Friday, October 11, 2013

எங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி



ஒரு தடவை இங்குள்ள பப்ளிக் சானலில் மீள்சுழற்சி தோட்டம் பற்றி சொன்னார்கள். அதில் நாம் வீட்டு உபயோகத்திற்காக வாங்கும் பொருள்கள் உள்ள ப்ளாஸ்டிக் டப்பாக்களைத் தூக்கிப் போடாமல் அதை மறுசுழற்சி செய்து எப்படி செடி வளர்க்கலாம் என்று காட்டினார்கள்.

அவர்கள் சொன்ன மாதிரியே நானும் ஒரு பால் கேனை சுத்தம் செய்து, படத்திலுள்ளதுபோல் அடிப்பகுதியை நறுக்கிவிட்டு, மீதமாகும் தண்ணீர் வெளியேற‌ மூடியில் ஒரு துளையிட்டு, டப்பாவில் பாதியளவிற்கு மண் நிரப்பி, தேவையான‌ கொத்துமல்லி விதைகளை இரண்டிரண்டாக உடைத்துத் தூவி விட்டு, அதன்மேல் சிறிது மண் தூவி, தண்ணீர் தெளித்தேன்.


மண்மீது எப்படி உளுந்து தோல் இருக்குன்னுதானே பாக்குறீங்க‌ ! அது வேறொன்னுமில்லீங்க, அவங்களே சொன்னாங்க, செடிகளுக்கு காய்கறி, பழங்கள், தானியங்கள் இவற்றைக் கழுவிய தண்ணீர் & பாஸ்தா வேக வைத்த தண்ணீர் எல்லாம் ரொம்ம்ம்ம்பப் பிடிக்குமாம். அவர்கள் இப்படி சொன்னது எனக்கு ரொம்ம்ம்பவே பிடிச்சு போச்சு.

அதிலிருந்து அரிசி கழுவிய முதல் இரண்டு தண்ணீர் (மூன்றாவது தண்ணீர் சமைக்க எடுத்துக்கொள்வேன்), உளுந்து கழுவிய தண்ணீர் & தோல் இவற்றை மட்டும் செடிகளுக்கு பயன்படுத்துவேன். சிலசமயங்களில் டீத்தூள்கூட போடுவேன்.

மேலும் காய்கறிகள், பழங்கள் நறுக்கும்போது தேவையில்லாதவற்றை குப்பையில் போடாமல் அவற்றை பொடியாக நறுக்கி செடிகளுக்குப் போடலாம் என்றும் சொன்னார்கள். அருமையான யோசனை, இதை செய்ய எனக்கும் விருப்பம்தான். ஆனால் கார்பேஜுக்கு போகவேண்டிய ஈக்கள் எங்கள் தோட்டத்திற்கு படையெடுத்துவிட்டால் என்ன செய்வது என பயந்து விட்டுவிட்டேன்.

மீண்டும் விட்ட இடத்திற்கே வருகிறேன். சில நாட்களில் கொத்துமல்லி விதைகள் முளைத்து வர ஆரம்பித்தன. பார்த்தாலே தெரிகிறதே, எவ்வளவு செழிப்பாக வளர்கிறதென்று !



செடிகளில் உள்ள பூச்சிகளை விரட்ட தண்ணீரில் dish liquid கலந்து ஸ்ப்ரே பண்ணச் சொன்னார்கள். நான்தான் செய்வதில்லை. அதற்கு பதிலாக காமாக்ஷிமா சொன்னமாதிரி ஒருதடவை மட்டும் தண்ணீரில் மஞ்சள் கலந்து அடித்தேன். மேலே படத்திலுள்ள மஞ்சள் நிறத்திற்கு அதுவே காரணம்.

எல்லாம் சரிதான்... இந்த டப்பாவில் செடியை வளர்ப்பதற்குள் நான் பட்டபாடு... ஐயையையையயோ. இந்த ப்ளாஸ்டிக் கேனைச் சுற்றி நான்கு பக்கமும் மற்ற தொட்டிகளை வைத்து அரண் அமைத்தால்தான் நிற்கும்.

