Wednesday, May 22, 2013

ப்ளாக் அரிசி / Blog rice


ப்ளாகுக்கென இந்தக் கருப்பரிசியை வாங்கினேனாம்,அதனால் ப்ளாக் அரிசி என்று எங்கள் வீட்டில் பெயர் வைத்துள்ளனர்.

ஊரில் எங்கள் வீடு ஒரு விவசாயக் குடும்பம்.எங்கள் கழனியில் விளையும் நெல்லைத்தான் குறைந்தது ஒரு 10 மூட்டைகள் அளவிற்கு ஊற வைத்து, அவித்து, ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து எடுத்து வருவாங்க.

அரைக்க எடுத்துப் போகும்போதே எங்கம்மா சொல்லி அனுப்புவாங்க, 'ஒன்னுக்கு ரெண்டு தடவையா போட்டு நல்லா எழைய (இழைத்து) பிடிச்சு எடுத்துட்டு வாங்க'ன்னு,அதாவது நன்றாக தீட்டி அரைத்து வரும்படி. அதிலுள்ள சத்து முழுவதும் வெளியே போய்விடும் என்பது தெரியாமல். தெரிந்தாலும் நல்லா பாலிஷ் போட்ட மாதிரி இருந்தால்தானே பிடிக்கிறது.

அரிசி வீட்டிற்கு வந்த பிறகு ஆள் வைத்து புடைத்து முழு அரிசி தனியாகவும்,அதிலுள்ள நொய் தனியாகவும்,கல்மண் இல்லாமலும் பிரித்து எடுப்பாங்க.

'அரிசியில் ஒன்னுரெண்டு கருப்பரிசி ஏதாவது இருந்தா பொறுக்கிடுங்கம்மா, சாப்பிடும்போது பார்த்திட்டா உங்க அண்ணன் சத்தம் போடுவார்',என எங்க அப்பாவை சொல்வார்.

அவர் மகளான‌ நான்தான் இன்று கடையிலிருந்து கருப்பரிசி சகித‌மாக வந்திருக்கிறேன்.


எங்கள் நிலத்தில் நெல் விளைச்சலின்போது இந்த கருப்பரிசி,சிவப்பரிசி நெல்லையும் பார்த்திருக்கிறேன்.மற்ற நெல் பயிரைவிட இவை உயரமாக இங்கொன்றும்,அங்கொன்றுமாக வளர்ந்திருக்கும்.எளிதில் கண்டு பிடித்துவிடலாம்.

கருப்பரிசியின் நெல்மணி கருப்பாகவும்,சிவப்பரிசியின் நெல்மணி சிவப்பாகவும் இருக்கும். இவற்றை காக்கா பொன்னி,கார் நெல் என்பர்.நெல் அறுவடையின்போதே இவற்றைத் தனியாக பிரித்துவிடுவர்.இவற்றைக் காயவைத்து உரலில் போட்டு இடித்து தரும் அரிசி அவ்வளவு சுவையாக இருக்கும்.

காதுகுத்து அரிசியைக்கூட‌ இந்த சிவப்பரிசியில்தான் செய்வாங்க.சுவை சொல்லவே வேண்டாம்.

இங்கு எங்கள் வீட்டில் பச்சரிசி,புழுங்கல் அரிசி,ரோஸ் மட்ட ரைஸ்,ப்ரௌன் ரைஸ் என எல்லாமும் வைத்திருப்பேன்.ஆனாலும் இந்த wild rice,black rice இவற்றை வாங்கியது கிடையாது.

அதற்கான காரணங்களுள் விலையும் ஒன்று.இவ்வளவு விலை கொடுத்து வாங்கி சாப்பிடப் பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்பதாலும்தான்.

கருப்பரிசியை வாங்கி வரலாம் என கடைக்குப் போனால் ஒரு எல்பி /  lb (493 g) $5 என்றிருந்தது. பிறகு ஒரு wholesale கடைக்குப் போனால் 4 lb $7 என்றிருக்கவும் 'இது பரவாயில்லையே' என வாங்கி வந்தேன்.கருப்பரிசியில் அடங்கியுள்ள சத்துகளினால் விலை ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.

வீட்டினுள் நுழையுமுன்னே,"ஏங்க,இனி கருப்பரிசி வெண்பொங்கல்,பஞ்சு மாதிரியான கருப்பரிசி  இட்லி என எல்லாமும் கருப்பரிசில்தான்.இந்த அரிசியில்  அது இருக்காம்,இது இருக்காம்,அவ்வளவு ஏன்,எல்லாமே இருக்காம்", என்றேன்.

