Wednesday, October 30, 2013

தீபாவளி ஸ்பெஷல் !!.........(தொடர்ச்சி)


                          சுடச்சுட புது முறுக்கு தயாரா இருக்கு, எடுத்துக்கோங்க ! 

**********************************************************************************

சென்ற பதிவின் தொடர்ச்சி....

நான் அமெரிக்கா வந்தபோது, கூடவே தீபாவளியும் வந்துசேர்ந்தது.

திருமணத்திற்குப் பிறகு சில‌ தீபாவளிகள் வந்தாலும் இங்கு வந்த பிறகுதான் ஒன்றாகக் கொண்டாடினோம். வேலை, வெளியூர் என ஆளுக்கொரு திசையில். ஊரில் இருந்தவரைக்கும் அம்மாவுடன்தான் தீபாவளி, பொங்கல்...... எல்லாம்.

முதன்முதலாக நாங்களாகக் கொண்டாடும் தீபாவளி. ஸ்வீட்ஸ், காரம் எல்லாம் நானே செய்ய வேண்டுமென ஆசை. ஊரில் அம்மாவுக்கு உதவிகள் செய்திருக்கிறேனே தவிர நானாக எதையும் செய்ததில்லை. ஆனாலும் சிலவற்றை செய்ய முடிவெடுத்தாச்சு. செய்வது எதுவாக இருந்தாலும் ஒரே நாளில் செய்யாமல் தினம் ஒன்று செய்வது எனத் தீர்மானித்தேன்.

திருமணமான புதிதில் பெங்களூருக்குப் போயிருந்தபோது இவர் ஒரு பெரிய புத்தகக்கடைக்கு கூட்டிக்கொண்டு போய் நான் விரும்பிய புத்தகங்களை வாங்கிக்கொள்ளச் சொன்னார். அவரைப்போலவே நானும் இருப்பேன் என நினைத்தது அவர் தவறு.

அங்கு 'சமைத்துப்பார்' என்ற தமிழ் புத்தகத்தை நான் கையில் எடுக்கவும் இவர் சிரித்துக்கொண்டே வாங்கிக்கொடுத்தார். அது இங்கு வந்த பிறகு அடிப்படையான சமையலுக்குக் கொஞ்சம் உதவியாக இருந்தது.

லட்டு எப்படி செய்ய வேண்டும் என்பதை மட்டும் அந்தப் புத்தகத்தில் பார்த்துக்கொண்டு அளவுகளை நானே போட்டு,  முதன்முதலாக எப்படியோ தட்டுத்தடுமாறி 11 லட்டுகள் செய்தேன். செய்து வைத்துவிட்டு என்னையே என்னால் நம்ப முடியாமல் டேஸ்ட்கூட பண்ணாமல் இவர்கள் வீட்டிற்கு வரும்வரை காத்திருந்தேன் .

சாப்பிட்டு பார்த்தால் சூப்பர் சுவை. முதல் ஸ்வீட்டே சூப்பராக வரவும் அடுத்தது என்ன செய்யலாம் என ஆர்வம் அதிகமாகிவிட்டது.

அடுத்த நாள் ஊரில் இருக்கும் என்னுடைய சகோதரியைப் பாடாய்ப்படுத்தி வெல்லப்பாகுக்கு பதம் கேட்டு, அழகழகான அதிரசங்களையும் சுட்டாச்சு. 

அடுத்து முறுக்கு செய்ய எண்ணி என்னென்னெ சேர்க்க வேண்டும் என அம்மாவிடம் அளவுகள் கேட்டு வாங்கி, அதை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ அந்த அளவுக்குக் குறைத்து, நானே ஒரு அளவைத் தயார் செய்துகொண்டு, அவற்றை வறுத்து மிக்ஸியில் போட்டு இடித்து மாவாக்கியாச்சு.

அம்மா சொல்லியிருந்தாங்க, "மாவு திப்பிதிப்பியா இருந்தா முறுக்கை கடித்துதான் சாப்பிட முடியும், சமயங்களில் அதுகூட முடியாது, அதனால மாவு மழமழன்னு இருக்கணும், அப்போதுதான் முறுக்கு பொரபொரனு வரும்", என்று.

என்னிடம் நம்ம ஊர் மிக்ஸி இல்லை. இந்த ஊர் மிக்ஸி எப்படி அரைக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

மாவை சலிக்க வேண்டும், சல்லடை இல்லை. அருகில் இருந்த ஒரு தோழியிடம் 'சல்லடை இருக்கிறதா' எனக் கேட்டேன்.

அவர், "என்னிடம் சல்லடை இல்லை சித்ரா, 'டீ அரிப்பி' இருக்கு, எடுத்துட்டு வரேன்" என்றார்.

சல்லடை மாதிரியிருக்கும் ஒன்றைத்தான் டீ அரிப்பி என்கிறாரோ, அது எப்படி இருக்கும் என்ற ஆவலில் அவர் வருகையை எதிர்பார்த்து வெளியிலேயே காத்திருந்தேன்.

அவரோ எவர் சிலவர் டீ வடிகட்டியுடன் வந்தார். பிறகு 'உங்கள் ஊரில் இப்படித்தான் சொல்வீர்களா, எங்கள் ஊரில் இப்படி சொல்லுவோம்' என்ற சம்பாஷனைகளைத் தொடர்ந்து, நான் வேண்டாம் என்று மறுத்தும் அவர் தன்னிடம் ம‌ற்றொன்று இருப்பதாகச்சொல்லி, கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

போகும்போது 'நான் சொன்ன மாதிரி முறுக்கு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினையில்லையே' என்றார்.  [என் பேச்சையே நான் கேட்காதபோது, அவர் சொல்வதையா கேட்கப்போகிறேன்!].

மனசு கேட்காமல், மாவை சலித்துவிட்டு டீ வடிகட்டியை நன்றாகக் கழுவி எடுத்துபோய் அவரிடம் கொடுத்தால், இனி தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள் என்று சொல்லிவிட்டார்.

