Saturday, May 11, 2013

என்றும் மார்க்கண்டேய‌ன்(யி)...(தொடர்ச்சி)

புது இடத்தில் ஒரு வருடம் எப்படியோ ஓடிப்போனது.அங்கு வேலை செய்தவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சம் குறைவு,அதுவுமல்லாமல் எல்லோருக்குமே கொஞ்சம் இளம் வயது என்பதால் பணிமூப்பு பற்றிய‌ பேச்சே இல்லாமல் போனது.

ஒருசமயம் உடன் வேலை செய்த‌ தோழியின் குட்டிப் பாப்பாவைப் பார்க்க அவர் வீட்டிற்கு சென்றேன். பேச்சுவாக்கில்,"விடுமுறை (Maternity leave) முடிந்து வேலைக்குப் போகும்போது பாப்பாவை யார் பார்த்துக்கொள்வார்கள்", என்றேன்.

"அடுத்த வருடம் அம்மாதான் ரிடையர்ட் ஆகப்போறாங்களே,அதுவரை எப்படியோ விடுமுறையை நீட்டித்துவிட்டால் போதும்", என்றார்.

"ஆமாம், அப்பா எப்போ ரிடையர்ட் ஆனார்?சொல்லவே இல்லையே", என்றேன்.

இதற்கு தோழி பதிலளிக்குமுன் அவர் அம்மாவே முந்திக்கொண்டு, "அவங்கப்பாவுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் சர்வீஸ் இருக்குமா.வீட்ல நான் ரொம்பவும் சேட்டை பண்ணுவேனாம், அதனால‌ என்னை சின்ன வயசிலேயே பள்ளியில் சேர்த்து விட்டுட்டாங்கமா" என்றார்.

ஆஹா,என் வயதுத் தோழிகளுக்குத்தான் இந்தப் பிரச்சினை என்றால் இவர்களுக்குமா என்று வியந்துதான் போனேன்.

பிறகு சொந்த ஊருக்குப் பக்கத்தில்  மாறுதல் வாங்கிக்கொண்டு வந்தாச்சு. இங்கு எண்ணிக்கையில் அதிகமானோர் வேலை செய்தனர்.

நான் வந்த வருடமே இரண்டு பேர் பணிமூப்பு அடைந்தனர்.அந்த வயதிலும் அவர்களின் சுறுசுறுப்பைப் பார்த்து இவர்களுக்கு அதற்குள் 58 வயது பூர்த்தியாகிவிட்டதா என வியந்தேன்.அவர்கள் இருவரையும் கௌரவித்து வழியனுப்பியும் வைத்தனர்.

அடுத்த வருடம் புது தலைமை வந்தது.அந்த வருடம்பார்த்து கூண்டோடு பத்து பேர் ரிடையர்ட் ஆவதாக இருந்தது.

தலைமையில் இருப்பவர் மற்ற எல்லோருடனும் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வந்து,இனி பணிமூப்பு அடைபவர்களை அப்படியே அனுப்பி வைக்கக் கூடாது எனவும்,அவர்களை மேலும் கௌரவிக்கும் விதமாக விழா எடுத்து,தங்க மோதிரம் அணிவித்து,மேள,தாளத்துடன் அவர்களது ஊருக்கே சென்று வீட்டில் விட்டுவிட்டு வர வேண்டும் என்றும் முடிவானது.

இவ்வளவு நாட்களாக‌ மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் விழலுக்கிறைத்த நீராகிவிடுமோ என நினைத்தேன்.

ஏற்கனவே ஒரு வயதை எப்படி குறைப்பது?,மூன்று வயதைக் குறைக்கும் போது உண்டாகும் சந்தோஷம்,இப்படியான பிரச்சினைகளுக்கு மத்தியில் 58 வயதாவதை ஊர் உலகம் எல்லாம் தெரியும்படி சொன்னால் எப்படிங்க!

ஆனாலும் மனதுக்குள் நமக்கு 58 வயதுவரை இந்தத் தலைமை இங்கேயேவா இருப்பார், ஒருவேளை மாறுதல் வாங்கிச் செல்லலாம் அல்லது இன்னும் பத்து வருடங்களில்தான் ரிடையர்ட் ஆகி விடுவாரே அல்லது நமக்கு புரமோஷன் வந்து வேறிடம் போகலாம் என்றெல்லாம் மனது கணக்கு போட்டது.

இன்னும் 35 வருடங்களுக்கு மேல் சர்வீஸ் உள்ளதே,இதை அப்போது பார்த்துக்கொள்ளலாம் என எனக்கு நானே ஒருவாறாகத் தேற்றிக் கொண்டேன்.

இதற்கிடையில் திருமணம்,குழந்தை என பிஸியாகிவிட்டாலும் வருடந்தோறும் யாராவது ஓரிருவர் ரிடையராகும்போது இந்த விஷயம் மனதிற்குள் வந்து எட்டிப் பார்க்கத் தவறுவ‌தில்லை.

என் கவலையைப்(!!!) போக்கும்விதமாக சுந்தருக்கும் தொலைதூஊஊரத்தில் வேலை கிடைத்தது.எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியில் தக்க வைத்துக் கொண்டிருந்த வேலையை விட வேண்டிய சூழலும் வந்தது.எல்லோரும் யோசிக்கச் சொல்லி 'உச்' கொட்டினார்கள்.

