Friday, October 25, 2013

தீபாவளி ஸ்பெஷல் !!.........(தொடர்ச்சி)தீபாவளி ஸ்பெஷலாக சோமாஸ் கொண்டு வந்திருக்கேன், எப்படி இருக்குன்னு (சாப்பிட்டு பார்த்துதான்) சொல்லுங்க !

#################################################################################

இரவு தீபாவளி வரும்நாளை நாங்கள் 'இடிச்சு பொடச்சு' போடும் நாள் என்போம். ஒருவேளை அந்த நாட்களில் நெல், அரிசி இவற்றை இடித்தும் புடைத்தும் செய்ததால் இந்தப் பெயர் வந்திருக்க வேண்டும்.

அன்று காலையே அடுத்த நாள் இட்லிக்கான அரிசியும் உளுந்தும் ஊற வைத்துவிடுவார்கள். ஏதோ மாதக்கணக்கில் வைத்து சாப்பிடுவதற்கு அரைப்பதுபோல் பெரிய பெரிய பாத்திரங்களில் அவை ஊறிக்கொண்டிருக்கும்.

நண்பகலுக்கே மாவை அரைக்க ஆரம்பித்துவிடுவார்கள். மின்சாரம் போய்விட்டால் அவ்வளவையும் யார் கையால் ஆட்டி எடுப்பது? எனவே மதியத்திலிருந்து மாலைவரை கிரண்டர் ஓடும் சத்தம்...அப்பப்பா, எப்போது நிற்கும் எனத் தோன்றும்.

வீட்டிலுள்ள ஆண்களில் யாராவது போய் 'நான்வெஜ்' எடுத்து வருவார்கள். ஆடு, மீன் என அது அவரவர் வசதியைப் பொறுத்தது. எங்கம்மாவுக்கு இரவுவரை அதை சமைக்கவே நேரம் சரியாக இருக்கும்.

அன்று வீட்டிலுள்ள எல்லோரும் வழியவழிய தலையில் நல்லெண்ணெய் வைத்து தலை குளித்து முடிப்பர்.

புது துணி எடுத்திருந்தால் அது சரியாக இருக்கிறதா என போட்டுபோட்டுப் பார்த்து கடைசியில் அது பாதி பழசாகியிருக்கும்.

நாங்கள் எங்கள் பங்குக்கு அப்பா வாங்கிவந்த பட்டாசுகளை எல்லாம் மெத்தைக்கு எடுத்துக் கொண்டுபோய் காயவைக்கிறோம் பேர்வழின்னு அந்த வெயிலில் வாடி வதங்கிக் கொண்டிருப்போம். இவ்வளவும் காயவைக்கும் நான் ஒரு பட்டாசாவது வெடிக்க வேண்டுமே ....ம்ஹூம்...தொடவே மாட்டேன். அவ்வளவு பயம். பாம்பு மாத்திரை, மத்தாப்பூ பெட்டி, கம்பி, பென்சில் இவைதான் நான் கொளுத்துவது.

பட்டாசு வெடிச் சத்தத்தாலோ அல்லது பட்டாசால் வரும் புகையாலோ தெரியாது, தீபாவளி முடிந்து கொஞ்ச நாட்களுக்கு எங்கள் ஊரில் கொசுத் தொல்லையே இருக்காது.

இப்படி ஒவ்வொரு வேலையாக முடிந்துவர இரவு ஆகிவிடும். பிறகு சாமிக்குப் படைத்துவிட்டு சாப்பிடுபவர்கள் சாப்பிடவும், பட்டாசு வெடிப்பவர்கள் பட்டாசு வெடிக்க வீட்டிற்கு வெளியிலும் வந்துவிடுவார்கள்.

அன்றிரவு தூக்கமே வராது. ஒருவழியாக தூங்க ஆரம்பிக்கும்போது மீண்டும் கிரைண்டர் ஓடும் சத்தம் ஆரம்பித்துவிடும்.

உளுந்துவடை, கடலைப்பருப்பு வடை, சீயம், விதவிதமான‌ பஜ்ஜி, கேசரி என எல்லாமும் தயாராகிக்கொண்டிருக்கும். அம்மாவைப் பார்த்தாலே பாவமாக இருக்கும். எதுக்கு இவ்வளவு செய்றாங்கன்னு தோனும். கொஞ்சம் வளர்ந்த பிறகு அம்மாவுக்கு நிறைய உதவிகள் செய்வோம்.