அந்த டீ வடிகட்டி இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. ஒரு 10 மாதங்களுக்கு கொழுக்கட்டை, புட்டு என எல்லாவற்றிற்கும் அந்த டீ வடிகட்டிதான் ஒரு சல்லடையாய் இருந்து எங்களுக்கு உதவியது. ஊருக்குப் போனால் வாங்கி வரும் பொருள்களின் லிஸ்டில் சல்லடை முதல் இடத்தைப் பிடித்துக்கொண்டது.

அந்த முறுக்கு மாவில் அழகழ‌கான குட்டிகுட்டி முறுக்குகள் சுட்டேன். அழகாக இருந்தது போலவே நன்றாகவும் இருந்தது.

அம்மா செய்வது மாதிரி பெரிய முறுக்காக சுட்டிருந்தால் ஒரு முறுக்கிலேயே மொத்த மாவும் காலியாகியிருக்கும் என்பதுதான் உண்மை.

டீ வடிகட்டியில் மாவு சலித்து முறுக்கு சுட்டேன் என்றால் எவ்வளவு மாவு இடித்திருப்பேன் என்று கற்ப‌னை செய்துகொள்ளுங்கள்.

இதுவரை எல்லாமே சொதப்பாமல் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பிரச்சினை மிக்ஸர் வடிவத்தில் எட்டிப்பார்த்தது.

அடுத்த நாள் மிக்ஸர் செய்யலாம் என முடிவெடுத்து நீண்ட நேரம் போராடி .....   ......    ....  .....  எல்லாம் செய்து கலந்து, கறிவேப்பிலை வறுத்துபோட்டுவிட்டு, கடைசியாக ஊறவைத்த பச்சை பட்டாணியை வடிகட்டி ஈரத்தை துடைத்துவிட்டு வாணலில் இருந்த எண்ணெயில் போட்டதுதான் தாமதம், ஒரு நொடி என்ன நடந்துதுன்னே தெரியவில்லை.

சுதாரித்துக்கொண்டு பார்த்தால் வாணலில் இருந்த எண்ணெயையும் காணோம், போட்ட பட்டாணிகளையும் காணோம், பட்.. பட்பட்.... படார் படார்..... என்ற சத்தம் மட்டுமே மனதில் கேட்டுக்கொண்டிருந்தது. நல்லவேளை வாணலில் எண்ணெய் கொஞ்சமாக இருந்ததால் தப்பித்தேன்.

சமையலறை முழுக்க எண்ணையும் பட்டாணியில் பாதியும். மீதி பட்டாணி எங்கன்னே தெரியவில்லை. பக்கத்தில் யாராவது இருந்தாலும் புலம்பித் தீர்த்திருக்கலாம்.

சிறிது நேரத்திற்கு அப்படியே உட்கார்ந்தாச்சு. 'கூல் டவுன் சித்ரா' என எனக்கு நானே சொல்லிக்கொண்டு தரை, அடுப்படி என எல்லாவற்றையும் துடைத்து கழுவி மீண்டும் துடைத்து........... போதும்போதும்னு ஆயிடுச்சு.

அடுத்த நாள் தீபாவளி........

காலை எட்டு மணிக்கெல்லாம் இட்லி, வடை, கேசரி எல்லாம் செய்துவிட்டு மக‌ளை பள்ளிக்கு அனுப்புவதற்குள் சாமி படைத்துவிடலாம் என நினைத்து கற்பூரம் ஏற்றிவிட்டு, அவர்களை அனுப்பிவிட்டு, கொஞ்சம் உயரத்தில், சுவரில் மாட்டியிருந்த முருகன் காலண்டர் என்னைப் பார்ப்பது போல இருக்கவும் அங்கே சென்று கற்பூரத்தட்டைக் காட்டியதும்தான் தாமதம், அதற்கும் மேலே உயரத்திலிருந்த‌ Smoke detector லிருந்து பீப் பீப் சத்தம் வந்துவிட்டது.

ஏதாவது பிரச்சினை என்றால் அலாரம் வரும் எனத் தெரியும். ஆனால் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாது. இவருக்கு ஃபோன் செய்தால் எடுக்கவில்லை. உடனே டீ அரிப்பி கொடுத்த தோழிக்கு ஃபோன் செய்தேன்.

அவர் ஒன்றும் பயப்பட வேண்டாம். கதவு சன்னலை எல்லாம் திறந்துவிட்டால் போதும் என்றார். ஒன்றும் பயனில்லை. ஒருவழியாக ஃபோனை எடுத்த இவரிடம் சொன்னால் 'பேப்பர் எடுத்து விசிறிவிடு' என்றார்.

மேல் வீடு என்பதால் உயரமான ஸீலிங். நல்ல உயரத்தில் ஸ்மோக் அலாரம். நாற்காலியைப் போட்டு எட்டிஎட்டி விசிறிப் பார்த்துவிட்டேன், பலனில்லை. பதட்டமாகவே இருந்தேன். வந்த புதுசா, எமர்ஜென்ஸிகாரங்க வந்திடுவாங்களோன்னு ஒரு பயம். வந்து கேட்டால் என்ன சொல்வது?

இவர் மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வந்து அதற்கு சாமரம் வீசும்வரை சத்தம் வந்துகொண்டேதான் இருந்தது. "அதெப்படி நான் இல்லாத சமயமா பார்த்து உனக்கு பிரச்சினை வருது", என்றார். இவர் இருந்தால் பிரச்சினை பிரச்சினையாக ஆக வாய்ப்பே இல்லையே .

ஒவ்வொரு தீபாவளிக்கும் இந்த நினைவுகள் வரத்தவறுவதில்லை. என்னென்ன வேலையெல்லாம் செஞ்சிருக்கோம்னு சிரிப்புதான் வரும்.

