரி ஏதாவது ஒரு பொருள் வாங்கி பரிசு மாதிரி தருவார்கள். (இந்த சீட்டுப்பணம் என்பது இன்னமும் எனக்குப் புரியாத புதிர்தான்)

ஒருமுறை ஒவ்வொருவருக்கும் ரூ 100 மதிப்பிலான பொருள் வாங்க வேண்டுமென கணக்குபண்ணி, என்ன வாங்கலாம் என யோசித்து அது மழைக் காலமாக இருந்ததால் எல்லோரும் ஒருமனதாகக் குடையைத் தேர்வு செய்தனர்.

மறுநாள் காலையிலேயே கையெழுத்து போடச்சொல்லி சர்குலர் வந்தது. அதில் பெண்களுக்கு லேடீஸ் குடையும் (அதாவது குடையை மடக்கி கைப்பையில் வைத்துக்கொள்வது), ஆண்களுக்கு பெரிய கறுப்பு குடையும் என மொத்தமாகக் கணக்கிட்டிருந்தது.

நான் யோசித்துப் பார்த்தேன், "எனக்கு வாங்கினால் அது பத்தோடு பதினொன்று. அதுவே அப்பாவுக்கு வாங்கினால் ? ...... அவருக்கு அது பொக்கிக்ஷம் மாதிரி" .  :)

எனவே என் பெயருக்குப் பக்கத்தில் இருந்த லேடீஸ் குடையை அடித்துவிட்டு ஜென்(ட்)ஸ் குடை என எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டேன். பாண்டிச்சேரிக்குப் போய் மொத்தமாக வாங்கிவர ஆள் தயாராகிவிட்டது.

தயாரானவர் நேராக என்னிடம் வந்து, "ஆமாம், சித்ரா, உனக்கு பெரிய கறுப்பு குடையா வேணும்?" என்றார் ஆச்சரியமாக. (இங்கே ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். எங்கள் ஊர் பக்கம் ஒருசிலர் மிகவும் தெரிந்தவர்கள் என்றால் 'நீ, வா, போ' போட்டுத்தான் பேசுவார்கள். மரியாதை கொடுக்கக் கூடாது என்றெல்லாம் இல்லை. பழக்கம் அப்படி. தெரிந்தவர் என்ற உரிமை, அவ்வளவே)

நான் "அப்பா வாங்கித்தந்த குடையே என்னிடம் அப்படியே இருக்கு. அதனால ஒரு சேஞ்சுக்கு நான் வாங்கி அப்பாவுக்குத் தரப் போறேன்" என்றேன். கேட்டவருக்கும் சந்தோஷம்.

வீட்டுக்குக் கிளம்புமுன் மாலையே குடைகள் வந்துவிட்டன. என்னிடம் ஒரு பெரிய குடை வந்து சேர்ந்தது. எங்கள் ஊர் பையனைப் பிடித்து குடையை அப்பாவிடம் கொடுக்கச்சொல்லி அனுப்பினேன்.

அடுத்த நாள் அப்பா நேராகவே நான் வேலை செய்த இடத்திற்கே வந்துவிட்டார். அப்பாவுக்குத் தன் பிள்ளைகள் எல்லோரையும் தினமும் பார்த்துவிட வேண்டும். அதனால் அடிக்கடி வருவதுண்டு. பெரும்பாலும் நானுமே அவர்களுடனேயேதான் இருந்தேன்.

"ஏம்மா, எனக்குத்தானா குடை இல்ல ? நீ வாங்கிக்க வேண்டியதானே ?" என்றார். நான் புன்னகையுடன் சமாளித்தேன்.

கடைசிவரை அந்தக் குடையை யாரும் தொடாமல் பார்த்துக்கொண்டார். வீட்டில் முக்கியமான இடத்தில் மாட்டி வைத்திருப்பார். 'த‌ன் பெண் வாங்கிக் கொடுத்தது' என்ற பெருமை அவருக்கு.

அவரது மறைவுக்குப் பிறகு சில நாட்களில் அந்தக் குடை அங்கில்லை. "அது எங்கே ?"  என்று கேட்டு அதைப் பார்க்கும் தைரியமும் எனக்கில்லை.

