Thursday, May 8, 2014

எங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்

                                                       
                                                                        பூண்டுத் தாள்

உழவர் சந்தையில் பூண்டுடன்கூடிய பூண்டுச் செடிகள் கிடைக்கும். ஆனால் நான் வாங்கியதில்லை. சரி வீட்டிலேயே வளர்த்துப் பார்க்கலாமே என 'யூ டியூப்'பில் தேடினால் ஏகப்பட்ட வீடியோக்கள் உள்ளன. இலையுதிர் காலத்தில் நட்டு கோடையில் அறுவடை செய்ய வேண்டுமாம். ம‌ண்தோட்டம் வைத்திருப்பவர்கள் முயற்சி செய்யலாம்.

எனக்கு பூண்டுகூட‌ வேண்டாம், பூண்டுத் தாள்தான் வேண்டும், அதன் செடி எப்படி வளருகிறது என்பதைப் பார்க்க ஆசை என்பதால் சும்மா முயற்சி செய்தேன்.

உழவர் சந்தையில் இருந்து வாங்கி வந்த பூண்டிலிருந்து மூன்று பூண்டுப் பற்களை மட்டும் தோலுடன் தனியே பிரித்தெடுத்து மண் நிரப்பிய ஒரு தொட்டியில் சுமார் ஒன்றரை இன்ச் அளவு ஆழத்திற்கு பூண்டுப் பல்லின் அடிப்பகுதி கீழேயும், மேல்பகுதி மேலேயும் இருக்குமாறு மண்ணின் உள்ளே வைத்து நட்டுவிட்டேன்.


இரண்டுமூன்று நாட்களில் துளிர்விட்டு மேலே வ‌ந்தது. சிறிது பிச்சு கசக்கி முகர்ந்து பார்த்தால் சாதாரண பூண்டு வாசனையைவிட இது அதிகமாக இருந்தது.


                                                             கடகடவென வளர்ந்தது.


செடிக்குக் கீழே பூண்டு வந்திருக்குமா எனத் தோண்டிப் பார்க்க ஆசைதான். 'இப்போதைக்கு வேண்டாம், கோடை முடியும் நேரம் வரட்டும்' என்றிருக்கிறேன்.


பூண்டுத்தாளை வைத்து என்ன சமையல் செய்யலாம் என காமாக்ஷி அம்மாவிடம் கேட்டபோது 'வெங்காயத்தாள் மாதிரியே பயன்படுத்திக் கொள்ளலாம்'  என்றதும் கடலைப் பருப்பு வடை, அடை, தோசை, வத்த‌க்குழம்பு, புலாவ் என எல்லாவற்றிலும் சேர்த்துவிட்டேன். நன்றாகவே இருந்தது.


                                                   அறுவடையான பூண்டுத் தாள்கள்


பூண்டுத் தாளை நறுக்கி எடுத்த பிறகு ................. இரண்டொரு நாளில் மீண்டும் துளிர்த்து வளர ஆரம்பித்துவிட்டது.

                                                    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


இன்று(05/10/14) காலையில் போய் பார்த்தால் .......... வாஆஆவ், பூண்டு செடியின் வேர் பகுதியில் நல்ல பிங்க் நிறத்தில் பளிச்சென பூண்டு வந்திருக்கு. மண்ணைப் போட்டு மூடியுள்ளேன். நன்றாக முற்றியதும் சொல்கிறேனே :)

                                                 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்றுதான்(06/21/14)  பூண்டு அறுவடை பற்றி எழுத முடிந்தது.

மண்ணுக்குக் கீழேயுள்ள பூண்டுதான் பிடுங்காததால் முளைத்து வெளியே வருகிறதோவென ஒரு ஆர்வக்கோளாறில் அந்த செடியைப் பிடுங்கிவிட்டேன். அது பூண்டு விதை என்பது அப்போதைக்குத் தெரியாது. அதற்கும் கீழேதான் பூண்டு இருந்தது. பிறகென்ன, மற்ற இரண்டு செடிகளையும் சேர்த்து பிடுங்கியாச்சு.

காய வச்சாச்சு. ஒரே நாள்தான், அடிக்கிற‌ வெயிலில் ஈரமாவது ஒன்னாவது.

                                                            உரிச்சிப் பார்த்திடலாமா?