இப்போதெல்லாம் எப்படிக் கொண்டாடுறோம்னு நெனக்கிறீங்களா? நாங்கதான் நல்ல்ல்லா தெளிவாயிட்டோமே ! இந்த வருட தீபாவளியைக்கூட நவம்பர் கடைசி 'வீக்கெண்ட்'டுக்கு தள்ளி வச்சிருக்கோம்னா பார்த்துக்கோங்க!    (முற்றும்)
                                                                                                                                            

அனைவருக்கும் இதயம்கனிந்த, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

Friday, October 25, 2013

தீபாவளி ஸ்பெஷல் !!.........(தொடர்ச்சி)தீபாவளி ஸ்பெஷலாக சோமாஸ் கொண்டு வந்திருக்கேன், எப்படி இருக்குன்னு (சாப்பிட்டு பார்த்துதான்) சொல்லுங்க !

#################################################################################

இரவு தீபாவளி வரும்நாளை நாங்கள் 'இடிச்சு பொடச்சு' போடும் நாள் என்போம். ஒருவேளை அந்த நாட்களில் நெல், அரிசி இவற்றை இடித்தும் புடைத்தும் செய்ததால் இந்தப் பெயர் வந்திருக்க வேண்டும்.

அன்று காலையே அடுத்த நாள் இட்லிக்கான அரிசியும் உளுந்தும் ஊற வைத்துவிடுவார்கள். ஏதோ மாதக்கணக்கில் வைத்து சாப்பிடுவதற்கு அரைப்பதுபோல் பெரிய பெரிய பாத்திரங்களில் அவை ஊறிக்கொண்டிருக்கும்.

நண்பகலுக்கே மாவை அரைக்க ஆரம்பித்துவிடுவார்கள். மின்சாரம் போய்விட்டால் அவ்வளவையும் யார் கையால் ஆட்டி எடுப்பது? எனவே மதியத்திலிருந்து மாலைவரை கிரண்டர் ஓடும் சத்தம்...அப்பப்பா, எப்போது நிற்கும் எனத் தோன்றும்.

வீட்டிலுள்ள ஆண்களில் யாராவது போய் 'நான்வெஜ்' எடுத்து வருவார்கள். ஆடு, மீன் என அது அவரவர் வசதியைப் பொறுத்தது. எங்கம்மாவுக்கு இரவுவரை அதை சமைக்கவே நேரம் சரியாக இருக்கும்.

அன்று வீட்டிலுள்ள எல்லோரும் வழியவழிய தலையில் நல்லெண்ணெய் வைத்து தலை குளித்து முடிப்பர்.

புது துணி எடுத்திருந்தால் அது சரியாக இருக்கிறதா என போட்டுபோட்டுப் பார்த்து கடைசியில் அது பாதி பழசாகியிருக்கும்.

நாங்கள் எங்கள் பங்குக்கு அப்பா வாங்கிவந்த பட்டாசுகளை எல்லாம் மெத்தைக்கு எடுத்துக் கொண்டுபோய் காயவைக்கிறோம் பேர்வழின்னு அந்த வெயிலில் வாடி வதங்கிக் கொண்டிருப்போம். இவ்வளவும் காயவைக்கும் நான் ஒரு பட்டாசாவது வெடிக்க வேண்டுமே ....ம்ஹூம்...தொடவே மாட்டேன். அவ்வளவு பயம். பாம்பு மாத்திரை, மத்தாப்பூ பெட்டி, கம்பி, பென்சில் இவைதான் நான் கொளுத்துவது.

பட்டாசு வெடிச் சத்தத்தாலோ அல்லது பட்டாசால் வரும் புகையாலோ தெரியாது, தீபாவளி முடிந்து கொஞ்ச நாட்களுக்கு எங்கள் ஊரில் கொசுத் தொல்லையே இருக்காது.

இப்படி ஒவ்வொரு வேலையாக முடிந்துவர இரவு ஆகிவிடும். பிறகு சாமிக்குப் படைத்துவிட்டு சாப்பிடுபவர்கள் சாப்பிடவும், பட்டாசு வெடிப்பவர்கள் பட்டாசு வெடிக்க வீட்டிற்கு வெளியிலும் வந்துவிடுவார்கள்.

அன்றிரவு தூக்கமே வராது. ஒருவழியாக தூங்க ஆரம்பிக்கும்போது மீண்டும் கிரைண்டர் ஓடும் சத்தம் ஆரம்பித்துவிடும்.

உளுந்துவடை, கடலைப்பருப்பு வடை, சீயம், விதவிதமான‌ பஜ்ஜி, கேசரி என எல்லாமும் தயாராகிக்கொண்டிருக்கும். அம்மாவைப் பார்த்தாலே பாவமாக இருக்கும். எதுக்கு இவ்வளவு செய்றாங்கன்னு தோனும். கொஞ்சம் வளர்ந்த பிறகு அம்மாவுக்கு நிறைய உதவிகள் செய்வோம்.

மீண்டும் அதிகாலையில் எல்லோரும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பார்கள். அப்பா கடையிலிருந்து வாங்கி வந்திருக்கும் ஸ்வீட்ஸுடன், வீட்டில் செய்த பலகாரங்கள், பட்டாசு, புது துணி (எடுத்திருந்தால்) என எல்லாவற்றையும் சாமிக்கு முன்னால் வைத்து தீபாராதனை செய்யப்படும்.

சாமி அறையிலேயே கம்பி மத்தாப்பூ, தரை சக்கரம், பென்சில் என சிலவற்றை கொளுத்துவோம். பிறகு புதுதுணி போட்டுக்கொண்டு ஒரே ஓட்டமாக வெளியில் வந்து பட்டாசுகள் கொளுத்தி மகிழ்வார்கள்.

செய்த பலகாரங்களை பாத்திரங்களில் போட்டு எல்லா வீடுகளுக்கும் கொடுப்பார்கள். அவர்களின் வீடுகளிலிருந்து எங்கள் வீட்டுக்கும் வரும். எதற்காக இவ்வளவையும் செய்து எல்லோருக்கும் கொடுத்து, அவர்களும் இவர்களுக்கு கொடுத்து...... எல்லாம் ஒரு உறவுப்பாலம்தான்.