எனக்கு வேலை போவ‌து ஒரு பக்கம் வருத்தம் என்றாலும் பிடிக்காத ரிடையர்மெண்டிலிருந்து தப்பித்தோமே என்பதில் அளவிட முடியாத ஒரு சந்தோஷம்.

இப்ப சொல்லுங்க,வாழ்க்கையில் ரிடையர்மெண்டே இல்லாமல் போன‌தால் நானும் மார்க்கண்டேயிதானே!.

ராணி என்ன சொன்னார் என்பதை சொல்லாமல் விட்டா எப்படி?அவர் சின்ன வயசுல ரொம்ம்ம்ப சுட்டியாம்,அதனால அவங்கப்பா அவரை ஒரு வயது முன்னாலேயே......அதற்குமேல் என்னால் தாங்க முடியவில்லை.

இது மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்போம் என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டே நழுவினேன்.

இதில் விசேஷம் என்னவென்றால் ராணி மாதிரியான ஆட்கள் இன்னமும் (இங்கும்) இருக்கிறார்கள் என்பதுதான்._________(கற்பனைக் கதை முற்றும்)

10 comments:

  1. தப்பிச்சிட்டீங்க... சுந்தருக்கு தான் நன்றி சொல்லணும்...

    ஆமாம்... மார்க்கண்டே[ய‌ன்(யி)] விசயம் மனதில் அல்லவா இருக்க வேண்டும்...!?

    ReplyDelete
    Replies
    1. "மார்க்கண்டே[ய‌ன்(யி)] விசயம் மனதில் அல்லவா இருக்க வேண்டும்...!?"______ நானேதான் உளறிட்டேனா!!

      வருகைக்கு நன்றிங்க.

      Delete
  2. Good one! Were you working in a government office Chitrakka?

    ReplyDelete
    Replies
    1. ஆஆ,கற்பனைக் கதையில் குறுக்குக் கேள்வியா!!!

      Delete
    2. பின்னே? கேள்வி கேக்கலன்னா நாளைக்கு சூரியன் மேக்கால உதிச்சிருவானில்ல?! ;) ;) :) க.கதை தானே?! உங்க ஹீரோயினையே கேட்டு(கற்பனையிலதான்! ஹிஹி) சொல்லுங்கோ!

      நீங்க க.கதை என்றாலும்....பெயர்கள், சம்பவங்கள் எல்லாமே நிஜக் கதையோ என்ற சந்தேகத்த கிளப்புது. அதை ஊர்ஜிதப் படுத்துவது போல, //_________(கற்பனைக் கதை முற்றும்)// !!! எங்கப்பா குதிருக்குள் இல்லைங்கற மாதிரி இருக்கே!!! :)

      தப்பா நினைக்காதீங்க, என்ர மூள இன்னிக்கு "புத்தம்புது காலை"ல இருந்து ஓவர்டைம் வொர்க் பண்ணுது! ஹஹஹாஆஆவ்! :)

      Delete
    3. சந்தேகம் வருமளவுக்கு எழுதிட்டேனா!!நல்லா படிப்பேன் & வேலை கிடைத்தது எனும்போதே இது டுபாக்கூர் கதைதான்னு கண்டு பிடிச்சிருவீங்கன்னு பார்த்தால்....

      Delete
  3. ரொம்ப சுட்டியா இருந்தா வயச அதிகம் சொல்லி சீக்கிரமாவே ஸ்கூலுல போட்டுடுவாங்க!
    ரிடயர்மென்ட் ஆகாம மார்க்கண்டேயிநியாக இருக்கும் (கற்பனை) கதாபாத்திரத்திற்கு வாழ்த்துக்கள்! ஆனா தங்க மோதிரம், மேளதாளம் எல்லாம் போச்சே! பாவம் ராணியே இந்தப் பாடு என்றால்....

    ReplyDelete
    Replies
    1. "ரொம்ப சுட்டியா இருந்தா வயச அதிகம் சொல்லி சீக்கிரமாவே ஸ்கூலுல போட்டுடுவாங்க!"____ம் ம்,இன்னொருவரையும் கண்டுபிடிச்சிட்டேன்.

      வயது விளம்பரத்திலிருந்து தப்பித்ததால் மோதிரம்,மேளதாளம் எல்லாம் போனால் போகுதுங்க.

      "பாவம் ராணியே இந்தப் பாடு என்றால்...."_____வேறு யார்யாரெல்லாம் இருக்காங்க, எங்கிட்ட மட்டும் சொல்லுங்க,நான் யாரிடமும் சொல்லமாட்டேன்.

      வருகைக்கும்,கற்பனை கதாபாத்திரத்தை வாழ்த்தியமைக்கும் நன்றிங்க.

      Delete
  4. //(கற்பனைக் கதை//
    நம்பனுமா?
    நீங்கள் தான் பொன் பதிவிலேயே உங்கள் பள்ளிப் படிப்பு பற்றியெல்லாம் சொல்லியிருந்தீர்களே.
    ஆனாலும் நம்புகிறேன்.அது நீங்கள் இல்லை.
    ஒ.கே தானே!

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் கற்பனை கதாபாத்திரத்திற்கு பெயர் வைத்து எழுத வரவில்லை. அதனால்தான் இந்தக் குளறுபடியெல்லாம்.இப்போதைக்கு 'ராசி' மாதிரியே ஒரு ஆளை கண்டுபிடிக்கணும். ஆனாலும் நம்பிட்டீங்கில்ல,இனி கவலை விட்டது.

      வருகைக்கு நன்றிங்க.

      Delete