Friday, June 6, 2014

முடிவல்ல, ஆரம்பம் !

'இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும், பசங்க படிச்சு முடிச்சதும் நான் என் விருப்பப்படி எப்படி வளர்க்கிறேன் பார்' என்று , அருண் அதாங்க நம்ம கதையின் நாயகன் மனைவியிடம் தன் முடிவை சபதமாக்கிக் கொண்டிருக்கவும், நான் அவர்கள் வீட்டில் நுழையவும் சரியாக இருந்தது.

இந்த சபதத்தை அவன் இன்றைக்கு நேற்றைக்கு எடுத்ததல்ல. அவனது இளம் வயது முதலே எடுத்துக் கொண்டிருப்பதுதான். "அது எப்படி உனக்குத் தெரியும்"னுதானே கேக்குறீங்க? எல்லோரும் ஒரே வீட்டில்தானே வளர்ந்தோம். தெரியாமல் இருக்குமா !

அருணுக்கு சிறு வயதிலிருந்தே எல்லோரையும் போலவே நாய்க்குட்டி, பூனைக்குட்டி, செயற்கை வண்ணமூட்டப்பட்ட கோழிக் குஞ்சுகள், ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டி என இவற்றை எல்லாம் வளர்க்க வேண்டுமென கொள்ளை விருப்பம்.

பெரியவர்களையே கிறங்கடிக்கும் அழகு இவற்றிடம் உண்டு. பாவம், இவனும் சின்னப் பிள்ளைதானே, என்ன செய்வான் !

பள்ளிக்கு போக ஆரம்பிக்காத‌ அந்த‌ நாட்களிலேயே யார் வீட்டிலாவது பூனை, நாய் குட்டிகள் போட்டிருப்பதைக் கேள்விப்பட்டால் உடனடியாக அங்கு சென்று அவற்றில் ஒன்றிரண்டை வாரி அணைத்துக்கொண்டு வந்துவிடுவான்.

அப்போதைக்கு வீட்டில் அப்பா இல்லை என்பது உறுதியானால் தன் அம்மாவிடம் கெஞ்சி அதற்கு பால் புகட்ட வைத்து விளையாடுவான். அப்படியே வைத்து வளர்க்க ஆசைதான். என்ன செய்வது !

அவனது அம்மா 'எங்க இருந்து தூக்கிட்டு வந்தியோ அங்கேயே சீக்கிரமா கொண்டுபோய் விட்டுட்டு வா, அப்பா வந்தால் சத்தம் போடுவார்' என்பார்.

அதேபோல் அப்பாவும் என்றைக்காவது வீட்டில் இருந்து இவன் நாய், பூனை குட்டிகளுடன் வீட்டில் அடியெடுத்து வைத்தால் போதும் 'முதல்ல கொண்டுபோய் விட்டுட்டு வா' என்பார்.

அப்போதுமுதல் பிள்ளைகள் ஆரம்பப் பள்ளி போக ஆரம்பித்திருக்கும் இப்போது வரைக்கும் முதல் பத்தியில் போட்ட சபதத்தைத்தான் இன்னமும் போட்டுக்கொண்டிருக்கிறான்.

திருமணத்திற்குப் பிறகு வெளியூர் வாழ்க்கை. இப்போதாவது வளர்ப்புப் பிராணிகளை வாங்கி வளர்க்கலாம் என்றாலும், வாடகைக்கு வீடு விடும்போதே "அப்படி எதுவும் வளர்க்கக் கூடாது" என்ற கண்டிப்புடன்தான் வீடே வாடகைக்குக் கொடுத்தார்கள்.

வீட்டில் பெண், பையன் என‌ குட்டீஸ்களும் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். சொந்த வீடும் வாங்கியாகிவிட்டது. இனி எந்தத் தடையுமில்லை, ஒரு நாய்க் குட்டியோ அல்லது பூனைக் குட்டியோ ஒன்றை வாங்கி வந்து வளர்க்க‌ வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தான்.

அப்படித்தான் எதேச்சையாக ஒருமுறை தன் வேலை விஷயமாக கடலூர் சென்றுகொண்டிருந்தபோது வழியில் நெல்லிக்குப்பத்தில் ஒரு கடையின் எதிரில் நண்பகல் வேளையில் ஒரு சிறு கம்பிக் கூண்டுக்குள் வெள்ளை வெளேரென்ற அழகான பொமரேனியன் நாய்க்குட்டி ஒன்று வாடி வதங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவர்களிடம் போய் "பாவமா இருக்கு, ஏன் வெய்யிலில் வைத்திருக்கிறீர்கள்" என்று கேட்டிருக்கிறான்.

'கடையின் உள்ளே வைத்தால் யாருக்கும் தெரியமாட்டிங்கிது, அதனால்தான் வெளியில் வைத்திருக்கிறோம்' என்று கடை உரிமையாளர்  சொல்லியிருக்கிறார்.

அந்த நாய்க்குட்டி இவனைப் பாவமாகப் பார்க்கவும் மனசு கேட்காமல் 'என்ன விலை' என்று கேட்டு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.

நல்லவேளை, மனைவி, குழந்தைகள் எல்லோருக்குமே அந்த புது வரவைப் பிடித்துப் போனது. பின்னே இருக்காதா ! அதன் அழகில் அனைவரும் மயங்கித்தான் போனார்கள். அதற்கு 'ஜூலி' என பெயரும் சூட்டப்பட்டது.

