Wednesday, April 27, 2016

சுட்டுப் போட்டாலும் ....

இன்று காலைடிஃபன் பூரி என முடிவானது.

வழக்கம்போல் எனக்குப் பிடித்தமான‌ சூடான புழுங்கல் அரிசி கஞ்சியும், சுட வைத்த பழைய கத்திரிக்காய் புளிக்குழம்பும், ஏதாவது ஒரு துவையலுட‌ன் ஆரம்பிக்கும் காலைப்பொழுது இன்று தோழியின் மகளின் வேண்டுகோளினால் பூரியில் ஆரம்பமானது .

விடுமுறை என்றதும் நகரத்தின் நெரிசலில் இருந்து தப்பிக்க நான் முதலில் தேர்வு செய்வது என் தோழியின் கிராமத்து வீடுதான். காற்றோட்டமான பெரிய வீட்டைச்சுற்றி பசுமையான வயல்வெளிகளும், ஆரவாரமில்லாத அமைதியும் என்னை அங்கே இழுத்துச் சென்றுவிடும்.

ஆமாம், இப்போது நான் தோழியின் வீட்டில்தான் இருக்கிறேன். நேரம் போவதே தெரியாமல் மீண்டும் மீண்டும் பேசிய கதைகளையே, அலுக்காமல், வாய்வலிக்க, மணிக்கணக்கில் அசை போட்டுக்கொண்டிருப்போம்.

இதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தால் கதையை எப்படி முடிப்பது ? டிஃபனை எப்போது சாப்பிடுவது ? கதையைத் தொடருவோம் :)

திருமணம் முடிந்து ஒருசில மாதங்களே ஆன தோழியின் மகள் நான் வந்தது தெரிந்து நேற்றே என்னைப் பார்க்க வந்துவிட்டாள். தனக்கு 'புஸுபுஸு பூரி எப்படி சுடுவது?" என சொல்லிக் கொடுக்கச்சொன்னாள்.

ஏற்கனவே சமையலில் தகறாறு. எனக்கில்லை, தோழியின் பெண்ணிற்குத்தான்.

"சமைக்கவேத் தெரியவில்லை' என புகுந்த வீட்டில் இருந்து பேச்சுக்கள் வருவதாக தோழி சொன்னதும், " அதானே, படிச்சிட்டு வேலைக்கும் போகணும், சமையலிலும் புலியா இருக்கணும்னா எப்படி?" என புதுமணப் பெண்ணிற்காக வக்காலத்து வாங்கினேன்.

"நான் ஊருக்குப் போவதற்குள் மாப்பிள்ளை வந்தால் கேட்டுவிடுகிறேன்" என்று அம்மாவுக்கும், பொண்ணுக்கும் கிலியை உண்டாக்கினேன் :)))

பேசிக்கொண்டே உருளைக்கிழங்கு & பச்சைப் பட்டாணியை வேகப்போட்டேன். கிழங்கு வெந்துகொண்டிருக்கும்போதே பூரிக்கு பதமாக மாவைப் பிசைந்து, உருண்டைகள் போட்டு மூடிவிட்டு, குருமாவை அடுப்பில் ஏற்றிவிட்டு, வாணலில் எண்ணெய் காய்ந்ததும் பூரி போடத் தயாரானேன்.

இவை எல்லாவற்றையும் புதுமணப்பெண் அருகிருந்து பார்த்துக்கொண்டே இருந்தாள்.

பூரி உருட்டும் கட்டைதான் என்னோட சாய்ஸ். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்ததோ பூரி ப்ரெஸ். தோழியின்மகளும் சமையலும் மாதிரி எனக்கும் இந்த பூரி ப்ரெஸ்ஸுக்கும் ஆகாது. எனவே நான் ப்ரெஸ் பண்ணுவதிலிருந்து ஒதுங்கிக்கொண்டேன்.

'நேற்று பிரியாணிக்கு எலுமிச்சையை நீளவாக்கில் நறுக்கிக்கொடுத்து ஆச்சரியப்பட வைத்தவள்'  இப்போது, தான் பூரியை ப்ரெஸ் பண்ணித்தருவதாக சொன்னதும் பயந்தே போனேன்.