சோர்வடையும்வரை ஆட்டம்தான். எல்லா உறவுகளும் பக்கத்திலேயே இருப்பதால் இங்கும் அங்குமாக ஓடிஓடி வந்து.....ஜாலியாக இருக்கும்.

அன்று மதியம் சமையல் கிடையாது. அவரவரும் பிடித்தமானவற்றை எடுத்து சாப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அம்மா பாடுதான் கொஞ்சம் கஷ்டம். அப்பாவுக்கு இது பிடிக்காது. டீ, காபி என எப்படியோ ஓட்டிவிடுவார்கள்.

சென்ற பதிவில் நோன்பு, நோன்பு சட்டி என்றும் சொல்லியிருந்தேனே, அது எப்படி செய்வார்கள் என்று பார்ப்போமே !

சில சமயங்களில் தீபாவளி அன்று அமாவாசை வரும். இல்லையென்றால் அதற்கும் அடுத்த நாள் வரும். அந்த அமாவாசை வரும் நாளன்றுதான் கேதார கௌரி விரதம் இருப்பார்கள்.

நோன்புக்கு விரதம் இருப்பவர்கள் அன்று காலையில் இருந்தே எச்சில்கூட விழுங்காமல் இருப்பார்கள். திருமணமாகாத பெண்கள் இந்த விரதம் இருந்தால் நல்லது என்பார்கள்.

தினையை ஊறவைத்து உரலில் இடித்து, மாவாக்கி (இதற்கு ஏழு தோல் இருக்கும் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன், அவ்வளவு எளிதில் மாவாகாது) அதில் வெல்ல பாகு ஊற்றி கிண்டி அதிரசம் செய்வதற்காக  எடுத்து வைத்திருப்பார்கள். 'எப்போதடா படைச்சு முடிப்பாங்க, அந்த மாவை ஒருகை பார்த்துவிடலாம்' என பிள்ளைகள் எதிர்பார்த்திருப்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும் அந்த மாவு.

இப்போது தினையை பார்ப்பதே அரிது. அதனால் பச்சரிசியிலேயே அதிரசம் செய்துவிடுகிறார்கள். செய்வதற்கும் எளிது.

நோன்புக்கு தேவையான சாமான்கள் எல்லாம் வாங்கிவந்து ஒரு புது சட்டியில் போட்டு வைத்திருப்பார்கள். நோன்புக்கயிறு, விலவ இலை போன்றவை அதில் முக்கியமானவை.

மாலையானதும் ஒருபக்கம் சமையலும், இன்னொரு பக்கம் அதிரசம் செய்வதும் நடக்கும். அவற்றை சாமி அறையில் கொண்டுவந்து வைத்து படைப்பாங்க. விரதம் இருப்பவர் புதுதுணி அணிந்துகொண்டு, வில்வ இலைகளை கையில் வைத்துக்கொண்டு தன்னைத்தானே ஒன்பது சுற்றுகள் சுற்றிக்கொண்டு, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு இலை என நோன்பு சட்டியில் போட்டுவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டுதான் சாப்பிடுவார்கள். இன்று மீண்டும் பட்டாசுகள் கொளுத்தப்படும்.

படைத்ததும் எல்லோரும் நோன்புக்கயிறை கையில் கட்டிக்கொள்வார்கள். அதைக் கட்டும் விதமே வித்தியாசமாக இருக்கும். அம்மா வீட்டிலிருந்து பெண்ணுக்கு நோன்புக்கயிறும் அதிரசமும் அனுப்பி வைகப்படும்.

இந்த நோன்பு செய்முறை ஒவ்வொரு குடும்பத்திற்கும் இடையே வேறுபடும். நான் சொன்னது எங்க அம்மா வீட்டில் செய்வது.அதேபோல் வெளியூரில் உள்ள உறவினர் வீடுகளில் வேறு மாதிரியாக கடைபிடிப்பார்கள்.

சில வீடுகளில் "எண்ணி வைத்து செய்வது" வழக்கம். அதாவது சமையலில் சேர்க்கப்படும் காய்கறிகளிலிருந்து அதிரசம், நோன்புக்கயிறு என எல்லாமும் 21 எண்ணிக்கை வருமாறு செய்வார்கள். சிலர் நோன்பு சட்டியை  கோயிலுக்கு எடுத்துச்சென்று படைத்து எடுத்துவருவர்.

இப்போது உள்ளதுபோல் அப்போதெல்லாம் காரம் & ஸ்வீட்ஸ் எல்லாம் தீபாவளிக்கு முன்னரே செய்து வைத்துவிட மாட்டார்கள். தீபாவளி முடிந்த பிறகுதான் முறுக்கு மாவே தயாராகும்.

தீபாவளிப் பலகாரங்களில் முறுக்கும் அதிரசமும் கட்டாயம் உண்டு. மேற்கொண்டு எல்லடை, சோமாஸ் என எல்லாம் அவரவர் விருப்பம்போல்,  வசதிக்கேற்றார்போல் செய்யப்படும்.

தீபாவளி முடிந்த பிறகு ஓரிரு மாதங்கள்வரை பேருந்தில் பயணம் மேற்கொள்வோரில் பாதிபேருக்கும்மேல் உறவினர் வீடுகளுக்கு பலகாரங்களுடன் பயணம் செய்ப‌வர்களாகத்தான் இருப்பார்கள்.....(தொடரும்)

[இந்த ஊரில் நான் கொண்டாடிய நகைச்சுவையான‌ முதல் தீபாவளி அடுத்த தீபாவளி ஸ்பெஷலில்]

Tuesday, October 22, 2013

தீபாவளி ஸ்பெஷல் !!'தீபாவளி ஸ்பெஷல்' என்றதும் ஏதோ பலகாரங்களை எல்லாம் தனித்தனியாக ஸிப்லாக் கவரில் அல்லது பேப்பர் லன்ச் பேகில் போட்டு அவரவர் பேரெழுதி ஒரு கூடையில் போட்டுக் கொண்டுவந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்டுவேன் என்று நினைத்திருந்தால்..... ஹா.. ஹா...ஹா.....

