Saturday, February 18, 2017

தப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் !



போனதடவ போட்ட இரண்டுமூன்று பாவக்கா விதைகளில் ஒரு விதை அப்படியே மண்ணில் இருந்து தப்பிப் பிழைத்து சென்ற கோடையில் முளைத்து வரவும் ஆச்சரியமாகிப் போனேன்.


இவ்வளவு நாளும்  இந்த விதை தொட்டியிலேயே  இருந்திருக்கிறதே, நேரம் வந்ததும் முளைத்துவிட்டதே என சந்தோஷம்.


இந்த வீட்டு பேட்டியோவில் வெயில் வரப்போவதில்லை. இருந்தாலும்  தொட்டியை நகர்த்திநகர்த்தி வைத்து பத்திரமா பார்த்துக்கொண்டேன்.


தப்புச்செடி என்றாலே நிறைய காய்க்குமாமே :) 


ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது. பூக்கள்கூட பூத்தன. ஆனால் வருடக் கடைசியில எங்க ஊர்ல அடிச்ச மழை & குளிர்ல அப்படியே வாடிவதங்கிக் காணாமல் போய்விட்டது !

காய்க்காட்டியும் பரவால்ல, முளைத்ததே என ஒரு சந்தோஷம் !

                        &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பதிவு சோகமாக வேண்டாமே என ஒரு சிறு சேர்ப்பு !

ஒருதடவ சின்ன வெங்காயம் நட்டு வச்சு, அதன் தாள்களைப் பயன்படுத்திக்கொண்டே வரும்போதே, தானாக செடி காய்வதுபோல் இருக்கவும், பிடுங்கிப் பார்த்தேன். வாவ் , குட்டிக்குட்டி வெங்காயங்கள் !


சாம்பார் வைத்தேன், நெஜமாவே சூப்பர் வாசனையில் சாம்பார் கமகமத்தது :)

Saturday, February 11, 2017

இன்ப நினைவு !

                          Image result for siblings fighting clip art

சும்மா சொல்லக்கூடாது, சின்ன வயசுல, வீட்டில், ஒருவருக்கொருவர் பட்டப் பெயர் வைத்து விளையாடுவதில்தான்(உண்மையில் வெறுப்பேற்றுவதில்) என்ன ஒரு ஆனந்தம் !

அதை வைத்துக் கூப்பிடும்போது எதிராளிக்கு (வேறு யார் ? உடன்பிறப்புகள்தான்) கோபம் தலைக்கேற வேண்டும், முக்கியமா நம்மை அடிக்க ஓடி வரவேண்டும் :))))  அதுல இருக்குற சந்தோஷம் இருக்கேஏஏ :)))))

இதுக்காகவே பெயர்களைத் தேடித்தேடிக் கண்டுபிடிப்பேன் ! அவங்களும் அப்பாவி எல்லாம் கிடையாது. ஒல்லியா இருக்குறவங்களுக்கு என்னென்ன பட்டப் பெயர்கள் உண்டோ அவை அத்தனையையும் எனக்கு வைப்பாங்க.  என்ன நம்பலையா ? சரி, நம்பாட்டி போங்க !

புதுசா ஒரு பேரு வைக்கும்போது ஆரம்பத்துல கொஞ்ச நாட்கள் கடுப்பா இருக்கும். ரெண்டுமூனு நாள் ஆச்சுன்னா பழகிடும். அடுத்து வேற ஒரு 'பேர' தேடணும்.

ஒருமுறை என் தம்பி திடீரென என்னை ovs என கூப்பிட்டுவிட்டு அங்கே நிற்கவில்லை, ஓடியே போய்விட்டான்.

எனக்கோ அர்த்தம் புரியவில்லை. 'வரட்டும்' எனக் காத்திருந்தேன்.

வீட்டுக்கு வந்தபோது "என்ன ?" எனக் கேட்டு அவனிடமிருந்து பதில் வராததால் செம அடி வாங்கினான்.

எனக்குக் கோபம் வருவதைப் பார்த்து மீண்டும்மீண்டும் கூப்பிட ஆரம்பித்தான்.