'சமையல் கற்றுக்கொள்ளும்போது இதெல்லாம் சகஜம்தானே' என பணிந்தேன்.

" ஒன்னும் சரி இல்லையே " என நினைத்தாலும், முதல் பூரியைப் போட்டு எடுத்தேன், ஏதோ எல்லடை கணக்காய் மொறுமொறுவென தகடையாக வந்தது. இரண்டாவதும் அப்படியே.

இப்போது பூரி போடுவதை நிறுத்திவிட்டு, அவள் ப்ரெஸ் பண்ணுவதைக் கவனித்தேன். உருண்டையை எடுத்து அதை நசுக்கி, நண்டுகுண்டலாக்கி, வைத்து அழுத்திக் கொடுத்தாள்.

"உனக்காகத்தானே, ஈஸியா இருக்கணும்னு, நான் உருண்டைகள் போட்டு வச்சிருக்கேன், நீ ஒன்னும் செய்யாமல் அப்படியே வைத்து ப்ரெஸ் பண்ணிக்கொடு" என்று சொல்லியும் சரிவரவில்லை.

பார்த்தேன், பூரிக்கு அழகே அதன் உப்பிய வடிவம்தானே. அதுதானே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சுண்டி இழுக்கிறது ! அதன் பிற‌குதானே உருளைக்கிழங்கு குருமா, சுவை எல்லாம். அந்த வடிவமே இங்கு அடிபட்டுப் போகும்போது?

"பூரி போடும் ஆளை எப்படி மாற்றுவது?" என யோசிக்கும்போதே அவளது மாப்பிள்ளையிடமிருந்து ஃபோன். நல்லவேளை தப்பிச்சேன். அவளும்தான்.

தோழி எப்போதும் பிஸி.  இப்போதுகூட வயல்வேலை விஷயமாக வெளியில் அவரைப் பார்க்க வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

எனவே பள்ளியில் படிக்கும் தோழியின் இளைய மகளிடம் போடச் சொன்னேன்.

சும்மா சொல்லக்கூடாது, அவள் போட்டுக்கொடுத்ததில் அழகழகா குண்டுகுண்டு பூரிகளை சுட்டெடுத்து, ஒரு பெரிய தட்டில் ரோட்டோர கடைகளில் அடுக்கி வைப்பதுபோல் அழகழகாக‌ அடுக்கி வைத்துவிட்டு, "எங்களை நம்பினால் நீங்கள் பட்டினிதான் கிடக்க வேண்டியிருக்கும், அதனால் சாப்பிட்டுவிட்டு எடுத்து மூடி வையுங்க, நானும் அம்மாவும் பிற‌கு வந்து சாப்பிடுகிறோம்" என சொல்லிவிட்டு நானும் தோழியுடன் போய் சேர்ந்துகொண்டேன்.

பிள்ளைகள் சாப்பிட ஆரம்பித்தார்கள். சாப்பிட்டு முடித்து, வெளியில் வந்து, " பூரி சூப்பரா இருந்துச்சு" என சர்டிஃபிகேட் கொடுத்தனர்.

"எல்லாமும் உன் கைவண்ணம், நீ செய்து எதுதான் நல்லாருக்காது ! " எனக்கு நானே மனதளவில் பெருமையுடன் தோளில் தட்டிக்கொண்டேன்.

நானும் தோழியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சாப்பிட உள்ளே வந்தோம். தட்டு நிறைய இருந்த பூரிகள் இப்போது ஒரு சிறிய பாத்திரத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அதிலிருந்து இரண்டு பூரிகள் மட்டும் வெளியே தலைகாட்டிக்கொண்டிருந்ன.

"நாம இருக்கறதையே மறந்து பசங்க காலி பண்ணிட்டாங்களா ! " என சொலிக்கொண்டே தோழி சாப்பிட உட்கார்ந்தார். எனக்கும் ஆச்சரியம்தான் !

தோழிக்காக இரண்டு பூரிகளைத் தட்டில் எடுத்து வைக்கும்போதுதான் கவனித்தேன், பிள்ளைகள் காலி பண்ணிவிட்டதாக நினைத்த, காணாமல் போன‌ அவ்வளவு பூரிகளும் ஒரு சிறிய பாத்திரத்தில் அமுக்கி வைக்கப்பட்டிருப்பதை.

