Friday, November 21, 2014

நுனிக்கிச்சாம் பூ / உன்னிப் பூ & _____ காய்


நம்ம ஊர் 'பூ'தாங்க   'பூ'வு. என்ன ஒரு அழகு ! சகோதரி வீட்டுத் தோட்டத்தில் பூத்த நுனிக்கிச்சாம் பூ. இந்த‌ ஊர் பூக்கள் இங்கேயும் , இங்கேயும் உள்ளன.

                               வெள்ளையும், நடுவில் மஞ்சளுமாக பார்க்கவே பளிச்சென‌!

முழுவதும் பூத்து முடிக்கும்போது கொஞ்சம்கொஞ்சமாக வெண்மை மறைந்து இளம் வயலட் நிறத்திற்கு மாறுகிறது..

ஒரு காலத்தில் இப்பூவை கொத்தாகப் பறித்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு பூவாக எடுத்து தேனை உறிஞ்சுவோம். இப்போது அந்த வேலையை எறும்புகள் செய்துகொண்டிருந்தன.

                                          பூத்து முடித்த பிறகும் .... என்னே ஒரு நிறம் !!

                                                                காயாகிவிட்டது

இது பழமானால் கருப்பாக இருக்கும். அதையும் விடமாட்டோம், பறித்து சாப்பிட்டுவிடுவோம். நாங்கள் ஊரில் இருந்தவரை அந்தச் செடியில் பூக்களும், காய்களும் வந்தனவே தவிர பழங்கள் பழுக்கவில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                                                                            _____  காய்                                                       


வலையுலகில் ஒரு பிரபல பதிவரின் ஊர் பெயரைக் கொண்ட காய் இது. "அப்படின்னா இது எந்தக் காய் ?" என்றெல்லாம் கேட்கப்போவதில்லை. உங்களில் பாதிப்பேர் என்னை மாதிரியே இக்காயை உடைத்து மண் சிலேட்டில் தேய்த்து பளிச்சினு எழுத முற்பட்டிருப்பீங்க‌. அதனால ஈஸியா சொல்லிடுவீங்க.

அதனால கேள்வி இதுதான் ...... "இந்த இரண்டு காய்களில் எது முதலில் பழுத்திருக்கும் ? " னு நீங்க‌ நினைக்கீறீங்க !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உமையாள் கரெக்ட்டா கெஸ் பண்ணிட்டீங்க. கீதா உங்க முயற்சிக்கும் நன்றி.


கீழ உள்ள காய்தாங்க முதலில் பழுத்துச்சு. சின்ன வயசுல இந்த பழங்களைப் பறிச்சு சாப்பிட்டதுண்டு. ஆனால் இப்போது ஏனோ சாப்பிடவில்லை. ஒருவேளை சுத்தம், சுகாதாரம், அது இதுனு தேவையில்லாத பயமா இருக்குமோ !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Tuesday, November 18, 2014

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் _____ சிட்டுக்குருவி


"எங்கள் வீட்டுத் தோட்டத்தில் __ மிளகாய் அறுவடை" என்ற பதிவைப் போட விருப்பம்தான். கொஸகொஸன்னு முளைத்து வந்த மிளகாய் நாற்றுகள் முளைத்த தடமே இல்லாமல் போய்விட்டது. சிட்டுக்குருவிகளும், புறாவும் பண்ணிய அட்டகாசத்தில் ஏற்கனவே இருந்த பருப்புகீரை, புளிச்சகீரையேகூட‌ காணாமல் போய்விட்டது.

ஆனாலும் இந்த குருவிகள் வந்து போவதில் ஒரு சந்தோஷம். நீங்களும் வந்து ரசிக்க ....

எப்படி முயன்றும் இவர்களைக் காமிராவில் பிடிக்க முடியவில்லை. கதவுகளைத் திறக்க முற்படும்போதே விடு ஜூட். இன்னைக்கு ஒருவழியா ஏமாத்தி எடுத்தாச்சு.