குட்டிகுட்டியாய் ஆறு விதைகள் இருந்தன‌.ஒரு விதை உருண்டோடிவிட்டது. தேடியும் கிடைக்கவில்லை.

ஒவ்வொன்றிலும் எத்தனை பூண்டுப்பல் இருந்தது என்றுதானே பார்க்கிறீர்கள்?


எங்கள் வீட்டில் பூண்டு சாப்பிட ஆள் இல்லையாம், அதனால் ஒரு பூண்டில் மூன்று பல்லும், ஒன்றில் இரண்டும், மற்றொன்று வெங்காயம் மாதிரியும் இருந்தது. இது வெங்காயமா அல்லது பூண்டுதானா என்பதை நாளைதான் நறுக்கிப் பார்க்க வேண்டும்.

இந்த அனுபவம் உங்களில் சிலருக்கும் இருந்திருக்கும். நாங்க சின்ன பிள்ளையா இருந்தபோது எங்கள் ஊரில் சிலரது வீட்டு மண்சுவரின் கீழே சிறுசிறு குழி இருக்கும்.

நன்றாகப் பார்த்தால்தான் அது தெரியும். அதைப் பிள்ளைகள் தேடிப்பிடித்து 'பன்னிக்குட்டி வாவா' என விரலால் தோண்டுவாங்க. அதிலிருந்து குட்டியா ஒரு உயிரி வெளியே வரும். அதை கைகளில் சேர்த்து வைப்பாங்க. இந்தப் பூண்டு விதைகளும் சிறு வாலுடன் அதே மாதிரியாகத்தான் இருக்கிற‌து.

                                              ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்று(06/23/14) மீண்டும் ஒரு குட்டியூண்டு அப்டேட்.

பூண்டு அறுவடையில் வெங்காயம் வடிவில் இருந்ததைப் பார்த்து 'பூண்டு செடியில் எப்படி வெங்காயம் வந்தது ?' என இவ்வளவு நாளும்
 நினைத்திருந்தேன்.
                                                         இன்று நறுக்கிப் பார்த்தால் .........
                                                                அட, அதுவும் பூண்டுதான் ! 

வெங்காய வடிவிலான     (கின்னஸுக்குப் போலாமா    வேணாமா என ஒரே யோசனை)    பூண்டு.    நல்ல வாசனை.

ஆக மொத்தம் ஒரு பூண்டில் மூன்று பல்லும், மற்றொன்றில் இரண்டு பல்லும் , அடுத்ததில் ஒரு பல்லுமாக ....... எல்லோரும் பொறாமைப்படும் அளவில் அறுவடை அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                                                       வெங்காயத் தாள்

பலமுறை சின்ன வெங்காயத்தை நட்டு வைத்துப் பார்த்துவிட்டேன். அது முளைத்து வெளியில் வரவே நீண்ட‌ நாட்களாகும். அப்படியே வந்தாலும் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும், அதாவது அழுகிவிடும்.

ஒருமுறை 'மகி'யின் பதிவைப் பார்த்து வெங்காயத் தாளின் வேரை நட்டு வைத்தாலும் அதிலிருந்து பயன் உண்டு என்பது புரிந்தது. முன்பே இது தெரிந்திருந்தால் பல ஒரு டாலர் பில்களை மிச்சம் பிடித்திருக்கலாமே, ஹ்ம் !


வெங்காயத் தாளிலிருந்து நறுக்கப்பட்ட வேர்கள் நடுவதற்குத் தயாரான நிலையில் ...


                                     வேர் பகுதி மண்ணிற்குள்ளே இருக்குமாறு .....


                                              மூன்று தொட்டிகளில் நட்டாச்சுங்கோ.


                                                          துளிர்விடத் தொடங்கியாச்சு !


                         நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து ....


                                              அறுவடைக்குத் தயாரான நிலையில் ...


                                              அறுவடையான வெங்காயத்தாள்கள்  :)


                   அறுவடையை முடித்த பிறகு மீண்டும் வளரும் என்ற ஆசையில்.....

கடகடவென வளர்ந்து இப்போது ஒரு வாரத்திற்குள்ளாகவே மீண்டும் அறுவடைக்குத் தயாராக உள்ளது. முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கோ !

