படம் உதவி_கூகுள்
'ரொட்டி,பன்னைஐஐயா(ங்)'!!! இந்தக் குரலைக் கேட்டு மயங்காத பிள்ளைகள் இருக்க முடியாது. தாத்தாவின் பெயரெல்லாம் தெரியாது.ரொட்டிபன்னு தாத்தா என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.
நான்கு முழ பளீச் வெள்ளை வேட்டி,தொளதொளவென அதே பளீச் வெண்மையில் மேல்சட்டை, இங்கொன்றும் அங்கொன்றுமாக நரை முடியுடன் ஒரு சிறு குடுமி, ஒட்டிய வயிறு, பூ விழுந்த, கொஞ்சம் மங்கலான பார்வை, காலில் தோல் செருப்பு என ஏழ்மையின் மொத்த உருவமாய் இருப்பார் ரொட்டிபன்னு தாத்தா.
அதிக பட்சமாக தாத்தாவுக்கு நாற்பது அல்லது நாற்பதைந்து வயதிருக்கலாம். வறுமையும், உழைப்பும் போட்டி போட்டுக்கொண்டு அவரது தோற்றத்தை அதிகமாக்கிக் காட்டியது என்பதுதான் உண்மை.மாதம் ஒன்றிரண்டு முறைதான் அந்த ஊருக்கு வருவார்.
ரொட்டிபன்னு தாத்தா இந்த ஊர்க்காரர் அல்ல.ஒருசில ஊர்களைத் தாண்டிதான் இந்த ஊருக்கு வரவேண்டும்.இந்த ஊருடன் திரும்பிவிட மாட்டார், இன்னும் சில ஊர்களுக்கும் சென்று விற்பனையை முடித்து விட்டுதான் திரும்புவார்.எல்லாமே நடை பயணம்தான்.
அவரது தலையில் ஒரு சிறிய செவ்வக வடிவ மரப்பெட்டி,அதன் மேல் பகுதியில் ஒரு நகரும் கண்ணாடியாலான மூடி,அப்போதுதானே அதனுள்ளே இருக்கும் கலர்கலரான ரொட்டிகள் பிள்ளைகளை ஈர்த்து வாங்கத் தூண்டும்.
அந்த சுற்று வட்டாரத்தில் அவரது பெட்டியை மட்டுமே காட்டி 'யாருடையது?' என்றால் 'இன்னாருடையது' என்று சொல்லிவிடுவார்கள். பெட்டியே அவ்வளவு பிரபலம் என்றால் தாத்தாவைப்பற்றி சொல்லவேத் தேவையில்லை.
விதவிதமான ரொட்டிகள்,பன்னுகளுடன் நிறங்கள் எல்லாமே கண்ணைப் பறிக்காத இளம் மஞ்சள்,இளம் பச்சை,ரோஸ்,நீலம்,சிவப்பு,ஆரஞ்சு,ப்ரௌன் என எல்லா நிறங்களின் முன்னாலும் இளம் சேர்த்துகொண்டால் எவ்வாறு இருக்குமோ அவ்வளவு அழகாக இருக்கும்.
தாத்தா ராகமாக 'ரொட்டி,பன்னையா' என்று சொல்லிக்கொண்டு முன்னால் போக ஒரு இளம் பட்டாளமே திரண்டு அவருக்குப் பின்னால் போய்க் கொண்டிருக்கும்.அவர் போகும் வழியில் உள்ள ஒவ்வொரு வீட்டுப் பிள்ளைகளும் அவருடன் இணைந்துகொள்வார்கள்.
தாத்தா யார் வீட்டுத் திண்ணையில் தலை சுமையை இறக்கி வைப்பார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் பிள்ளைகள் முட்டிமோதி பின் தொடர்வர்.
அதன் பிறகுதான் அந்தத் தெருவே களைகட்டும்.வந்த வேகத்திலேயே எல்லா பிள்ளைகளும் அவரவர் வீட்டுக்கு ஓடி அம்மாவிடம் அடி & உதை வாங்கிக் கொண்டு,அப்படியே காசையும் சேர்த்து வாங்கிக்கொண்டு உதை வாங்கி, அழுத சுவடே தெரியாமல் தாத்தாவை நோக்கி துள்ளிக் குதித்து ஓடி வருவர்.