'ஜூலி'யும் அவர்களின் குடும்பத்துடன் ஒன்றிப் போனது. பிள்ளைகள் பள்ளி விட்டு வந்ததும் எந்நேரமும் ஜூலியுடன்தான் ஆட்டம் போட்டனர். தன் சிறுவயது சபதம் நிறைவேறியதில் அருணுக்கு அளவிட முடியாத சந்தோஷம்.

ஒருநாள் வழக்கம்போல அருண் தன் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழையும்போது எல்லோருக்கும் முந்தி வரவேற்கும் 'ஜூலி'யை அன்று காணவில்லை.

பெயருக்கு கையில் புத்தகம் இருந்தாலும் பிள்ளைகள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சோகத்துடன் உட்கார்ந்திருந்தனர். கேட்டால் பதில் ஏதுமில்லை.

வீடு முழுக்கத் தேடிவிட்டு மீண்டும் அவர்களிடமே வந்து கேட்டதற்கு  "நீங்களே போய் அம்மாகிட்ட கேளுங்க" என்ற பதில்தான் வந்தது.

மனைவியிடம் கேட்டதற்கு 'எங்க அம்மாவை வரச்சொல்லி ஜூலியைக் கொடுத்தனுப்பி விட்டேன்' என்றார்.

"எதுக்கு கொடுத்திட்ட ?" என்ற‌தும் 'போய் பிள்ளைகளின் ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டைப் பாருங்க, அப்புறம் நான் செய்தது சரிதான்னு நீங்களே சொல்லுவீங்க' என்றார்.

எந்நேரமும் ஜூலியுடன் விளையாடுவதால், படிப்பில் கவனம் குறைந்துவிட்டதால் எடுத்த முடிவாம் இது.

மனைவி சொன்னபடியே அவனும் போய் பார்த்தான். ஆமாம், முதல் வகுப்பு படிக்கும் மகனும், மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் மதிப்பெண்களில் கொஞ்சம் குறைந்துதான் போயிருந்தனர். இதை ஆசிரியரும் சுட்டிக் காட்டியுள்ளார்.

'வாரம் ஒருமுறை அல்லது மாதத்தில் ஒன்றிரண்டு முறை பிள்ளைகளை கூட்டிக்கொண்டு போய் காட்டிவிட்டு வந்துவிடலாம், விடுமுறையின்போது நாம் ஜூலியை இங்கே தூக்கிக்கொண்டு வந்துவிடலாம்" என்றார்.

வேறு வழியில்லை, அவனும் ஒத்துக்கொண்டான். அப்போது அவன் போட்ட சபதம்தான் முதல் பத்தியில் இருப்பது. அந்த நேரம் பார்த்துதான் நான் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தேன்.

'சபதம் இன்னும் முடியலை போலிருக்குன்னு' நான் சொல்லவும் சூழ்நிலையை மறந்து எல்லோருமே வாய்விட்டு சிரித்துவிட்டோம்.

நான் மனதிற்குள் "இவங்க எப்ப +2 முடிச்சுட்டு கல்லூரிக்காக வெளியூர் போவது ?  அருண் எப்போ தன் ஆசை தீர செல்லங்களை வளர்ப்பது?"  என நினைத்துக்கொண்டேன்.

10 comments:

  1. இப்படித்தான் நம் விருப்பங்கள் சில தள்ளிப்போட்டுக் கொண்டே போவோம். " எப்ப கடலில் அலை ஓய்வது எப்ப நாம் ஸ்நானம் செய்வது? " என்கிற அலுப்பு தான் மிஞ்சுகிறது.
    உங்க கதாநாயகன் அருண் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள் சித்ரா!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்ன பழமொழி புதுசாவும், நல்லாவும் இருக்குங்க. அருணை வாழ்த்தியதற்கும் நன்றிங்க.

      Delete
  2. ஐயோ பாவம், இப்படியே போனால்... ஆசை நிறைவேறுவதற்குள் முதுமை வந்து அவற்றைப் பார்த்துக்கொள்ள முடியாமல் தடைபோடுமோ? வேண்டாம், வேண்டாம். விரைவிலேயே அருணின் ஆசை நிறைவேறட்டும். அழகா எழுதியிருக்கீங்க சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. உங்க ஆசைதான் என்னுடைய ஆசையும். பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  3. என்னது..அருணாஆஆஆஆ? :)

    அவரது விருப்பம் நிறைவேற நானும் வாழ்த்திக்கறேன்! ;) :)

    ReplyDelete
    Replies
    1. "என்னது..அருணாஆஆஆஆ? :)" ___________ ஆமால்ல, மறந்தே போயிட்டேன்.

      முன்னபின்ன ஒரு பேர சேர்த்துகிட்டு எங்க வீட்லயும் ரெண்டு பேர் இருக்காங்க. வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

      Delete
  4. பல ஆசைகள் நிறைவேறாமலே போய்விடுகின்றன.

    அருணின் ஆசை நிறைவேறினால் சரி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க.

      Delete
  5. சிறுகதை போல் பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள் மேடம். உங்கள் அருண் ஆசை விரைவில் நிறைவேறட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete