Friday, October 11, 2013

எங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி



ஒரு தடவை இங்குள்ள பப்ளிக் சானலில் மீள்சுழற்சி தோட்டம் பற்றி சொன்னார்கள். அதில் நாம் வீட்டு உபயோகத்திற்காக வாங்கும் பொருள்கள் உள்ள ப்ளாஸ்டிக் டப்பாக்களைத் தூக்கிப் போடாமல் அதை மறுசுழற்சி செய்து எப்படி செடி வளர்க்கலாம் என்று காட்டினார்கள்.

அவர்கள் சொன்ன மாதிரியே நானும் ஒரு பால் கேனை சுத்தம் செய்து, படத்திலுள்ளதுபோல் அடிப்பகுதியை நறுக்கிவிட்டு, மீதமாகும் தண்ணீர் வெளியேற‌ மூடியில் ஒரு துளையிட்டு, டப்பாவில் பாதியளவிற்கு மண் நிரப்பி, தேவையான‌ கொத்துமல்லி விதைகளை இரண்டிரண்டாக உடைத்துத் தூவி விட்டு, அதன்மேல் சிறிது மண் தூவி, தண்ணீர் தெளித்தேன்.


மண்மீது எப்படி உளுந்து தோல் இருக்குன்னுதானே பாக்குறீங்க‌ ! அது வேறொன்னுமில்லீங்க, அவங்களே சொன்னாங்க, செடிகளுக்கு காய்கறி, பழங்கள், தானியங்கள் இவற்றைக் கழுவிய தண்ணீர் & பாஸ்தா வேக வைத்த தண்ணீர் எல்லாம் ரொம்ம்ம்ம்பப் பிடிக்குமாம். அவர்கள் இப்படி சொன்னது எனக்கு ரொம்ம்ம்பவே பிடிச்சு போச்சு.

அதிலிருந்து அரிசி கழுவிய முதல் இரண்டு தண்ணீர் (மூன்றாவது தண்ணீர் சமைக்க எடுத்துக்கொள்வேன்), உளுந்து கழுவிய தண்ணீர் & தோல் இவற்றை மட்டும் செடிகளுக்கு பயன்படுத்துவேன். சிலசமயங்களில் டீத்தூள்கூட போடுவேன்.

மேலும் காய்கறிகள், பழங்கள் நறுக்கும்போது தேவையில்லாதவற்றை குப்பையில் போடாமல் அவற்றை பொடியாக நறுக்கி செடிகளுக்குப் போடலாம் என்றும் சொன்னார்கள். அருமையான யோசனை, இதை செய்ய எனக்கும் விருப்பம்தான். ஆனால் கார்பேஜுக்கு போகவேண்டிய ஈக்கள் எங்கள் தோட்டத்திற்கு படையெடுத்துவிட்டால் என்ன செய்வது என பயந்து விட்டுவிட்டேன்.

மீண்டும் விட்ட இடத்திற்கே வருகிறேன். சில நாட்களில் கொத்துமல்லி விதைகள் முளைத்து வர ஆரம்பித்தன. பார்த்தாலே தெரிகிறதே, எவ்வளவு செழிப்பாக வளர்கிறதென்று !



செடிகளில் உள்ள பூச்சிகளை விரட்ட தண்ணீரில் dish liquid கலந்து ஸ்ப்ரே பண்ணச் சொன்னார்கள். நான்தான் செய்வதில்லை. அதற்கு பதிலாக காமாக்ஷிமா சொன்னமாதிரி ஒருதடவை மட்டும் தண்ணீரில் மஞ்சள் கலந்து அடித்தேன். மேலே படத்திலுள்ள மஞ்சள் நிறத்திற்கு அதுவே காரணம்.

எல்லாம் சரிதான்... இந்த டப்பாவில் செடியை வளர்ப்பதற்குள் நான் பட்டபாடு... ஐயையையையயோ. இந்த ப்ளாஸ்டிக் கேனைச் சுற்றி நான்கு பக்கமும் மற்ற தொட்டிகளை வைத்து அரண் அமைத்தால்தான் நிற்கும்.

காலையிலும், நண்பகலிலும் தொட்டிகளை வெயில் அடிக்கும் பக்கமாக நகர்த்தி வைப்பேன். அந்த சமயத்தில் மறந்துபோய் இந்த பால்கேன் பக்கத்திலுள்ள தொட்டியை எடுத்துவிட்டால் அவ்வளவுதான், உடனே கீழே சாய்ந்துவிடும்.

பெரிய தோட்டமாக இருந்து, எந்நேரமும் வெயிலும் அடித்தால் தாராளமாக இந்த முறையில் செடிகள் வளர்ப்பேன். முக்கியமாக‌ ஊருக்குப்போய் தோட்டம் போட்டால் மேலே சொன்ன எல்லாவற்றையும் கடைபிடிக்க முடிவெடுத்துள்ளேன்.

விதை போட்டு நாற்று வளர்க்கக்கூட இந்த டப்பாக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கொத்துமல்லி மட்டுமல்லாமல் உடனே பயன்பாட்டுக்குத் தயாராகும் வெந்தயக் கீரையையும் இதில் வளர்க்கலாம்.




நான் சாதாரணமாக இங்கு தொட்டியில் வளர்க்கும் கொத்துமல்லி செடியைப் பார்க்க இங்கே  'க்ளிக்'கவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 தோட்ட உபயோகத்திற்கு :

மண், உரம் இடுவது மட்டும் போதாது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது செடியைச் சுற்றிலும் உள்ள மண்ணைக் கிளறிவிடுவது நல்லது. அப்போதுதான் செடி நன்கு வேர்பிடித்து செழிப்பாக வளரும்.

தோட்டத்தில் வேண்டாத புல், பூண்டுகள் இருந்தால் கொஞ்சம் வெந்நீரில் சமையல் உப்பு கலந்து அவற்றின் வேர் பகுதியில் படுமாறு ஸ்ப்ரே செய்தால் இரண்டொரு நாளில் அவை காய்ந்துவிடும்.

கேட்காத கடன் மட்டுமில்லீங்க, பார்க்காத பயிரும்கூட பாழாகிவிடும். அதனால் முடிந்தளவுக்கு காலையில் எழுந்ததும் தோட்டத்தை பார்வையிடுவது நல்லது.

Tuesday, October 8, 2013

'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....




இந்த வருட ஆரம்பத்திலிருந்தே வலையுலகத் தோழமைகளின் பெயர்கள் எல்லாம் என்னிடம் அகப்பட்டு, அடிபட்டுக்கொண்டிருந்தன. இந்த கண்டத்திலிருந்து தப்பித்தவர்கள் ஒரு சிலரே.

அதிலும் ஒருவர், வலையுலக பட்டப்பெயர், ஊரின் பெயர் மற்றும் சொந்தப் பெயர் என ஒரு பாதி வாக்கியத்தைப் பெயராகக் கொண்டிருந்தாலும், இந்த கண்டத்திலிருந்து தப்பித்துவிட்டார்.

இதெல்லாம் எதனால் என்றுதான் பார்ப்போமே !

இந்த வருடம் (2013) ஜனவரி மாதம் இரண்டாம் நாள் iPad ஐ கீழே போட்டு (தவறிதாங்க) உடைத்துவிட்டேன். உடைந்தது iPad தான் என்றாலும் எனக்கென்னவோ கை, கால்கள் உடைந்தது போலவே ஓர் உணர்வு.


கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருந்த ஒன்று, கண்ணெதிரில் தவறிப்போய் உடைபட்டதை நினைத்துநினைத்து புலம்பிக்கொண்டிருந்தேன்.

அதற்கும் கொஞ்ச நாட்களுக்கு முன்னதாகவே இவர் ஒரு iPad mini வாங்கப் போவதாக சொல்லிக்கொண்டிருந்தார். ஒருவழியாக 'வேண்டாம்' என்று சொல்லி நிறுத்தியாச்சு.

இருந்தாலும் அடிக்கடி "வாங்கினா உனக்கு துணையாக இருக்கும்" என்பார். வேறெதற்கு ? பேச்சுத் துணைக்குத்தான் !