மீண்டும் அதிகாலையில் எல்லோரும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பார்கள். அப்பா கடையிலிருந்து வாங்கி வந்திருக்கும் ஸ்வீட்ஸுடன், வீட்டில் செய்த பலகாரங்கள், பட்டாசு, புது துணி (எடுத்திருந்தால்) என எல்லாவற்றையும் சாமிக்கு முன்னால் வைத்து தீபாராதனை செய்யப்படும்.

சாமி அறையிலேயே கம்பி மத்தாப்பூ, தரை சக்கரம், பென்சில் என சிலவற்றை கொளுத்துவோம். பிறகு புதுதுணி போட்டுக்கொண்டு ஒரே ஓட்டமாக வெளியில் வந்து பட்டாசுகள் கொளுத்தி மகிழ்வார்கள்.

செய்த பலகாரங்களை பாத்திரங்களில் போட்டு எல்லா வீடுகளுக்கும் கொடுப்பார்கள். அவர்களின் வீடுகளிலிருந்து எங்கள் வீட்டுக்கும் வரும். எதற்காக இவ்வளவையும் செய்து எல்லோருக்கும் கொடுத்து, அவர்களும் இவர்களுக்கு கொடுத்து...... எல்லாம் ஒரு உறவுப்பாலம்தான்.

சோர்வடையும்வரை ஆட்டம்தான். எல்லா உறவுகளும் பக்கத்திலேயே இருப்பதால் இங்கும் அங்குமாக ஓடிஓடி வந்து.....ஜாலியாக இருக்கும்.

அன்று மதியம் சமையல் கிடையாது. அவரவரும் பிடித்தமானவற்றை எடுத்து சாப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அம்மா பாடுதான் கொஞ்சம் கஷ்டம். அப்பாவுக்கு இது பிடிக்காது. டீ, காபி என எப்படியோ ஓட்டிவிடுவார்கள்.

சென்ற பதிவில் நோன்பு, நோன்பு சட்டி என்றும் சொல்லியிருந்தேனே, அது எப்படி செய்வார்கள் என்று பார்ப்போமே !

சில சமயங்களில் தீபாவளி அன்று அமாவாசை வரும். இல்லையென்றால் அதற்கும் அடுத்த நாள் வரும். அந்த அமாவாசை வரும் நாளன்றுதான் கேதார கௌரி விரதம் இருப்பார்கள்.

நோன்புக்கு விரதம் இருப்பவர்கள் அன்று காலையில் இருந்தே எச்சில்கூட விழுங்காமல் இருப்பார்கள். திருமணமாகாத பெண்கள் இந்த விரதம் இருந்தால் நல்லது என்பார்கள்.

தினையை ஊறவைத்து உரலில் இடித்து, மாவாக்கி (இதற்கு ஏழு தோல் இருக்கும் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன், அவ்வளவு எளிதில் மாவாகாது) அதில் வெல்ல பாகு ஊற்றி கிண்டி அதிரசம் செய்வதற்காக  எடுத்து வைத்திருப்பார்கள். 'எப்போதடா படைச்சு முடிப்பாங்க, அந்த மாவை ஒருகை பார்த்துவிடலாம்' என பிள்ளைகள் எதிர்பார்த்திருப்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும் அந்த மாவு.

இப்போது தினையை பார்ப்பதே அரிது. அதனால் பச்சரிசியிலேயே அதிரசம் செய்துவிடுகிறார்கள். செய்வதற்கும் எளிது.

நோன்புக்கு தேவையான சாமான்கள் எல்லாம் வாங்கிவந்து ஒரு புது சட்டியில் போட்டு வைத்திருப்பார்கள். நோன்புக்கயிறு, விலவ இலை போன்றவை அதில் முக்கியமானவை.

மாலையானதும் ஒருபக்கம் சமையலும், இன்னொரு பக்கம் அதிரசம் செய்வதும் நடக்கும். அவற்றை சாமி அறையில் கொண்டுவந்து வைத்து படைப்பாங்க. விரதம் இருப்பவர் புதுதுணி அணிந்துகொண்டு, வில்வ இலைகளை கையில் வைத்துக்கொண்டு தன்னைத்தானே ஒன்பது சுற்றுகள் சுற்றிக்கொண்டு, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு இலை என நோன்பு சட்டியில் போட்டுவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டுதான் சாப்பிடுவார்கள். இன்று மீண்டும் பட்டாசுகள் கொளுத்தப்படும்.

படைத்ததும் எல்லோரும் நோன்புக்கயிறை கையில் கட்டிக்கொள்வார்கள். அதைக் கட்டும் விதமே வித்தியாசமாக இருக்கும். அம்மா வீட்டிலிருந்து பெண்ணுக்கு நோன்புக்கயிறும் அதிரசமும் அனுப்பி வைகப்படும்.