31 comments:

 1. ஆஹா அருமை !!! பூண்டுதாளில் இவ்ளோ ரெசிப்பிஸ் இருக்கா ? ..நானும் நட்டு வச்சிருக்கேன்
  ஒரு பிரச்சினை இங்கே வெயில் அப்பப்போ மட்டும் விசிட் பண்றார் ..உங்கூர் வெயிலை கொஞ்சம் இந்தப்பக்கம் வெகேஷனுக்கு அனுப்பி வைங்க சித்ரா :)
  நான் இன்னிக்குதான் லெமன் கிராஸை தண்ணில போட்டு விட்டிருக்கேன் :) வளர்ந்தா போஸ்ட் போடறேன் .

  அனைவரும் இப்படி வீட்டு தோட்டத்தில் ஆர்வமுடன் இருப்பது சந்தோஷமாக இருக்கு :)

  ReplyDelete
  Replies
  1. எஞ்சலின்,

   இன்றைய மாலைத் தூறலுக்குக் காலையிலிருந்தே வானம் தயார் நிலையில் உள்ளது. நாளை வெயில் வந்ததும் சந்தோஷமாக உங்க ஊர் பக்கம் அனுப்பி வைக்கிறேன்.

   வெங்காயத்தாள் மாதிரியேதான் பூண்டுத்தாளும், கொஞ்சம் கூடுதல் ஃப்ளேவர், அவ்வளவே. லெமன் க்ராஸ் வாங்கியதில்லை, அதனால் அதைப் பற்றி எதுவும் தெரியாது. உங்க போஸ்ட் வந்த பிறகு பார்க்கிறேன்.

   ஊரில் இருந்தவரை பூச்செடிகளுடன், இங்கு வந்த பிறகு இதுமாதிரி. இதிலிருக்கும் சந்தோஷமே தனிதான்.

   Delete
 2. அவ்வ்வ்வ்வ்வ்,,,கமெண்ட்டை முழுக்க தட்டி...வெளியிடு-விற்கு பதிலா வெளியேறு-வைத் தட்டிட்டனே!! அவ்வ்வ்வ்...வ்வ்வ்வ்!

  ReplyDelete
 3. ஹ்ம்ம்..ஒன்ஸ் மோர் டைப்பிங்! இன்னிக்கு என்னமோ நரி முகத்தில முழிச்சிருக்கேன் போலிருக்கு. சின்னச் சின்ன வேலைகளும் காம்ப்ளிகேட்டட்-ஆகவே ஆகிறது.

  பூண்டு பூச்சிக்கொல்லி போல என்று நம்ம இமா றீச்சர் சொல்லிருக்காக. நான் 2010ல சில பூண்டுகளை நட்டேன், தளிர்த்து வந்தன. ஆனா இப்படி சமைக்கணும் என தோணலை..மேலும் அதில பூண்டும் கிடைக்கலை! ;) பிறகு நடவேண்டும் என்று நினைவே வர்ல!

  வெ.தாள் இரண்டாவது முறையில் பூ வைத்திருக்கு இங்கே. பூ வருமா என டவுட்லயே காத்திருக்கேன். உங்கூட்டுல என்னாச்சுன்னு சொல்லுங்க. அப்படியே கோடையில் பூண்டுவந்ததும் மறக்காமச் சொல்லணும்.

  ஹேப்பி கார்டனிங்! :)

  ReplyDelete
  Replies
  1. பாப்பு தூங்கும்போதே வேலையை முடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் நடந்திருக்கலாம்.

   பூண்டு பூச்சிக் கொல்லியா ! இது நல்லாருக்கே. முதலில் தக்காளிச் செடிக்கு ஒரு பூண்டு நட வேண்டும். போன தடவ சிவப்பு நிறத்தில் எறும்பு மாதிரி ஒரு பூச்சி வந்தது. ஆனால் இந்த தடவை அதைக் காணோம். ஒருவேளை பூண்டுச்செடி அருகில் இருப்பதாலா ! மகிக்கும், இமா டீச்சருக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். பூண்டு வந்தால் சொல்றேன் மகி. வரலைன்னாலும் ஓகேதான் . தாள் மட்டுமே போதும்னு நினைக்கிறேன். எனக்கும் பூண்டுத்தாளை சமைக்கணும்னு தெரியாது மகி. காமாக்ஷிமா சொன்ன பிறகுதான் தெரிந்தது.

