அமெரிக்காவுக்கு வந்து மகளுக்கு ஒரு குட்டி சைக்கிள் வாங்கி, ஒரு வாரத்தில் சிலர் தோழிகளாகக் கிடைத்த பின்னர்தான் தெரியும், பெண் பிள்ளைகளுக்கு ஒரு நிறத்திலும், பையன்களுக்கு வேறு சில நிறங்களிலும் பொருட்கள் வாங்க வேண்டுமென.
நாங்கள் வாங்கியது அடர் நீல & வயலட் நிற சைக்கிள். பிள்ளைகள் எல்லாம் விளையாடும் இடத்திற்குப் போனால் அங்கே எல்லா அம்மாக்களும் "ஏன் பாய்ஸ் சைக்கிள் வாங்கியிருக்கீங்க? " என்று துக்கம் விசாரிப்பதுபோல் கேட்கவும்தான் விவரம் புரிந்தது.
அந்த நீலநிற சைக்கிளை இரண்டு வருடங்கள் ஓட்டிய பிறகு நல்ல இளம் & அடர் பிங்க் நிறத்தில் புது சைக்கிள் வாங்கினோம். அதே நிறத்திலேயே ஜிகுஜிகு Bicycle Streamers எல்லாம் வைத்து ....... பார்க்க அழகாகத்தான் இருந்தது.
ஊரில் இருந்தபோது மகளுக்கு நல்ல சிவப்பு நிற மூன்று சக்கர சைக்கிள்தான் வாங்கிக் கொடுத்திருந்தேன். அப்போதைக்குக் கடையில் இருந்தது அந்த ஒரு நிறம் மட்டும்தான்.
ஆனால் இங்கோ பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பையிலிருந்து எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து வாங்க வேண்டியதாயிற்று.
அப்படித்தான் குடையும். முதலில் பல வண்ண குடை, அடுத்து பிங்க் நிற குடை என வாங்கினாள். ஆறாம் வகுப்பிலிருந்து மென்மையான நிறத்தில் பூக்கள் உள்ள குடைகளைத் தெரிவு செய்தாள். ஒன்பதாம் வகுப்பிலிருந்து கொஞ்சம் அடர் நிற பூக்கள் உள்ள குடைகளை வாங்கினாள்.
இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அம்மா எந்தக் குடையை வேண்டுமானாலும் வெளியே எடுத்துச் செல்லலாம். ஆனால் அப்பா மட்டும் கருப்பு நிற குடையை மட்டுமே எடுக்க வேண்டும்.
இவர் என்றைக்காவது வேண்டுமென்றே டிசைன் உள்ள குடையை எடுத்தால் ஓடி வந்து பிடுங்கிக்கொண்டு, சாதாரண கறுப்பு நிறக் குடையை எடுத்து வந்து தருவாள்.
இப்போது கல்லூரிக்குப் போகும்போது குடை வாங்கச் சென்றால், "சாதாரண கறுப்பு நிறக் குடைதான் வேண்டுமென்று" வாங்கினாள்.
"நல்ல நல்ல டிசைனெல்லாம் இருக்கே, எடுத்துக்கோ" என்றதற்கு, "இப்போ அதையெல்லாம் யூஸ் பண்ணா 'சைல்டிஷ்'ஷா இருக்கும்", என்றாள். இவள் ஆறாம் வகுப்பில் வாங்கிய குடைகளைக்கூட இன்றும் பயன்படுத்துகிறேனே, அப்படியென்றால் ..... நான் ?
மகள் கல்லூரிக்குப் போனபிறகு ஒருநாள் இங்கே நல்ல மழை. வருவதும் போவதுமாக இருந்தது. இருந்தாலும் 'வாக்' போகலாம் என நாங்கள் இருவரும் பாதுகாப்புக்குக் குடைகளுடன் கிளம்பிப் போனோம்.
வழியில் திடீர் தூறலின் வருகையால் குடையின் அவசியம் ஏற்பட்டது. முதலில் என்னுடைய குடையை விரித்து இவரிடம் கொடுத்தேன். என்னுடைய குடை என்பது இவர்கள் புதிதாக வாங்கி, தொலைத்தது போக மீதமுள்ளவை எல்லாம் என்னுடைய குடைகள்தான். இதில் நிறமாவது? டிசைனாவது? எதுவும் பார்க்கமாட்டேன். எனக்கென எப்போது வாங்கினேன்? அவ்வ்வ்வ் !
இவரோ "இது வேண்டாம், அந்தக் குடையைக் கொடு" என்று தன் கறுப்பு நிறக் குடையைக் கேட்டார்.
"ஒரு செகண்ட் இதப் பிடிங்க, தருகிறேன்" என்றேன். இவரது குடையை விரிப்பதற்குள் என்னுடைய குடையுடன்(அதாவது மகளது குடையுடன்) கொஞ்ச தூறம் சென்றுவிட்டார்.
