Thursday, May 26, 2016

கோடை விடுமுறை !!

பள்ளி வாழ்க்கையை விட்டு விலகி பல வருடங்கள் ஓடிவிட்டாலும், நம் ஊரிலிருந்து எவ்வளவு தொலைவில் சென்று தங்கி இருந்தாலும், இன்னமும் ஏப்ரல் & மே மாதங்கள் இரண்டும் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏப்ரல் மாதம் வந்தாலே ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும். தேர்வு நடந்துகொண்டிருக்கிறதே என்றுகூட யோசிக்கத் தோணாது.

அதுவும் ஏப்ரல் 10 தேதியானால் அவ்வளவுதான், 'இன்னும் ஒன்றிரண்டு நாட்கள்தான், சித்திரை 1 வந்துவிடும்' என சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போய்விடும்.

இப்போது புரிந்திருக்குமே நான் எங்கே வருகிறேன் என்று.

ஆமாங்க நம்ம ஊர் கோடை விடுமுறையைத்தான் சொல்கிறேன். நல்லவேளை அந்நாளில் கோடை வகுப்புனா என்னன்னே தெரியாமல் வள‌ர்ந்தாச்சு. இல்லாட்டி, 'கோடை விடுமுறை ஏன்தான் வருகிறதோ!" என்றே வருத்தப்பட்டிருப்போம்.

இதோ மே மாதம் முடியப்போகும் இப்போதும் எனக்குள் தானாகவே ஒரு சோகம் வந்துவிட்டது. அது அடுத்த வாரம் பள்ளி திறந்துவிடுவார்களே என்றுதான் !

என்னதான் புதுத்துணி, புது நோட்டு, புது புத்தகங்கள் என்றாலும் முகம் மட்டும் கொஞ்சம் வாடிப்போய்தான் இருக்கும்.

ஜூன் 1 திங்கள் கிழமையில் வந்தால் அவ்வளவுதான், 'ஒரு வாஆஆரம் தொடர்ந்து போக வேண்டுமே' என்றிருக்கும்.

அதுவே திங்கள் தவிர்த்து மற்ற எந்த நாட்களில் வந்தாலும் எங்களுக்குப் பிரச்சினையில்லை.

செவ்வாய் என்றால் கண்டிப்பாக புதன்கிழமைதான் பள்ளி திறப்பார்கள். ஆரம்பத்திலேயே இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும்.

மற்ற நாட்களில் ஆரம்பிக்குமானால் பிரச்சினையே இல்லை, இரண்டுமூன்று நாட்கள் பள்ளி, உடனேயே விடுமுறை வந்துவிடும் என ஆயிரம் கணக்கு போடுவோம்.

'வெயில் காரணமாக பள்ளி ஒரு வாரம் கழித்து திறக்கப்படும்' என்றால் அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணை ஏது ?

இப்படியெல்லாம் பிள்ளைகள் மட்டுமா கணக்கு போடுவார்கள் ? ....... ஹா ஹா ஹா :))))

*************************************************************************************

(பள்ளியில் படித்த காலங்களில் தோழிகளுக்குள் நாங்கள் பேசிக்கொள்வதுதான் இந்தப்பதிவு)

*************************************************************************************

Monday, May 23, 2016

செலவழித்த ஸெல்ஃபோன் நெம்பர் !!!

பல வருடத் தேடலுக்குப்பின் இப்போதுதான் பள்ளிக்கால நெருங்கிய தோழியின் அலைபேசி எண் கிடைத்தது, ஏதோ கலிஃபோர்னியா லாட்டரி அடித்ததுபோல் இருந்தது எனக்கு.

எத்தனை வருடங்களுக்குப் பிறகு பேசப் போகிறேன். பேச்சு மணிக் கணக்கில் நீளுமே !

ஒன்று முதல் பனிரெண்டு வரை எங்கள் பக்கத்தில் அமர்ந்த தோழிகள், அவர்களிடம் நடந்த செல்லச் சீண்டல்கள், போட்ட சண்டைகள், பொய்க் கோபங்கள், ஆசிரியைகள் ..... என ஏகத்துக்கும் பேச வேண்டாமா ?

