Thursday, June 25, 2015

எதிர்பாராத உபசரிப்பு !!

காயத்ரி ஆசிரியை வேலையில் சேர்ந்த முதல் நாள். புது இடம், புதுசூழல். நேரம் 'போகமாட்டேன்' என அடம் பிடித்தது.

எப்படியோ ஒரு வழியாக நண்பகல் சாப்பாட்டு வேளை வந்தது. பெண்கள் எல்லோரும் ஒரு அறையில் சாப்பிடுவதற்காக வந்தனர். அங்கு பெண் ஆசிரியைகள் மட்டுமே ஒரு பத்து பேர் இருக்கலாம்.

எல்லோரும் ஒன்றுபோல், 'எங்க சாப்பாட்ட டேஸ்ட் பண்ணி பாருங்க, இல்லைன்னா ஹோட்டல்ல வாங்கி வரச் சொல்கிறோம்" என்றனர்.

"இருக்கு, சாப்பாடு கொண்டு வந்திருக்கேன் " என்றாள் காயத்ரி.

நல்லவேளை, 'வேண்டாம்' என்று சொல்லியும் கேட்காமல் அம்மா டப்பாவில் சோற்றைத் திணித்து வைத்திருந்தார்.

"உங்க பேரென்ன, எங்கிருந்து வர்றீங்க, இதுதான் முதல் போஸ்டிங்கா,  ரொம்ப தூரம்போல் தெரியுது, இங்கேயே தங்கிப்பீங்களா அல்லது தினமும் வீட்டிலிருது வருவீங்களா" என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்கவும், புது மாணவியைப் போல் எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே திடுமென அங்கே வந்தார் ஒருவர். தன் வயதுக்கும், சுறுசுறுப்புக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லாமல் இருந்தார் அவர்.

சிரித்துக்கொண்டே எல்லோரிடமும் கையை நீட்டினார். பாதி சாப்பிட்ட நிலையில் எல்லோருமே சிறிது உணவை அவர் உள்ளங்கையில் வைத்தனர். வாயில் போட்டுக்கொண்டார்.

பதிலுக்கு அவர் கொண்டு வந்திருந்த கேரியரைத் திறந்து எல்லோரையும் அதிலிருந்து எடுத்துக்கொள்ள சொன்னார்.

ஆனால் காயு இரண்டுக்குமே 'மாட்டேன்' என மறுத்துவிட்டாள்.

புதியவர்தானே, என்னைப்பற்றி அவருக்குத் தெரியாது, கொஞ்சம் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பஞ்சாய் பறந்துவிட்டார்.

"யாரிவர் ?" என்றாள் காயத்ரி பொதுவாக.

"சோஷியலாமாம் காட்டிக்கிறார்" என்று மைண்ட் வாய்ஸில் பேசினார் அருகிலிருந்த ஒருவர்.

இவர்களில் யாரைத் தன் நெருங்கிய தோழியாக்கிக்கொள்வது என இவ்வளவு நேரமும் கணக்குப் பண்ணிக்கொண்டிருந்த காயத்ரிக்கு 'ஹையா' என எகிறிக் குதிக்க வேண்டும்போல் இருந்தது.

பின்னே தானாக தன்னைப் போலவே ஒருவர் வந்து மாட்டினால் ?

சாப்பிட்டு முடித்து அனைவரும் வெளியில் வந்தனர். அவர்கள் எல்லோருக்கும் இவளது பெயர் தெரிந்துவிட்டது. ஆனால் இவளுக்கு அவர்களின் பெயர் ? இனிதான் கேட்க வேண்டும்.

முதலில் தன் தோழியாக நினைத்த பெண்ணிடம் "பெயரென்ன ?" என்றாள் காயத்ரி.

அலர்மேல்வல்லி" என்றாள் அப்பெண்.

'அலமு'ன்னு கூப்பிடலாமா ? " கேட்டாள் காயத்ரி.

"தாராளமாக, நான்கூட உங்களை 'காயு'ன்னு கூப்பிடலாமா" என்றாள் அலமு .... அதாங்க நம்ம அலர்மேல்வல்லி.

இருவரும் 'காயு'வாகவும் 'அலமு'வாகவும் சுருங்கி ஸாரி நெருங்கிப் போனார்கள்.

இப்போது கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, " உள்ளே ஒருவர் வந்தாரே, அவர் யார் ? என்றாள் காயத்ரி புன்னகைத்துக்கொன்டே.

"ஓ, அவரா ?" என ஒரு மூன்று நான்கு பெயர்களை சேர்த்தாற்போல் சொல்லி, "உங்க விருப்பம், இதில் எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம்" என்றாள் அலமு.

"சோஷியல் ?" என்றாள் காயு.

இருவருக்குமே சிரிப்பை அடக்க முடியவில்லை.

இவர்கள் இருவரையும் ஏதோ 'ரவுடிகள்' என தப்பாக எடை போட்டுவிட வேண்டாம். அங்கிருந்த மற்றவர்களுக்குப் பெயர் வைக்கவில்லையே.

ஓவர் ஸீன் போட்டதால் வந்த எரிச்சலில்தான் பெயர் வைத்தார்கள். அதாவது தான் எல்லோரிடமும் சமநிலையில் பழகுவதாகக் காட்டிக்கொண்டார் என்பது மட்டும் புரிந்தது.