அந்த நாளில் ஒவ்வொரு வார, மாத இதழும் தீபாவளி மலர் ,பொங்கல் மல்ர்..... என ஒவ்வொரு பண்டிகையின்போதும் சிறப்பு மலர்களை வெளியிடுவதுபோல், தீபாவளியை முன்னிட்டு என்னுடைய வலையிலும் ஏதாவது செய்து தீபாவளிக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் உங்களை உள்ளிழுக்க வேண்டுமே என்ற (நல்ல‌) எண்ணத்தில் உருவானதுதான் இந்த 'தீபாவளி ஸ்பெஷல்' !

எங்க ஊர் தீபாவளி !!

இது நான் பிறந்து வளர்ந்த ஊரில், எனக்கு முதன்முதலில் அறிமுகமான, தீபாவளி பற்றிய பகுதியாகும். ஆடம்பரமில்லாத, பளபளப்பில்லாத‌  தீபாவளி இது. எங்கள் ஊர் ஒரு சிறிய கிராமம். இங்கு தீபாவளியை எப்படி ஆரம்பிப்பார்கள் என்று பார்ப்போமே !

இப்போது பல மாற்றங்கள் ஏற்பட்டு 'எப்படி கொண்டாடுகிறார்கள்' என்று எனக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஒரு தடவையாவது தீபாவளி சமயமாகப் பார்த்து ஊருக்குப் போய்வர வேண்டும். இது எனக்கு மட்டுமல்ல, பலருடைய ஆசையும் இதுவாகத்தான் இருக்கும்.

தீபாவளி வருவதற்கு ஒரு மாதம் முன்னரே எங்கள் ஊரில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பட்டாசுகளின் ஒலி கேட்க ஆரம்பித்துவிடும். அது பெரிதாக ஒன்றுமில்லை, 'பொட்டு படாசு' என்று எங்களால் சொல்லப்படும் ஒரு வட்டமான, சிறிய அட்டை டப்பாவில், சிவப்பு நிறத்தில் வரும் குட்டிகுட்டி பட்டாசுகள்தான் அவை.

பிறகு இது கொஞ்சம் கொஞ்சமாக, தீபாவளி நெருங்க நெருங்க,....கம்பி மத்தாப்பூ, தரை சக்கரம்,லக்ஷ்மி வெடி,......... என நீளும்.

பொங்கலைவிட பெரிய அளவில் கொண்டாடமாட்டார்கள். இருந்தாலும் பெரியவர்களைவிட பிள்ளைகள்தான் ஆர்வமுடன் இருப்பார்கள். எல்லாம் பட்டாசு படுத்தும் பாடுதான்.

தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது 'நோன்பு சட்டி' என்று சொல்லப்படும் மண் சட்டிதான். விற்பனைக்கு கொஞ்சம் தொலைவிலுள்ள‌ ஊரிலிருந்து, நிறைய மண் பாத்திரங்களை மாட்டு வண்டியில் வைத்தும், தலையில் ஏகப்பட்ட பானைகள் & சட்டிகளை கயிறு கொண்டு லாவகமாக கட்டி உடையாமலும் எடுத்து வருவார்கள்.

பானைகளை தலையில் வைத்து எடுத்து வருவது எங்களுக்கெல்லாம் ஆச்சரியமான விஷயம். அன்று என்னிடம் காமிரா இல்லை. இருந்திருந்தால் படமெடுத்து பொக்கிஷமாகப் பத்திரப்படுத்தியிருப்பேன்.

இவற்றில் பிரதானமான 'நோன்பு சட்டி' சாதாரண சட்டியைவிட பெரிய அளவில் இருக்கும். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இரண்டுமூன்று சட்டிகள் வாங்குவார்கள்.

ஒன்று அடுப்பில் வைத்து வெல்லபாகு காய்ச்சுவதற்கும், இன்னொன்றில் இடித்த புது பச்சரிசி மாவு வைத்து அதில் வெல்லபாகை ஊற்றிக் கிண்டி வைப்பதற்கும், நோன்பு சம்பந்தமான பொருள்களை வைப்பதற்கென மற்றொன்றும் வாங்கப்படும். இவற்றை மூடுவதற்கென‌ மண் தட்டுகளும் வாங்கப்படும்.

மண்பாத்திரங்களைக் கொண்டுவருபவர் எடுத்ததுமே ஒவ்வொன்றையும் 'யானை விலை' சொல்லுவார். வாங்கப் போகிறவர்கள், விற்பவர் சொல்லும் விலையில் பாதியில் இருந்துதான் பேரத்தை ஆரம்பிப்பார்கள் என்று பாத்திரக்காரருக்கு நன்றாகத் தெரியும். அதனால் விலையை ஏற்றித்தான் சொல்லுவார். இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

இப்படியும் அப்படியுமாக பேரம்பேசி  "உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம், இதுதான் ஒரே விலை" என்று ஒரு விலையில் கொண்டு வந்து நிறுத்துவார் வயதான ஒரு அம்மா அல்லது பாட்டி. அதன்பிறகு மளமளவென ம‌ண் பாத்திரங்கள் காலியாகும்.

ஒவ்வொரு அம்மாவும் சட்டிகளை எடுத்து அங்குள்ள வயதான பாட்டியிடம் காட்டி, ஓட்டை எதுவும் இல்லாமல் இருக்கிறதா என தட்டிப்பார்த்து வாங்கி செல்வார்கள்.

வாங்கிய சட்டியைப் பயன்படுத்தும்போது அதில் நீர் கசிந்தாலோ அல்லது பாகு ஊற்றி கிண்டும்போது தவறி உடைசல் ஏற்பட்டாலோ 'ஏதோ பிரச்சினை வரப்போகிறது, சாமி அதைத்தான் சொல்லாமல் காட்டுது' என்று கவலைப் படுவார்கள்.