மாப்பிள்ளை சாரைப் பார்த்து கேட்பதாகச் சொன்ன சில‌ கேள்விகளை இப்போது மனதளவில் வாபஸ் வாங்கிக்கொண்டேன்.

Sunday, February 14, 2016

San Francisco !



சென்ற புதன்கிழமையன்று சான் ஃப்ரான்சிஸ்கோ செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே இரண்டொருமுறை போயிருந்தாலும், " Downtown இப்போ எப்படி இருக்கு ? முன்பு இருந்த மாதிரியே இருக்கா ? இல்லை மாற்றம் ஏதேனும் வந்திருக்கா"னு எட்டிப் பார்த்துட்டு வந்தேன்(வந்தோம்) :)

சென்ற வருடம் Golden gate park போய் வந்ததையே இன்னும் பதியாமல் இருக்கும்போது இதையாவது சூட்டோடு சூடாக பதிவாக்கிட முடிவு பண்ணி போட்டாச்சு. என்னவொன்று, வெறும் கட்டடங்களேதான் பதிவில் உள்ளன. நான் பார்த்ததும் அதைத்தானே.

கூடிய சீக்கிரம் இன்னொரு முறையும் போகவேண்டி வரும். முடிந்தால் அப்போது இயற்கையுடன் வருகிறேன். ஏற்கனவே ஒருமுறை பசிபிக் பக்கமாக போனபோது எடுத்த படங்கள் இங்கே உள்ளன.


எங்கும் விண்ணை முட்டும் கட்டிடங்கள். நிமிர்ந்து பார்த்தால் கழுத்துவலி வந்திடும், இல்லாட்டி கழுத்து சுளுக்காவது வந்தே தீரும். அப்படியும் ஒரு சில படங்கள் எடுத்தேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு !

 இங்கே உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.


                    கட்டிடக் கூட்டங்களுக்கிடையில் அழகான புல்வெளியும் கண்ணைக் கவர்ந்தது.

                                      *********************************************

சென்ற ஞாயிறன்று எங்கள் ஊரில் நடந்த Super Bowl 50 கால் பந்தாட்டத்துக்கு (உண்மையில் கைப் பந்தாட்டம்தான்) சான்ஃப்ரான்சிஸ்கோவில் உருவான super bowl city. எங்கும், எதிலும் இதைப்பற்றிய பேச்சாகத்தான் இருந்தது.


நம்ம ஊரில் நடந்த கால் பந்தாட்டத்தைத்தான் நேரில் பார்க்க முடியல, வந்ததே வந்தோம், அப்படியே super bowl city யையாவது நேரில் பார்த்து வரலாம் என போனால், அங்கே பல நாட்கள் கொண்டாட்டம் முடிவுக்கு வந்த நிலையில் எல்லாவற்றையும் அப்புறப்படுத்திக்கொண்டு இருந்தனர்.

நாங்கள் அங்கே நின்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே 50 ல் உள்ள 5 ஐ தனியே பிரித்து எடுத்தனர் :))))

சில நாட்களுக்குமுன் ஆட்டம்பாட்டம், கொண்டாட்டத்துடன் இருந்த  இந்த‌ super bowl city இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது.

                                     ***********************************************
சான் ஃப்ரான்சிஸ்கோ போனால் கட்டாயம் இந்த cable car ல் ஏறிப்பார்க்க வேண்டும் என்பார்கள்.  ஆனால் இதுவரை ஏறியதில்லை. அதில் ஏற ஒரு பெரிய நீண்ட வரிசை நிற்கும் என்பதும் ஒரு காரணம். இயந்திரமயமாக்கப்பட்ட இந்த நாளிலும் manual ஆக operate செய்வது இதன் சிற‌ப்பாம்.                                 

*********************************************                         

Thursday, February 4, 2016

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ____ மிளகாய் அறுவடை !



நீண்ட நாட்களாகவே மிளகாய் அறுவடையைப் பதிவிட நினைத்து, நினைத்து நாட்கள் கடந்துகொண்டே போனதுதான் மிச்சம். இனியும் தாமதம் கூடாதுனு முடிவெடுத்து இன்று செயலில் இறங்கியாச்சு :)

                                                       நிறைய காய்த்துவிட்டன !