                                       யாரோ நம்மை கண்காணிக்கிற மாதிரி தெரியுதே !

                                                                  உஷாராகும் சிட்டு

                                                    ஆஹா, துளிர் ஒன்று தெரியுதே !

                                         துளிரை ஒருகை பார்த்திட வேண்டியதுதான் !
                        
    இப்படித்தான் கொத்திக்கொத்தி துளிர்களை எல்லாம் காலி பண்ணியாச்சு.

                                          குளிர்காய வந்திருப்பாங்களோ !

                                            பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு ....

          ஆளைப் பார்த்ததும் ஒருவர் பக்கத்தில் இருந்த குட்டி ம‌ரத்தில் ஏறியாச்சு.

                                                  மற்றவர் வேறொரு செடியில்

                                        தோட்டத்தில் இறங்கலாமா ? வேண்டாமா ?
                                     
                                                                   இறங்கியாச்சு

                                             எங்கே கண்டுபிடிங்க பார்க்கலாம் !!

                                                    ஜோடியில் ஒருவர் மரத்தில் ...

                                            மற்றவரும் அங்கே போகத் தயாராக ...

புறா ? ......  வேறொரு பதிவில் வருவார்.

Sunday, November 16, 2014

அக்கம் பக்கம் _ 1

                 

வழக்கம்போல இந்த‌ வாரமும் உழவர் சந்தைக்குப் போயிருந்தோம். ஒரு கடையில் நான் உட்பட சிலர் காய்கறிகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தோம். கடைக்கு எதிரிலேயே தெருவின் நடுவில் ஒரு பெண்ணும் , அவரது அம்மாவும்(அப்படித்தான் இருக்க வேண்டும்) நின்றுகொண்டு சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்தனர்.

நான் ஒட்டுக் கேட்காமலேயே(நெஜமா, நம்புங்க) அவர்களின் வீட்டுக் கதைகள் தானாகவே காற்றில் கரைந்து வந்து என் காதுகளில் விழுந்தன.

அக்கடையில் காய்களை எடுத்துக்கொண்டிருந்த நம்ம ஊர்க்காரர் ஒருவர் திடீரென திரும்பி அவர்களைப் பார்த்து, "லக்ஷ்மி! லக்ஷ்மி! இங்க நெறைய பேரு தமிழ்க்காரங்க இருக்காங்க, மெதுவா பேசு" என்றார் சத்தமாக‌ !

அவர் சொன்னது எனக்குப் புரிந்தும், சிலருக்குப் புரியாமலும் அக்கடையில் இருந்த மொத்த கூட்டமும் அவர் பார்த்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தார்கள் .

அப்பெண்ணின் பெயர் 'லக்ஷ்மி' என்பது இப்போது எனக்குத் தெரிந்து  விட்   ட  து.   (ஆனாலும் இங்கே நான் பெயரை மாற்றிப் போட்டுள்ளேன்)

ஆனால் அவர்கள் இவர் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவேத் தெரியவில்லை. சில நொடிகளிலேயே மீண்டும் சத்தம்போட்டு பேச ஆரம்பித்துவிட்டனர்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் நபர். அவர்களையே மிஞ்சிவிடும் அளவில் இப்போது மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்து, "லக்ஷ்மி! இங்க நெறைய பேருக்கு தமிழ் தெரியும், இங்க பேச வேண்டாம், எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்க‌லாம்" என்றார்.

ம்ஹூம் ...... அவர்கள் அசரவேயில்லை !

அந்த இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும், உண்மையில் சொல்ல வேண்டுமானால் அந்த நபர் சத்தம்போட்டு சொல்லித்தான் அவர்கள் பேசுவதைக் கவனிக்க வைத்தார்.

ஆனாலும் எனக்கு ஒரு விஷயம் கடைசிவரை புரியவே இல்லை. அதாவது அந்த நபர் கடைகடையாகப் போய் காய்கறிகள், பழங்களை வாங்கிக் கொண்டிருந்தாரே தவிர, அந்த இரண்டு பேரும் மருந்துக்குக்கூட கடைப் பக்கம் வரவேயில்லை. பேச்சு சுவாரசியத்தில் கடைக்கு வந்ததையே மறந்துவிட்டார்களோ !!

