Wednesday, May 22, 2013

ப்ளாக் அரிசி / Blog rice


ப்ளாகுக்கென இந்தக் கருப்பரிசியை வாங்கினேனாம்,அதனால் ப்ளாக் அரிசி என்று எங்கள் வீட்டில் பெயர் வைத்துள்ளனர்.

ஊரில் எங்கள் வீடு ஒரு விவசாயக் குடும்பம்.எங்கள் கழனியில் விளையும் நெல்லைத்தான் குறைந்தது ஒரு 10 மூட்டைகள் அளவிற்கு ஊற வைத்து, அவித்து, ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து எடுத்து வருவாங்க.

அரைக்க எடுத்துப் போகும்போதே எங்கம்மா சொல்லி அனுப்புவாங்க, 'ஒன்னுக்கு ரெண்டு தடவையா போட்டு நல்லா எழைய (இழைத்து) பிடிச்சு எடுத்துட்டு வாங்க'ன்னு,அதாவது நன்றாக தீட்டி அரைத்து வரும்படி. அதிலுள்ள சத்து முழுவதும் வெளியே போய்விடும் என்பது தெரியாமல். தெரிந்தாலும் நல்லா பாலிஷ் போட்ட மாதிரி இருந்தால்தானே பிடிக்கிறது.

அரிசி வீட்டிற்கு வந்த பிறகு ஆள் வைத்து புடைத்து முழு அரிசி தனியாகவும்,அதிலுள்ள நொய் தனியாகவும்,கல்மண் இல்லாமலும் பிரித்து எடுப்பாங்க.

'அரிசியில் ஒன்னுரெண்டு கருப்பரிசி ஏதாவது இருந்தா பொறுக்கிடுங்கம்மா, சாப்பிடும்போது பார்த்திட்டா உங்க அண்ணன் சத்தம் போடுவார்',என எங்க அப்பாவை சொல்வார்.

அவர் மகளான‌ நான்தான் இன்று கடையிலிருந்து கருப்பரிசி சகித‌மாக வந்திருக்கிறேன்.


எங்கள் நிலத்தில் நெல் விளைச்சலின்போது இந்த கருப்பரிசி,சிவப்பரிசி நெல்லையும் பார்த்திருக்கிறேன்.மற்ற நெல் பயிரைவிட இவை உயரமாக இங்கொன்றும்,அங்கொன்றுமாக வளர்ந்திருக்கும்.எளிதில் கண்டு பிடித்துவிடலாம்.

கருப்பரிசியின் நெல்மணி கருப்பாகவும்,சிவப்பரிசியின் நெல்மணி சிவப்பாகவும் இருக்கும். இவற்றை காக்கா பொன்னி,கார் நெல் என்பர்.நெல் அறுவடையின்போதே இவற்றைத் தனியாக பிரித்துவிடுவர்.இவற்றைக் காயவைத்து உரலில் போட்டு இடித்து தரும் அரிசி அவ்வளவு சுவையாக இருக்கும்.

காதுகுத்து அரிசியைக்கூட‌ இந்த சிவப்பரிசியில்தான் செய்வாங்க.சுவை சொல்லவே வேண்டாம்.

இங்கு எங்கள் வீட்டில் பச்சரிசி,புழுங்கல் அரிசி,ரோஸ் மட்ட ரைஸ்,ப்ரௌன் ரைஸ் என எல்லாமும் வைத்திருப்பேன்.ஆனாலும் இந்த wild rice,black rice இவற்றை வாங்கியது கிடையாது.

அதற்கான காரணங்களுள் விலையும் ஒன்று.இவ்வளவு விலை கொடுத்து வாங்கி சாப்பிடப் பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்பதாலும்தான்.

கருப்பரிசியை வாங்கி வரலாம் என கடைக்குப் போனால் ஒரு எல்பி /  lb (493 g) $5 என்றிருந்தது. பிறகு ஒரு wholesale கடைக்குப் போனால் 4 lb $7 என்றிருக்கவும் 'இது பரவாயில்லையே' என வாங்கி வந்தேன்.கருப்பரிசியில் அடங்கியுள்ள சத்துகளினால் விலை ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.