இதற்கு 'வசந்தி'யும் விதிவிலக்கல்ல. [இந்த முறை கொஞ்சம் உஷாராகி கதையின் நாயகிக்கு ஒரு பெயரும் கொடுத்தாச்சுல்ல. யாஆஆரு? சித்ராவா......?]
பேக்கரியிலிருந்து என்னதான் அப்பா விதவிதமான ரொட்டிகள் வாங்கிவந்து தந்தாலும் வசந்திக்கு தாத்தா விற்கும் ரொட்டியின்மேல் எப்போதும் ஒரு கண் உண்டு.
பெரும்பாலான ரொட்டிகளில் ரொட்டியைச் சுற்றிலும் பல் பல்லாக இருக்கும். அவற்றை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் ரொட்டி முழுவதையும் காலி செய்வதே ஒரு சுகம்.
'அவையெல்லாம் தவிட்டில் செய்கிறார்கள்,கலர் பௌடரெல்லாம் போட்டு அவை வேண்டாம்' என்று அம்மா,அப்பாவின் மூலமாக சொல்ல வைப்பார். ம்ஹூம்,காதிலேயே விழாது. எல்லோருடனும் சேர்ந்து சுவைத்தால்தானே பிறவிப் பெரும் பயன் அடைந்தது போலிருக்கும்.
யார்வீட்டு திண்ணையிலாவது பெட்டி இறங்கியதும் பிள்ளைகள் கலர்கலரான ரொட்டிகளை வாங்கி சுவைத்துக்கொண்டே வீடு திரும்புவர். அவர்களுடன் தானும் போட்டிபோட்டு சுவைக்காமல் விட்டால் என்னாவது!எவ்வளவு இனிமையான நாட்கள் அவை!!
இப்படியே எவ்வளவு காலத்துக்கு சுகமாக இருப்பது! கூடவே சில கடமைகளும் இருக்கத்தானே செய்கிறது.
ஒருநாள் விடுதிக்கு சென்று படிக்கும் நிலை வந்தது வசந்திக்கு..ஆள்தான் வெளியூரில் இருக்கிறாளே தவிர அவள் மனதில் எந்நேரமும் , 'ரொட்டிபன்னு தாத்தா வந்திருப்பாரா? யார் யாரெல்லாம் என்னென்ன வாங்கி சுவைத்திருப்பார்கள்' எனும் கேள்விகள் அடிக்கடி எழும்.
விடுமுறைக்கு வீட்டிற்கு வந்ததும் முதல் வேளையாக தாத்தாவிடம் இஷ்டத்திற்கும் வாங்கி சாப்பிட விரும்பினாள்.விடுதியில் இருந்து வந்திருப்பதால் அப்பாவும்,அம்மாவும் எதுவும் சொல்லாமல் அவள் கேட்டதையெல்லாம் முகம் சுளிக்காமல் நிறைய வாங்கித் தருவார்கள் என்பதில் அளவிலா மகிழ்ச்சி.
அவள் நினைத்த மாதிரியே விடுமுறையும் வந்தது.வீட்டிற்கு வந்ததும் ஓடிப்போய் தன் தோழிகளிடம் நலன் விசாரித்துவிட்டு,'ரொட்டிபன்னு தாத்தா வந்தாரா? எனக் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவர் வந்ததாகவும்,இனி அவர் திரும்பவும் வருவதற்கு குறைந்தது பத்து , பதினைந்து நாட்களாவது ஆகலாம் எனவும் தோழிகள் கூறினர்.
விடுமுறை முடிந்து மீண்டும் விடுதிக்கு செல்லும்வரை தாத்தா வராதது அவளுக்கு ஒரு பெரிய குறையாகவே இருந்தது.
அடுத்த முறை வீட்டுக்கு வந்தபோது தாத்தா வந்து பல நாட்களாகி விட்டதாக தோழிகள் கூறவும்,அதுபற்றி அம்மாவிடம் கேட்டாள்.
அப்பா அடிக்கடி வேறு சில வேலைகள் விஷயமாக அந்த தாத்தா ஊருக்கு செல்வது வழக்கம்.அவ்வாறு போகும்போது ஒருநாள் என்ன ஏதென்று தாத்தாவைப் பார்த்து வரச் சொன்னாராம் அம்மா.