                   இப்படித்தான், அழகழகாக அடுக்கி வைத்து படம் பிடித்து வைத்துக்கொண்டேன்.

                      செடியிலேயே பழுக்க ஆரம்பித்ததால் காயாகவே பறிக்க வேண்டியதாயிற்று.
               
                                         ஒரு செடியில் மட்டும் குண்டுகுண்டாக காய்த்தது.

பச்சை மிளகாய்க்கு பதிலாக பழ மிளகாய் வைத்து தேங்காய் சட்னி அரைத்துப் பார்த்தேன், சூப்பராவே இருந்துச்சு.

பழங்களைப் பறித்து, கழுவி, காயவைத்து எடுத்து வைத்திருக்கிறேன். ஏற்கனவே விதைக்கான ஆர்டர் குவிந்துவிட்டதால், மேற்கொண்டு ஆர்டர் பண்ண விரும்புபவர்கள் அடுத்த சீஸன்வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டியதுதான், வேறு வழியில்லை !!  :)

இப்போ செடியெல்லாம் எப்படி இருக்குனு மட்டும் கேட்டுடாதீங்கோ ! போதிய சூரிய வெளிச்சம் இல்லாததாலும், குளிரினாலும் இலைகள் கறுத்து, கொட்டிக்கொண்டுள்ளன. ஆனாலும் காய் மட்டும் காய்த்துக்கொண்டுதான் இருக்கிற‌து.

வீடு மாறும்போது movers ல் ஒருவர்(அமெரிக்க இந்தியர்) மிளகாய் செடிகளைப் பார்த்ததும், "இப்படித்தான் எங்க ஊரிலும்(மெக்ஸிகோ) தோட்டத்தில் இருந்து மிளகாயைப் பறித்து அப்படியே சாப்பிடுவோம். அந்த ஞாபகம் வருது" என்று சொல்லிவிட்டு, "ஒரு செடி குடுங்களேன்", என்றார்.

ஏற்கனவே நான், மாறப்போகும் வீட்டில் சூரிய வெளிச்சம் சரியாக விழாது போலிருக்கே, இந்த செடிகள் மடிந்துவிடுமோ என்ற கவலையில் இருந்தேன். அவர் கேட்டதும் இரண்டு குட்டி குட்டி செடிகளைப் பிடுங்கி தனித்தனியாக இரண்டு குட்டிகுட்டி பிளாஸ்டிக் தொட்டிகளில் நட்டு எடுத்துக்கொடுத்தேன்.

அவரோ "வேண்டாங்க, நான் சும்மா கேட்டேன்" என்றார்.

நான் "நெஜமாத்தான் குடுக்குறேன், எடுத்துக்கோங்க" என்றேன்.

பொருட்களை வீட்டில் வந்து இறக்கிவிட்டு அந்த இரண்டு செடிகளையும் சந்தோஷமாக எடுத்துச் சென்றார்.

அந்த இரண்டு குட்டிச்செடிகளிலும் நிறைய பூக்கள் & பிஞ்சுகள் இருந்தன. இந்நேரம் அவர்கள் ஜம்மென்று வளர்ந்து இருப்பார்கள் :)

Tuesday, January 19, 2016

பாசச் சுவடுகள் !

'இன்று நண்பகல் வரை சூரியன் இருக்கும்'  என்று hourly weather ல் பார்த்து உறுதி செய்துகொண்டு, இன்று ஒரு நாளைக்கு மட்டும் (நம்புங்க, நெஜமாத்தான்) சாப்பிடும்போது சுட வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, கடகடவென காலையிலேயே சமையலை முடித்து, பத்து மணிக்கெல்லாம் பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய பூங்காவுக்கு நடையைக் கட்டினேன்.

ஆமாங்க, எல் நினோ'வின் புண்ணியத்தால் நாங்களும் பல வருடங்களாகக் காணாத மழையை இப்போது விடாமல் கண்டு களிக்கிறோம். எங்கள் ஊரிலும் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிற‌து.