வீட்டினுள் நுழையுமுன்னே,"ஏங்க,இனி கருப்பரிசி வெண்பொங்கல்,பஞ்சு மாதிரியான கருப்பரிசி  இட்லி என எல்லாமும் கருப்பரிசில்தான்.இந்த அரிசியில்  அது இருக்காம்,இது இருக்காம்,அவ்வளவு ஏன்,எல்லாமே இருக்காம்", என்றேன்.

நான் இப்படி எல்லாம் அளந்துகொண்டு,அடுக்கிக்கொண்டே போகவும் இவர் ,'ஒரு விஷயத்த நீ இன்னும் புரிஞ்சிக்கல.எல்லாமே வியாபாரத் தந்திரம்தான், வியாபார நோக்குதான்.இப்படி எல்லாம்  விளம்பரம் செய்யவில்லை  என்றால் நீ இவ்வளவு விலை கொடுத்து இந்த அரிசியை வாங்குவியா?",என்றார்.

அதுவும் சரிதான்.எந்த அரிசியாக இருந்தாலும் அளவோடு சாப்பிட்டால் வேண்டாதப் பிரச்சினைக‌ள் நெருங்கப் போவதில்லை.


கருப்பரிசியை சாதாரண அரிசி மாதிரிதான் சமைத்து சாப்பிடுகிறேன். சுவையும் இரண்டொரு நாளில் பிடித்துப்போனது.வேறு ஏதாவது வித்தியாசமாக சமைத்தால் பதிவிடுகிறேன்.

மேலே உள்ள படத்திலிருந்து கொஞ்சமாக எடுத்து சுவைத்துப் பாருங்க. எல்லாம் டௌன்லோட் பண்ணி சாப்பாட்டை வெளியில் எடுக்க முடியாது என்ற தைரியத்தில்தான்.

"நாங்கள் எடுத்து சுவைத்துப் பார்க்க முடியாது என்ற‌ தைரியத்தில்தானே சமையல் ப்ளாகே எழுதறீங்க"னு நீங்கள் சொல்வது கேட்கிறது.


கருப்பரிசி பற்றிய விவரங்களுக்கு http://www.blackrice.com/ க்கு போய் பார்க்கலாமே.

Thursday, May 16, 2013

வசந்தத்தில் ஓர்நாள்...

 

என்ன வச்சி காமெடியா பண்றீங்க?ஒருத்தர் புறாக்கலி செய்யப் போறேன்றீங்க.ஒருத்தர் அந்த ரெஸிப்பி எப்போ வருன்ன்ன்றாங்க.க்ர்ர்ர்ர்...

ஒருசில வாரங்களுக்குப் பிறகு இன்று காலை முதல் வானம் மூடியே இருக்கிற‌து.ஜில் காற்று வேறு.காலையில் லேஸான தூறலும் இருந்தது.

இதற்கான அறிகுறிகள் நேற்று மாலையே ஆரம்பித்துவிட்டது.மாலை நான்கு மணிக்கெல்லாம் திடீரென குளிர்ந்த காற்று + வெளிச்சமில்லாத வானம் இவற்றுடன் சூப்பராக இருந்தது.

அப்பாவும் மகளும் வீட்டுக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு போன பிறகு ஒரு குட்டித்தூக்கம் போடலாம் என நினைத்து blinds ஐ இழுத்து மூடலாம் என கண்ணாடிக்கதவின் அருகே போனால் பேடியோவின் மர வேலியின்மேல் ஒரு ஜோடி புறா வந்து அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன‌.அடிக்கடி இது மாதிரி நிறைய பறவைகள் பேடியோவுக்கு வருவார்கள். அங்குள்ள செடிகளைக் கொத்திகொத்தி எதையோ தேடிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் வீட்டினுள்ளே ஒரு சிறு அசைவு என்றாலும் திடீரென காணாமல் போய்விடுவார்கள்.ஆனால் இந்த முறை வந்தவர்கள் பயமில்லாமல் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தனர்..