மடித்துக்கட்டிய ரெட்டை ஜடையுடன் பள்ளியில் உலாவந்த அந்த‌ நாட்களை மறக்கத்தான் முடியுமா ? இவை எல்லாவற்றையும் இன்று பேசி மகிழ‌ வேண்டும்.

ஒரே ஊர், ஒரே பள்ளி, ஒரே வகுப்பு, கோபம் வந்து ஆசிரியை மாற்றி உட்கார வைத்தால் தவிர ஒரே டெஸ்க், ..... என எல்லாமும் பனிரெண்டு வரை எதிர்பாராமல் எங்களின் விருப்பம்போல்தான் போய்க்கொண்டிருந்தது.

அதன்பிறகு இருவருமே வேறுவேறு பாதைகளில் பயணமாகிப் போனோம். கடைசித் தேர்வான உயிரியல் தேர்வின்போது பார்த்ததுதான்.

எப்போதாவது யாரிடமாவது அவளைப்பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வேன். ஒருவேளை அவளும் என்னைப்பற்றி யாரிடமாவது விசாரித்திருக்கலாம்.

என்னவொன்று .... தன்னைப்பற்றி அந்த நாட்களிலேயே கொஞ்சம் படிபடியாக அளப்பாள். ஒருவேளை இப்போது மாறியிருக்கலாம்.

இதற்குமேல் பொறுமை இல்லை. நினைவுகளை பின்னுக்குத் தள்ளி பேசும் ஆவலில் எண்களை அழுத்தினேன். மறுமுனையில் ரிங் போகிறது.

'ஹலோ' சொல்லப்போகும் அவளது குரல் அப்படியேதான் இருக்குமா !! குரலை வைத்து என்னையும் கண்டுபிடித்து விடுவாளோ !!

"ஹலோ, யாரு, எங்கிருந்து பேசறீங்க ? நெம்பர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே ! " என்றாள்.

"அகதா'தானே, நான் அனிதா பேசறேன்" என்றேன் ஆவலாக.

"எந்த அனிதா? " __ வந்த கேள்வியால் கொஞ்சம் ஏமாற்றம்.

பெயரைக் கேட்டதும் துள்ளிக் குதிப்பாள் என எதிர்பார்த்தேன். 'அனிதா' என்றால் நான்தானே நினைவுக்கு வரவேண்டும்.

குரல் மட்டுமல்ல, பெயரும் இங்கே எடுபடவில்லை.

ஒருவாறாக‌ சமாளித்து இரண்டு பேரும் ஒன்றாகப் படித்ததை நினைவூட்டவேண்டி வந்தது.

"இந்த பேர்ல நிறைய பேர் படிச்சிருக்காங்களே, நீங்க எந்த அனிதா ?", என்றாள்.

ஊரின் பெயரைச் சொன்னதும் "இப்படி சொல்ல வேண்டியதுதானே, மொட்டையாச் சொன்னா எப்படி ?", என்றாள் சாதாரணமாக‌.

'கூப்பிட்டிருக்க வேண்டாமோ' என்றிருந்தது. மாற்றியது காலமா அல்லது குடும்பப் பொறுப்புகளா ! அவள் மாறியிருக்கிறாள் என்றால் ? நான் ஏன் மாறவில்லை ?

முன்பு  படிக்கணக்கில் அளந்தவள் இப்போது பிறந்தவீடு(ஏற்கனவே தெரிந்ததுதான்) & புகுந்தவீட்டுப்(தேவையில்லாத ஒன்று) பெருமைகளை வண்டிவண்டியாய் ஏற்றிக்கொண்டிருந்தாள்.

மாறவில்லை அப்படியேதான் இருக்கிறாள் :)

"ஐயோ, இது எதுவுமே எனக்கு வேண்டாம், நம் ஊரில் யாரையாவது பிடித்தால் இந்த வேலை முடிந்துவிடும். நாம் நம் பள்ளி நினைவுகளைப் பற்றி பேசுவோமே" என சொல்ல நினைத்து இடையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக‌ நான் சந்தித்த‌ தோழிகளைப் பற்றியும், ஒருதடவை ஃபிஸிக்ஸ் டீச்சர் அவர் கையால் எனக்கு காஃபி கொடுத்ததையும், 'சும்மா உட்கார்' என கணித ஆசிரியை கஸ்தூரியை அவர் பக்கத்தில் அமர வைத்ததையும், நானும் ரெஜினாவும் ஒரு ட்ரெயினிங்'கின்போது எதிர்பாராமல் சந்தித்துக்கொண்டதையும் ஆவலுடன் சொன்னபோது, 'இதையெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சிருக்க ?" என சொல்லவும் அவளிடமிருந்து யாராவது ஒருவரைப் பற்றியாவது தெரிந்துகொள்ள மாட்டோமா என்றிருந்த எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

பேச்சை எந்தப்பக்கம் திருப்பினாலும் கடைசிவரை தன் குடும்பத்தைச் சுற்றிசுற்றியே வந்தாள், சலிப்பாகிவிட்டது.