இந்த நோன்பு செய்முறை ஒவ்வொரு குடும்பத்திற்கும் இடையே வேறுபடும். நான் சொன்னது எங்க அம்மா வீட்டில் செய்வது.அதேபோல் வெளியூரில் உள்ள உறவினர் வீடுகளில் வேறு மாதிரியாக கடைபிடிப்பார்கள்.

சில வீடுகளில் "எண்ணி வைத்து செய்வது" வழக்கம். அதாவது சமையலில் சேர்க்கப்படும் காய்கறிகளிலிருந்து அதிரசம், நோன்புக்கயிறு என எல்லாமும் 21 எண்ணிக்கை வருமாறு செய்வார்கள். சிலர் நோன்பு சட்டியை  கோயிலுக்கு எடுத்துச்சென்று படைத்து எடுத்துவருவர்.

இப்போது உள்ளதுபோல் அப்போதெல்லாம் காரம் & ஸ்வீட்ஸ் எல்லாம் தீபாவளிக்கு முன்னரே செய்து வைத்துவிட மாட்டார்கள். தீபாவளி முடிந்த பிறகுதான் முறுக்கு மாவே தயாராகும்.

தீபாவளிப் பலகாரங்களில் முறுக்கும் அதிரசமும் கட்டாயம் உண்டு. மேற்கொண்டு எல்லடை, சோமாஸ் என எல்லாம் அவரவர் விருப்பம்போல்,  வசதிக்கேற்றார்போல் செய்யப்படும்.

தீபாவளி முடிந்த பிறகு ஓரிரு மாதங்கள்வரை பேருந்தில் பயணம் மேற்கொள்வோரில் பாதிபேருக்கும்மேல் உறவினர் வீடுகளுக்கு பலகாரங்களுடன் பயணம் செய்ப‌வர்களாகத்தான் இருப்பார்கள்.....(தொடரும்)

[இந்த ஊரில் நான் கொண்டாடிய நகைச்சுவையான‌ முதல் தீபாவளி அடுத்த தீபாவளி ஸ்பெஷலில்]

10 comments:

 1. நல்ல சுவையான பதிவுடன் சுவையான சோமாஸ்! :) இரண்டுமே நல்லா இருக்கு சித்ராக்கா! தொடருங்க.

  எங்க வீட்டில் முறுக்கு செய்வோம்..அது போக ஏதாவதொரு இனிப்பு, மீதி எல்லாம் கடையில வாங்குவது, அக்கா ஆஃபீஸில் இருந்து வரும் ஸ்வீட் பாக்ஸஸ் என போய்விடும். உங்க அளவுக்கு எலாபரேட் பண்ணி பகுதி பகுதியாக எழுதுமளவு நினைவுகள் இல்லை. ;)

  ReplyDelete
  Replies
  1. மகி,

   காதை இப்படி கொடுங்கோ, சோமாஸ் செப்டம்பரில் செய்தது என்ற ரகசியத்தை யாருக்கும் கேட்காமல் சொல்லுறேன்.

   "எலாபரேட் பண்ணி பகுதி பகுதியாக எழுதுமளவு நினைவுகள் இல்லை"____‍‍‍ அம்மாவுடன் இருந்த அந்த நினைவுகள் பிடித்தமானதாக இருப்பதால் அவற்றை மறக்க முடியவில்லை. இடையில் வந்த எதுவாலும் அவற்றை கலைக்கவும் முடியவில்லை.

   அக்கா இருக்காங்களா !! கேட்கவே சந்தோஷமா இருக்கு மகி.

   Delete
  2. //அக்கா இருக்காங்களா !!// அக்காக்கள் இருக்காங்க சித்ராக்கா! நான் 3வது & வீட்டில் கடைக்குட்டியாக்கும்! :)

   ஊரறிய ரகசியத்த ஒடச்சுப்புட்டீங்க..இனியும் யாரும் சோமாஸை சாப்பிட்டுப்பார்ப்பாத்து கருத்து சொல்வாங்களா? ஹாஅஹாஹா!