   பூ வந்தால் விதை கிடைக்குமா? இந்த சமயத்துல மண்ணில் வெங்காயமும் வருமா? இப்போதான் இரண்டாவது அறுவடை. இன்னைக்கு நைட் டிஃபன் என்ன தெரியமா ? புது வெங்காயத்தாள் சப்பாத்தி :) மாவு பிசைந்து வைத்துள்ளேன். எனக்கு விதையோ, வெங்காயமோ வேண்டாம், தாள்தான் வேண்டும்.

   Delete
  2. //பூண்டு பூச்சிக் கொல்லியா !// ம். ரோஜாச் செடிகளுக்கு இடையே நட்டுவையுங்கள்.

   //தாள்// நீங்கள் இலையைச் சொல்கிறீர்கள்!!! இங்கே 'கார்லிக் ஸ்டெம்ஸ்' கிடைக்கும். அது சமைக்க நன்றாக இருக்கும்.

   //பூ வந்தால் விதை கிடைக்குமா?// நிச்சயம். அப்படியே முதிர விட்டால் குட்டிக் குட்டிப் பூண்டாக மாறும். பிறகு உதிர்த்தி நடலாம்.

   //இந்த சமயத்துல மண்ணில் வெங்காயமும் வருமா?// இரண்டுக்கும் அறுவடை நாட்கணக்கு வேறு.

   Delete
  3. இமா,

   "//பூண்டு பூச்சிக் கொல்லியா !// ம்" _________ நல்ல விஷயம் தெரிந்துகொண்டேன். நன்றிங்கோ !! ஆனால் பூச்செடியெல்லாம் வீட்ல இல்லையே :(

   இப்போது தக்காளியில் பூக்களும், குட்டிக்குட்டிக் காய்களும் வந்திருக்கு. பேசாம பச்ச பூண்டுப் பற்களை அரைச்சு தெளிச்சு விடப் போறேன்.

   'தாள்'னு சொல்றது வெறும் இலைகளை மட்டும்தான். பூண்டுல மூனு ஸ்டெம்ஸ் இருக்கு. குருமாவில் சேர்த்திட வேண்டியதுதான். இல்லாட்டி பூ பூத்து விதை வருதான்னு பார்க்கிறேன். வெங்காயத்தையும் கவனித்து வருகிறேன்.

   Delete
  4. சித்ராக்கா, இந்த ஸ்ப்ரிங் ஆனியன் வளர்ப்பதில் வெங்காயம் மண்ணில் வராது என நினைக்கிறேன், அது விதைகளிலிருந்து முளைக்க வைக்கப்படுவதால் வெ.தாள் மட்டுமே கிடைக்கும், மண்ணில் வெங்காயம் கிடைக்காது என ஒரு வெப்சைட்டில் படித்த ஞாபகம். யார் முதல்ல பறிக்கிறமோ அப்டேட் பண்ணிக்கலாம், ஓகே-வா?! :)

   Delete
  5. மகி,

   அவங்க இந்த செடியைப் பிடுங்காம விட்டிருந்தாலும் வெங்காயம் வராதா ! விதை போட்டு முளைத்தால் காய் வராது என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

   வெங்காயம் வராட்டி போகுது விடுங்க. இங்கே போதும்போதும் எனுமளவுக்கு சின்னதும் பெரியதுமாக‌ சின்ன வெங்காயம் கிடைக்கிறது. விலையும் முன்பைவிட குறைவுதான்.

   "யார் முதல்ல பறிக்கிறமோ அப்டேட் பண்ணிக்கலாம், ஓகே-வா?!" _________ பிடுங்கின பிறகு வெங்காயம் வராட்டியும் கொஞ்சம் சோகமாக ஒரு பதிவு போட்டுடுவோமே !

   Delete
 4. அருமை சகோதரி. வெங்காயத் தாள் கடைகளில் வாங்குவது போலே உள்ளதே. இப்படி ஆவதற்கு எத்தனை நாட்கள் ஆயின ? ஏன் கேட்கிறேனெனில், நானும் வீட்டில் நட்டு வைத்திருக்கிறேன். இலைகள் மெலிதாக உள்ளன. அவை ஓரளவுக்கு நீளமாக வளர்ந்ததும், இலைகள் நடுவில் ஒடிந்தது போல் தொங்குகிறது.

