Tuesday, August 27, 2013

பூட்டாத பூட்டுகள்

ஒருவழியாக ஒருநாள் நண்பகல் வேளையில் அமெரிக்காவில் வந்து காலடி வச்சாச்சு. ஒன்றரை வருடம் கழித்து சுந்தரைப் பார்த்ததில் அளவில்லா மகிழ்ச்சி.

அடுத்த நாளே Toy R Us போனோம். விளையாட்டுப் பொருள்கள் வாங்குமிடம் என்று நினைத்துப் போனால் அது குட்டீஸ்களின் விளையாட்டு உலகமாகவே இருந்தது. எதை எடுப்பது எதை விடுவது எனத் தெரியாமல் முழித்தேன்.

மகள் ஆர்வமாக சிலவற்றை எடுத்தாள். அவற்றையே வாங்கிக்கொள்ளலாம் என முடிவு செய்தோம். பிறகு அழகான குட்டி சைக்கிள் ஒன்றும் வாங்கிக்கொண்டு நேராக பூங்காவுக்கு சென்றோம்.(பிறிதொருநாள் இந்தப் பூங்காவைப் பற்றி பதிவிடுகிறேன்)

மகள் விளையாடி சோர்வடையும்வரை அங்கேயே இருந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். அன்று இரவு இவருக்கு ஆஃபீஸ் செல்ல வேண்டி இருந்தது. மாலை வீட்டிலிருந்து கிளம்புமுன் சிலவற்றை சொல்லிவிட்டு சென்றார்.

அதில் முதலாவது எமர்ஜென்ஸி வண்டிகள் போகும்போது வரும் சத்தத்தைக் கேட்டு பயந்துவிட வேண்டாம் என்பது ஒன்று.

அடுத்து கதவை எப்படி பூட்டுவது & திறப்பது என்பது இன்னொன்று. கூடவே இன்னொன்றையும் சொல்லியிருக்கலாம். மறந்துவிட்டாரோ!!

ஒருவேளை இரவு நேரம் என்பதால் நாங்கள் வெளியில் வரமாட்டோம் என்றுகூட இவர் நினைத்திருக்கலாம். நாங்களாவது வெளியில் வராமல் இருப்பதாவது!!

ஊரில் நாங்கள் இருந்தது கிராமம் என்பதால் யார் வீட்டுக் கதவும் மூடிய நிலையில் இருந்து நான் பார்த்ததில்லை. வீடு திறந்துதானே கிடக்கிறது என யாராவது வெளியிலிருந்து வரும் ஆட்கள் நுழைந்துவிட முடியுமா என்ன?

வெளியிலிருந்து ஈ,எறும்பு வந்தால்கூட எல்லோருக்கும் தெரிந்துவிடும். அதனால் வீட்டைப் பூட்டி வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

அதனால் 'சாவி' பற்றிய சிந்தனையெல்லாம் எனக்கில்லை. ஏதோ சொல்கிறார், ஓ கே என்றுதான் நினைத்தேன்.

வந்த மறுநாளே என்பதால் jet lag பிரச்சினை வேறு. இரவு முழுவதும் தூங்கவில்லை. ஊருக்கு ஃபோன் செய்துகொண்டும், இங்குமங்கும் நடந்துகொண்டும், ஏதாவது சாப்பிட்டுக்கொண்டும் .... பாவம், கீழ் வீட்டில் இருந்தவர்கள்.

இவர் அதிகாலை 6:00 மணிக்கு ஃபோன் செய்து ஆஃபீசிலிருந்து கிளம்பிவிட்டதாக சொன்னார்.

வேலை செய்த இடம் நீண்ட தொலைவு என்பதால் வந்துசேர ஏறக்குறைய ஒரு மணி நேரமாவது ஆகும். இருந்தாலும் அப்பொழுதே கிளம்ப ஆரம்பித்துவிட்டேன், கீழே சென்று இவர் வருவதைப் பார்க்க.

புது சைக்கிள் வேறு, அதனால் வெளியில்போக என்னைவிட மகள்தான் ஆர்வமாக இருந்தாள் . தன்னுடைய சைக்கிளை பேட்டியோவில் இருந்து எடுத்துவந்து கதவைத் திறந்து வெளியில் வைக்க முற்பட்டாள்.

பக்கத்திலேயே படிக்கட்டுகள் இருந்ததால் நானும் உதவ‌லாமே என வெளியில் வந்தேன். அவ்வளவுதான்...

கதவு படாரென்று மூடிக்கொண்டது. கதவைத் தள்ளித் திறக்கிறேன், முடியவில்லை. என்னதிது, ஒருவேளை .....! அதை நம்பமாட்டேன், ஆனாலும் எந்தளவிற்கு நம்பிக்கை இல்லையோ அந்தளவிற்கு அதனிடம் பயம் உண்டு.