இதுதான் சமயமென 'செல்'லில் ஒரு 'க்ளிக்' பண்ணி மகளுக்கு அனுப்பினேன்.
அவளோ 'ஸ்மைலி ஃபேஸ்' மட்டுமே பதிலாக அனுப்பினாள்.
"பாப்பு, அப்பா வச்சிருக்கும் குடையைப் பார்த்தியா " என்று மெஸேஜினேன்.
அவளோ "அம்ம்ம்மா, அப்பாவுக்குப் பிடிசிருந்தா விட்டுடு, கேக்க வேணாம்", என்றாள் பதிலுக்கு .
"அடடா, இவ்வளவு நாளும் பிடுங்கிப்பிடுங்கி வைப்பவளிடமிருந்து இப்படியொரு பதிலா", என ஆச்சரியமாகிப் போனேன்.
இது தொலைவில் இருப்பதால் வந்த பாசமா ? அல்லது கல்லூரி கற்றுக் கொடுத்த மனப் பக்குவமா ?
//இது தொலைவில் இருப்பதால் வந்த பாசமா ? அல்லது கல்லூரி கற்றுக் கொடுத்த மனப் பக்குவமா ?//
ReplyDeleteஇரண்டும்தான் சித்ராக்கா
பிங்க் கலர் விஷயத்தில் நானும் ரொம்ப மிஸ்டேக்ஸ் செய்திருக்கேன் .என் மகள் செகண்டரிக்கு போன வருடம் ஆரம்பிச்சப்போ தெரியாம லைட் ப்ளூ நிறத்தில் ஸ்கூல் பாக் வாங்கிட்டேன் .நமக்கெல்லாம் எங்கே இவங்க சிஸ்டம் புரிய நாளாச்சே !! ..
இப்போ எங்க குட்டி மேடமும் பிங்க் விரும்பறதில்லை :) 9 ஆம் வகுப்பு போறாளாம் அதனால் இனிமே பிரவுன் அல்லது ப்ளாக் தான் வேணுமாம் ..
என்னை அடிக்கடி சொல்லுவா //எதுக்கு நீங்க கலர் கலரா சல்வார் போடறீங்கன்னு // awwww
ஓ, உங்க பொண்ணு ஒன்பதாம் வகுப்பு வந்தாச்சா :) //எதுக்கு நீங்க கலர் கலரா சல்வார் போடறீங்கன்னு // ஹா ஹா ஹா. தாங்கள் வளர்ந்து வருகிறோம் என்பதை புரிய வக்கிறாங்க.
Deleteஎங்க பாப்பாவும் 'Caillou, Dora எல்லாம் நானாமா பார்த்தேன்' என்பாள் ! 'டிஸ்னி பிரின்ஸஸ், டோரா' இவங்க இருக்கற பையையெல்லாம் தான் வைத்திருந்ததை இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை. எல்லாம் கடைக்காரர்களின் வியாபாரத் தந்திரம்தான்.
ஏஞ்சல் கவனிச்சீங்களா, ஒருவழியா 'பிங்க்'ல இருந்து நாம வெளியே வந்துட்டோம். ஆனால் ஒருத்தவங்க இனிமேதான் பிங்க், டோரா எல்லாம் தேடி ஓடுவாங்க. :))))
//ஏஞ்சல் கவனிச்சீங்களா, ஒருவழியா 'பிங்க்'ல இருந்து நாம வெளியே வந்துட்டோம். ஆனால் ஒருத்தவங்க இனிமேதான் பிங்க், டோரா எல்லாம் தேடி ஓடுவாங்க. :))))// hmmm!! புள்ளைங்களை டீன் ஏஜுக்கு கொண்டுவந்துட்டோம்ன்ற தெம்பில ரெண்டு பேரும் என்னைய ஓட்டிகிட்டே இருக்கீங்க!! அவ்வ்வ்வ்வ்வ்....:))))
Deleteபாப்பு பிறந்த நியூஸ் ஃபேஸ்புக்ல போடும்போதே அவங்கப்பா பிங்க் கலரைத்தான் கவர் ஃபோட்டோ-வா போட்டார்..ஹிஹி..!! இருந்தாலும் அப்பப்ப அவங்களுக்கு வாங்கற டிரெஸஸ்ல என் ஃபேவரிட் மஞ்சக்கலர்(ஜிங்குச்சா!! ;)) இருக்கறமாதிரியும்தான் வாங்கறேன். ஹஹஹ!!
பை த வே சித்ராக்கா, உங்க கேள்வியின் பதில் எனக்குத் தெரியலை, தெரியவர இன்னும் சிலபல வருஷங்களாகும்னு நினைக்கறேன். என்னதான் சொல்லுங்க, பொண்ணுங்க எப்பவும் அப்பா பக்கம் கொஞ்சம் ஓவர் பாசம்தான்! :)
வளரட்டும், பிறகு பாருங்க, 'ஏம்ம்ம்மா எனக்கு மஞ்சக்கலர் ட்ரெஸ் எல்லாம் போட்டுவிட்டிருக்க' என்பாள். இல்லை மகி, சும்மா சொன்னேன். அவர்களின் புன்னகையுடன் எது போட்டாலும் அழகுதான்.