பிறகு விளையாடிக் களைத்து இருவருமே ஆளுக்கொரு பக்கமாக உட்கார்ந்து தூங்கோ தூங்கென்று தூங்கி வழிந்தனர்.கொஞ்ச நேரம் தூங்கி முடித்து இருவரும் ஒருவருக்கொருவர் மாறிமாறி தங்களைத் தாங்களே இறகுகளை சரிபடுத்தி,அழகு படுத்திக்கொண்டு பறந்துவிட்டனர்.

பறவைகள்,விலங்குகளின் நிறங்கள்கூட அங்குள்ள மனிதர்கள்,சூழ்நிலை இவற்றை ஒத்திருக்கும்போல.


என்னதான் இருந்தாலும் நம்ம ஊர் புறாவின் அழகே தனிதான். நாங்களெல்லாம் இங்கு வந்து விட்டதாலோ என்னவோ (ஹி ஹி) அழகான‌ நம்ம ஊர் புறாக்கள் மாதிரியும் ஆங்காங்கே நிறைய தென்படுகின்றன.

Wednesday, May 15, 2013

பூக்களில் இத்தனை (மனித)முகங்களா!! / Pansy flowers


இங்குள்ள அப்பார்ட்மெண்டுகள்,வீடுகளில் அழகுக்காக வைக்கும் செடிகளை ஒவ்வொரு பருவத்துக்கும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

வசந்த காலத்திற்காக வைக்கப் பட்டவைதான் படத்திலுள்ள இந்த Pansy மலர் செடிகள். பார்ப்பதற்கு (கற்பனையில்) மனித முகங்கள் போலவே இருக்கும். கற்பனை ஒவ்வொருவருக்கும் வேறுபடும்தானே.


கடந்த வெள்ளிக்கிழமை காலை 'வாக்' போகலாம் என கிளம்பி வெளியே வந்தால் இந்த மலர்கள் எல்லாம் ஸ்ப்ரிங்க்ளரில் / Sprinklerல்  ஏதோ குட்டிக்குட்டி மனிதர்கள் ஜாலியாக குளிப்பது போலவே இருந்தது.எல்லாப் பூக்களிலும் முத்துமுத்தாக நீர்த் திவலைகள்.

தண்ணீரில் ஆட்டம் போடும் இவர்களை க்ளிக் பண்ணினால்,"உங்களுக்கு மட்டும்தான் கோடை தாக்கம் இருக்குமா?எங்களுக்கெல்லாம் கிடையாதா? என கேட்பது போலவே இருந்தது. உண்மைதானே.


சில படங்கள் எடுத்துவிட்டு போய்விட்டேன்.'வாக்' முடிந்து திரும்பி வரும்போது பார்த்தால் அப்பார்ட்மெண்ட் ஆட்கள் வந்து இந்த செடிகளைப் பிடுங்கிவிட்டு கோடைக்காக‌ மஞ்சள் நிற சாமந்தி செடிகளை வைத்துக் கொண்டிருந்தார்கள்.

மனசே சரியில்லை,அதற்குள் காணாமல் போய்விட்டார்களே என்று!.


புதிதாக ந‌டப்பட்டுள்ள சாமந்தி செடிகள்தான் கீழே படத்திலுள்ளவை.


எனக்கு நினைவு தெரிந்து நான் முதன்முதலில் விதை போட்டு செடி முளைத்தது என்றால் அது இந்த மாதிரியான கலர்கலரான சாமந்தி செடிகள்தான்.அதனால் இதனுடன் கொஞ்சம் அதிகமான பாசம் உண்டு.

Monday, May 13, 2013

புத்தம்புது காலை...

இன்று மகளின் பயாலஜி எக்ஸாமுக்காக (காலை 7:15) பக்கத்தில் உள்ள எக்ஸாம் ஸெண்டருக்கு நடந்தே போகலாம் என வீட்டைவிட்டு இருவரும் வெளியில் வந்தால் (காலை 6:45) ஒரு ஜோடி வாத்து வந்து உட்கார்ந்திருக்கவும் 'க்ளிக்'கினேன்.
 என்னதான் சுத்திசுத்தி வந்து 'க்ளிக்'கினாலும் அசைந்து கொடுக்கவில்லை.
மகள் 'அம்ம்ம்மா,அவங்கள தொந்தரவு செய்யாதமா',என சொல்லிக்கொண்டே முன்னால் போகவும் வந்து பார்த்துக்கொள்ளலாம் என போய்விட்டேன்.

