இந்த வருட ஆரம்பத்திலிருந்தே வலையுலகத் தோழமைகளின் பெயர்கள் எல்லாம் என்னிடம் அகப்பட்டு, அடிபட்டுக்கொண்டிருந்தன. இந்த கண்டத்திலிருந்து தப்பித்தவர்கள் ஒரு சிலரே.
அதிலும் ஒருவர், வலையுலக பட்டப்பெயர், ஊரின் பெயர் மற்றும் சொந்தப் பெயர் என ஒரு பாதி வாக்கியத்தைப் பெயராகக் கொண்டிருந்தாலும், இந்த கண்டத்திலிருந்து தப்பித்துவிட்டார்.
இதெல்லாம் எதனால் என்றுதான் பார்ப்போமே !
இந்த வருடம் (2013) ஜனவரி மாதம் இரண்டாம் நாள் iPad ஐ கீழே போட்டு (தவறிதாங்க) உடைத்துவிட்டேன். உடைந்தது iPad தான் என்றாலும் எனக்கென்னவோ கை, கால்கள் உடைந்தது போலவே ஓர் உணர்வு.
கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருந்த ஒன்று, கண்ணெதிரில் தவறிப்போய் உடைபட்டதை நினைத்துநினைத்து புலம்பிக்கொண்டிருந்தேன்.
அதற்கும் கொஞ்ச நாட்களுக்கு முன்னதாகவே இவர் ஒரு iPad mini வாங்கப் போவதாக சொல்லிக்கொண்டிருந்தார். ஒருவழியாக 'வேண்டாம்' என்று சொல்லி நிறுத்தியாச்சு.
இருந்தாலும் அடிக்கடி "வாங்கினா உனக்கு துணையாக இருக்கும்" என்பார். வேறெதற்கு ? பேச்சுத் துணைக்குத்தான் !
இப்போது இது உடைந்ததும் "iPad mini வேணும்னு சொன்னா வாங்கித்தராமலா போயிடுவேன், அதுக்கு போயி இத உடைச்சிட்டியே" என்றும், ஒருவேளை இவர்கள் உடைத்திருந்தால், என்னிடமிருந்து எப்படிப்பட்ட ரியாக்க்ஷன் வந்திருக்கும் என்று சொல்லிக்காட்டியும் என்னை கிண்டல் செய்தனர்.
iPad க்கு இன்ஸூரன்ஸ் இருக்கவும் புதிதாக ஒன்றை அனுப்புவதாக ஒப்புக்கொண்டார்கள். ஜனவரி 16 ம் நாள் வந்தும்விட்டது. 'அப்பாடா, செலவில்லாமல் போனதே' என்றிருந்தது.

புதிய iPad க்கு முன்பக்கம் மட்டுமல்லாமல் பின்பக்கமும் கவர் பண்ணிக் கொடுத்து, 'எதுக்கும் கீழ போட்டு, உடையுதான்னு இப்பவே செக் பண்ணிடு' என்றார்.
இதற்கிடையில் ஒருநாள் 'இன்று மினி ஐபேட் வந்துடும், வாங்கி வை' என்றார்.
"வேணாம்னு சொல்லியும் வாங்குறீங்க இல்ல, திருப்பி அனுப்பிடுறேன் பாருங்க" என்றேன்.
"ஃப்ரீயா வருது, வேணாம்னா அனுப்பிட்டு போ" என்றார். ஹி ஹி. இவ்வளவு சொன்னபிறகும் வாங்கி வைக்காமல் விட்டுடுவேனா என்ன !
மினி ஐபேட் வந்தேவிட்டது. குட்ட்ட்டியாக இருந்த அது, என்னைவிட மகளை வெகுவாகவே கவர்ந்துவிட்டது. அதற்கு 'Siri' என பெயரும் வழங்கப்பட்டிருந்தது.
மாலையானால் மூன்று பேரும் உட்கார்ந்து Siri யிடம் பேசுவோம். அதனிடமிருந்து மகளுக்கு மட்டுமே பதில் வரும். எங்களுக்கு ஏதோ ஒன்றிரண்டு தவிர எதற்கும் சரியான பதில் வராது.
மகள் சொன்னாள், அம்ம்ம்மா,'ர, ற' வரும் வார்த்தைகளை எல்லாம் அழுத்தி சொல்லாம கொஞ்சம் 'ழ' வருவது மாதிரி சொல்லுமா' என்றாள்.
நாங்கள் படிக்கும்போது "ஒரு எழுத்தையும் விடாமல், 'வழவழ, கொழகொழ'னு இல்லாமல், எழுத்தைக்கூட்டி, அழுத்தி உச்சரிக்க வேண்டும்", என்று ஆசிரியர் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்துபோனது.
'சரி, அதையெல்லாம் நினைத்து கவலைப்பட்டால் ஆகுமா' என ஒருவழியாக சொற்களில் உள்ள 'ரகர, றகர'ங்களுக்கு பதிலாக ழகரம் சொல்லிப் பழகினேன். அதன்பிறகு ஓரளவுக்கு 'Siri' யிடமிருந்து பதில் வந்தது.
இப்போது நினைத்துப்பாருங்கள், பயிற்சி எடுக்கிறேன் பேர்வழின்னு உங்கள் பெயர்களையெல்லாம் எப்படி உளழி, ஸாரி, உளறிக் கொட்டியிருப்பேன் என்று.