ஒருநாள் வாங்கிய அடியில் o ம் v ம் ஒல்லி & வென என்பனவற்றிற்கான முதல் எழுத்துக்கள் என்று சொன்னான்.

இவை பழகிய வார்த்தைகள்தான். ஆனால் எவ்வளவு கேட்டும் கடைசி எழுத்துக்கான வார்த்தையை மட்டும் சொல்லவே இல்லை.

கொஞ்ச நாட்கள் ஆனதும் வழக்கம்போல் எனக்கும் இந்த வார்த்தை பழகிப்போய்விட்டது.

ஒருநாள் என்மேல் உள்ள கோபத்தில் அந்த எழுத்துக்கான வார்த்தையை உளறிக்கொட்டிவிட்டான்.

அவ்வளவுதான், அன்று முழுவதும் அவன் என் பக்கமே வரவில்லை.

இந்தப் பிரச்சினையைப்  பெரியவர்களிடமும் கொண்டுபோக முடியாது. அப்புறம் நம்ம வண்டவாளம் தெரிய வரும். நான் வைத்த பெயர்கள் எல்லாம் வரிசைகட்டி வரும்.  அதனால் இந்த அட்டகாசங்கள் எல்லாம் எங்களுடனேயே முடிந்துவிடும்.

"இனிமே நானும் சொல்லமாட்டேன், நீயும் சொல்லக் கூடாது" என  சமாதான உடன்படிக்கை எல்லாம் நடத்திப் பார்த்தேன் .....  ம்ஹூம்.

இதனால் இருவருக்கும் எவ்வ்வ்வளவு சண்டை, அடி, உதை, கோபம், வெறுப்பு !

இதெல்லாம் 93 ஆம் வருடம் டிசம்பரோடு ஒரு முடிவுக்கு வந்தது.

தெரிந்தோ, தெரியாமலோ, அவன் வாய் முகூர்த்தம் பலித்து,  பிந்நாளில் அந்த எழுத்தே என் பெயருடன் வந்து சேர்ந்துகொண்டது 'சித்ராசுந்தரமூர்த்தி'யென :)

ஒவ்வொரு வருடமும் ஜனவரி & தை மாதம் வந்தாலே இந்த இன்பமான நினைவு வந்து போகும் ! இப்போதும் அப்படித்தான் :)

Monday, January 30, 2017

பதவி உயர்வு !

கூட்டம் அதிகமில்லாத பேருந்து நிறுத்தம் அது,  அங்கே ஒரு புளிய மரம்.

அதனடியில் ஒரு பூக்கார அம்மா, அவரது பெயர்கூட 'கனகாம்பரம்'தான்.

அவருக்கு முன்னால் ஒரு சிறு மரப்பலகை, அதில் மல்லி, முல்லையில் ஒவ்வொரு பூ பந்து , இவற்றுடன் மரிக்கொழுந்து, கோழிக்கொண்டை பூ, சில வாசனை இலைகள் எல்லாம் வைத்துக் கட்டப்பட்ட கதம்பம் ஒரு பந்து,  அப்போதைக்கப்போது பூக்கள் வாடாமல் இருக்க அதன்மேல் தெளிப்பதற்காக ஒரு கிண்ணத்தில் தண்ணீர், இவைதான் அந்த பூக்கடை.

வேறுவழி இல்லாமல்தான் கனகாம்பரம் அந்த பூக்கடையை நடத்துகிறார் என்பதை அக்கடைக்கு வந்து பூ வாங்குபவர்களின் எண்ணிக்கையை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.

குடும்பச்சுமை எப்படி சமாளிக்கப்படுகிறதோ !

மதிய சாப்பாட்டுக்கு மரத்தின்மேல் தொங்கிக்கொண்டிருக்கும் மஞ்சள் பையைத் திறந்து ஒருபுறமாகத் திரும்பி உட்கார்ந்து ஏதோ அள்ளிப்போட்டுக்கொண்டு மீண்டும் நேராக உட்கார்ந்துவிடுவார்.

காலையிலிருந்து இருட்டும்வரை கடை திறந்தே இருக்கும். வீட்டுக்குக் கிளம்பும்போது கடையை(!) எடுத்து மரத்தில் உள்ள ஆணியில் மாட்டிவிட்டுக் கிளம்பிவிடுவார்.