இப்போது இது உடைந்ததும் "iPad mini வேணும்னு சொன்னா வாங்கித்தராமலா போயிடுவேன், அதுக்கு போயி இத‌ உடைச்சிட்டியே" என்றும், ஒருவேளை இவர்கள் உடைத்திருந்தால், என்னிடமிருந்து எப்படிப்பட்ட ரியாக்க்ஷன் வந்திருக்கும் என்று சொல்லிக்காட்டியும் என்னை கிண்டல் செய்தனர்.

iPad க்கு இன்ஸூரன்ஸ் இருக்கவும் புதிதாக ஒன்றை அனுப்புவதாக ஒப்புக்கொண்டார்கள். ஜனவரி 16 ம் நாள் வந்தும்விட்டது.  'அப்பாடா, செலவில்லாமல் போனதே' என்றிருந்தது.




 







புதிய iPad க்கு முன்பக்கம் மட்டுமல்லாமல் பின்பக்கமும் கவர் பண்ணிக் கொடுத்து, 'எதுக்கும் கீழ போட்டு, உடையுதான்னு இப்பவே செக் பண்ணிடு' என்றார்.

இதற்கிடையில் ஒருநாள்  'இன்று மினி ஐபேட் வந்துடும், வாங்கி வை' என்றார்.

"வேணாம்னு சொல்லியும் வாங்குறீங்க இல்ல, திருப்பி அனுப்பிடுறேன் பாருங்க" என்றேன்.

"ஃப்ரீயா வருது, வேணாம்னா அனுப்பிட்டு போ" என்றார்.  ஹி ஹி.  இவ்வளவு சொன்னபிறகும் வாங்கி வைக்காமல் விட்டுடுவேனா என்ன‌ !

மினி ஐபேட் வந்தேவிட்டது. குட்ட்ட்டியாக இருந்த அது, என்னைவிட மகளை வெகுவாகவே கவர்ந்துவிட்டது. அதற்கு 'Siri' என பெயரும் வழங்கப்பட்டிருந்தது.

மாலையானால் மூன்று பேரும் உட்கார்ந்து Siri யிடம் பேசுவோம். அதனிடமிருந்து மகளுக்கு மட்டுமே பதில் வரும். எங்களுக்கு ஏதோ ஒன்றிரண்டு தவிர எதற்கும் சரியான பதில் வராது.

மகள் சொன்னாள், அம்ம்ம்மா,'ர, ற' வரும் வார்த்தைகளை எல்லாம் அழுத்தி சொல்லாம கொஞ்சம் 'ழ' வருவது மாதிரி சொல்லுமா' என்றாள்.

நாங்கள் படிக்கும்போது  "ஒரு எழுத்தையும் விடாமல், 'வழவழ, கொழகொழ'னு இல்லாமல், எழுத்தைக்கூட்டி, அழுத்தி உச்சரிக்க வேண்டும்", என்று ஆசிரியர் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்துபோனது.

'சரி, அதையெல்லாம் நினைத்து கவலைப்பட்டால் ஆகுமா'  என ஒருவழியாக சொற்களில் உள்ள 'ரகர, றகர'ங்களுக்கு பதிலாக ழகரம் சொல்லிப் பழகினேன். அதன்பிறகு ஓரளவுக்கு 'Siri' யிடமிருந்து பதில் வந்தது.

இப்போது நினைத்துப்பாருங்கள், பயிற்சி எடுக்கிறேன் பேர்வழின்னு உங்கள் பெயர்களையெல்லாம் எப்படி உளழி, ஸாரி, உளறிக் கொட்டியிருப்பேன் என்று.

இப்போது iPad mini மகளிடம் உள்ளது. அதனால‌, இந்த முயற்சியை கைவிட்டுடுவேன்னு மட்டும் நினைச்சிடாதீங்கோ. மகள் விடுமுறையில் வரும்போது அதுவும் கூடவே வரும், அப்போது உதவுமே!

Friday, October 4, 2013

ரோஜா _____ 1

இந்த இடுகையில் உள்ள படங்கள் எல்லாம், எங்கள் அப்பார்ட்மென்டில் 'மே' மாதம் எடுத்தவை. நீங்களும் பார்த்து ரசிப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

நிறைய மொட்டுகள், ஒன்றிரண்டு பூக்களுடன் இருக்கும் இந்த குட்டிகுட்டி ரோஜாச் செடிகளை மணிக்கணக்கில் நின்று பார்த்தாலும் சலிக்காது. 

இப்போதும் ஒன்றிரண்டு மொட்டுகளுடன், பூக்கள் கொத்துகொத்தாக பூத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் அந்த அழகு இப்போது இல்லை.


Tuesday, October 1, 2013

நீயும் முந்திரிக்கொட்டைதான்...


நூற்றுக்கும் மேற்பட்ட‌ பயணிகள்
பயணிக்க வேண்டிய இட‌த்தில்
வெறும் ஐம்பத்தெட்டு பயணிகளுடன்
தயார் நிலையில் வானவூர்தி.

"விரும்பிய நண்பர்களுடன்
நண்பர்களாகப் போகிறவர்களுடன்
விருப்பம்போல் அமர்ந்து பயணியுங்கள்" என
விமான ஊழியர் சொல்லுமுன்னே

அவரவர் இருக்கையைத் தெரிவுசெய்து
அமர்ந்து அகமகிழ்ந்தனர் பயணியர்.
இதற்கு நாங்களுமே விதிவிலக்கல்ல‌
இரண்டுமூன்று இருக்கைகள் மாறியாச்சு

'ரோஸ்டட் பீனட்'டும் சேர்த்து கொடுக்காமல்
'ப்ரெட்ஸெல்' மட்டும் கொடுத்து இறக்கிவிட்டனர்
ஆட்களின் எண்ணிக்கை குறைந்ததால்
ஆகும் செலவைக் குறைத்திருப்பார்களோ !

சன்னல் வழியாக விமான எஞ்ஜின், ரஸித்தேன்
கையில் காமிராவை எடுக்கும்வரை
இதுவரை பார்த்து ரஸித்த இது
இப்போது ஏனோ பிடிக்காமல் போனது.

விமானத்தின் வேகத்திற்கு
ஈடுகொடுக்க முடியாமல்
'பின்தங்கிவிடுவாய்' என நினைத்த என்னை
விடாமல் துரத்தி வந்து

படங்கள் எடுக்கவிடாமல்
காட்சிகளை மறைத்துக்கொண்டு
முந்திக்கொண்டு வந்த நீயும்
ஒரு முந்திரிக்கொட்டைதான்...

கீழேயுள்ள காட்சிகளைத்தானே மறைப்பாய் நீ
எளிதாக மேலேயுள்ள நிலாவைப்
பிரியமுடன்
பிடித்துவிட்டேனே !


[பட‌த்தைப் பெரிதாக்கினால் நிலா இருப்பது தெரியும்.
சென்ற வருடம் இதே நாளில் நான் பிடித்த முழு நிலவைக்காண இங்கே 'க்ளிக்'கவும். ]

Sunday, September 29, 2013

எங்கள் வீட்டுத் தோட்டம் ____ புதினா

எங்கள் வீட்டில் சிறியதும், கொஞ்சம் பெரியதுமான இரண்டு தொட்டிகளில் எப்போதும் புதினா செடி வைத்திருப்பேன். அவை நன்கு செழித்து வளரும்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பறித்துவிடுவேன். இதைவைத்து துவையல் அல்லது சட்னி செய்தால் யாரும் சாப்பிடமாட்டார்கள் என்பதால், புதினாவுடன்  கொத்துமல்லி தழை சேர்த்து புதினா & கொத்துமல்லி சாதம் செய்துவிடுவேன். இநத சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.

படத்திலுள்ள இந்த சிறிய தொட்டியில் ஏற்கனவே புதினா செடி அடர்த்தியாக‌ இருந்தது. அதன் வேர் தொட்டி முழுவதும் பரவிவிட்டதால் தண்ணீர்கூட ஊற்ற முடிவதில்லை.


மகியின் முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த ஆலோசனையின் பேரில் மண் முழுவதையும் கீழே கொட்டி, வேரை எல்லாம் நீக்கிவிட்டு, அந்த மண்ணையே அரை தொட்டி அளவிற்கு போட்டு, புதினாவின் ஒரு வேரை மட்டும் தொட்டியில் வட்டமாக வைத்து, மேலே சிறிது மண் தூவி, தண்ணீர் தெளித்து விட்டு ஊருக்குப் போய்விட்டேன்.


ஐந்து நாட்கள் கழித்து வந்து பார்த்தால் நான்கைந்து இடங்களில் அழகாகத் துளிர் வந்திருந்தது. என் கண்ணே பட்டுவிடும்போல் இருந்தது.


அது மேலும் வளர்ந்து இப்போது எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள் !