  ReplyDelete
  Replies
  1. வெங்காயச் செடிகள் உழவர் சந்தையிலிருந்து வாங்கி வந்தவை. நட்டு ஒரு வாரம்தாங்க ஆச்சு, கிடுகிடுன்னு வந்துடுச்சு. ஆமாம், கொஞ்சம் வளர்ந்ததும் மடங்கிவிடுகிறது. படத்துலகூட இருக்கு பாருங்க.

   சிலவற்றில் மெலிதாக உள்ள இலைகளும் உள்ளன. ஒருவேளை சின்ன வெங்காயத்தாளா இருக்குமோ ! அப்படி இருந்தால் சுவை இன்னும் கூடுதலாவே இருக்கும். இதுதானான்னு எதற்கும் இங்க போய் பாருங்க. http://chitrasundar5.wordpress.com/2013/01/07/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8Dgreen-on/

   Delete
  2. அப்பதிவில் உள்ள இரண்டாவது புகைப்படத்தில் இருப்பது போல் தான் சகோதரி இருக்கிறது. எவ்வளவு நாட்களில் தாள்களை வெட்டி எடுக்கலாம் ?

   Delete
  3. வீட்டிலிலேயே வளர்ப்பதால் உங்களுக்குத் தேவையானதை எல்லா செடிகளிலிருந்தும் அடிப்பகுதியில் உள்ள தாளை 'கட்' பண்ணிக்கோங்க. ஒரு வாரம் போதும் என்றே நினைக்கிறேன்.

   வெட்டி எடுத்த பிறகு புகைப்படத்துடன் போடுங்க, உங்க வீட்டு வெங்காயத்தாள் எப்படி இருக்குன்னு நாங்களும் பார்க்கிறோம் :)

   Delete
  4. சகோதரி, எங்கள் விட்டு வெங்காயத் தாள் மற்றும் பூண்டு தாள் புகைப்படங்களுக்கான இணைப்பு :

   என் சின்னஞ்சிறு தோட்டத்தில்

   Delete
  5. தமிழ்முகில்,

   உங்க சின்னஞ்சிறு தோட்டத்திற்கான லிங்க் கொடுத்ததற்கு நன்றிங்க. போய் பார்த்துவிட்டு வந்தேன். தோட்டம் பெரிதாக‌ வாழ்த்துக்கள்.

   Delete
 5. தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் சந்தேகம் தான் எங்களுக்கும்...

  ReplyDelete
  Replies
  1. ஒரு வாரத்திலேயே வளர்ந்தாச்சுங்க. மண்தோட்டமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். உடையும் சமயம்பார்த்து அறுவடையை ஆரம்பிச்சிட வேண்டியதுதான் :)

   Delete
 6. பூண்டுத் தாள், வெங்காயத் தாள் பார்க்கும்போதே தொட்டியில் நட்டுவைக்க ஆசை தான்......

  ReplyDelete
  Replies
  1. "தொட்டியில் நட்டுவைக்க ஆசை தான்......" _________ இது மட்டும்தான் தேவை. உடனே வேலையை ஆரம்பிச்சிடுங்க‌.

   Delete
 7. அவ்வ்வ்வ்வ்! பூண்டு அழ...கா இருக்கு சித்ராக்கா! வெங்காயம் மாதிரி மண்ணுக்குள்ள வரும்னு நினைச்சேன், இப்படி வெளியே தளிர்த்திருக்கே?! :) சரி, வளர்ச்சியை ஸ்டெப்-பை-ஸ்டெப் அப்டேட் பண்ணுங்கோ!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மகி, பூண்டு அழகா வந்திருக்கு இல்ல ! மண்ணுக்குள்ளதான் வரணும், ஏனோ வெளிய வந்திருக்கு. அதனால மேல மண்ணைத் தூவி மறைச்சிட்டேன். ஊருக்குப் போய் தோட்டம் உள்ள வீடா அமைஞ்துச்சுன்னா கட்டாயம் வெங்காயம், பூண்டு எல்லாம் உண்டு.