இப்போது iPad mini மகளிடம் உள்ளது. அதனால, இந்த முயற்சியை கைவிட்டுடுவேன்னு மட்டும் நினைச்சிடாதீங்கோ. மகள் விடுமுறையில் வரும்போது அதுவும் கூடவே வரும், அப்போது உதவுமே!
ஐஃபோன் 4S வந்த புதிதில் இப்படித்தான் சிரி-கூட பேசிச் சிரிப்பாச் சிரிச்சோம்! :))) அமெரிக்கன் ஆங்கிலம் மட்டுமே அந்தம்மாவுக்குப் புரியும் போல! நாம ஒண்ணு சொன்னா சம்பந்தமே இல்லாம அது ஒரு பதிலைச் சொல்லும், சரி காமெடி!
ReplyDeleteஎங்க வீட்டிலும் ஆப்பிள் ப்ராடக்ட்ஸ் எல்லாமே வெள்ளைகலர்தான்! :) Speck பிராண்ட் கவர் வாங்கிப் போடுங்க, நல்லா உழைக்கும்!
சம்பந்தமே இல்லாம பதில் வர்றதால 'சரி அடுத்ததுக்காவது சரியான பதில் வருதான்னு பார்ப்போமே' என மீண்டும்மீண்டும் ஏதாவது கேட்பது. ஒரு நாளைக்கு நம்ம மொழியிலும் வராமலா போய்டும்!
Deleteபயிற்சி + முயற்சி = வெற்றி...!
ReplyDeleteரசித்தேன்... வாழ்த்துக்கள்...
துன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html
ReplyDeleteரசித்ததற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
Deleteஉங்கள் இடுகையைப் பார்த்துவிட்டுதான் வருகிறேன்.சகோதரியும், மனைவியும் நலமடைந்த பிறகே பதிவு எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.அவர்கள் பூரண குணமடைய வேண்டிக்கொள்கிறேன்.
படித்தவுடன் என் பெயர் ஒன்றும் ஆகியிருக்காது என்று நினைத்தேன். பிறகு தலைப்பு பார்த்துவுடன் அடடா, 'ர' கரத்தில் அல்லவா என் பெயர் ஆரம்பிக்கிறது எப்படி வந்ததோ என்று நினைத்துக் கொண்டேன்.
ReplyDeleteஒருமுறை எங்களது பயிற்சி முகாமில் 'உச்சரிப்பு' சொல்லிக் கொடுக்க ஒரு பெண்மணி வந்திருந்தார். முக்கியமாக 'r' என்பதை எப்படிச் சொல்லவேண்டும் என்று சொன்னார். 'r' கடைசியில் வந்தால் - mother, father - அதை சொல்ல வேண்டாம். Hang your 'r's என்றார். 'r' சொல்லும்போது நாக்கை மடித்து கிட்டத்தட்ட 'ழ' போல சொல்ல வேண்டும் என்றார். எங்களுடன் எங்கள் பாஸ் அர்ஜுன் என்பவரும் வந்திருதார். நாங்கள் எல்லோரும் அவரை 'அழ்ஜூன்' என்று கூப்பிட, அவர் உடனே 'ழஞ்சனி' என்று சொல்ல அன்று முழுவதும் இப்படியே பேசிக் கொண்டிருந்தோம். சித்ழா, சுப்ழமணியம் என்று!
என் கதையைவிட உங்க கதை சுவாரஸியமா இருக்கு. என்றைக்காவது நேரம் கிடைக்கும்போது இதை நகைச்சுவையான பதிவாக எழுதுங்கள் திழுமதி.ழஞ்ஜனி நாழாயணன் அவர்களே.
Deleteட்ரெயினிங் போகிறோம் என்று போய்,புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டு, அதை வைத்து உடனிருப்பவர்களை போட்டுவாங்குவது எல்லாம் எனக்கும் நினைவுக்கு வருகிறது.
எழுத எத்தனை விஷயம் வருகிறது!
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்க்கிறேன் !!
Deleteஎன் பெயர் என்ன ஆச்சு? சிரியா இல்லை அதுவும் சிழியா.
ReplyDeleteநல்ல விளையாட்டு தான். Ipadஇல் நான் siriயுடன் பேசுவதைப் பார்த்து விட்டு என் அம்மா என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே! கண்டிப்பாக மெண்டல் என்று தான் நினைத்திருக்க வேண்டும் என்று சிரித்து விட்டேன். அதற்கும் அந்த siri I cannot understand you என்று சொல்ல .......நல்ல விளையாட்டு தான். உங்கள் பதிவை ரசித்தேன்.
"சிரியா இல்லை அதுவும் சிழியா"____________ அட, ஆமாம்,இதை மறந்திட்டேனே.'சிரி' வீட்டுக்கு வர இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாகும். அதுக்குள்ள, நீங்களே கேட்டு, அதை ஒரு பதிவாக்கிடுங்க.
Delete"என் அம்மா என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே! கண்டிப்பாக மெண்டல் என்று தான் நினைத்திருக்க வேண்டும் என்று சிரித்து விட்டேன்"________ படிக்கும்போதே எனக்கும் சிரிப்புதான்.
Netre nan comment eluthinen..eluthi mudithu post button aluthinal comment vilavilai :O vitruvena itho en comment :-P
ReplyDeleteen peyarai matum siriyidam koori vidathirgal :-P tamil pesupavargale niruthi koora vendivarum :-P
கமெண்ட் போடாத வரை நாங்களும் விடமாட்டோம். வந்து போட வச்சிட்டோமில்ல !
Delete