சும்மா சொல்லக்கூடாது, சின்ன வயசுல, வீட்டில், ஒருவருக்கொருவர் பட்டப் பெயர் வைத்து விளையாடுவதில்தான்(உண்மையில் வெறுப்பேற்றுவதில்) என்ன ஒரு ஆனந்தம் !
அதை வைத்துக் கூப்பிடும்போது எதிராளிக்கு (வேறு யார் ? உடன்பிறப்புகள்தான்) கோபம் தலைக்கேற வேண்டும், முக்கியமா நம்மை அடிக்க ஓடி வரவேண்டும் :)))) அதுல இருக்குற சந்தோஷம் இருக்கேஏஏ :)))))
இதுக்காகவே பெயர்களைத் தேடித்தேடிக் கண்டுபிடிப்பேன் ! அவங்களும் அப்பாவி எல்லாம் கிடையாது. ஒல்லியா இருக்குறவங்களுக்கு என்னென்ன பட்டப் பெயர்கள் உண்டோ அவை அத்தனையையும் எனக்கு வைப்பாங்க. என்ன நம்பலையா ? சரி, நம்பாட்டி போங்க !
புதுசா ஒரு பேரு வைக்கும்போது ஆரம்பத்துல கொஞ்ச நாட்கள் கடுப்பா இருக்கும். ரெண்டுமூனு நாள் ஆச்சுன்னா பழகிடும். அடுத்து வேற ஒரு 'பேர' தேடணும்.
ஒருமுறை என் தம்பி திடீரென என்னை ovs என கூப்பிட்டுவிட்டு அங்கே நிற்கவில்லை, ஓடியே போய்விட்டான்.
எனக்கோ அர்த்தம் புரியவில்லை. 'வரட்டும்' எனக் காத்திருந்தேன்.
வீட்டுக்கு வந்தபோது "என்ன ?" எனக் கேட்டு அவனிடமிருந்து பதில் வராததால் செம அடி வாங்கினான்.
எனக்குக் கோபம் வருவதைப் பார்த்து மீண்டும்மீண்டும் கூப்பிட ஆரம்பித்தான்.
ஒருநாள் வாங்கிய அடியில் o ம் v ம் ஒல்லி & வென என்பனவற்றிற்கான முதல் எழுத்துக்கள் என்று சொன்னான்.
இவை பழகிய வார்த்தைகள்தான். ஆனால் எவ்வளவு கேட்டும் கடைசி எழுத்துக்கான வார்த்தையை மட்டும் சொல்லவே இல்லை.
கொஞ்ச நாட்கள் ஆனதும் வழக்கம்போல் எனக்கும் இந்த வார்த்தை பழகிப்போய்விட்டது.
ஒருநாள் என்மேல் உள்ள கோபத்தில் அந்த எழுத்துக்கான வார்த்தையை உளறிக்கொட்டிவிட்டான்.
அவ்வளவுதான், அன்று முழுவதும் அவன் என் பக்கமே வரவில்லை.
இந்தப் பிரச்சினையைப் பெரியவர்களிடமும் கொண்டுபோக முடியாது. அப்புறம் நம்ம வண்டவாளம் தெரிய வரும். நான் வைத்த பெயர்கள் எல்லாம் வரிசைகட்டி வரும். அதனால் இந்த அட்டகாசங்கள் எல்லாம் எங்களுடனேயே முடிந்துவிடும்.
"இனிமே நானும் சொல்லமாட்டேன், நீயும் சொல்லக் கூடாது" என சமாதான உடன்படிக்கை எல்லாம் நடத்திப் பார்த்தேன் ..... ம்ஹூம்.
இதனால் இருவருக்கும் எவ்வ்வ்வளவு சண்டை, அடி, உதை, கோபம், வெறுப்பு !
இதெல்லாம் 93 ஆம் வருடம் டிசம்பரோடு ஒரு முடிவுக்கு வந்தது.
தெரிந்தோ, தெரியாமலோ, அவன் வாய் முகூர்த்தம் பலித்து, பிந்நாளில் அந்த எழுத்தே என் பெயருடன் வந்து சேர்ந்துகொண்டது 'சித்ராசுந்தரமூர்த்தி'யென :)
ஒவ்வொரு வருடமும் ஜனவரி & தை மாதம் வந்தாலே இந்த இன்பமான நினைவு வந்து போகும் ! இப்போதும் அப்படித்தான் :)