ஆனாலும் பல நாட்களாக சூரியனையேக் காணாமல் கொஞ்சம் கடுப்பாகவும் இருந்தது.  பெரிய பெரிய மரங்களின் அணி வகுப்பால் எங்கள் குடியிருப்பு வளாகம் கும்மிருட்டாகவே இருப்பதால்தான் இன்று பூங்காவுக்கு பயணம்.

பூங்காவில் dogs not allowed except on leash என்ற வாசகங்கள் ஆங்காங்கே தென்பட்டன. மனதினுள் ஒரு தைரியம், 'அப்பாடா' என்றிருந்தது.

ஆனால் பிறகுதான் தெரிந்தது, வாசகங்கள் பெயரளவுக்குத்தான் என்பது.  ஒருசிலர் மட்டும் leash உட‌னும், மற்றவர்கள் leash இல்லாமலும் அழைத்து வந்திருந்தனர்.

நானும் படு ஜாக்கிரதையாக‌ ஒரு மணி நேரத்திற்கு நடந்துவிட்டு, 'கொஞ்சம் குளிர் காய்வோமே' என்ற ஆசையில் அங்குள்ள picnic area இல் இருக்கும் ஒரு மர பெஞ்சில் அமர்ந்து அலைபேசியில் அப்போதைக்கு எடுத்த‌ குளிர்கால‌ புகைப் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கொஞ்சம் போரடிக்கவும், 'சரி கிளம்பலாம்' என நினைக்கும்போதே சாலைக்கு அந்தப் பக்கம் ஒரு பையன் (சுமார் இருபது வயதிருக்கும்) தன் நாயுடன் நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தேன்.  நாய் நல்ல உயரம் & நீளம். லைட் ப்ரௌன் நிறம்.

உடனே எனக்குப் பட்டது அவன் கையில் லீஷ் இல்லை என்பது மட்டுமே.  யாராவாது நாயுடன் வந்தால் அதன் பிடி அவர்களின் கையில் இருக்கிறதா என்றுதான் முதலில் பார்ப்பேன்

''சரி இப்போது போகவேண்டாம், அவன் போன பிறகு போகலாம்', என நினைக்கும்போதே அந்த அரை ஆள் உயர நாய் மட்டும் சாலையைக் கடந்து இந்தப் பக்கம் வந்துவிட்டது.

அவனோ அங்கிருந்தே 'ஸ்நூப்பி ஸ்நூப்பி' என கத்திக்கொண்டிருந்தான். போக்குவரத்து அதிகமாக இருந்ததால் அவனால் சாலையை உடனே கடக்க முடியவில்லை.

எனக்கோ உதறல் எடுத்துவிட்டது.

'கடவுளே, சில நொடிகளுக்கு போக்குவரத்தை நிறுத்தி, அவனை இந்தப் பக்கம் அனுப்பிவிடு' என மனம் தானாக பிரார்த்தணையில் ஈடுப்பட்டது.

அடடா, நமக்கும் நல்ல மனசுதான் போலிருக்கிற‌து :)) இப்படி யார் யாருக்கெல்லாமோ வேண்டிக்கொள்கிறோமே !

கண்ணிமைக்கும் நேரத்தில் நாய் என்னைப் பார்த்துவிட்டது. நான் பயந்துபோய் பார்த்ததை,  அது 'பாசப் பார்வை' என தவறாக நினைத்தோ என்னவோ, என்னை நோக்கி ஒரே ஓட்டம்.

'இன்று மருத்துவரை பார்த்தே ஆக வேண்டும் என்பது தலையெழுத்துபோல, யாரால மாத்த முடியும் ? ' என்றெல்லாம் மனம் குழம்பியது

'ஓடினால் துரத்தும்' என்று கேள்விப்பட்டிருந்ததால் ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தேன்.

இதுவரைக்கும் இல்லாத அனுபவம், என் மேல் ஏறி விளையாடி.....  அதன் முகம் என் கண்ணுக்கு நேரே !

கொஞ்ச தூரம் ஓடுவதும் .... 'அப்பாடா' என நினைக்கும்போதே :((    மீண்டும் ஓடி வந்து ..........( அதுவும் என்னிடம் ???  )   விளையாடுவதுமாக ,    எனக்கு  என்ன‌ செய்யிறதுன்னே புரியல !