காலையிலும், நண்பகலிலும் தொட்டிகளை வெயில் அடிக்கும் பக்கமாக நகர்த்தி வைப்பேன். அந்த சமயத்தில் மறந்துபோய் இந்த பால்கேன் பக்கத்திலுள்ள தொட்டியை எடுத்துவிட்டால் அவ்வளவுதான், உடனே கீழே சாய்ந்துவிடும்.

பெரிய தோட்டமாக இருந்து, எந்நேரமும் வெயிலும் அடித்தால் தாராளமாக இந்த முறையில் செடிகள் வளர்ப்பேன். முக்கியமாக‌ ஊருக்குப்போய் தோட்டம் போட்டால் மேலே சொன்ன எல்லாவற்றையும் கடைபிடிக்க முடிவெடுத்துள்ளேன்.

விதை போட்டு நாற்று வளர்க்கக்கூட இந்த டப்பாக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கொத்துமல்லி மட்டுமல்லாமல் உடனே பயன்பாட்டுக்குத் தயாராகும் வெந்தயக் கீரையையும் இதில் வளர்க்கலாம்.




நான் சாதாரணமாக இங்கு தொட்டியில் வளர்க்கும் கொத்துமல்லி செடியைப் பார்க்க இங்கே  'க்ளிக்'கவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 தோட்ட உபயோகத்திற்கு :

மண், உரம் இடுவது மட்டும் போதாது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது செடியைச் சுற்றிலும் உள்ள மண்ணைக் கிளறிவிடுவது நல்லது. அப்போதுதான் செடி நன்கு வேர்பிடித்து செழிப்பாக வளரும்.

தோட்டத்தில் வேண்டாத புல், பூண்டுகள் இருந்தால் கொஞ்சம் வெந்நீரில் சமையல் உப்பு கலந்து அவற்றின் வேர் பகுதியில் படுமாறு ஸ்ப்ரே செய்தால் இரண்டொரு நாளில் அவை காய்ந்துவிடும்.

கேட்காத கடன் மட்டுமில்லீங்க, பார்க்காத பயிரும்கூட பாழாகிவிடும். அதனால் முடிந்தளவுக்கு காலையில் எழுந்ததும் தோட்டத்தை பார்வையிடுவது நல்லது.

22 comments:

  1. வாவ்! அருமை சித்ராக்கா! :) தக்காளிக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் இருப்பதுபோல கொ.மல்லிக்கும் எனக்கும் கூட ஏதோ பூர்வ ஜன்ம பகை இருக்கு என சந்தேகம், அதனால் விதை போட முயற்சிக்கவே இல்லை! ஹிஹிஹி...

    இந்த பால்கேக் ஐடியா அறிமுகம்தான், ஆனா சப்போர்ட் இல்லாம நிக்காது என்பதை யோசிக்கலை, மேலும் இன்னும் 2-3 தொட்டிகள் காலியாவே வைச்சிருக்கேன். ஆரம்பநிலைத் தோட்டத்துக்கு பயனுள்ள தகவல்!

    டீத்தூள் நானும் செடிகளுக்குதான் போடுவேன். //காய்கறி, பழங்கள், தானியங்கள் இவற்றைக் கழுவிய தண்ணீர் & பாஸ்தா வேக வைத்த தண்ணீர் எல்லாம் ரொம்ம்ம்ம்பப் பிடிக்குமாம்.// இது பயனுள்ள புது டிப்ஸ்! எல்லாம் சிங்க்-ல பைப் தண்ணில கழுவிச் சமைச்சே பழகிருச்சே..கஷ்டப்பட்டு டிரை பண்ணனும் இந்த டிப்ஸை! :)

    //கார்பேஜுக்கு போகவேண்டிய ஈக்கள் எங்கள் தோட்டத்திற்கு படையெடுத்துவிட்டால் என்ன செய்வது என பயந்து // குட் பாயின்ட்! :) சும்மாவே எங்கூட்டுல எறும்புக பூந்து வெளாடுது. அதனால நானும் இந்த ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை! ;)

    என்ஸாய் யுவர் கார்டன்! நான் சாதா-கொ.மல்லிச் செடியைப் பார்க்கப் போகிறென். அங்கே சந்திப்போம், நன்றி, வணக்கம்! ;)

    ReplyDelete
    Replies
    1. மகி,

      கொத்துமல்லி விதையை இரண்டாக்கி போட்டால்தான் முளைக்கும். காலியான பாட்ல ட்ரை பண்ணுங்க.தக்காளி மார்க்கெட்ல வாங்கிட்டு வந்து வச்சி பூ வந்திடும். ஆனால் காய் காய்ப்பதற்குள் இலையெல்லாம் வெள்ளையும் சிவப்புமான எறும்பு மாதிரி ஒன்னுவந்து செடியே காஞ்சிபோயிடும்.