இனி காயு, அலமு என சுருக்கி சொல்வதுபோல் அவரையும் சோஷியல் என்றே சொல்லுவோமே.

சோஷியலிலின் சுறுசுறுப்பையும் முகத்தையும் வைத்து அவரது வயது முதிர்வைக் கண்டுபிடிக்க முடியாது. நடுவில காணாமல் தலையை சுற்றியுள்ள முடியை வைத்தே ஓரளவுக்குக் கணக்கிட முடியும்.

 நாட்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது ..........................

இப்போதுதான் காயு ஜூன் மாதத்தில் வேலையில் சேர்ந்ததுபோல் இருந்தது, அதற்குள் பிப்ரவரி மாதம் வந்துவிட்டது.

பிப்ரவரி வந்தால்  ....... ? கூடவே பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு சலசலப்பும் வந்து சேரும்.

அது முடிந்ததும் மீண்டும் ஏப்ரலில் பத்தாம் வகுப்பிற்கான சலசலப்பு.

"எனக்கு இங்க டூட்டி, உனக்கு எங்க ?" என்ற பேச்சுக்கள் அடிபட்டன.

காயுவிற்கும் அலமுவிற்கும் ஒரே இடத்தில் திருக்கோவிலூர் 'பாய்ஸ்'சில். தெரிந்துகொண்டவரை சோஷியலுக்கு அதே ஊரில் 'கேர்ல்ஸ்'சில்.

சோஷியல் காயுவிடம், "எங்க ஊருக்கு வர்றீங்க, அப்படியே ஒரு நாளைக்கு எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போகணும்" என்று அழைப்பு விடுத்தார்.

சும்மாதானே என காயுவும் தான் கண்டிப்பாக ஒருநாள் வருவதாகக் கூறினாள்.

அது கூடிய சீக்கிரமே அமையப் போகிறது என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
                                                                                                         ( தொடரும் )

      ***********************************************************************************

பின்குறிப்பு :

கதைக்கரு மிக மிகப் பழமையானது. கதையின் மாந்தர்களும் அப்படியே, சுமார் இருபது வருடங்களுக்கு முந்தியவர்கள். ப்ளாக் ஆரம்பித்ததில் இருந்தே எழுத வேண்டும் என நினைத்த கதை, இப்போதுதான் உருவம் பெற்றது.


       ***********************************************************************************

12 comments:

 1. ஆஹா.... தொடர்கதையா....

  சுவாரஸ்யமான ஆரம்பம். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சிறு கதைதான், கொஞ்சம் நீளமானதால் அப்படி போட வேண்டியதாப் போயிடுச்சு. வருகைக்கு நன்றி வெங்கட்.

   Delete
 2. அசத்தல் ஆரம்பம்... தொடர்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. தொடர்வதற்கு நன்றி தனபாலன்.

   Delete
 3. கதை ஆரம்பம் சுவாரஸ்யமாக போகின்றது. சிறுகதையாஆஆ...!! தொடரும் எனப்போட்டால் அது தொடர்கதைதான்.......ஹா..ஹா.ஹா .கெதியா பார்ட் 2 வைப் போடுங்கோ சித்ரா.

  ReplyDelete
  Replies
  1. சுவாரஸ்யமா இருக்கா ! பழைய கதைக் கருவாச்சே, எப்படி இருக்கோன்னு நெனச்சேன். ஜூன் முடிவதற்குள் போட்டுடுறேன். வருகைக்கு நன்றி ப்ரியா.

   Delete
 4. என்னவொரு முன்னேற்றம்! சமையல், கட்டுரை, சிறுகதை எல்லாவற்றையும் தாண்டி தொடர்கதைக்கு வந்துவிட்டீர்களே! பேஷ்! பேஷ்! தொடர்கதை ஆரம்பமே நல்லாயிருக்கு! சோஷியல் என்ன செய்தார் என்று அறிய ஆவலாக இருக்கிறது. தொடருங்கள். பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்களுக்கு நன்றிங்க. ஹா ஹா சோஷியல் எதுவும் செய்யாததால்தான் பிரச்சினையே.

   இக்கதையை எழுதலாமா வேண்டாமா என மனதினுள் ஆயிரத்தெட்டுக் கேள்விகள். ஆனாலும் எழுதினால்தான் நிம்மதி எனும்போது பதிவாகிவிட்டது. ஒன்றும் செய்ய முடியவில்லை.

   வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

   Delete
 5. வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அனிதா !!

   Delete
 6. ஹை இப்போதுதான் வர இயன்றது...அன்று இந்தப் பகுதியைப் படித்துவிட்டு கமென்ட் போடும் போது கமென்ட் ஏதோ ராகுகாலம், சூலம் எல்லாம் பார்த்தது....அத்னால் போக வில்லை..பின்னர் வந்தால் இரண்டு தொடர்ச்சிகள்....இதோ அடுத்த பகுதிக்குப் போகிறோம்...

  ReplyDelete
  Replies
  1. சகோ துளசி & கீதா,

   கொஞ்சம் லேட்டா வந்தாலும் நீங்க முந்திக்கணும்னு நாந்தான் ராகு, சூலம்கிட்ட எல்லாம் சொல்லி வச்சிருக்கேன் :))))

   காலையிலேயே நகைச்சுவையான கருத்தைப்படித்து சிரிப்புதான். நன்றி கீதா !

   Delete