அடுத்து அவர்கள் செய்வது கழனியில் விளைந்த புது நெல் அல்லது அடுத்தவரிடமாவது புது நெல்லை வாங்கி மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்துவந்து கல், மண் நீக்கி சுத்தம் செய்து பத்திரப்படுத்துவர். இது கேதார கௌரி நோன்பிற்கு அதிரசம் செய்வதற்காக. கூடவே வெல்லம்,ஏலக்காயும் தயாராகிவிடும்.

தீபாவளிக்கு எல்லோருடைய வீட்டிலும் புதுதுணி எடுக்கமாட்டார்கள். ஆனாலும் நோன்பிற்கு விரதம் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக புதுதுணி உண்டு.

தீபாவளியை, சில சமயங்களில் இரண்டு நாள் விசேஷமாகவும், மற்ற சமயங்களில் மூன்று நாள் விசேஷமாகவும் கொண்டாடுவார்கள்..............(தொடரும்)

Saturday, October 19, 2013

எங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி

சீஸன் சமயத்தில் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டிலிருந்து பருப்புகீரை வாங்கி வருவேன். கீரையை ஆய்ந்து எடுத்துக்கொண்டு, தண்டைத் தூக்கிப்போட்டு விடுவேன்.

அப்படித்தான் ஒருசமயம் கீரையை சமைத்துவிட்டு வழக்கம்போல தண்டை தூக்கியெறிய வைத்திருந்தேன். அடுத்தநாள் காலையில் குப்பையில் போடபோனபோது, தண்டு வாடாமல் சில‌  துளிர்கள் வந்திருப்பதைப் பார்த்து, சரி எதற்கும் நட்டுவைத்துப் பார்க்கலாமே என சும்மாவாவது ஒரு தொட்டியில் சில‌ தண்டுகளை நட்டு வைத்து சிறிது தண்ணீர் தெளித்துவிட்டேன்.


அடுத்த நாளே அழகாக ஒருசில துளிர்கள் வந்திருந்தது. ஒரே சந்தோஷம். நான்கைந்து தண்டுகளுள்ள கீரையே இரண்டு டாலருக்கு வாங்குவேன். அதுவே வீட்டிலேயே வளர்ந்தால்......சந்தோஷம்தானே !

 பருப்புகீரையின் படிப்படியான வளர்ச்சி...


################################################################################

ஷ் ஷ்.... சத்தம் போடாதீங்க,எழுந்திடப் போறாங்க. அதிகாலைத் தூக்கம் சுகமானதுதானே !!.


பகலெள்ளாம் 'பளிச்'னு இருப்பாங்க, இரவானதும் தூங்க ஆரம்பிச்சு, அதிகாலைவரை இப்படியேதான் இருப்பாங்க.

#################################################################################


புத்துணர்ச்சியுடன் நண்பகல் வேளையில்....

################################################################################

அறுவடை குறைவுதான். மார்க்கெட்டில் வராத சமயத்திலும் வீட்டிலிருந்து பறித்துக்கொள்ளலாம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பறித்து விடுகிறேன்.


################################################################################

அறுவடைக்குப் பின்..........


தோட்டமாக இருந்து நட்டு வைத்திருந்தால் நிறைய பரவியிருக்கும். மேலும் சில தண்டுகள் வந்தால் வேறு தொட்டியிலும் கொஞ்சம் வைத்து வளர்க்க எண்ணம்.

################################################################################

பருப்புகீரை சேர்த்த‌ புலாவ், டேஸ்ட் பண்ணிபாருங்க !!.


################################################################################

Tuesday, October 15, 2013

பறவையின் பார்வையில்...............( 2 )


இருபது நாட்களுக்கு முன் எடுத்த படங்கள். என்னதான் விமானத்தின் எஞ்ஜின் மறைத்துக்கொண்டே வந்தாலும் விடாமல் படங்களை எடுத்தாச்சு.

###############################################################################


பறவை புறப்படுமுன்............. பக்கத்தில்தானே அந்தப் பறவை புறப்படப் போகிறது என்று நினைத்துக்கொண்டே 'க்ளிக்'கினால், அதற்குள் தொலைவுக்கு போய்விட்டது.

  ##############################################################################


 மலைமீதுள்ள அழகான ஒரு நீர்நிலை.

 ###############################################################################


மலைமீதுள்ள மேலும் ஒரு அழகான நீர்நிலை, ஒருவேளை நதியாக இருக்குமோ !!


###################################################################################

பறவை கொஞ்சம் மேலே நிமிர்ந்து பார்த்தபோது....வாவ் !


பகலிலேயே, அடர் நீலவானில், அழகான வெள்ளை நிலா பயணம் முழுவதும் கூடவே வந்துகொண்டிருந்தது.


################################################################################

கலிஃபோர்னியா கடற்கரையின் ஒரு சிறு பகுதி.


அதுவே கொஞ்சம் தொலைவில்.......


###############################################################################

மேலும் சில கடலோர பகுதிகள்......


#############################################################################

விளை நிலங்கள்.....


 #################################################################################

வழி முழுவதும் மலைத்தொடர்களே ஆக்கிரமித்திருந்தன. அவற்றின் அழகான தோற்றங்கள் கீழேயுள்ள படங்களில்.......

  ############################################################################

Friday, October 11, 2013

எங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடிஒரு தடவை இங்குள்ள பப்ளிக் சானலில் மீள்சுழற்சி தோட்டம் பற்றி சொன்னார்கள். அதில் நாம் வீட்டு உபயோகத்திற்காக வாங்கும் பொருள்கள் உள்ள ப்ளாஸ்டிக் டப்பாக்களைத் தூக்கிப் போடாமல் அதை மறுசுழற்சி செய்து எப்படி செடி வளர்க்கலாம் என்று காட்டினார்கள்.