      இந்த தடவ சமைக்கும்போது சும்மா தக்காளி துண்டை மண்ணில் போட்டேன். நான் நினைக்கவேயில்லை அது முளைக்கும்னு.இரண்டு செடிகளில் காய் வந்திருக்கு.தொட்டி காலியா இருக்கறதால இதையும் ட்ரை பண்ணலாமே.இன்னமும் குட்டிகுட்டி செடிகள் வந்துட்டேதான் இருக்கு.

      எங்க வீட்ல 'ரோலிபோலி'க்கு உப்பு தூவிவிட்டேன்.இப்போ ஒருத்தரும் எட்டிப் பார்ப்பதில்லை.எறும்புக்கும் ட்ரை பண்ணுங்க.ம் ம் எவ்ளோதான் ட்ரை பண்றதுங்கிறீங்களா, அதுவும் சரிதான்.

      Delete
  2. வளர வளர... நாம் தினம் தினம் பார்த்து... அந்த சந்தோசமே தனி ...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க,வீட்டிலேயே வளர்க்கும்போது ஒவ்வொரு துளிர் வரும்போதும் ஒரு மகிழ்ச்சி.

      Delete
  3. கலக்குங்க. தாவங்களும் செல்லப்பிராணிகள் போலதான். ரசிக்கலாம்.

    //கார்பேஜுக்கு போகவேண்டிய ஈக்கள்// அப்படி ஆவதில்லை. குவியலாகப் போட்டால் அழுகி ஈ வரும். வரவலாகப் போட்டால் அது அழுக ஆரம்பிக்குமுன்பே மண்புழுக்களுக்குத் தீனியாகிவிடும். பயமாக இருந்தால், சற்று மேல் மண்ணை நீக்கிவிட்டு குப்பையைப் போட்டு மீண்டும் மூடிவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, அடிக்கடி செடியைத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

      'மண்புழுக்களுக்குத் தீனியாகிவிடும்'_______ இது அதைவிட பயமா இருக்கே. புழு என்றாலே ஓட்டம் பிடித்துவிடுவேன்.

      தரையாக இருந்தால் நீங்க சொன்னமாதிரி போட்டுவிடலாம். சின்னசின்ன தொட்டிகள் எனும்போது மண்ணைக் கிண்டும்போதே வேர்தான் தெரிகிறது. இப்போதைக்கு வெங்காயத்தோல் மட்டும் போடுகிறேன்.

      நல்லநல்ல யோசனைகள் சொல்லியிருக்கீங்க.தரையில் வளர்ப்பதாக இருந்தால் உங்கள் யோசனைதான் முதலில் வரும்.

      Delete
  4. கொத்தமல்லி விதையை உடைச்சு போடணும் - இப்பத்தான் இது தெரியும். தோட்டம் போடணும்னு ரொம்ப ஆசை. இருப்பது அபார்ட்மெண்ட். எங்க போடறது? ஆனா தும்கூர்ல இரண்டு வருடம் இருந்தோம். ஆசைதீர எல்லாச் செடிகளும் வளர்த்து, மறுபடி இங்கு வரும்போது அங்கேயே விட்டுவிட்டு வந்துட்டேன்.
    அங்கேயும் போய் உங்க கொ. மல்லி செடியை பார்த்துட்டேன். செடிகள் வளரும் அழகைப் பார்ப்பதே ஒரு அழகுதான்!

    ReplyDelete
    Replies
    1. சின்னவயசுல விதை முளைத்தல் பற்றி படித்தபோது சக தோழி சொன்னது.அப்போது இதை நம்பமுடிய‌வில்லை.இங்கு வந்துதான் நம்பும்படி ஆகியிருக்கிறது.