போய்ட்டு திரும்பி வரும்போது பார்த்தால் ஒருவர் மட்டும் எழுந்து மெதுவாக‌ நடக்க ஆரம்பித்திருந்தார்.


Saturday, May 11, 2013

என்றும் மார்க்கண்டேய‌ன்(யி)...(தொடர்ச்சி)

புது இடத்தில் ஒரு வருடம் எப்படியோ ஓடிப்போனது.அங்கு வேலை செய்தவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சம் குறைவு,அதுவுமல்லாமல் எல்லோருக்குமே கொஞ்சம் இளம் வயது என்பதால் பணிமூப்பு பற்றிய‌ பேச்சே இல்லாமல் போனது.

ஒருசமயம் உடன் வேலை செய்த‌ தோழியின் குட்டிப் பாப்பாவைப் பார்க்க அவர் வீட்டிற்கு சென்றேன். பேச்சுவாக்கில்,"விடுமுறை (Maternity leave) முடிந்து வேலைக்குப் போகும்போது பாப்பாவை யார் பார்த்துக்கொள்வார்கள்", என்றேன்.

"அடுத்த வருடம் அம்மாதான் ரிடையர்ட் ஆகப்போறாங்களே,அதுவரை எப்படியோ விடுமுறையை நீட்டித்துவிட்டால் போதும்", என்றார்.

"ஆமாம், அப்பா எப்போ ரிடையர்ட் ஆனார்?சொல்லவே இல்லையே", என்றேன்.

இதற்கு தோழி பதிலளிக்குமுன் அவர் அம்மாவே முந்திக்கொண்டு, "அவங்கப்பாவுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் சர்வீஸ் இருக்குமா.வீட்ல நான் ரொம்பவும் சேட்டை பண்ணுவேனாம், அதனால‌ என்னை சின்ன வயசிலேயே பள்ளியில் சேர்த்து விட்டுட்டாங்கமா" என்றார்.

ஆஹா,என் வயதுத் தோழிகளுக்குத்தான் இந்தப் பிரச்சினை என்றால் இவர்களுக்குமா என்று வியந்துதான் போனேன்.

பிறகு சொந்த ஊருக்குப் பக்கத்தில்  மாறுதல் வாங்கிக்கொண்டு வந்தாச்சு. இங்கு எண்ணிக்கையில் அதிகமானோர் வேலை செய்தனர்.

நான் வந்த வருடமே இரண்டு பேர் பணிமூப்பு அடைந்தனர்.அந்த வயதிலும் அவர்களின் சுறுசுறுப்பைப் பார்த்து இவர்களுக்கு அதற்குள் 58 வயது பூர்த்தியாகிவிட்டதா என வியந்தேன்.அவர்கள் இருவரையும் கௌரவித்து வழியனுப்பியும் வைத்தனர்.

அடுத்த வருடம் புது தலைமை வந்தது.அந்த வருடம்பார்த்து கூண்டோடு பத்து பேர் ரிடையர்ட் ஆவதாக இருந்தது.

தலைமையில் இருப்பவர் மற்ற எல்லோருடனும் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வந்து,இனி பணிமூப்பு அடைபவர்களை அப்படியே அனுப்பி வைக்கக் கூடாது எனவும்,அவர்களை மேலும் கௌரவிக்கும் விதமாக விழா எடுத்து,தங்க மோதிரம் அணிவித்து,மேள,தாளத்துடன் அவர்களது ஊருக்கே சென்று வீட்டில் விட்டுவிட்டு வர வேண்டும் என்றும் முடிவானது.

இவ்வளவு நாட்களாக‌ மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் விழலுக்கிறைத்த நீராகிவிடுமோ என நினைத்தேன்.

ஏற்கனவே ஒரு வயதை எப்படி குறைப்பது?,மூன்று வயதைக் குறைக்கும் போது உண்டாகும் சந்தோஷம்,இப்படியான பிரச்சினைகளுக்கு மத்தியில் 58 வயதாவதை ஊர் உலகம் எல்லாம் தெரியும்படி சொன்னால் எப்படிங்க!