அவர்கள் சொன்ன மாதிரியே நானும் ஒரு பால் கேனை சுத்தம் செய்து, படத்திலுள்ளதுபோல் அடிப்பகுதியை நறுக்கிவிட்டு, மீதமாகும் தண்ணீர் வெளியேற‌ மூடியில் ஒரு துளையிட்டு, டப்பாவில் பாதியளவிற்கு மண் நிரப்பி, தேவையான‌ கொத்துமல்லி விதைகளை இரண்டிரண்டாக உடைத்துத் தூவி விட்டு, அதன்மேல் சிறிது மண் தூவி, தண்ணீர் தெளித்தேன்.


மண்மீது எப்படி உளுந்து தோல் இருக்குன்னுதானே பாக்குறீங்க‌ ! அது வேறொன்னுமில்லீங்க, அவங்களே சொன்னாங்க, செடிகளுக்கு காய்கறி, பழங்கள், தானியங்கள் இவற்றைக் கழுவிய தண்ணீர் & பாஸ்தா வேக வைத்த தண்ணீர் எல்லாம் ரொம்ம்ம்ம்பப் பிடிக்குமாம். அவர்கள் இப்படி சொன்னது எனக்கு ரொம்ம்ம்பவே பிடிச்சு போச்சு.

அதிலிருந்து அரிசி கழுவிய முதல் இரண்டு தண்ணீர் (மூன்றாவது தண்ணீர் சமைக்க எடுத்துக்கொள்வேன்), உளுந்து கழுவிய தண்ணீர் & தோல் இவற்றை மட்டும் செடிகளுக்கு பயன்படுத்துவேன். சிலசமயங்களில் டீத்தூள்கூட போடுவேன்.

மேலும் காய்கறிகள், பழங்கள் நறுக்கும்போது தேவையில்லாதவற்றை குப்பையில் போடாமல் அவற்றை பொடியாக நறுக்கி செடிகளுக்குப் போடலாம் என்றும் சொன்னார்கள். அருமையான யோசனை, இதை செய்ய எனக்கும் விருப்பம்தான். ஆனால் கார்பேஜுக்கு போகவேண்டிய ஈக்கள் எங்கள் தோட்டத்திற்கு படையெடுத்துவிட்டால் என்ன செய்வது என பயந்து விட்டுவிட்டேன்.

மீண்டும் விட்ட இடத்திற்கே வருகிறேன். சில நாட்களில் கொத்துமல்லி விதைகள் முளைத்து வர ஆரம்பித்தன. பார்த்தாலே தெரிகிறதே, எவ்வளவு செழிப்பாக வளர்கிறதென்று !செடிகளில் உள்ள பூச்சிகளை விரட்ட தண்ணீரில் dish liquid கலந்து ஸ்ப்ரே பண்ணச் சொன்னார்கள். நான்தான் செய்வதில்லை. அதற்கு பதிலாக காமாக்ஷிமா சொன்னமாதிரி ஒருதடவை மட்டும் தண்ணீரில் மஞ்சள் கலந்து அடித்தேன். மேலே படத்திலுள்ள மஞ்சள் நிறத்திற்கு அதுவே காரணம்.

எல்லாம் சரிதான்... இந்த டப்பாவில் செடியை வளர்ப்பதற்குள் நான் பட்டபாடு... ஐயையையையயோ. இந்த ப்ளாஸ்டிக் கேனைச் சுற்றி நான்கு பக்கமும் மற்ற தொட்டிகளை வைத்து அரண் அமைத்தால்தான் நிற்கும்.

காலையிலும், நண்பகலிலும் தொட்டிகளை வெயில் அடிக்கும் பக்கமாக நகர்த்தி வைப்பேன். அந்த சமயத்தில் மறந்துபோய் இந்த பால்கேன் பக்கத்திலுள்ள தொட்டியை எடுத்துவிட்டால் அவ்வளவுதான், உடனே கீழே சாய்ந்துவிடும்.

பெரிய தோட்டமாக இருந்து, எந்நேரமும் வெயிலும் அடித்தால் தாராளமாக இந்த முறையில் செடிகள் வளர்ப்பேன். முக்கியமாக‌ ஊருக்குப்போய் தோட்டம் போட்டால் மேலே சொன்ன எல்லாவற்றையும் கடைபிடிக்க முடிவெடுத்துள்ளேன்.

விதை போட்டு நாற்று வளர்க்கக்கூட இந்த டப்பாக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கொத்துமல்லி மட்டுமல்லாமல் உடனே பயன்பாட்டுக்குத் தயாராகும் வெந்தயக் கீரையையும் இதில் வளர்க்கலாம்.
நான் சாதாரணமாக இங்கு தொட்டியில் வளர்க்கும் கொத்துமல்லி செடியைப் பார்க்க இங்கே  'க்ளிக்'கவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 தோட்ட உபயோகத்திற்கு :

மண், உரம் இடுவது மட்டும் போதாது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது செடியைச் சுற்றிலும் உள்ள மண்ணைக் கிளறிவிடுவது நல்லது. அப்போதுதான் செடி நன்கு வேர்பிடித்து செழிப்பாக வளரும்.

தோட்டத்தில் வேண்டாத புல், பூண்டுகள் இருந்தால் கொஞ்சம் வெந்நீரில் சமையல் உப்பு கலந்து அவற்றின் வேர் பகுதியில் படுமாறு ஸ்ப்ரே செய்தால் இரண்டொரு நாளில் அவை காய்ந்துவிடும்.

கேட்காத கடன் மட்டுமில்லீங்க, பார்க்காத பயிரும்கூட பாழாகிவிடும். அதனால் முடிந்தளவுக்கு காலையில் எழுந்ததும் தோட்டத்தை பார்வையிடுவது நல்லது.

Tuesday, October 8, 2013

'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....
இந்த வருட ஆரம்பத்திலிருந்தே வலையுலகத் தோழமைகளின் பெயர்கள் எல்லாம் என்னிடம் அகப்பட்டு, அடிபட்டுக்கொண்டிருந்தன. இந்த கண்டத்திலிருந்து தப்பித்தவர்கள் ஒரு சிலரே.