      'ஆசைதீர எல்லாச் செடிகளும் வளர்த்து, மறுபடி இங்கு வரும்போது அங்கேயே விட்டுவிட்டு வந்துட்டேன்'__________ இதுதாங்க எனக்கும் பிரச்சினை.இரண்டு தடவை இப்படி நடந்தது.அதனால சும்மா குட்டிகுட்டியா சில தொட்டிகள் மட்டும் வச்சிருக்கேன்.பூச்செடி எதுவும் இப்போது இல்லை.

      இங்கு கொத்துமல்லியை கடையில் வாங்கினால் ஒரு வாசமும் வராது. முக்கியமாக ரசத்திற்கு போடுவதற்குத்தான் வளர்ப்பேன்.செடி வளரும் அழகை ரஸிப்பதும் ஒரு சுகம்தான்.

      Delete
  5. கொத்தமல்லி விதையை எப்படி இரண்டாக உடைத்தீர்கள் அதை சொல்லுங்கள்.?ஒரு இனுக்கு பறித்துக் கொள்ளட்டுமா ரசத்திற்குத் தான்.
    2011 இல் நீங்கள் வளர்த்த கொத்தமல்லியையும் பார்த்து விட்டேன். மிகவும் அருமையான வளர்ப்பு என்பது பார்த்தவுடனேயே புரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. 'கொத்தமல்லி விதையை எப்படி இரண்டாக உடைத்தீர்கள் அதை சொல்லுங்கள்' _______ இந்த ரகசியத்தை சொல்லிவிட்டால் நீங்க ஃப்ரீயா பயனடைஞ்சிடுவீங்களே.

      அதனால 'செக்' எழுதி மெயில்ல அனுப்புங்க.நானும் "சும்மா ஸ்பூன் அளவில் என்றால் கையாலேயே (நகத்தைப் பயன்படுத்தி) உடைச்சுக்க வேண்டியதுதான். தரையில், கொஞ்சம் அதிகமாக போடுவதாக இருந்தால் பூரி கட்டையால் தேய்த்து போடலாம்"னு பதில் மெயில் அனுப்புகிறேன்.

      'உங்களுக்கில்லாததா! நீங்க தொட்டியோடகூட எடுத்துட்டு போயிடுங்க, நான் ஒன்றுமே சொல்லமாட்டேன்.ஏற்கனவே 'ரோஜா'வுல நீங்க மிரட்டியதை இன்னமும் மறக்க முடியாமல் பயந்துபோனதால் வந்த பதில்தான் இது.

      Delete

  6. கிராமங்களில் கொத்துமல்லி விதைகளை தரையில் பரப்பி செருப்பால் மென்மையாக தேய்த்தால் இரண்டாக விதைப்பதற்கு ஏற்றவாறு பிளந்துவிடும் ..!

    செருப்பால் விதைக்கும் முன் தேய்ப்பதை சடங்காக சொல்கிறார்கள்..

    சீக்கிரமாக முளைக்குமாம் ..!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்லும் விஷயத்தை நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் முயற்சித்ததில்லை. நிறைய விளைவிக்கும்போது நீங்கள் சொல்வதைத்தான் பயன்படுத்திப்பார்க்க வேண்டும். கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க.

      Delete
  7. உங்களின் இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்வை இடவும்.
    http://blogintamil.blogspot.in/2014/03/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு வேலைகளுக்கிடையிலும் அறிமுகமானதை தெரியப்படுத்தியதற்கு நன்றிங்க ராஜி. இரண்டாவது முறையாகவும் என்னுடைய வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்ததற்கு மேலும் நன்றி பல. இதோ வருகிறேன்.

      Delete
  8. http://blogintamil.blogspot.co.uk/2014/05/blog-post.html

    உங்களுடைய இந்த பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. இதோ வருகிறேன் ஏஞ்சலின். அறிமுகப்படுத்திற்கும், சிரமம் பாராது வந்து தெரியப்படுத்தியதற்கும் நன்றிங்க‌.

      Delete
  9. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் பதிவை சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_8.html?showComment=1399504745644#c2740972411937371345

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி ரூபன். தளத்தைப் பார்வையிட்டு கருத்திட்டு வந்துள்ளேன். மீண்டும் நன்றி.

      Delete
  10. தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
    http://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_27.html

    ReplyDelete
  11. வரலட்சுமி,

    வாங்க, புதுவரவு :)

    முயற்சி செய்து பலனடைய வாழ்த்துக்கள் !

    ReplyDelete