நான் இப்படி எல்லாம் அளந்துகொண்டு,அடுக்கிக்கொண்டே போகவும் இவர் ,'ஒரு விஷயத்த நீ இன்னும் புரிஞ்சிக்கல.எல்லாமே வியாபாரத் தந்திரம்தான், வியாபார நோக்குதான்.இப்படி எல்லாம்  விளம்பரம் செய்யவில்லை  என்றால் நீ இவ்வளவு விலை கொடுத்து இந்த அரிசியை வாங்குவியா?",என்றார்.

அதுவும் சரிதான்.எந்த அரிசியாக இருந்தாலும் அளவோடு சாப்பிட்டால் வேண்டாதப் பிரச்சினைக‌ள் நெருங்கப் போவதில்லை.


கருப்பரிசியை சாதாரண அரிசி மாதிரிதான் சமைத்து சாப்பிடுகிறேன். சுவையும் இரண்டொரு நாளில் பிடித்துப்போனது.வேறு ஏதாவது வித்தியாசமாக சமைத்தால் பதிவிடுகிறேன்.

மேலே உள்ள படத்திலிருந்து கொஞ்சமாக எடுத்து சுவைத்துப் பாருங்க. எல்லாம் டௌன்லோட் பண்ணி சாப்பாட்டை வெளியில் எடுக்க முடியாது என்ற தைரியத்தில்தான்.

"நாங்கள் எடுத்து சுவைத்துப் பார்க்க முடியாது என்ற‌ தைரியத்தில்தானே சமையல் ப்ளாகே எழுதறீங்க"னு நீங்கள் சொல்வது கேட்கிறது.


கருப்பரிசி பற்றிய விவரங்களுக்கு http://www.blackrice.com/ க்கு போய் பார்க்கலாமே.

8 comments:

  1. இதை எல்லாம் யார் செய்வது...? யார் சாப்பிடுவது...? இருந்தாலும் குறிப்பிற்கும் சுட்டிற்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. "இதை எல்லாம் யார் செய்வது...? யார் சாப்பிடுவது...?"____என்ன இப்படி சொல்லிட்டீங்க!நீங்க மட்டும் வீட்ல வாங்கிக் கொடுத்துப் பாருங்க,பிறகு மூனு வேளையும் அரிசி தீரும்வரை உங்களையே சாப்பிட வச்சிருவாங்க.

      வருகைக்கு நன்றிங்க.

      Delete
  2. கருப்பரிசியோடு ஸ்வாரஸ்யமான ஒரு பதிவு! :) உங்க வீட்டு ஃப்ளாஷ்பேக் கேட்க நல்லா இருக்கு. சிறு வயதில் சித்தி ஊருக்கு போகையில் நெல் வயல், மற்றும் தோட்டம் காடுகளைப் பார்த்திருக்கேன். உங்க அளவுக்கு விவசாய அறிவு இல்லை! :)

    இந்த கருப்பரிசி ஸ்ப்ரவுட்ஸ்-ஃபார்மர்ஸ் மார்க்கட்டில் பார்த்ததோடு சரி..படம்(மட்டும்) எடுத்து வந்து ப்ளாகில் போட்டேன். மத்தபடி கலர் கலர் அரிசிகள் வாங்கி சமைக்கறதில்லை சித்ராக்கா! பொன்னி பாயில்ட் அரிசி ஒன்று மட்டுமே வாங்கற வழக்கம். சிலநாட்கள் ப்ரவுன் ரைஸ் வாங்கி தோசை செய்தேன், இப்ப அதுவுமில்லை! நீங்க ஆரோக்கியமா பலவகை அரிசிகளோடு சாப்பிடறீங்க, வெரி குட்! கீப் இட் அப்! :)

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டு ஃப்ளாஷ்பேக் நல்லாருந்துச்சா!விரும்பிக் கேட்டதுக்கு நன்றி மகி.எல்லாம் எங்கப்பா செய்ததை பார்த்துபார்த்து வளர்ந்ததால் வந்ததுதான்.