                                                   பன்னீர் கரும்பு & பச்சை மல்லாட்டை

உழவர் சந்தையிலிருந்து வாங்கி வந்த பன்னீர் கரும்பு, பச்சை மல்லாட்டையை சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க !

Monday, November 10, 2014

மறைந்திருந்து ...... !!


மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன !!


யாரு, என்ன பண்ணிட்டு, எதுக்காக ஒளிஞ்சிருக்காங்க‌ ????

பழத்தைக் கடித்துக்கொண்டிருக்கும் கிளியைப் படமெடுக்கலாம் என முயற்சித்தால் ......... அது காமிரா கூச்சத்தினால் பழம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஓடி ஒளிந்துகொண்டது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 சகோதரி வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் ஒரு கொய்யா மரத்தில் பழுக்கும் பழங்களுக்கு நாங்கள் மட்டுமல்லாமல் கிளி, அணில், ஓணான் என எல்லோருமே வாடிக்கையாளர்கள்தான்.
 
மரத்திலேயே நன்கு பழுத்த பழம்.பழத்தைவிட செங்காய்தான் சுவையாக இருக்கும்.


                                     கொய்யாவைக் கவரக் காத்திருக்கும் ஓணான்.
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, November 7, 2014

மா ம் பழம் !!

                                                        

இங்கு பள்ளிக்கு கோடை விடுமுறை விட்டதும் ஜூன் இரண்டாம் வாரத்தில் ஊருக்குக் கிளம்பிவிடுவேன். இந்த வருடம் ஒருசில வேலைகளால் ஜூலை மூன்றாவது வாரம் புறப்பட்டதால் முதலிலேயே எல்லோரிடமும் கேட்டு உறுதி செய்துகொண்டுதான் கிளம்பினேன்.

'என்ன கேட்டேன்'னுதானே பாக்குறீங்க?

"கடைகளில் இன்னமும் மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துகொண்டிருக்கிறதா?" என்பதுதான் அது.

"எப்போது ஊருக்குப் போவோம் ? எப்போது அவற்றையெல்லாம் சுவைப்போம் ?" என்ற எண்ணம் மனதின் ஓர் ஓரத்தில்  ஓடிக்கொண்டேதான் இருக்கும்.

இங்கு 'அவற்றை' என்பது 'நுங்கு, பச்சை கேழ்வரகு, பச்சை மல்லாட்டை, கரும்பு, மாம்ப‌ழம், நாவப்பழம், (செங்காயாகப் பறித்த புளியங்காய்,  முந்திரிப் பழம், பனங்கிழங்கு,  ஹு ம், இவை மூன்றையும் சாப்பிட்டுப் பார்த்து 13 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது), இந்த லிஸ்ட் இன்னும் நீண்டுகொண்டே போகும்.

நாங்க ரெண்டு பேருமே சரியான பழ விரும்பிகள். அதிலும் மாம்பழம் என்றால் கொள்ளை விருப்பம். இப்போதும் கடைக்குப் போனால் மாம்பழம் இல்லாமல் வீடு திரும்பமாட்டோம். இங்குதான் எல்லாப் பழங்களும் எல்லா நாட்களிலும் கிடைக்கிறதே !

என்னதான் இங்கு சில‌ வகை மாம்பழங்கள் கிடைத்தாலும் சிறு வயது முதல் சாப்பிட்டுப் பழகிய சுவை, நாவை விட்டு அவ்வளவு எளிதில் போவதில்லை.

வழக்கம்போல் இந்தமுறையும் ஊருக்குப் போய் திரும்பும்வரை நீலம், ருமேனியா, பங்கனபள்ளி என‌ இஷ்டத்திற்கும் வாங்கி சாப்பிட்டாச்சு.