ஆனாலும் மனதுக்குள் நமக்கு 58 வயதுவரை இந்தத் தலைமை இங்கேயேவா இருப்பார், ஒருவேளை மாறுதல் வாங்கிச் செல்லலாம் அல்லது இன்னும் பத்து வருடங்களில்தான் ரிடையர்ட் ஆகி விடுவாரே அல்லது நமக்கு புரமோஷன் வந்து வேறிடம் போகலாம் என்றெல்லாம் மனது கணக்கு போட்டது.

இன்னும் 35 வருடங்களுக்கு மேல் சர்வீஸ் உள்ளதே,இதை அப்போது பார்த்துக்கொள்ளலாம் என எனக்கு நானே ஒருவாறாகத் தேற்றிக் கொண்டேன்.

இதற்கிடையில் திருமணம்,குழந்தை என பிஸியாகிவிட்டாலும் வருடந்தோறும் யாராவது ஓரிருவர் ரிடையராகும்போது இந்த விஷயம் மனதிற்குள் வந்து எட்டிப் பார்க்கத் தவறுவ‌தில்லை.

என் கவலையைப்(!!!) போக்கும்விதமாக சுந்தருக்கும் தொலைதூஊஊரத்தில் வேலை கிடைத்தது.எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியில் தக்க வைத்துக் கொண்டிருந்த வேலையை விட வேண்டிய சூழலும் வந்தது.எல்லோரும் யோசிக்கச் சொல்லி 'உச்' கொட்டினார்கள்.

எனக்கு வேலை போவ‌து ஒரு பக்கம் வருத்தம் என்றாலும் பிடிக்காத ரிடையர்மெண்டிலிருந்து தப்பித்தோமே என்பதில் அளவிட முடியாத ஒரு சந்தோஷம்.

இப்ப சொல்லுங்க,வாழ்க்கையில் ரிடையர்மெண்டே இல்லாமல் போன‌தால் நானும் மார்க்கண்டேயிதானே!.

ராணி என்ன சொன்னார் என்பதை சொல்லாமல் விட்டா எப்படி?அவர் சின்ன வயசுல ரொம்ம்ம்ப சுட்டியாம்,அதனால அவங்கப்பா அவரை ஒரு வயது முன்னாலேயே......அதற்குமேல் என்னால் தாங்க முடியவில்லை.

இது மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்போம் என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டே நழுவினேன்.

இதில் விசேஷம் என்னவென்றால் ராணி மாதிரியான ஆட்கள் இன்னமும் (இங்கும்) இருக்கிறார்கள் என்பதுதான்._________(கற்பனைக் கதை முற்றும்)

Wednesday, May 1, 2013

என்றும் மார்க்கண்டேய‌ன்(யி)...

சில தினங்களுக்கு முன் ராணியைச் சந்தித்தேன்.உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் அவர் புதியவர்தான்.சிறிது நேர நல விசாரிப்புகளுக்குப் பிறகு, அவர் சொல்லிச்சென்ற விஷயம் என்னை பல வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்று அசைபோட வைத்ததுமல்லாமல் இந்தப் பதிவையும் எழுதத் தூண்டியது.

ஆரம்பப்பள்ளி முடிக்கும்வரை கள்ளம்,கபடமில்லாத அந்த வயதில் குட்டிப் பாப்பாக்களாகிய நாங்கள் பாரதியின் காலைக் கனவை நிறைவேற்றினோமோ என்னவோ,மாலைக்கனவை அளவுக்கு அதிகமாகவே நிறைவேற்றினோம்.ஆட்டம்னா ஆட்டம் அப்படியொரு ஆட்டம்.

பிறகு ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தாச்சு.புது இடம், புது பிள்ளைகள்.வகுப்பில் 60 பேருக்குமேல் உள்ளார்கள்.இவர்களில் யாருடன் விளையாடுவது,பேசுவது!ஒன்றும் புரியாத நிலை.

இப்படியான‌ ஆயிரத்தெட்டு முக்கியமான‌ கேள்விகளுடன் உட்கார்ந்திருந்த எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ரேவதி,ஜோதி இரண்டு பேரின் சுவாரசியமான பேச்சுகள் தானாக காதில் வந்து விழுந்தன‌.