   மனதில் உறைந்த சில நினைவுகள் காலகாலமானாலும் மறக்காது. அந்த நினைவுகளை அசை போடும்போது அந்தக் காலத்துக்கே போய்விட்ட மாதிரி இருக்கும். எனக்கும் கூட எங்க பழைய வீடு, மழைத்தூறலுடன் தீபாவளி, ரோட்டில் வைக்கும் பட்டாசு..அதற்கு சத்தம் போடும் எங்க பக்கத்து வீட்டுப் பெரியம்மா..இப்படி பல நினைவுகள் அலைமோதத்தான் செய்கின்றன. :)

   Delete
  3. "நான் 3வது & வீட்டில் கடைக்குட்டியாக்கும்!"_________ மகி, 3 ஐ எடுத்துட்டு 4 போட்டால் (பெண்களில்) அது எனக்கும் பொருந்தும். பிறந்ததென்னவோ வெறுப்பின் உச்சம், ஆனால் வளர்ந்ததென்னவோ இளவரசி மாதிரிதான்.

   ஏதாவது கிறுக்குத்தனம் செஞ்சு மாட்டிக்கிறேன். அடுத்த பதிவுல போடுவதற்கு நெஜமாவே புதுசா முறுக்கு செய்ய ரெடியாயிட்ருக்கேன்.

   "இப்படி பல நினைவுகள் அலைமோதத்தான் செய்கின்றன" ________ சீக்கிரமே எழுதுங்க மகி, கோவை ஸ்பெஷல் எப்படி இருக்கும்னு நாங்களும் பார்க்கிறோமே !!

   Delete
 2. வீட்டில் முறுக்கும் அதிரசமும் இன்னும் இரண்டு நாட்களில் தயாராகி விடும்... இன்றைக்கு வீட்டில் பலகாரங்கள் செய்வது குறைந்து விட்டது... ஆனால் அந்த சந்தோசமே தனி... அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. "வீட்டில் முறுக்கும் அதிரசமும் இன்னும் இரண்டு நாட்களில் தயாராகி விடும்"__________ தயாரானதும் ஒருகை பார்த்திடலாம்னு தயாராகிவிட்டது தெரியுது. வீட்ல உள்ள குட்டீஸுகும் கொஞ்சம் மீதி வைங்க. வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

   Delete
 3. சூப்பர்! சூப்பர்! சித்ரா... தொடருங்க. புதுசு புதுசா இருக்கு எல்லாம். படிக்க ஆசையா இருக்கு.
  தீபாவளி முடிந்து கொஞ்ச நாட்களுக்கு எங்கள் ஊரில் கொசுத் தொல்லையே இருக்காது.// அவ்வ்! இப்பிடில்லாம் கூட இருக்கா!!
  தினை மாவுல அதிரசம்... நினைக்கவே வாயூறுதே!!

  ReplyDelete
  Replies

  1. நம்ம கொசுக்கள் தீபாவளிக்கே வேண்டிப்பாங்களாம், 'தீபத்தில் வந்து விழுந்திடறோம்'னு. கார்த்திகை தீபம் முடிந்ததும் இப்படித்தான் கொஞ்ச நாட்களுக்கு காணாமப் போயிடுவாங்க.விரதம் இருந்து வேண்டுதல் நிறைவேறும்வரை யாரையும் தொந்திரவு செய்ய மாட்டாங்கபோல‌.

   "தினை மாவுல அதிரசம்... நினைக்கவே வாயூறுதே"______ ஹும்...இப்போது எனக்கும்தான். அப்போல்லாம் அதிரச மாவு மட்டுமே சாப்பிடுவேன், அதிரசத்தை தொடவேமாட்டேன். இங்கு வந்து நானே செய்ய ஆரம்பித்த பிறகுதான் சர்க்கரை பொங்கல், அதிரசம் போன்ற இவையெல்லாம் சாப்பிடுகிறேன். இதுல 'இட்லி'யையும் சேர்த்துக்கோங்க‌.

   விரும்பிப் படித்ததற்கு நன்றிங்க.

   Delete
 4. தீபாவளி என்றதுமே மனதில் தோன்றுவது, பலகாரமும், பட்டாசும் தான். அதைப் பற்றி மிக அழகாக எடுத்து சொல்லி விட்டீர்கள். எனக்கும் என் சிறு வயது நினைவகள் வந்து மோதுகின்றன.
  உங்கள் ஸோமாசிற்கு நன்றி.சித்ரா.

  ReplyDelete
  Replies
  1. சிறு வயது நினைவுகள் அலைமோதும்போதே லபக்குனு பிடிச்சு பதிவாக்கிடுங்க. கண்டிப்பாக அது நகைச்சுவையுடன்தான் இருக்கும். நாங்களும் விரும்பிப் படிப்போம். சோமாஸை சுவைத்ததற்கும்,வருகைக்கும் நன்றிங்க.

   Delete