Deleteபொண்ணுங்க அப்பா பக்கம் ...... ஹ்ம்ம்... 'முதல் ஹீரோ'வாச்சே ! ஏஞ்சலின் சொன்ன மாதிரி ரெண்டும்தான் மகி.
//ஏஞ்சல் கவனிச்சீங்களா, ஒருவழியா 'பிங்க்'ல இருந்து நாம வெளியே வந்துட்டோம். ஆனால் ஒருத்தவங்க இனிமேதான் பிங்க், டோரா எல்லாம் தேடி ஓடுவாங்க. :))))//
Deleteஹா ஹா :) ஆமாம் !! ..
ம்ம்ம் இந்த பொண்ணுங்க அப்படியே அப்பா கோண்டுக ! ! அப்பாவை ஹீரொவாக்குரதில் தப்பில்லை ஆனா அம்மாங்களை
ஜீரோ ஆக்குறாங்க !!
ஏஞ்சலின்,
Deleteகொஞ்சம் வெயிட் பண்ணுங்க, இப்போதானே ஒன்பதாம் வகுப்பு போயிருக்காங்க. இன்னும் கொஞ்ச நாளில் அம்மாவுக்கு உற்ற முதல் தோழியா மாறிடுவாங்க பாருங்க. ஆனாலும் அவங்களுக்கு அப்பா கொஞ்சம் ஆச்சரியமானவர்தான்.
எனக்குமே அம்மாவுடன் வீட்டில் இருந்ததைவிட அப்பாவுடன் வெளியில் போனதுதான் இன்னமும் நினைவில் இருக்கிறது, பிடிக்கவும் செய்கிறது.
பக்குவம் அடையவில்லை என்றே தோன்றுகிறது...
ReplyDeleteஹ்ம், அப்படியா சொல்றீங்க !
Deleteவருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க.
முதலில் இதுதான் வேண்டும், அதுதான் வேண்டும் என்று சொன்னாலும் போகப்போக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள கற்றுக் கொண்டு விடுகிறார்கள், குழந்தைகள். நாம் தான் அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள் என்பதை எளிதில் ஒப்புக்கொள்ள மறக்கிறோம் அவர்கள் மேல் உள்ள அதீத பாசத்தினால்.
ReplyDeleteவீட்டை விட்டு வெளியில் போனால் அவர்கள் கற்றுக்கொள்வது ஏராளம். அவர்கள் வளர்கிறார்கள். நாம் திரும்பவும் அவர்கள் வயதுக்கு (அதாங்க, இரண்டாவது குழந்தைப் பருவம்!) வந்துவிடுகிறோம். நமது பாசத்தையும், பரிவையும் அவர்கள் வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்!
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.
Deleteஇந்தக் குழந்தைகளை புரிந்து கொள்ளவே முடியாது. அப்படித்தான் நம் பெற்றோரும் நம்மோய்ப் பற்றி சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteநிச்சயமா சொல்லியிருப்பாங்க. அதிலும் அப்பா பெண் பிள்ளைகளையும், அம்மா மகன்களையும் பற்றி சொல்வது குறையாது.
Deleteவருகைக்கும் நன்றிங்க.
:))))
ReplyDeleteகுழந்தைகளை புரிந்து கொள்ளவே முடிவதில்லை...
குடை எந்த வண்ணமாக இருந்தால் என்ன, மழையிலிருந்து காக்க வேண்டும் என்பது மட்டுமே நான் யோசிப்பேன்.. :)
வேலைக்குப் போனபிறகுதான் எனக்குன்னு ஒரு குடையே வாங்கிக் கொடுத்தாங்க.
Deleteஇங்கு வந்த பிறகுதான் தெரியும் 'இப்படியெல்லாம்கூட இருக்குமா' என்று ! எல்லாவற்றிலும் நிறங்களின் ஆதிக்கம். ஒரு நிலைக்குமேல் பிள்ளைகளுக்கே போதும் போதுமென்றாகிவிடுகிறது.
வருகைக்கும் நன்றிங்க.
குடை நம்முடன் இருக்கும்போது, அதை வாங்கித்தந்தவரும் உடன் இருப்பதுபோலவே இருப்பதாக, கூறக் கேட்டிருக்கிறேன். வண்ணத்தில் இருப்பதல்ல பாதுகாப்பு; வாங்கித்தந்தவர் எண்ணத்தில் இருப்பதுதான் பாதுகாப்பு.
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மைதான். அனுபவம் உண்டு. உங்களின் இந்தப் பின்னூட்டம் இது சம்மந்தமான ஒரு பதிவையே எழுதத் தூண்டிவிட்டது.
Deleteவருகைக்கும் நன்றிங்க.