அவர்கள் இருவரும் ஒரே பள்ளியிலிருந்து வந்தவர்கள் என்பது அவர்கள் பேசியதிலிருந்தே புரிந்தது.அவர்கள் படித்த பள்ளியில் இருந்து யார் யாரெல்லாம் இங்கு வந்திருக்கிறார்கள்,எந்தப் பிரிவில் இருக்கிறார்கள் என்றெல்லாம் அலசினார்கள்.

எனக்கு மட்டும் இங்கு யாரையுமே தெரியவில்லையே,இவர்களை மாதிரி என் தோழிகளும் இங்கு வந்து சேர்ந்திருக்கலாமே என்றெல்லாம் படிப்பைத் தவிர மற்ற எல்லா எண்ணங்களும் வந்துபோயின.

பள்ளி திறந்து முதல் நாள் என்பதால் வகுப்பாசிரியை மட்டும் வந்து எட்டிப் பார்த்துவிட்டு,புன்னகைத்துவிட்டு,தன்னை ஒரு சிறு அறிமுகம் செய்துகொண்டு,இன்னும் சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லிச் சென்றார்.

பக்கத்து இருக்கைத் தோழிகள் இருவரும் மீண்டும் சலசலவென பேசத் தொடங்கினார்கள்.பிறந்த தேதிகளைப் பறிமாறிக்கொண்ட‌ அவர்கள் தாங்கள் இப்போது ஐந்தாம் வகுப்புதான் படிக்க வேண்டும் எனவும்,ஒரு வயது முன்னதாகவே பள்ளியில் சேர்த்துவிடப்பட்டார்கள் எனவும் கதை (அப்போது அதை உண்மை என்றே நம்பினேன்) அளந்தார்கள்.

அதன்பிறகு பார்த்தால் இப்படி சொல்லாத பிள்ளைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லோருமே ஏதோ மந்திரம் போலவே இதைச் சொன்னார்கள். என்னைப் போன்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் போல இருந்தது.

ஒருவேளை என்னையும் அப்படித்தான் சேர்த்திருப்பார்களோ!எனக்குத்தான் இது தெரியவில்லையோ என பலவாறாகக் குழம்பினேன்.

மாலை நேரே வீட்டுக்குப் போனதும் அப்பாவிடம் பிறந்த தேதியை வருடத்துடன் கேட்டுத் தெரிந்துகொண்டு யார் கேட்டாலும் ஒரு வருடத்தைக் குறைத்துச் சொல்ல வேண்டுமென எனக்கு நானே தீர்மானம் கொண்டுவந்தேன்.புது பள்ளியில் முதல்நாள் நான் கற்றுக்கொண்டது இதைத்தான்.

அப்போதெல்லாம் நெருங்கிய உறவுகள், தெரிந்தவர்கள் என யார் வீட்டிற்கு வந்தாலும் என் தம்பியைப் பற்றி என்னிடம் விசாரிக்கும்போது 'உங்க சின்ன அண்ணன்' என்றே சொல்வார்கள்.நாங்கள் இருவரும் உருவத்தில் அப்படி இருப்போம். (இப்போது இருப்பதை எல்லாம் வைத்து எடை!! போடக்கூடாது)

எவ்வளவுஊஊ சந்தோஷம்.பின்ன என்னங்க,ஒரு வயதைக் குறைப்பது எப்படி?  என பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது மூன்று வயதைக் குறைத்து சொன்னால் யாருக்குதான் மகிழ்ச்சி வராது.

அதன்பிறகு நாட்கள் உருண்டோடி ஒரு வேலையும் கிடைத்து (யார் கொடுத்தது என்றெல்லாம் கேட்கக்கூடாது,நம்புங்க,அப்போல்லாம் நான் நல்ல்ல்லா படிப்பேங்க) பணியில் அமர்ந்தாச்சு.

பணியில் சேரும் நாளைக் குறிக்கும்போதே ப‌ணிமூப்பு (retirement) அடையும் நாளையும் குறித்துவிடுவார்கள்.அவர்களிடம் போய் ஒரு வருட வயதுக் குறைப்பைப்பற்றி எல்லாம் கதைவிட முடியுமா?....(கதை தொடரும்).