Monday, June 29, 2015

எதிர்பாராத உபசரிப்பு !! ___ தொடர்ச்சி

ஒரு வழியாகத் திங்கள் முதல் வியாழன் வரை மொழிப் பாடத் தேர்வுகள் முடிந்ததும் வெள்ளிக்கிழமை அனைவரும் பள்ளிக்கு வந்து தலை காட்டினர்.

தலைமை ஐயா தன் பெண்ணின் திருமண நிச்சயத்திற்கான அழைப்பிதழை எல்லோருக்கும் கொடுத்தார். ஒரு திருமண மண்டபத்தில், புதன் கிழமை மாலை, தேர்வு நடைபெறும் ஊரில்தான் விசேஷம்.

காயுவிற்கு பள்ளியில் உடன் வேலை செய்பவர்களிடம் மிகப் பெரிய நல்ல பெயர் ஒன்று உண்டு. அது 'யார் வீட்டு விசேஷத்திலும் கலந்துகொள்ளமாட்டார்' என்பதுதான்.

யாரும் கோபித்துக்கொள்ளமாட்டார்கள், ஏனேனில் அவள் பயணிக்கும் நீண்ட தூரமும், அதற்கான நேரமும்தான்.

நல்ல மனம் கொண்ட நல்லவர்கள் சிலர் காயுவிடம், " என்ன நிச்சயத்திற்கு வருவீங்கதானே ?" என்றனர்.

"தேர்வு முடிந்து வீட்டிற்கு போய் மீண்டும் திரும்புவதோ அல்லது மாலை வரை காத்திருப்பதோ அல்லது கலந்துகொண்டுவிட்டு வீட்டிற்குத் திரும்புவதெல்லாம் இயலாத காரியம், அதனாஆஆல் ........ " என்று இழுக்கவும்,

"மற்றவர்களின் விசேஷம் என்றால் பரவாயில்லை, தலைமை எனும்போது .......  பிரச்சினை அவருக்கும் தெரியும், இருந்தாலும் அன்று தேர்வு முடிந்ததும் அவர்கள் வீட்டிற்கு சென்று தலையைக் காட்டிவிட்டுக் கிளம்பிவிடுங்கள், சொல்லியாச்சு, பிறகு உங்கள் விருப்பம்",  என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

நண்பகலில் அங்கே போவது காயத்ரிக்குப் பிடிக்கவில்லை.

'குறைந்தபட்சம் சிலமணி நேரமாவது கழித்துப் போகலாமே' என பொதுக் குழுவில் புலம்பிக்கொண்டிருந்தாள்.

சோஷியல் ஐயாவோ, " உங்களுக்கு நேரம்தானே போகணும், எங்க வீட்டுக்கு வாங்க, வந்து என் மனைவி, மகளுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினால் சரியாகிவிடப் போகிறது" என்று தன் வீட்டு முகவரியைக் கொடுத்தார்.

"இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே" என நினைத்த காயு, "நிச்சயம் வருகிறோம் ஐயா" என்று சொல்லிவிட்டு வாங்கி வைத்துக்கொண்டாள்.

ஆனால் அலமுவிற்கு இதில் சுத்தமாக விருப்பமில்லை.

புதன் அன்று நண்பகல் தேர்வு முடிந்ததுமே இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது.

"நாம உலகளந்த பெருமாளைப் பார்த்துவிட்டுப் போகலாம் வா " என்றாள் அலமு.

காயத்ரியோ, " போன வாரம்தானே கோயிலுக்குப் போனோம், இன்னைக்கு நாம சோஷியல் ஐயா வீட்டுக்கு போயிட்டு கொஞ்சம் ரீஃப்ரெஷ் பண்ணிட்டுப் போகலாமே" என்றாள்.

"சொன்னா கேக்கமாட்ட, சரி வா, ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுவிட்டாவதுக் கிளம்புவோம்" என்றாள் அலமு.

காயுவிற்காகத்தான் அலமு தங்கியிருக்கிறாள், இல்லையென்றால் பக்கத்து ஊரில் இருக்கும் தன் வீட்டிற்கு போய் விசேஷத்திற்கு மாலை வந்துவிடுவாள்.