எந்தக் குடையைப் பார்த்தாலும் இப்போதும் இந்த நிகழ்ச்சி ஒரு கணம் மனதில் நிழலாடும். வாழ்க்கையில் இந்த நிகழ்வுகளெல்லாம் சகஜம் என நினைக்கும் மனப் பக்குவம் வர வேண்டும். அதற்கு இறைவன்தான் துணைபுரிய வேண்டும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 "குடை நம்முடன் இருக்கும்போது, அதை வாங்கித்தந்தவரும் உடன் இருப்பதுபோலவே இருப்பதாக, கூறக் கேட்டிருக்கிறேன்" _____  /////பாசமா ? அல்லது பக்குவமா ? ////  என்ற பதிவில் ஆறுமுகம் அய்யாசாமி அவர்களின் இந்த வரியைப் படித்ததும் வந்த நினைவுதான் இந்தப் பதிவு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Thursday, May 15, 2014

நான் யார்? யார்? யார்? ______ தொடர்ச்சி


இங்கு 'பளிச்,பளிச் ' என எங்கும் வெள்ளை நிற அரளிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. 


 அதில் ஒரு தேனீ ஜம்மென்று உள்ளே போனவர் வெளியே வரவேயில்லை.


                                         காத்திருக்க எனக்கும் பொறுமையில்லை.


                               பூவை லேசாகத் தட்டிவிட்டதும் வெளியேறி ........


"தட்டி விட்டது யார்?" என கொட்டாமல், வேறொரு பூவை நோக்கிச் செல்கிறார்.

Wednesday, May 14, 2014

நான் யார்? யார்? யார்?


அதொன்னுமில்லீங்க, echo அடிச்சதுல மூனு தடவ    'யார்'    பதிவாயிடுச்சுங்கோ.

                                       இதைத்தான் 'உண்ட மயக்கம்' என்பார்களோ !!

இவ்ளோ காலையிலயே 'வாக்' வந்தும் வெயில் வேற மண்டையப் பொளக்குது. சீக்கிரமே வந்து யார், என்னன்னு முகத்தைக் காட்டினீங்கன்னா ......... நான்பாட்டுக்கு நடையைக் கட்டுவேனே  !

பூக்கள் புதிதாகப் பூக்க ஆரம்பித்திருப்பதால், 'தேன் எடுக்கிறேன் பேர்வழி'ன்னு எந்தப் பூவில் யார் ஒளிஞ்சிருக்காங்கன்னே தெரிய மாட்டேங்கிது.

Monday, May 12, 2014

பாசமா ? அல்லது பக்குவமா ?



அமெரிக்காவுக்கு வந்து மகளுக்கு ஒரு குட்டி சைக்கிள் வாங்கி, ஒரு வாரத்தில் சிலர்  தோழிகளாகக் கிடைத்த பின்னர்தான் தெரியும், பெண் பிள்ளைகளுக்கு ஒரு நிறத்திலும், பையன்களுக்கு வேறு சில நிறங்களிலும் பொருட்கள் வாங்க வேண்டுமென.

நாங்கள் வாங்கியது அடர் நீல & வயலட் நிற சைக்கிள். பிள்ளைகள் எல்லாம் விளையாடும் இடத்திற்குப் போனால் அங்கே எல்லா அம்மாக்களும் "ஏன் பாய்ஸ் சைக்கிள் வாங்கியிருக்கீங்க? " என்று துக்கம் விசாரிப்பதுபோல் கேட்கவும்தான் விவரம் புரிந்தது.

அந்த நீலநிற‌ சைக்கிளை இரண்டு வருடங்கள் ஓட்டிய பிறகு நல்ல இளம் & அடர் பிங்க் நிறத்தில் புது சைக்கிள் வாங்கினோம். அதே நிறத்திலேயே ஜிகுஜிகு Bicycle Streamers எல்லாம் வைத்து ....... பார்க்க அழகாகத்தான் இருந்தது.

ஊரில் இருந்தபோது மகளுக்கு நல்ல சிவப்பு நிற மூன்று சக்கர சைக்கிள்தான் வாங்கிக் கொடுத்திருந்தேன். அப்போதைக்குக் கடையில் இருந்தது அந்த ஒரு நிறம் மட்டும்தான்.

ஆனால் இங்கோ பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையிலிருந்து எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து வாங்க வேண்டியதாயிற்று.