ஆனாலும் சாப்பிடாமல் விட்டது ஒட்டு மாங்கா பிஞ்சுகளும், ஒட்டு மாம்பழங்களும்தான். நாங்கள் போனபோது அதன் அறுவடைக் காலம் முடிந்துவிட்டதாம். அடுத்த தடவ ....... உஷாராயிடுவோமில்ல !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விழுப்புரத்திலிருந்து சென்னை செல்லும் சாலையெங்கும் ஆங்காங்கே மாம்பழக் கடைகள் இருந்ததில் எங்களுக்குத்தான் என்னவொரு சந்தோஷம் !

                                                                 சாலையோரக் கடை

                                                             
                                                            மான் தண்ணி குடிக்கிதாம் !!

நீங்களும் இந்த வாரத்தின் கடைசி நாளையும் & அடுத்த வாரத்தின் முதல் நாளையும் இதே சுவையோடு கழிப்பீர்கள் என எண்ணுகிறேன் !!

Wednesday, November 5, 2014

இந்தப் பூ ! எந்தப் பூ ! ______ 2இந்தப் பூ 'எந்தச் செடியின் பூ' என்று மாத்திரம் சொல்லுங்கள்.சமீபமாக எங்கள் வீட்டில் நிறைய பூக்கின்றன.

க்ளூ கொடுக்  கட்  டு  மா ! இது பூப்பது அழகுக்காக வைத்த செடியில் இல்லை, சமையலுக்காக வைத்த செடியில் :}

                                  சென்ற வார வெள்ளிக் கிழமை அடித்த சாரலில் ......

'இன்னொரு க்ளூ ப்ளீஸ்' என்பவர்களுக்காக :

முற்றிய செடியைப் பிடுங்கிவந்து காயவைத்து, அடித்து, நாரெடுத்து, கயிறு திரிப்பார்கள். அந்நேரம் இதிலிருந்து சிறு தூசு நம்மேல் பட்டால்கூட அவ்வளவுதான், சுணை பிடுங்கி எடுத்துவிடும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புளிச்சகீரை செடியில் அதன் பூ எவ்வளவு அழகா இருக்கு பாருங்க !  பதிவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி!

உழவர் சந்தையிலிருந்து வாங்கி வந்த 'புளிச்ச கீரை' குச்சிகளில் இருந்து கீரையை ஆய்ந்துவிட்டு குச்சிகளை மட்டும் நட்டு வைத்ததில் அவை துளிர்த்து, பூத்து, இப்போது காய்களும் வந்திருக்கிற‌து.

                                                                        ஃப்ரெஷ் கீரை

விதை வேண்டுவோர் இப்போதே முன்பணத்துடன் ஆர்டர் செய்திடுங்கோ !

Monday, November 3, 2014

திரு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் __ __ திருவதிகை __ __ ( தொடர்ச்சி )சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போல வடிவமைக்கப்பட்டு, பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, அவற்றுள் சில எட்டிப் பார்ப்பதுபோன்ற‌ அழகைக் கீழேயுள்ள படங்களில் காணலாம்.


                                               மேலும் சில அழகிய காட்சிகள்.
                                  முருகன் சந்நிதியின் முன் உள்ள மயில் வாகனம். 
                       
              வெளிப்பிரகாரத்தில் வரிசையாக உள்ள சிவலிங்கத் திருமேனிகள்

                                   அவற்றுள் மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனி இது.

தமிழ்நாட்டில் வேறெங்கும் காணமுடியாத 'பஞ்சமுக லிங்கம்' அதிலொன்று.

                                                               நாவுக்கரசர் சந்நிதி

                        தாயார் பெரியநாயகி சந்நிதியின் முன்பாக உள்ள நந்தியார்

          திரும்பும்போது இருட்ட ஆரம்பித்து, விளக்குகள் போடபட்டுவிட்டன.

         மீண்டும் ஒருமுறை கோபுர தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினோம்.

                     கோயிலுக்குப் பக்கத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தேர்.