தோழியர் இருவரும் சாப்பிட்டு முடித்து ஒரு வழியாக முகவரியிலுள்ள அந்தத் தெருவிற்கு வந்துவிட்டார்கள்.

இப்போது வீட்டைக் கண்டு பிடிக்க வேண்டும்.

அந்தத் தெரு முழுவதும் ஒரே மாதிரியான சிறிய திண்ணையும், பெரிய திண்ணையும் வைத்துக் கட்டப்பட்ட, படிகளுடனான அந்தக் கால ஓட்டு வீடுகள்.

இதில் 'எந்த வீடு ?'  எனக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது. ஏனெனில்  ஒவ்வொரு வீடும் அவ்வளவு உயரம் !

ஒரு வழியாக கதவு எண்ணைப் பார்த்துக்கொண்டே வந்து வீட்டைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.

ஒரே கதவு, மரத்தாலானது, சிறிது ஒருக்களித்தார்போல் திறந்திருந்தது. ஆர்வக் கோளாறில் காயுதான் கதவைத் தட்டினாள்........ ( தொடரும் )

7 comments:

  1. சுவாரஸ்யம்.... தொடர்கிறேன்....

    ReplyDelete
  2. ம்ம்ம்.. என்ன நடக்கப் போகிறது.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  3. ஆஹா.. இதென்ன சோதனை. மீண்டும் தொடருமாஆஆ.... நீங்க ரெம்பவே ஒரு நல்ல கதைக்கு சஸ்பென்ஸ் வைக்கிறீங்க சித்ரா.. கதை சூப்பரா,சுவாரஸ்யமா போகுது...!!

    ReplyDelete
    Replies
    1. ப்ரியா,

      இதோ நாளைக்கே போட்டு ஒடச்சிடுறேன். எனக்குமே ரொம்ப நாளைக்கெல்லாம் சஸ்பென்ஸை நீட்டிக்க முடியாது, ஹா ஹா ஹா !!

      தொடர்ந்து வந்து உற்சாகமூட்டுவதற்கு நன்றி ப்ரியா.

      Delete
  4. சஸ்பென்ஸ்....தொடரப் போகிறோம்...

    ஒரு சின்ன கேள்வி....//காயுவிற்காகத்தான் அலமு தங்கியிருக்கிறாள், இல்லையென்றால் பக்கத்து ஊரில் இருக்கும் தன் வீட்டிற்கு போய் விசேஷத்திற்கு மாலை வந்துவிடுவாள்.//

    இருவரும் நல்ல தோழிகள் அப்படியிருக்க காயுவை அலமு தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போயிருக்குமாறு ஆசிரியர் எழுதியிருக்கலாமோ......இல்லை அவர் செல்லாததற்கு சாலிட் காரணம் சொல்லி இருக்கலாமோ...சோசியல் வீட்டிற்குச்க் செல்ல வேண்டும்? கதைக்காகவோ? மற்ற படி கதை அருமையான நடையில் நடைபோடுகின்றது....

    ReplyDelete
    Replies
    1. சகோ துளசி & கீதா,

      முன்கூட்டியே கதை நமக்குத் தெரிந்துவிடுவதால் எழுதும்போது சிலவற்றை விட்டுவிடுகிறோமோ ! அதுவுமில்லாமல் நீளமானக் கதையைக் கொஞ்சம் சுருக்கினதுல ஹி ஹி:) விட்டுப்போயிருக்கலாம்.

      இவங்க பஸ் ஸ்டான்டு போய்ட்டு, பஸ் பிடிச்சு பக்கத்து ஊருக்குப் போய் திரும்பவும் வந்து ........ வீட்டிற்குத் திரும்ப வேண்டுமே, அதுவும் நீண்ட தூர பயணம். தொலைபேசி வசதிகள் ஏதும் இல்லாத நாளில் !

      சோஷியல் அந்த ஊர்க்காரர். வேலை செய்யுமிடத்தில் எல்லோரிடமும் நன்கு அறிமுகமானவர். ஒரு அவசரத்துக்கு அங்கே போனார்கள்,அவ்வளவுதான்.

      கதையைப் படித்து அதில் உள்ள சந்தேகங்களைக் கேட்டது எனக்கும் சந்தோஷமாக உள்ளது ! நன்றி சகோ துளசி & கீதா.

      Delete