அப்படித்தான் குடையும். முதலில் பல வண்ண குடை, அடுத்து பிங்க் நிற குடை என வாங்கினாள். ஆறாம் வகுப்பிலிருந்து மென்மையான நிறத்தில் பூக்கள் உள்ள குடைகளைத் தெரிவு செய்தாள். ஒன்பதாம் வகுப்பிலிருந்து கொஞ்சம் அடர் நிற பூக்கள் உள்ள குடைகளை வாங்கினாள்.

இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அம்மா எந்தக் குடையை வேண்டுமானாலும் வெளியே எடுத்துச் செல்லலாம். ஆனால் அப்பா மட்டும் கருப்பு நிற குடையை மட்டுமே எடுக்க வேண்டும்.

இவர் என்றைக்காவது வேண்டுமென்றே டிசைன் உள்ள குடையை எடுத்தால் ஓடி வந்து பிடுங்கிக்கொண்டு, சாதாரண கறுப்பு நிறக் குடையை எடுத்து வந்து தருவாள்.

இப்போது கல்லூரிக்குப் போகும்போது குடை வாங்கச் சென்றால், "சாதாரண கறுப்பு நிறக் குடைதான் வேண்டுமென்று"  வாங்கினாள்.

"நல்ல நல்ல டிசைனெல்லாம் இருக்கே, எடுத்துக்கோ" என்றதற்கு, "இப்போ அதையெல்லாம் யூஸ் பண்ணா 'சைல்டிஷ்'ஷா இருக்கும்", என்றாள்.  இவள் ஆறாம் வகுப்பில் வாங்கிய குடைகளைக்கூட‌ இன்றும் பயன்படுத்துகிறேனே, அப்படியென்றால் ..... நான் ?

மகள் கல்லூரிக்குப் போனபிறகு ஒருநாள் இங்கே நல்ல மழை. வருவதும் போவதுமாக இருந்தது. இருந்தாலும் 'வாக்' போகலாம் என நாங்கள் இருவரும் பாதுகாப்புக்குக் குடைகளுடன் கிளம்பிப் போனோம்.

வழியில் திடீர் தூறலின் வருகையால் குடையின் அவசியம் ஏற்பட்டது. முதலில் என்னுடைய‌ குடையை விரித்து இவரிடம் கொடுத்தேன். என்னுடைய குடை என்பது இவர்கள் புதிதாக வாங்கி, தொலைத்தது போக மீதமுள்ளவை எல்லாம் என்னுடைய குடைகள்தான். இதில் நிறமாவது? டிசைனாவது? எதுவும் பார்க்கமாட்டேன். எனக்கென எப்போது வாங்கினேன்? அவ்வ்வ்வ் !

இவரோ "இது வேண்டாம், அந்தக் குடையைக் கொடு" என்று தன் கறுப்பு நிறக் குடையைக் கேட்டார்.

"ஒரு செகண்ட் இதப் பிடிங்க, தருகிறேன்" என்றேன். இவரது குடையை விரிப்பதற்குள் என்னுடைய குடையுடன்(அதாவது மகளது குடையுடன்) கொஞ்ச தூறம் சென்றுவிட்டார்.

இதுதான் சமயமென 'செல்'லில் ஒரு 'க்ளிக்' பண்ணி மகளுக்கு அனுப்பினேன்.

அவளோ 'ஸ்மைலி ஃபேஸ்' மட்டுமே பதிலாக அனுப்பினாள்.

"பாப்பு, அப்பா வச்சிருக்கும் குடையைப் பார்த்தியா " என்று மெஸேஜினேன்.

அவளோ  "அம்ம்ம்மா, அப்பாவுக்குப் பிடிசிருந்தா விட்டுடு, கேக்க‌ வேணாம்", என்றாள் பதிலுக்கு .

"அடடா, இவ்வளவு நாளும் பிடுங்கிப்பிடுங்கி வைப்பவளிடமிருந்து இப்படியொரு பதிலா", என ஆச்சரியமாகிப் போனேன்.

இது தொலைவில் இருப்பதால் வந்த பாசமா ? அல்லது கல்லூரி கற்றுக் கொடுத்த மனப் பக்குவமா ?