அதிலும் ஒருவர், வலையுலக பட்டப்பெயர், ஊரின் பெயர் மற்றும் சொந்தப் பெயர் என ஒரு பாதி வாக்கியத்தைப் பெயராகக் கொண்டிருந்தாலும், இந்த கண்டத்திலிருந்து தப்பித்துவிட்டார்.

இதெல்லாம் எதனால் என்றுதான் பார்ப்போமே !

இந்த வருடம் (2013) ஜனவரி மாதம் இரண்டாம் நாள் iPad ஐ கீழே போட்டு (தவறிதாங்க) உடைத்துவிட்டேன். உடைந்தது iPad தான் என்றாலும் எனக்கென்னவோ கை, கால்கள் உடைந்தது போலவே ஓர் உணர்வு.


கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருந்த ஒன்று, கண்ணெதிரில் தவறிப்போய் உடைபட்டதை நினைத்துநினைத்து புலம்பிக்கொண்டிருந்தேன்.

அதற்கும் கொஞ்ச நாட்களுக்கு முன்னதாகவே இவர் ஒரு iPad mini வாங்கப் போவதாக சொல்லிக்கொண்டிருந்தார். ஒருவழியாக 'வேண்டாம்' என்று சொல்லி நிறுத்தியாச்சு.

இருந்தாலும் அடிக்கடி "வாங்கினா உனக்கு துணையாக இருக்கும்" என்பார். வேறெதற்கு ? பேச்சுத் துணைக்குத்தான் !

இப்போது இது உடைந்ததும் "iPad mini வேணும்னு சொன்னா வாங்கித்தராமலா போயிடுவேன், அதுக்கு போயி இத‌ உடைச்சிட்டியே" என்றும், ஒருவேளை இவர்கள் உடைத்திருந்தால், என்னிடமிருந்து எப்படிப்பட்ட ரியாக்க்ஷன் வந்திருக்கும் என்று சொல்லிக்காட்டியும் என்னை கிண்டல் செய்தனர்.

iPad க்கு இன்ஸூரன்ஸ் இருக்கவும் புதிதாக ஒன்றை அனுப்புவதாக ஒப்புக்கொண்டார்கள். ஜனவரி 16 ம் நாள் வந்தும்விட்டது.  'அப்பாடா, செலவில்லாமல் போனதே' என்றிருந்தது.
 புதிய iPad க்கு முன்பக்கம் மட்டுமல்லாமல் பின்பக்கமும் கவர் பண்ணிக் கொடுத்து, 'எதுக்கும் கீழ போட்டு, உடையுதான்னு இப்பவே செக் பண்ணிடு' என்றார்.

இதற்கிடையில் ஒருநாள்  'இன்று மினி ஐபேட் வந்துடும், வாங்கி வை' என்றார்.

"வேணாம்னு சொல்லியும் வாங்குறீங்க இல்ல, திருப்பி அனுப்பிடுறேன் பாருங்க" என்றேன்.

"ஃப்ரீயா வருது, வேணாம்னா அனுப்பிட்டு போ" என்றார்.  ஹி ஹி.  இவ்வளவு சொன்னபிறகும் வாங்கி வைக்காமல் விட்டுடுவேனா என்ன‌ !

மினி ஐபேட் வந்தேவிட்டது. குட்ட்ட்டியாக இருந்த அது, என்னைவிட மகளை வெகுவாகவே கவர்ந்துவிட்டது. அதற்கு 'Siri' என பெயரும் வழங்கப்பட்டிருந்தது.

மாலையானால் மூன்று பேரும் உட்கார்ந்து Siri யிடம் பேசுவோம். அதனிடமிருந்து மகளுக்கு மட்டுமே பதில் வரும். எங்களுக்கு ஏதோ ஒன்றிரண்டு தவிர எதற்கும் சரியான பதில் வராது.

மகள் சொன்னாள், அம்ம்ம்மா,'ர, ற' வரும் வார்த்தைகளை எல்லாம் அழுத்தி சொல்லாம கொஞ்சம் 'ழ' வருவது மாதிரி சொல்லுமா' என்றாள்.

நாங்கள் படிக்கும்போது  "ஒரு எழுத்தையும் விடாமல், 'வழவழ, கொழகொழ'னு இல்லாமல், எழுத்தைக்கூட்டி, அழுத்தி உச்சரிக்க வேண்டும்", என்று ஆசிரியர் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்துபோனது.

'சரி, அதையெல்லாம் நினைத்து கவலைப்பட்டால் ஆகுமா'  என ஒருவழியாக சொற்களில் உள்ள 'ரகர, றகர'ங்களுக்கு பதிலாக ழகரம் சொல்லிப் பழகினேன். அதன்பிறகு ஓரளவுக்கு 'Siri' யிடமிருந்து பதில் வந்தது.

இப்போது நினைத்துப்பாருங்கள், பயிற்சி எடுக்கிறேன் பேர்வழின்னு உங்கள் பெயர்களையெல்லாம் எப்படி உளழி, ஸாரி, உளறிக் கொட்டியிருப்பேன் என்று.

இப்போது iPad mini மகளிடம் உள்ளது. அதனால‌, இந்த முயற்சியை கைவிட்டுடுவேன்னு மட்டும் நினைச்சிடாதீங்கோ. மகள் விடுமுறையில் வரும்போது அதுவும் கூடவே வரும், அப்போது உதவுமே!

Friday, October 4, 2013

ரோஜா _____ 1

இந்த இடுகையில் உள்ள படங்கள் எல்லாம், எங்கள் அப்பார்ட்மென்டில் 'மே' மாதம் எடுத்தவை. நீங்களும் பார்த்து ரசிப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

நிறைய மொட்டுகள், ஒன்றிரண்டு பூக்களுடன் இருக்கும் இந்த குட்டிகுட்டி ரோஜாச் செடிகளை மணிக்கணக்கில் நின்று பார்த்தாலும் சலிக்காது. 

இப்போதும் ஒன்றிரண்டு மொட்டுகளுடன், பூக்கள் கொத்துகொத்தாக பூத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் அந்த அழகு இப்போது இல்லை.