வினாத்தாளில் "ஏழிரண்டாண்டு" எனத் தொடங்கும் இராமாயணச் செய்யுளை அடி பிறழாமல் எழுதுக ____ என்ற கேள்வியைப் பார்த்ததும், இதுவே முழு ஆண்டுப் பொதுத்தேர்வில் கேட்டிருந்தால் கேள்வி எண்ணைப் பதிவு செய்து சுளையாக முழு மதிப்பெண்ணை பெற்றிருப்போம்' என எனக்குள் ஒரு நமுட்டுச் சிரிப்பு.
ஆர்வமிகுதியில் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவியிடம், " இராமாயணம் பகுதியில் மனப்பாடப் பகுதியில் இல்லாத பாடலைக் கேட்டிருக்கிறார்களே " என்றேன்.
அவளோ "இந்தப் பாடல் மனப்பாடப் பகுதியில் இருக்கிறது" என்று அடித்துச் சொன்னாள்.
இல்லை, இப்படி ஒரு செய்யுளை நான் படிக்கவே இல்லை " என்று வாதிட்டேன்.
எவ்வளவு நேரம் ஆகும், தமிழ் புத்தகத்தை எடுத்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ! இருந்தாலும் நான் சொல்வதுதான் சரி என்பது என் எண்ணம்.
என்னைப் போலவே வகுப்பில் உள்ள மாணவிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் சந்தேகம், அதனால் வகுப்பு முழுவதும் சலசலப்பு.
"எங்கே சொல்லு பார்க்கலாம்" என்றேன். கடகடவென சொல்லி முடித்துவிட்டாள். தூக்கிவாரிப்போட்டது. எப்படி பார்க்காமல் விட்டோம் என்றிருந்தது.
அன்றைக்கு முதல் வேலையாக அந்தப் பாடலை மனனம் செய்து எழுதிப் பார்த்துக்கொண்டேன்.
அரையாண்டுக்கும் முழு ஆண்டுக்கும் இடையில் மூன்று திருப்புதல் தேர்வுகள் வரும்.
முதல் தேர்வு எழுதப்பட்டு விடைத்தாள்கள் திருத்திக் கொடுக்கப்படும்.
இரண்டாம் தேர்வு எழுத மட்டுமே செய்வோம், திருத்திக் கொடுக்கமாட்டார்கள்.
மூன்றாவது தேர்வு ? எழுதுவதுமில்லை, அதனால் திருத்த வேண்டிய அவசியமுமில்லை என்பதனால் கேள்வித்தாள் கையிலேயே கொடுக்கப்பட்டுவிடும்.
அப்படி கொடுக்கப்பட்டபோது நடந்ததுதான் மேலேயுள்ள நிகழ்வு.
நான் ஏதோ புத்தகத்துடன் தேர்வு எழுதப் போனதாகவும், பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டும் எழுதுகிறேன் என்றெல்லாம் கற்பனையில் வந்திருக்குமே ! ஹா ஹா ஹா :))))
ஆண்டு முழுவதும் நடந்த தேர்வுகளில் இருந்து தப்பித்த அப்பாடல், இப்போது கேட்கப்பட்டதால்தான் நானும் முழுஆண்டுத் தேர்வில் தப்பித்தேன் !
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் முதல்தாள் எழுதி முடித்து வெளியில் வந்ததும் என் தோழிகள், " அந்த செய்யுளே வந்துருச்சுபோல " என புன்னகைத்தனர்.
பல வருடங்களுக்குமுன் படித்தது, ஆனாலும் அந்த வருடம் படித்த மற்ற செய்யுள் பகுதிகளில், திருக்குறள் உட்பட எதுவுமே நினைவிலில்லை, இந்தப் பாடலைத் தவிர. எழுத்துப் பிழைகள் இருக்கலாம். இருந்தாலும் .........
பாடல் இதோ :
" ஏழிரண்டாண்டு யான்போந் தெரிவனத் திருக்க ஏன்றேன்
வாழியாய் அரசர் வைகும் வளநகர் வைகல் ஒல்லேன்
பாழியந் தடந்தோள் வீரப் பார்த்திலை போலும் அன்றே
யாழிசை மொழியோடன்றி யானுறை இன்பம் என்னோ "
'மழை விட்டும் தூவானம் விடாது' என்பதுபோல பள்ளிகள் ஆரம்பித்து ஒரு வாரமாகியும், நினைவுகள் மட்டும் அங்கேயே சுற்றிச் சுழல்கின்றன.