Thursday, May 8, 2014

எங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்

                                                       
                                                                        பூண்டுத் தாள்

உழவர் சந்தையில் பூண்டுடன்கூடிய பூண்டுச் செடிகள் கிடைக்கும். ஆனால் நான் வாங்கியதில்லை. சரி வீட்டிலேயே வளர்த்துப் பார்க்கலாமே என 'யூ டியூப்'பில் தேடினால் ஏகப்பட்ட வீடியோக்கள் உள்ளன. இலையுதிர் காலத்தில் நட்டு கோடையில் அறுவடை செய்ய வேண்டுமாம். ம‌ண்தோட்டம் வைத்திருப்பவர்கள் முயற்சி செய்யலாம்.

எனக்கு பூண்டுகூட‌ வேண்டாம், பூண்டுத் தாள்தான் வேண்டும், அதன் செடி எப்படி வளருகிறது என்பதைப் பார்க்க ஆசை என்பதால் சும்மா முயற்சி செய்தேன்.

உழவர் சந்தையில் இருந்து வாங்கி வந்த பூண்டிலிருந்து மூன்று பூண்டுப் பற்களை மட்டும் தோலுடன் தனியே பிரித்தெடுத்து மண் நிரப்பிய ஒரு தொட்டியில் சுமார் ஒன்றரை இன்ச் அளவு ஆழத்திற்கு பூண்டுப் பல்லின் அடிப்பகுதி கீழேயும், மேல்பகுதி மேலேயும் இருக்குமாறு மண்ணின் உள்ளே வைத்து நட்டுவிட்டேன்.


இரண்டுமூன்று நாட்களில் துளிர்விட்டு மேலே வ‌ந்தது. சிறிது பிச்சு கசக்கி முகர்ந்து பார்த்தால் சாதாரண பூண்டு வாசனையைவிட இது அதிகமாக இருந்தது.


                                                             கடகடவென வளர்ந்தது.


செடிக்குக் கீழே பூண்டு வந்திருக்குமா எனத் தோண்டிப் பார்க்க ஆசைதான். 'இப்போதைக்கு வேண்டாம், கோடை முடியும் நேரம் வரட்டும்' என்றிருக்கிறேன்.


பூண்டுத்தாளை வைத்து என்ன சமையல் செய்யலாம் என காமாக்ஷி அம்மாவிடம் கேட்டபோது 'வெங்காயத்தாள் மாதிரியே பயன்படுத்திக் கொள்ளலாம்'  என்றதும் கடலைப் பருப்பு வடை, அடை, தோசை, வத்த‌க்குழம்பு, புலாவ் என எல்லாவற்றிலும் சேர்த்துவிட்டேன். நன்றாகவே இருந்தது.


                                                   அறுவடையான பூண்டுத் தாள்கள்


பூண்டுத் தாளை நறுக்கி எடுத்த பிறகு ................. இரண்டொரு நாளில் மீண்டும் துளிர்த்து வளர ஆரம்பித்துவிட்டது.

                                                    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


இன்று(05/10/14) காலையில் போய் பார்த்தால் .......... வாஆஆவ், பூண்டு செடியின் வேர் பகுதியில் நல்ல பிங்க் நிறத்தில் பளிச்சென பூண்டு வந்திருக்கு. மண்ணைப் போட்டு மூடியுள்ளேன். நன்றாக முற்றியதும் சொல்கிறேனே :)

                                                 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்றுதான்(06/21/14)  பூண்டு அறுவடை பற்றி எழுத முடிந்தது.

மண்ணுக்குக் கீழேயுள்ள பூண்டுதான் பிடுங்காததால் முளைத்து வெளியே வருகிறதோவென ஒரு ஆர்வக்கோளாறில் அந்த செடியைப் பிடுங்கிவிட்டேன். அது பூண்டு விதை என்பது அப்போதைக்குத் தெரியாது. அதற்கும் கீழேதான் பூண்டு இருந்தது. பிறகென்ன, மற்ற இரண்டு செடிகளையும் சேர்த்து பிடுங்கியாச்சு.

காய வச்சாச்சு. ஒரே நாள்தான், அடிக்கிற‌ வெயிலில் ஈரமாவது ஒன்னாவது.

                                                            உரிச்சிப் பார்த்திடலாமா?

குட்டிகுட்டியாய் ஆறு விதைகள் இருந்தன‌.ஒரு விதை உருண்டோடிவிட்டது. தேடியும் கிடைக்கவில்லை.

ஒவ்வொன்றிலும் எத்தனை பூண்டுப்பல் இருந்தது என்றுதானே பார்க்கிறீர்கள்?