எனக்கொரு சந்தேகம், கதவைப் பூட்டாமலே எப்படி பூட்டிக்கொண்டது!! கதவைத் திறக்க வேண்டும், சாவி கையில் இல்லை. அதனால் உள்ளே போகவும் முடியாது. யாரையுமே தெரியாது. அவ்வளவு ஏன், முதலில் யாரையுமே வெளியில் காணோம்.

இப்போது ரஞ்ஜனி எழுதுவாங்களே, 'என்ன ஆள் நடமாட்டத்தையே காணோம்' என்பதாக, அப்போது அதுதான் எனக்குள் இருந்தது.

சரி எவ்வளவு நேரம்தான் அங்கேயே நின்றுகொண்டிருப்பது! நல்ல குளிர் வேறு. Mid_July என்றாலும் கோடையே எங்களுக்கு குளிராகத்தான் இருந்தது.

நல்ல வேளை, அடுப்பில் எதுவும் இல்லை. அதனால் தைரியமாக கீழே இறங்கி வந்து வெயில் வரும் பக்கமாக மகளை சைக்கிள் ஓட்டச்சொல்லி சமாளித்தேன்.

கையில் செல்ஃபோன் இல்லை. இருந்திருந்தால் இவரிடம் சொல்லியிருக்கலாம். ஒருமணி நேரத்திற்கும் மேலாக‌ அங்கேயே நின்று எப்படியோ ஓட்டினேன்.

பிடித்தமான வேலையாக இருந்தால் நேரம் போவதே தெரியாது. அதுவே பிடிக்காதது என்றால்?.... ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக நகர்ந்தது.

கடைசியில் தூரத்தில் கார் வருவதைப் பார்த்ததும்தான் நிம்மதி வந்தது. உடனே காரை நோக்கி போனேன், இல்லையில்லை ஓடினேன்.

பிறகு காரில் ஏறிக்கொண்டேன், ஏறியதும் இவர் கேட்டது, 'எத்தன தடவ ஃபோன் செய்தேன், ஏன் எடுக்கல‌?' என்று!

முதல் வேலையாக அப்பார்ட்மென்ட் ஆஃபீஸ் இருக்குமிடம், அதன் ஃபோன் நெம்பர் எல்லாம் கொடுத்து, எங்க அப்பார்ட்மென்டிலேயே இருந்த ஒரு வீட்டினரை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு அவர்களை நான் பார்க்கவேயில்லை என்பது வேறு விஷயம்.

அதன் பிறகுதான் தெரிந்தது, எங்கள் வீட்டைச் சுற்றியே அருமையான, நல்லநல்ல தோழிகள் இருக்கின்றர் என்று. எந்த உதவியாக இருந்தாலும் நான் கேட்காமலேயே செய்தனர். நள்ளிரவு என்றாலும் அவர்கள் வீட்டிற்கு போகுமளவு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்களா இருந்தாங்க.

கதவுப் பிரச்சினை இதோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. அதன் பிறகும் இரண்டுமூன்று தடவை அதாவது அப்பார்ட்மென்ட் ஆஃபீஸிற்கு போகிறேன் என்றால் அது கதவுப் பிரச்சினைக்குத்தான் என எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

ஒருதடவ அப்பார்ட்மென்ட் ஆஃபீஸிலிருந்து அவங்க க்ளப் காரிலேயே வீட்டிற்கு கூட்டிட்டு வந்தாங்க. நானோ 'இஞ்ச் பை இஞ்ச்'சா, தெரிஞ்ச கடலூரிலேயே பஸ் அல்லது ஷேர் ஆட்டோவில்தான் போவேன்.

'நடந்தே வருகிறேன்' என்று சொல்லியிருக்கலாமோ என்றெல்லாம் குழம்பிப்போய் இருக்கும்போது என்மகள் என்னிடம் சிரித்துக்கொண்டே 'அம்மா, இந்தக் கார் சூப்பரா இருக்கில்ல' என்றாள்.

இன்றும்கூட அடிக்கடி என்னுள் வரும் கேள்வி, "இவர் ஆஃபீஸ் போனதும் இது நிகழ்ந்திருந்தால் என்ன செய்திருப்பேன்?',என்று.

பிறகு எனக்கு நானே "நடந்ததையே நினைத்து கவலைப்படக் கூடாது எனும்போது, நடக்காததை நினைத்து எதற்கு கவலைப்பட வேண்டும்?" என்று.