கடைசியாக "நீகூட வேலைக்குப் போனியே ? " என்றாள் நினைவு வந்தவளாக. பேச்சைத் தொடரலாமா? வேண்டாமா? என்றிருந்தது எனக்கு.

"இல்ல, விட்டுட்டேன்" என்றேன் பேசும் ஆர்வமின்றி.

"ஏன் விட்டுட்ட, இப்போ எவ்ளோ சமபளம் தெரியுமா ? " என்றாள்.

"வீட்டுக்காரர் வெளியூர் வந்துட்டார், அதனால விட வேண்டியதாப் போச்சு " என்றேன்.

"இப்போ எங்க இருக்க ?" என்றாள்.

சொன்னதும் ஆச்சரியமாகி, "எவ்ளோ நாளா இருக்க ? வீட்டுக்காரர் என்ன செய்றார்? பசங்க என்ன பண்றாங்க ?" என்று கேட்டாள்.

பதிலை வாங்கிக்கொண்டு, " அப்படியே கொஞ்சம் ஹோல்ட் பண்ணிக்கோ, செகண்ட் ல வந்திடுறேன்" என்றாள்.

சொன்ன மாதிரியே வந்தவள் " என் வீட்டுக்காரர்ட்ட உன்னப்பத்தி சொன்னேன்(ஹா ஹா இவளுக்கு நான் யார் என்பதைப் புரிய வைக்கவே சில நிமிடங்கள் பிடித்தது), 'பொண்ணு கேளு பொண்ணு கேளுன்றார்' " என்றாள்.

"யாருக்கு பொண்ணு கேக்கணும் ?" என்றேன்.

"என் பையன் ஜீவாவுக்குத்தான்" என்றாள்.

"ஓ அப்படியா! யார(எந்த பெண்ணை) , யாரிடம் கேக்கணும் ?"_ வலிக்காத மாதிரியே நடித்தேன்.

"மறந்துடாதே, இனி அடிக்கடி பேசுவோம் " என்றாள்.

"அதுக்கென்ன, பேசலாமே" என சொல்லிக்கொண்டே,  தேடித்தேடி சில நிமிடங்களுக்கு முன்னால் பொக்கிஷமாக நினைத்து தொலைபேசியிலும், அலைபேசியிலும் சேமித்து வைத்த தோழியின் செல்ஃபோன் எண்ணை, ஏனோ இப்போது முற்றிலுமாக செலவழித்துவிட்டேன்.

Wednesday, May 4, 2016

ஊருக்குப் போனபோது !


மார்ச் மாதம் ஊருக்குப் போனபோது புடிச்சு வந்தவை !!

                   ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்குப் பிற‌கு பங்குனி உத்திர விழாவைப் பார்த்தேன்.

                                        ஹை, விறக‌டுப்பை கவனிக்க ஆள் வந்தாச்சு !

 
முன்பெல்லாம் தொடர் மழையின்போது முறுக்கு, பஜ்ஜியைப்போல் இந்த பட்டாணிக்கும் எங்க வீட்டில் ஒரு சிற‌ப்பிடம் உண்டு. எங்க அப்பா சுடச்சுட வாங்கிவந்து ஒரு நியூஸ் பேப்பரில் கொட்டிவிட்டால் போதும், சுற்றிலும் வட்டமாக உட்கார்ந்து காலி பண்ணுவோம். பொரிந்த பட்டாணியை மட்டுமே கொறித்துவிட்டு 'கடிக்க முடியாது'னு கடைசியில் கொஞ்சம் விட்டுடுவாங்க. ஹி ஹி .... எனக்குப் பிடித்ததே அதுதான். தேடித்தேடி எடுத்து கடிப்பேன்.