எங்கள் வீட்டில் பூண்டு சாப்பிட ஆள் இல்லையாம், அதனால் ஒரு பூண்டில் மூன்று பல்லும், ஒன்றில் இரண்டும், மற்றொன்று வெங்காயம் மாதிரியும் இருந்தது. இது வெங்காயமா அல்லது பூண்டுதானா என்பதை நாளைதான் நறுக்கிப் பார்க்க வேண்டும்.

இந்த அனுபவம் உங்களில் சிலருக்கும் இருந்திருக்கும். நாங்க சின்ன பிள்ளையா இருந்தபோது எங்கள் ஊரில் சிலரது வீட்டு மண்சுவரின் கீழே சிறுசிறு குழி இருக்கும்.

நன்றாகப் பார்த்தால்தான் அது தெரியும். அதைப் பிள்ளைகள் தேடிப்பிடித்து 'பன்னிக்குட்டி வாவா' என விரலால் தோண்டுவாங்க. அதிலிருந்து குட்டியா ஒரு உயிரி வெளியே வரும். அதை கைகளில் சேர்த்து வைப்பாங்க. இந்தப் பூண்டு விதைகளும் சிறு வாலுடன் அதே மாதிரியாகத்தான் இருக்கிற‌து.

                                              ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்று(06/23/14) மீண்டும் ஒரு குட்டியூண்டு அப்டேட்.

பூண்டு அறுவடையில் வெங்காயம் வடிவில் இருந்ததைப் பார்த்து 'பூண்டு செடியில் எப்படி வெங்காயம் வந்தது ?' என இவ்வளவு நாளும்
 நினைத்திருந்தேன்.
                                                         இன்று நறுக்கிப் பார்த்தால் .........
                                                                அட, அதுவும் பூண்டுதான் ! 

வெங்காய வடிவிலான     (கின்னஸுக்குப் போலாமா    வேணாமா என ஒரே யோசனை)    பூண்டு.    நல்ல வாசனை.

ஆக மொத்தம் ஒரு பூண்டில் மூன்று பல்லும், மற்றொன்றில் இரண்டு பல்லும் , அடுத்ததில் ஒரு பல்லுமாக ....... எல்லோரும் பொறாமைப்படும் அளவில் அறுவடை அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                                                       வெங்காயத் தாள்

பலமுறை சின்ன வெங்காயத்தை நட்டு வைத்துப் பார்த்துவிட்டேன். அது முளைத்து வெளியில் வரவே நீண்ட‌ நாட்களாகும். அப்படியே வந்தாலும் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும், அதாவது அழுகிவிடும்.

ஒருமுறை 'மகி'யின் பதிவைப் பார்த்து வெங்காயத் தாளின் வேரை நட்டு வைத்தாலும் அதிலிருந்து பயன் உண்டு என்பது புரிந்தது. முன்பே இது தெரிந்திருந்தால் பல ஒரு டாலர் பில்களை மிச்சம் பிடித்திருக்கலாமே, ஹ்ம் !


வெங்காயத் தாளிலிருந்து நறுக்கப்பட்ட வேர்கள் நடுவதற்குத் தயாரான நிலையில் ...


                                     வேர் பகுதி மண்ணிற்குள்ளே இருக்குமாறு .....


                                              மூன்று தொட்டிகளில் நட்டாச்சுங்கோ.


                                                          துளிர்விடத் தொடங்கியாச்சு !


                         நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து ....


                                              அறுவடைக்குத் தயாரான நிலையில் ...


                                              அறுவடையான வெங்காயத்தாள்கள்  :)


                   அறுவடையை முடித்த பிறகு மீண்டும் வளரும் என்ற ஆசையில்.....

கடகடவென வளர்ந்து இப்போது ஒரு வாரத்திற்குள்ளாகவே மீண்டும் அறுவடைக்குத் தயாராக உள்ளது. முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கோ !

Monday, May 5, 2014

ரோஜா _____ 2


என்னதான் ஊட்டி ரோஸ், பெங்களூர் ரோஸ் என பல வண்ணங்களிலும், 'பல நாட்கள் வாடாமல் இருக்கும்' என வரிசை கட்டி வந்தாலும் படத்திலுள்ள இந்த பன்னீர் ரோஜாவுக்கு அடுத்தபடிதான் அவையெல்லாம். இதன் நிறமா அல்லது மணமா தெரியவில்லை, இந்தப் பூக்கள் என்றால் எனக்குக் கொள்ளை விருப்பம்.