'கதவு தானாகவே பூட்டிக்கொள்ளும் அமைப்புடையது, அதனால எப்போதும் கையில் சாவி இருக்க வேண்டும்', என இவர் அப்போதே சொல்லி இருக்கலாம். சொல்லியிருந்தால் இவ்வளவு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதிவை நீங்க இழந்திருப்பீங்க‌ !! ஹா ஹா ஹா.

(இன்று மிகச் சாதாரணமாக இருக்கும் இந்த விஷயம் அன்று எனக்கு பூதாகரமாகத் தெரிந்ததென்னவோ உண்மை)

11 comments:

  1. நான் சென்னையிலேயே இந்த மாதிரியெல்லாம் மாட்டிக் கொண்டு கோத்ரேஜ் கம்பெனி ஆட்களைக் கூபிட்டு அவர்கள் நான் ஏதோ வீட்டில் திருடப் போவதாகக் கற்பனை சேது என்னை இண்டர்வியுவில் கேட்பது போல் கேட்டு ஒரு வழியாக பூட்டை உடைத்து உள்ளே சென்றோம்.

    உங்கள் பூட்டாத பூட்டு எனக்கு நான் உடைத்த பூட்டை நினைவுக்கு கொண்டு வந்தது.
    இன்று தமாஷாக தெரியும் விஷயம் அன்று எவ்வவளவு பெரிய பிரச்சினை.
    அழகாய் கோர்வையாய் எழுதுகிறிர்கள்....

    வாழ்த்துக்கள்......தொடருங்கள்......

    ReplyDelete
    Replies
    1. 'நான் ஏதோ வீட்டில் திருடப் போவதாகக் கற்பனை சேது என்னை இண்டர்வியுவில் கேட்பது போல் கேட்டு'_____ திருட வர்றவங்களை விட்டுட்டு, வீட்டு சொந்தக்காரரிடமே ...நல்ல காமெடியா இருக்கு.

      சுற்றி இருப்பவர்களை நன்றாகத் தெரியும் என்பதால் நம்ம ஊர்ல அந்தளவுக்கு பிரச்சினை இருந்திருக்காது. வந்த இரண்டாவது நாளே எனும்போதுதான் பிரச்சினையே.

      'அழகாய் கோர்வையாய் எழுதுகிறிர்கள்'____ நடந்ததை அப்படியே எழுதியாச்சு. அடிக்கடி நினைவில் வந்துபோகும் நிகழ்ச்சி என்பதாலும்கூட இருக்கலாம். வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

      Delete
  2. மறக்க முடியாத நிகழ்வுதான் சித்ராக்கா! ஆட்டோமேடிக் லாக் உள்ள வீட்டில இருந்தீங்களோ! சிலசமயங்களில் ஹோட்டல் ரூம்களில் இப்படி நிகழ்ந்ததுண்டு. வீட்டு சாவி இல்லாமல் மாட்டிகிட்ட அனுபவம் இதுவரை இல்லை! ;)

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்ல,நீங்க தப்பிச்சிட்டீங்க!!வந்த இரண்டாவது நாளே...நல்ல அனுபவம்!!

      ஹோட்டலில் இருக்கற மாதிரியான ஆட்டோமேடிக் லாக் இல்ல மகி. வெளிப்பக்கம் நாப் இருக்கும்.உள்பக்கம் ஒரு சிறு பட்டன் மாதிரி நீளவாக்கில் இருக்குமே.கதவை மூடும்போது அதை ட்விஸ்ட் பண்ணிட்டு லாக் பண்ணாம பாத்துக்கலாம்.உங்க வீட்டிலும் இதுதான் இருக்கும்னு நினைக்கிறேன்.

      Delete
  3. I was locked out for 3 hrs one day. ;) At least I was wearing a thick jacket & had the gardening tools out that day. kept digging & cleaning the garden till Chris came home. ;)

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை gardening tools இருந்து தோட்டத்திற்குள் செல்ல முடிந்ததால் ஓரளவு சமாளிச்சிருப்பீங்க.

      வந்த புதிது என்பதால் கொஞ்சம் பயந்துதான் போனேன்.முதல்நாள் இரவே இது நடந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்பதுதான் மீண்டும்மீண்டும் நினைவில் வந்து தொந்தரவு கொடுத்தது.

      Delete
  4. haha super...nice...i like that ///எங்க அப்பார்ட்மென்டிலேயே இருந்த ஒரு வீட்டினரை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு அவர்களை நான் பார்க்கவேயில்லை என்பது வேறு விஷயம்/// :P

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சிலருடன் நட்பை தொடர முடிவதில்லை.

      Delete
    2. unmaiyana natpai nam thodara vendiyathilai..natpu namai thodarum ;) :P

      Delete
    3. அருமையான வாக்கியம்,நன்றி.

      Delete