 ஊருக்குப் போனதும் உப்பு கடலையையும் சுவைக்காமல் வரமாட்டேன். இது இங்கும் கிடைக்கிற‌து. ஆனால் சுவையில் வித்தியாசம் இருக்கு.

கொடுக்காப்புளி ___ பெயர் சரியா எனத் தெரியல. நாங்க கொடுக்கலிக்கா என்போம். இதைம் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். முன்பு தோட்டங்களில் உள்ள மரங்களில் பொறுக்கி சாப்பிடுவோம். இப்போது அந்த மரங்கள் இல்லை.

பிஞ்சாக இருந்தால் துவர்க்கும். பிஞ்சோ அல்லது முற்றியதோ எதுவாக இருந்தாலும் எனக்கு இஷ்டம்தான். அந்த நாளில் அதன் விதைகளை உரித்து, இரண்டாகப் பிரித்து, ..... அதே நினைவில் இப்போதும் செய்தேன், ஆனால் அப்போது உடன் இருந்தவர்கள் எல்லோரும் இப்போது வேறு எங்கெங்கோ ! சிலர் இல்லாமலும் போய்விட்டார்கள் !


                        பண்ருட்டி வரைக்கும் போயிட்டு இதை சாப்பிடாமல் எப்படி திரும்புவது ?

இது கிளம்பும் நேரம் கிடைத்தது. இருந்தாலும் விடுவதாய் இல்லை. முழுசாவும் & நறுக்கி துண்டுகள் போட்டு, உப்பு போட்டு குலுக்கி ஒரு கை பார்த்தாச்சு. இப்போது நினைத்தாலும் ஆஹா என்றிருக்கிற‌து.

முந்திரி பழம் சாப்பிட்டால் சிலருக்கு ஜுரம் வரும் என்பார்கள். ஊர் திரும்பியதும் இரண்டு வாரங்களாக எனக்கும் இங்கே நல்ல ஜுரம். ஒருவேளை பல வருடங்களுக்குப் பிற‌கு சாப்பிட்டதால்கூட இருக்கலாம்.

எப்போதாவது ஒன்றிரண்டு முந்திரி கொட்டைகள் எங்களுக்குக் கிடைக்கும். அவற்றை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுக்க முற்பட்டு, அதிலிருந்து வரும் பால்பட்டு தோல் புண்ணானதுதான் மிச்சம். பிறகு யாரோ சொல்லக்கேட்டு நெருப்பு அடுப்பில் சுட போட்டோம். அதன் கரி மட்டுமே கிடைத்தது :))) அதன்பிறகு கொஞ்சம் பொறுமை காத்து வெயிலில் காயப்போட்டு தினமும் ஒரு தடவைக்குப் பல தடவை 'காஞ்சு போச்சா காஞ்சு போச்சா' என டெஸ்ட் பண்ணி ..... கடைசியில் ஏதோ குருவியோ அல்லது அணிலோ தூக்கிட்டுப் போயிடுவாங்க. ஒரு தடவையும் உடைத்து சாப்பிட்டது கிடையாது. இந்த அளவுக்குத்தான் அதனுடனான அனுபவம்.


நுங்கு, மாங்கா பிஞ்சு, பச்சை மல்லாட்டை எல்லாம்கூட சாப்டாச்சு :)

                                                     அழகழ‌கான பூக்கள் !

                                                                மஞ்சள் கனகாம்பரம்

இளம் பிங்க் நிறத்தில் அழகான செம்பருத்தி ! சரியான வெளிச்சம் இல்லாததால் படம் பளிச் என இல்லை. இதுவே அந்த நாள் சித்ராவா இருந்தா ? கெளைய ஒடச்சு, பூவ பறிச்சு, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருப்பேன் :))) 

                                                               மஞ்சள் செம்பருத்தி

 

                                                             சிவப்பு செம்பருத்தி

முன்பெல்லாம் ஊருக்குப் போனால் 'என்னதிது, எல்லோருக்கும் வயசாகிகிட்டே போகுதே'னு நினைப்பேன். ஆனால் இப்போதோ 'இப்போது பார்க்கும் இவர்கள் அனைவரையும் அடுத்த தடவை வரும்போதும் பார்க்க வேண்டும்' என மனம் நினைக்க ஆரம்பித்துவிட்டது.