ஒரு வழியா அந்தப் பையன் சாலையைக் கடந்து இந்தப் பக்கம் ஓடிவரவும், இதுவும் ஒரு வழியா என்னை ஆளை விட்டது.

"ஸாரி, ஸ்நூப்பி ஒன்னும் பண்ணாது, ஃப்ரெண்ட்லியாதான் இருக்கும்" என சொல்லிக்கொண்டே ஓடி மறைந்தான் அவன்.

பிறகுதான் கவனித்தேன், என் உடை முழுவதும் மண். அவற்றை தட்டிவிட முயன்றபோதுதான் தெரிந்தது, விரல்கள் முழுவதும் உமிழ்நீர் என்பது. முகம் & தலையிலும் ஈரம். அப்போதைக்கு பேப்பர் டவலால் துடைத்துக்கொண்டேன்.

'போதும் வெயில்' என கடுப்பாகி வீடு திரும்பும் வழியில் என் பெண்ணிடம் நடந்ததை சொல்லிக்கொண்டே வந்தேன்.

கடைசியில், " அது நெனச்சிருந்தா ஒரே கடி கடிச்சிருக்கலாம். அதுக்கு ஒருவேள சாப்பாடோ அல்லது பாசமா தடவிக் கொடுக்கவோ இல்ல‌, ஆனாலும் அது ஏன் இவ்வளவு பாசத்தக் காட்டணும் ? அதன் பாசம் அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு " என்றேன்.

பல வருடங்களாக என்னை நாய்க்குட்டி அல்லது பூனைக்குட்டி வாங்கச் சொல்லிக்கொண்டிருக்கும் மகள், இதுதான் சமயமென,  "ammaa, i thingk god is telling u to get a pet by having you experience these things.& then eventually you will start to like them",  என மெஸேஜ் அனுப்பினாள்.

அதனிடமிருந்து தப்பியாச்சு, இப்போ மகளிடமிருந்து தப்பிக்க வேண்டுமே, " வீடு வந்தாச்சு, முதல்ல ஷவர் எடுத்துட்டு, பிறகு பேசுறேன்" என்று எஸ்கேப் ஆனேன்.

Friday, December 4, 2015

மொழினா, கிடைத்துவிட்டாள் !


தூக்கம் தெளிந்துவிட்டாலும் குளிருக்கு இதமாகப் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு' "இன்னும் என்ன தூக்கம் ? " என‌ யார் வந்து கேட்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில் மீண்டும் ஒரு குட்டித்தூக்கம் போடலாம் என நினைக்கும்போதே தொலைபேசி அழைத்தது.

கேட்க ஆளில்லை, ஆனால் அழைக்காமல் இருப்பார்களா ? அழைப்பு தொலைபேசி வழியாக வந்தது.

'ஹ்ம்ம்ம்ம் ? இவ்வளவு காலையில் யாராக இருக்கும் ?' என நினைத்துக்கொண்டே இருக்கையில் ஏதோ ஒரு பெயரைச் சொல்லிமுடித்து, தன்னை எடுக்க ஆளில்லை என்றதும் வாய்ஸ் மெயிலுக்குப் போனது.

"மொழினா, உங்கிட்ட கொஞ்சம் பேசணும், போன எடு, போன எடு" என ஒரு அம்மாவின் குரல் ஒலித்து முடித்தது.

"ஹ்ம்ம்ம்ம் ? மொழினா வந்தால் பேசிக்கட்டும்" என நான் தூக்கம் கலைந்த கடுப்பில் எழுந்து டீ போட போனேன்.

'மரினா' ( Marina )  அவர்களின் உச்சரிப்பினால் 'மொழினா'வாகி இருக்கிறாள் என்பது என் எண்ணம். காலர் ஐடி ல் அப்படித்தான் பதிவாகி இருந்தது. மொழினாவின் பெயரில் காலர் ஐடி வைத்ததிலிருந்து அவள் இவர்களின் பெண் அல்லது பேத்தியாக இருக்க வேண்டும் !