அப்படி போனபோது தாத்தா,அப்பாவைப் பார்த்ததும் உடைந்துபோய் அழ ஆரம்பித்து விட்டாராம்.
எப்போதும்போல் தாத்தா விற்பனையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் சில 'குடி'மகன்கள் அவரிடம் இருந்த பணத்தைப் பிடுங்க முற்பட்டிருக்கின்றனர்.
தாத்தா தன் உழைப்பின் பலனைக் காக்க போராடியிருக்கிறார்.எதையுமே புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்த அவர்கள் பணத்தைப் பிடுங்கிக் கொண்டதுடன்,நையப் புடைத்தும் அனுப்பியிருக்கின்றனர்.
அப்போது போய் படுத்தவர்தான்,அடுத்து எழுந்திருக்கவே இல்லையாம். வயசாச்சில்ல, முடியல,இனி தேறி வருவது கஷ்டம்தான்,படுத்த படுக்கையாய் இருப்பதாக அம்மா சொன்னார்.
இந்த முறை விடுதிக்கு கிளம்புமுன் நம்பிக்கையிழந்த வசந்தியின் மனதில் இனம் புரியாத ஒரு கவலை,அது அவரது ரொட்டிபன்னை இனி சுவைக்க முடியாது என்பதாலா அல்லது ரொட்டிபன்னு தாத்தாவையே இனி பார்க்க முடியாது என்பதாலா!!!
"சுவைக்க முடியாது" என்றால் நாக்குக்கு அடிமை... இல்லையென்றால் நல்ல மனம் வாழ்க...
ReplyDeleteநாற்பது அல்லது நாற்பதைந்து வயது என்றால் தாத்தா என்பது இன்று தான் தெரியும்...!
திண்டுக்கல் தனபாலன்,
ReplyDeleteவறுமையும்,உழைப்பும் அவரை உருமாற்றிவிட்டன.
இப்பொழுதும் கிராமங்களில் நாற்பதுநாற்பத்தைந்து வயது தாத்தாக்கள் இருக்கிறார்களே.
வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.
அந்தக் காலத்துக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கு! நல்ல பகிர்வு!
ReplyDeleteஎழுதும்போது எனக்குமே அப்படித்தான் தோன்றியது.வருகைக்கு நன்றி மகி.
Deleteமுதலில் போட்ட பின்னூட்டம் எங்கே?
ReplyDeleteஅப்படியா,ஸ்பேமிலும் காணோம்! சில நாட்களில் அப்படித்தான் ஆகிறது. வருகைக்கு நன்றிங்க.
ReplyDeleteஉங்கள் எழுத்தில் ரொட்டி பன்னைய்யா நேரில் வந்துவிட்டார்.
ReplyDelete//நான்கு முழ பளீச் வெள்ளை வேட்டி,தொளதொளவென அதே பளீச் வெண்மையில் மேல்சட்டை, இங்கொன்றும் அங்கொன்றுமாக நரை முடியுடன் ஒரு சிறு குடுமி, ஒட்டிய வயிறு, பூ விழுந்த, கொஞ்சம் மங்கலான பார்வை, காலில் தோல் செருப்பு என ஏழ்மையின் மொத்த உருவமாய் இருப்பார் ரொட்டிபன்னு தாத்தா.// நல்ல உருவகம்!
உங்களுடைய இன்னொரு பெயர் வசந்தி என்று தெரிந்து கொண்டேன்! ))))
இதைபோல நிறைய எழுதுங்கள். நீங்கள் பார்க்கும் அனைவரையும் பற்றி. மிகச் சிறந்த எழுத்தாளி உங்களுக்குள் ஒளிந்துகொண்டு இருக்கிறார். அவரை வெளியே கொண்டு வாருங்கள்!
பாத்துட்டே இருங்க,ஒரு நாளைக்கு உங்க பெயரிலும் வருவேன்.
Delete"மிகச் சிறந்த எழுத்தாளி உங்களுக்குள் ஒளிந்துகொண்டு இருக்கிறார்"______ என்னவோ சொல்றீங்க!முயற்சி செய்கிறேன்.ஆரம்பிக்க வைத்து உற்சாகமூட்டி வருவதற்கு நன்றிங்க.