   அப்புறம் கொத்துமல்லிகூட கொத்துகொத்தா காய்ச்சிருக்கு மகி. இப்பவே ஒரு அமௌண்ட (என்னோட)அக்கவுண்ட்ல தள்ளி விட்டிங்கின்னா விதை கன்ஃபார்ம்னு கவலைப்படாம இருக்கலாம் :)

   Delete
 8. பதிவுலகம், பூண்டுத் தாளும், ,வெங்காயத்தாளுமாக மணக்கிறதே என்று பார்த்து வந்தால்,
  நீங்கள் தான் காரணம் என்று புரிகிறது. நான் முருங்கைக் கீரையில் சப்பாத்தி செய்வேன், வெங்காயத் தாளிலும் செய்யலாமோ?

  ReplyDelete
  Replies
  1. பூண்டும், வெங்காயமும் இருப்பதால் கண்டிப்பாக‌ வாசனை அங்குவரை வர வாய்ப்பிருந்திருக்கும்.

   நீங்களும் செஞ்சு பாருங்க. முருங்கைக் கீரைக்குப் பதிலாக வெங்காயத் தாளைப் பொடியாக்கி சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

   Delete
 9. :)
  பி.கு. நான் சிரிக்கவே இல்ல்ல்ல்ல்ல்ல்ல்லை! என் முகம் எப்பவுமே இப்படித்தான் (சிரித்த முகமா) இருக்கும்!! ;) ஹிஹி..

  அதுவும் பூண்டைப் பார்த்துப் புல்லரித்தேன்! நிஜமாவே சூப்பரா இருக்கு சித்ராக்கா! முதல் முறை பயிரிட்டதற்கு மோசமில்லை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஹும் .... நம்பித்தானே ஆகவேண்டும் :)

   ஆமாம் மகி, 'பூண்டு பயிர் செய்வது எப்படி?'ன்னு தெரிஞ்சு போச்சு. இனி விலை ஏற்றம்பற்றி கவலைப்படாம‌ ஜமாய்ச்சிடலாம். இன்றுதான் நறுக்கிப் பார்த்தேன், வெங்காயம் மாதிரி இருந்ததுகூட பூண்டுதான். நல்ல வாசனை.

   Delete
 10. முதலில் உங்கள் பூண்டு விளைச்சலை யாரிடமும் காண்பிக்காதீர்கள். கண் பட்டு விடும். நான் சிரிக்காமல் தான் எழுதுகிறேன் . நம்புங்கள். சித்ரா.

  ReplyDelete
  Replies
  1. பாத்தீங்களா, நான் சொன்னது சரியாத்தானே இருக்கு.

   கடைசியில உங்க பின்னூட்டத்தையெல்லாம் பார்த்து என்னால சிரிப்பை அடக்க முடியல‌.

   Delete
 11. பூண்டுத்தாளும், வெங்காயத்தாளும் பொறாமை கொள்ள வைக்கிறது....:)) அந்த குட்டி குட்டி விதைகள் பார்க்கவே அழகா இருக்கு. எவ்வளவு விளைச்சலாக இருந்தாலும் நாமே செய்தது என்றால் அதற்கு மதிப்பே தனி தானே... தொடரட்டும் உங்கள் தோட்டக்கலை...

  ReplyDelete
  Replies
  1. ஆதி,

   வெங்காயத்தாள் இன்னமும் வந்துட்டேதான் இருக்கு. மீண்டும் பூண்டு நட்டு வச்சி வளர்ந்து வருது. வீட்டில் வளர்த்து கிடைப்பது கொஞ்சமாக இருந்தாலும் அதில் ஒரு மகிழ்ழ்சி இருக்கத்தான் செய்கிறது.

   வருகைக்கும் நன்றிங்க.

   Delete
 12. வணக்கம்!
  இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
  வாழ்த்துக்கள்!
  ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
  திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
  பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
  படைப்புகள் யாவும்.

  நட்புடன்,
  புதுவை வேலு,
  www.kuzhalinnisai.blogspot.com

  ( எனது பதிவு
  "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
  சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
  குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
  படரட்டும்!
  (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

  ReplyDelete
  Replies
  1. புதுவைவேலு,

   வலைச்சரர்த்தில் அறிமுகமானதைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி. உங்கள் விருப்பப்படியே பட்டித்தொட்டியெங்கும் பரவட்டும். தொடரவும் செய்கிறேன்.

   Delete