மீண்டும் தொலைபேசி சத்தம் போட்டது. அதே எண்ணிலிருந்து, அதே பெயரில் என்றதும் கொஞ்சம் எரிச்சலுடன் கண்டுகொள்ளவில்லை.

அன்று நண்பகல் மீண்டும், "மொழினா ! மொழினா ! நாங்க உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், ஃபோன எடு" என்று மீண்டும் வாய்ஸ்மெயில் வைத்தார் அந்த அம்மா.

வாய்ஸ்மெயில் முடியும் தருணத்தில் ஒரு ஆண் குரலும் சேர்ந்துகொண்டது. குரல் யாரையோ திட்டிக்கொண்டிருந்தது.

சரி யாரோ, யாரிடமோ பேச வேண்டும்போல் தெரிகிற‌து, நாம் ஏன் அதைபற்றி யோசிக்க வேண்டும் என நினைத்து விட்டுவிட்டேன்.

ஆனாலும் போனை எடுத்து "அப்படி யாரும் இங்கில்லை" என சொல்லியிருக்கலாமோ என நினைக்குமுன்னே ஃபோன்.

'நல்லவேளை, மீண்டும் ஃபோன் செய்தார்களே' என நினைத்து, நல்ல பெண்ணாக‌, போனை எடுத்து "ஹலோ" சொன்னதுதான் தாமதம், "மொழினா மொழினா ! முக்கியமான விஷயத்த நாங்க உங்கிட்ட பேசணும். போன வச்சிடாதே" என அந்த அம்மா கெஞ்சினார்.

அவர் சொல்லும்போதே பின்னாலிருந்து அந்த ஐயா செம திட்டு திட்டினார், வேறு யாரை ? மொழினா'வைத்தான் !

"மொழினா என யாரும் இங்கில்லை, ஸாரி" என சொல்லி போனை வைத்தேன். அந்த அம்மாவும் ஸாரி சொன்னார். எனக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அடுத்தநாள் காலை மீண்டும் அதே எண்ணிலிருந்து போன் & வாய்ஸ்மெயில் + ஐயாவின் திட்டுடன்.

போனை ஸ்பீக்கரில் போட்டிருக்கிறார்கள் என்பது ஐயாவின் திட்டுகளை கேட்க முடிந்ததை வைத்து ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது.

"அய்யா சாமி, ஆள விடுங்க" என நான் கண்டுகொள்ளவில்லை.

"மொழினா சீக்கிரம் லைனுக்கு வந்திடு, இல்லாட்டி ஃபோன் போட்டே என்னை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள்" என மனதளவில் 'மொழினா'வுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன்.

இந்த பிரச்சினை ஒருநாள், ரெண்டுநாள் இல்லை, ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்தது.

ஒருநாள் "இத சால்வ் பண்ண முடியலயா ? இன்னிக்கு நான் எடுக்கிறேன்" என ஆத்துக்காரர் களத்தில் குதித்தார்.

வழக்கம்போல அன்றும் போன் வந்தது. இவர் எடுத்து பொறுமையா எல்லாவற்றையும் விளக்கி, அதற்கு அந்த அம்மா ஸாரி சொல்லி, 'அப்பாடா ஒரு வழியா இனி நிம்மதியா இருக்கலாம்' என நினைக்கும்போதே ...... அவ்வ்வ்வ்வ் ....... மறுபடியும் அவர்களிடமிருந்தே போன்.

இவர் ஆஃபீஸுக்கு போகும் சாக்கில் எஸ்கேப். எனக்கோ செம கடுப்பு. அவர்களாகவே, தானாக நிறுத்தும்வரை இனி எடுக்கவே கூடாது என முடிவெடுத்தேன்.

அம்மா மொழினாவை போனை எடுக்கச் சொல்லுவதும், ஐயா பின்னாலிருந்து திட்டுவதுமாக நிறைய வாய்ஸ் மெயில்கள்.

கடைசியாக ஒரு நாள், என்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு, எடுத்து, " ஸாரி நீங்க அடிக்கடி போன் செய்வது எனக்குத் தொந்தரவா இருக்கு, எண்களை சரி பார்த்துட்டு செய்யுங்க" என்றதும் அம்மா தனது மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்தார். ஐயா வழக்கம்போல திட்டிக்கொண்டிருந்தார்.