      டாக்டர் சொன்னதால எனக்கு மட்டும் ப்ரௌன்ரைஸ் வாங்க ஆரம்பித்தேன்.மத்தபடி சாதம்,இட்லி இரண்டுக்குமே பொன்னி புழுங்கல் அரிசிதான்.இவருக்கு ப்ரௌன்ரைஸ் & பாசுமதி பிடிக்காது.பொண்ணுக்கு கருப்பரிசி பிடிக்காது.அதனால எதற்கு வம்புன்னு இப்போதைக்கு பொன்னி புழுங்கல் அரிசிதான்.

      "நீங்க ஆரோக்கியமா பலவகை அரிசிகளோடு சாப்பிடறீங்க, வெரி குட்! கீப் இட் அப்! :)"______எங்கே?இந்த சாதம் அந்த சாதம்னு மீதமானதை சாப்பிட்டு சாப்பிட்டு.... ஆரோக்கியமாவது ஒன்னாவது,ம்ம்

      Delete
  3. ப்ளாக் ரைஸ் என்ன செய்து சாப்பிடுவீர்கள். இட்லி என்றால் கருப்பாக இருக்காதா.? சுவை எப்படி இருக்கும். ஆனால் இங்கும் கருப்பு அரிசி சாப்பிடஸ் சொல்கிறார்கள். விலை மிகவும் அதிகம் .
    ப்ளாக் ரைஸ் பற்றிய தகவல்களுக்கு நன்றி சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. சாதாரணமாக வேக வைத்து வடித்தேன்.பிறகு இவ்வளவு விலை கொடுத்து வாங்கி சத்தெல்லாம் வீணாகிறதே என்று குக்கரில் வைக்கிறேன்.இட்லிக்கு போட்டேன்.சரியாக வராததால் குட்டிகுட்டியா மொத்தமான‌ தோசையாக‌ செய்தேன்.ரொம்ப‌ல்லாம் கருப்பு நிறமில்லை.டார்க் வயலெட் நிறத்தில் இருந்தது.

      பரவாயில்லை,நான் பயந்த மாதிரியெல்லாம் இல்லை.சாதாரண புழுங்கல் அரிசி மாதிரிதான் வேகிறது.சாதம் கொஞ்சம் ஸ்டிக்கியா இருக்கு.எதற்கும் முதலில் கொஞ்சமா வாங்கி செய்து பார்த்துட்டு,பிடித்தால் தொடருங்க.இங்கும் விலைதான் அதிகம். வருகைக்கு நன்றிங்க.

      Delete
  4. இந்தப் பதிவு எனக்கு வரவே இல்லை.
    இப்போதுதான் பார்க்கிறேன். நானும் கொஞ்ச நாட்கள் பதிவு பக்கம் வரவும் இல்லை. ரெண்டுக்கும் சரியா போச்சு!

    உங்களது பழைய நினைவுகள் அருமை! நாங்கள் வயல் வரப்பு எல்லாம் சினிமாவில் பார்த்ததுதான்.

    நான் ஒரு இணைப்பு கொடுக்கிறேன் போய்ப்பாருங்கள். அதில் நீங்கள் சொல்லியிருப்பது தவிர இன்னும் பல அரிசி வகைகள் பற்றி போட்டிருக்கிறார்கள். அவற்றின் விலையையும் கொடுத்திருக்கிறார்கள். ஆன்லைனில் வாங்கலாம் போலிருக்கிறது.

    http://arockyasanthai.com

    ஆரோக்கிய உணவு நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி இந்த கருப்பரிசியை தினை அரிசி என்று குறிப்பிட்டார். அதில் புலாவ் செய்து காண்பித்தார்.

    பிரவுன் அரிசி சாப்பிட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வது போல கொஞ்சமாக வாங்கி செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று பார்த்தேன்.முடிந்தால் நேரில் போய் பார்த்து வாங்குங்க.கொஞ்சம் திருப்தியா இருக்கும்.

      இந்தக் கருப்பரிசியை குக்கரில் வைப்பதைவிட வடித்து செய்தால் பிசுபிசுப்பு இல்லாமல் சூப்பரா இருக்கு.எனக்கு இதை சுண்டல் மாதிரி சாப்பிட பிடிக்கிறது.

      ப்ரௌன் ரைஸ்,ரோஸ் மட்ட ரைஸ்,குத்தாரி ரைஸ் என பல விதங்களில் சிவப்பரிசி கிடைக்கிறது.எல்லாமே நன்றாக இருக்கும்.என்ன, கொஞ்சம் குண்டுகுண்டா இருக்கும்.

      முதலில் கொஞ்சமா வாங்கி, பிடித்தால் எல்லோருக்குமாக சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்.

      Delete