தினமும் மதியத்துக்குமேல் வாடிக்கையாக அந்தப் பகுதிக்கு மூவராக வருபவர்களில் இருவர் பிரிந்து ஒரு ஓரமாக நிற்க, ஒரு பையன் மட்டும் நேரே கனகாம்பரத்திடம் வந்து நின்று, உட்கார்ந்து, ஏதோ பேசி, அடம்பிடித்து, எதையோ வாங்க முற்படுவான்.

கனகாம்பரம் கண்டுகொள்ளாமலே இருந்து பார்ப்பார். வேறு வழியில்லாமல், சிறிது கண்டிப்புடன் தன் சுருக்குப் பையிலிருந்து கொஞ்சம் சில்லரைகளை எடுத்துக் கொடுப்பார்.

அவ்வளவுதான், ஒரே ஓட்டமாக ஓடி அந்த இருவருடன் சேர்ந்து காணாமலே போய்விடுவான். அவன் சென்று மறையும்வரை ஒரு ஏக்கப் பார்வையுடன் பார்ப்பார்.

ஏதோ ஒரு வேலை செய்து அம்மாவைக் காப்பாற்ற வேண்டிய வயதில் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறான் சுரேசு.

சில மாதங்களுக்குப் பிறகு மதிய நேரத்தில் தினமும் பூக்கடைக்கு ஒரு இளம்பெண் வருகிறாள்.

ஒருவேளை இப்பெண் கனகாம்பரத்தின் மருமகளாக இருப்பாளோ !

தன் மகனுக்கு ஒரு கால்கட்டு போட்டால் திருந்திவிட வாய்ப்புண்டு என்று யாராவது சொன்னதை நம்பி இப்பெண்ணை பலிகடா ஆக்கி இருப்பாரோ !

மருமகள் வந்ததும் அவளிடம் கடையை ஒப்படைத்துவிட்டு கனகாம்பரம் வீட்டுக்குபோய் மதிய சாப்பாடை முடித்துத் திரும்புகிறாள்.

திருமணம் ஆகியும் சுரேசு கடைக்கு வந்து தன் அம்மாவிடம் தண்டத்தைப் பெற்றுக்கொள்ளத் தவறுவதில்லை.

அடுத்த சில மாதங்கள்வரை மருமகள் கடைப்பக்கம் தலைகாட்டாமல் இருந்து, ஒருநாள் சாப்பாட்டு பை, குழந்தையுடன் கடைக்கு வருகிறாள்.

கனகாம்பரம் திரும்பி உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, குழந்தையை சிறிது நேரம் கொஞ்சிவிட்டு, மருமகளை வீட்டுக்கு அனுப்புகிறார்.

இப்படியே சில மாதங்கள் தொடர்கிறது.

எவ்வளவு நாட்களுக்குத்தான் இப்படியே போகும்!  ஒருநாள் கடை திறக்கப்படவே இல்லை.

ஒருநாள், இரண்டு நாள், பத்து நாள் ? ............ ஏறக்குறைய ஒரு மாதம், கடைக்கு விடுமுறை.

மீண்டும் திறக்கப்படும்போது அங்கே கனகாம்பரம் இல்லை, மரப் பலகைக்குப் பின்னால் அவரது மருமகள்தான் அமர்கிறாள்.

கனகாம்பரம் நிரந்தரமாக ஓய்வு எடுத்திருப்பாரோ !

சும்மா சொல்லக்கூடாது, கனகாம்பரத்தின் மருமகள்  தைரியம், உழைப்பு இரண்டையும் தன் மாமியாரிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறாள்.

இல்லையென்றால் துறுதுறுவென இங்குமங்கும் ஓடும் தன் இரண்டு வயது மகனையும் பார்த்துக்கொண்டு,  கடையையும் நடத்த முடியுமா ?

சுரேசு ? ....... இதே பூக்கடைக்கு  முன்பு மகனாக வந்தவன் இப்போது கொஞ்சம் பதவி உயர்வு பெற்று கணவனாக வந்து போய்க்கொண்டிருக்கிறான்.