மீண்டும் போன். "இப்போதானே சொல்லிட்டு வச்சேன், அதுக்குள்ளேயேவா " என எரிச்சலுடன் அழுகையும் சேர்ந்து வந்தது, ஆனாலும் எடுத்தேன்.

 என்ன ஆச்சரியம் ! அந்த அம்மாதான் சொல்ல ஆரம்பித்தார் !

'மொழினா என நினைத்து என்னைத் தொந்தரவு செய்துவிட்டதாகவும் (இதைத்தானேம்மா இவ்வளவு நாளும் சொல்லிக்கொண்டிருந்தேன்), தனக்கு 'மொழினா'வின் தொலைபேசி எண் கிடைத்துவிட்டதாகவும், இவ்வளவு நாளும் தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கச் சொல்லியும், இப்போதுகூட மதியம் நான் சிறு ஓய்வு எடுக்கும் நேரத்தில் தான் தொந்தரவு செய்துவிட்டதாகவும் சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு, இனி தன்னிடமிருந்து எந்த தொலைபேசி அழைப்பும் வராது' என கையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக பேசிவிட்டு வைத்தார்.

அவர் போனை வைக்கும் சமயம் ஐயாவின் குரல் ........ ஏதோ சொல்ல வருவதுபோல் தெரிந்தது. இவரும் 'ஸாரி' சொல்ல முற்படுகிறாரோ என நினைக்கும்படி இருந்தது குரல். நல்லவேளை, இந்த முறைதான் 'மொழினா'வுக்குத் திட்டு கிடைக்கவில்லை.

"அப்பாஆஆஆடா, ஆள விட்டாங்களே " என்றிருந்தது எனக்கு. என் சந்தோஷம் ஒரு நொடிகூட நீடிக்கவில்லை.

மீண்டும் போன் !! ஐய்ய யயை யையோ,  தாங்க முடியல ! மறுபடியும் ஆரம்பத்திலிருந்தேவா :(((

எது எப்படியோ போகட்டுமென எடுத்து "ஹலோ" சொன்னதும் ........ இவ்வளவு நாளும் பின்னாலிருந்து குரல் கொடுத்த‌ ஐயா இப்போது நேரடியாக லைனுக்கு வந்தார்.

"தொலைபேசி எண்ணை  நாங்கள் தவறாக சேமித்து வைத்துக்கொண்டு சில நாட்களாக உனக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்து விட்டோம், ரொம்ப ரொம்ப‌ ஸாரி" என்றதும் மனம் கணத்துவிட்டது.

ஏன் நமக்கு இவ்வளவு எரிச்சல் ? அவர்களின் வயிற்று வலி, கத்தினார்கள், அடங்கியதும் நிறுத்திவிட்டார்களே" என என் மீதே எனக்குக் கோபம் வந்தது.

இவர்களால் எங்கள் வீட்டின் வாய்ஸ்மெயில் பாக்ஸ் நிரம்பி வழிந்தது.

எல்லாவற்றையும் டெலீட் பண்ணிக்கொண்டே வரும்போது, 'சரி எதற்கும் இருக்கட்டும்' என‌ அவர்களின் ஒரு வாய்ஸ்மெயிலை மட்டும் அப்படியே விட்டுவிட்டேன் !

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
'நலமுடன் இருக்கிறேன்' என்பதற்காகத்தான் இந்தப் பதிவு ! நலன் விசாரித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி :)

இரண்டு மாதங்களாக வீடு தேடும் படலம் (வாடகைக்குதாங்க‌), ஒருவழியா அது முடிந்ததும் இப்போது பொருள்களை எல்லாம் பேக் பண்ணி, வீட்டை சுத்தம் செய்து ஒப்படைத்துவிட்டு ...... இங்குள்ள குப்பைகளை அள்ளிக்கொண்டுபோய் அங்கும் குப்பையாக்கி முடிக்கும்வரை வலைப்பதிவு பக்கம் வருவது கஷ்டம். க்றிஸ்மஸ் சமயத்தில் உங்கள் எல்லோருடைய பக்கங்களுக்கும் வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் ... சித்ரா :)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^