ஊரில் இருந்தவரை பலமுறை முயற்சித்தும் ரோஜா செடியை மட்டும் என்னால் வளர்க்கவே முடியவில்லை. இதன் தண்டுகளை யாரிடமாவது வாங்கி வந்து நிறைய பதியம் போடுவேன். கொடுக்கும்போது அவர்கள் சொல்வது "முதலில் குச்சி காய்ந்துகொண்டே வரும், பிறகுதான் துளிர்விடும்" என்று. ஆனால் நான் நடும்போது குச்சி காயுமே தவிர ஒருநாளும் துளிர் வந்ததில்லை.


"இதன் இதழ்களை சாப்பிட்டால் இந்த ரோஜா நிறத்துக்கே வந்துவிடுவோம்", என்று சிலர் சொன்ன கட்டுக் கதைகளை நம்பி காலையில் தலையில் வைத்துவிட்டு மாலையில் வதங்கிய பிறகு கீழே தூக்கிப் போடமாட்டோம். தலைப் பின்னலை அவிழ்க்கும் போதே பாவமாய் வதங்கியிருக்கும் இப்பூவின் இதழ்களைப் பிய்த்து சாப்பிட்டு விடுவோம்.


அதில் எவ்வளவு தூசி படிந்திருக்கும், தேங்காய் எண்ணெய் எவ்வளவு ஏறியிருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை, நமக்குத் தேவை 'ரோஜா நிறம்', அவ்வளவுதான் !!


கடைசியில 'ரோஜா  நிறம் வந்துச்சா'ன்னு கேக்குறீங்களா ?  ஹ்ம்ம்  ..... இதுதானே வேணாங்கிறது !!


லாண்டரி, ஜிம், ஸ்விம்மிங்பூல், வீடுகளின் முன்னால் வரிசையாக என எங்கும் பூத்துக் குலுங்குகிறது.


இங்கே இருப்பதால் பூத்த அத்தனைப் பூக்களும் செடியிலேயே உள்ளன. நம் ஊரில் என்றால் ?  நானே தினம் ஒன்றாக அத்தனையையும் பறித்து  காலி பண்ணியிருப்பேன்.

இல்லீங்க, இப்போல்லாம் அப்படி செய்யமாட்டேன். நாங்களும் நல்ல பிள்ளையா மாறிட்டோமில்ல !!

Friday, May 2, 2014

அரளிப் பூ / Arali poooo ! ............. தொடர்ச்சி


இங்கு வசந்தத்தின் உச்சபச்ச வெயில் நேற்றுதான். சராசரியாக‌ 73 டிகிரி இருக்கணுமாம். ஆனால் நேற்றோ 90 டிகிரியைத் தொட்டது. இந்த வாரம் முழுவதும் தொலைக் காட்சியில் இதைப் பற்றித்தான்  பேச்சு, எப்படி beat the heat பண்ணுவது என்று.

நானும் என் பங்கிற்கு வெயிலை சமாளிக்க காலையிலேயே எங்க அப்பார்ட்மென்டில் உள்ள பூக்களைப் பார்த்து ரசித்துக்கொண்டே 'வாக்' போனேன்.  அவற்றுள் சில அரளிப் பூக்கள் இங்கே ....


நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போதே தேனை உறிஞ்ச ஒரு வண்டு பூவினுள் நுழைந்தது.

                     முயற்சியைக் கைவிடாத வண்டு . நானும் விடுவதாக இல்லை.


பார்ப்பதற்கு பூவினுள் வண்டு இருப்பதே தெரியவில்லை. பாருங்க, உங்க கண்ணுக்கும் அது  தெரியலைத்தானே !!

ஒருவேளை அரளியும் பூச்சியுண்ணும் தாவரமோ என சந்தேகப்பட்டேன். ஆனால் நொடியில் தொபுக்கடீர்னு வண்டு வெளியேறிவிட்டது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வண்டைப் பார்த்து பயந்துபோன கண்களைக் குளிர்ச்சியூட்ட மேலும் சில அழகான அரளிப் பூக்கள்.


எங்க அப்பார்ட்மென்டில் அரளியும், ரோஜாவும் போட்டி போட்டுக்கொண்டு பூக்க ஆரம்பித்துள்ளன.

ரோஜா ?   வேறொரு பதிவில் ...... !!