Wednesday, December 11, 2013

விழுந்தது எதனால்..... ?


சுந்தர் திங்கள் கிழமை காலை 9:30 மணிக்குமேல் பழங்களைப் பார்க்கக் கிளம்பிப் போனதும் எப்போதும்போல் நானும் 'வாக்' போகத் தயாரானேன். ஒரு வாரமாக குளிர், ஊசி மாதிரி குத்துவதால் நடை நேரத்தை காலை 10 to 11 ஆக மாற்றிக்கொண்டு  'வாக்' போகக் கிளம்பி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

நடக்கும்போது இங்குள்ள நினைவுகளுடன் அம்மா முதல் முகமே தெரியாத வலையுலக நட்புகள்வரை கற்பனையில் வந்துவந்து போவார்கள். இன்று கொஞ்சம் வித்தியாசமான நினைவுகள் வந்தன. வலைச்சரத்தில் முதல்நாள் பதிவு வந்தாச்சு. எல்லோரும் வந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் சொன்னதால் ஏதோ உறவுகளுடன் திருவிழாவிற்கு போய்வந்த ஓர் உணர்வு.

அந்த சந்தோஷத்துடனே சென்று கொண்டிருக்கும்போதுதான் கவனித்தேன், செடிகளுக்குப் பாய்ச்சிய ஒருவிதமான கொழகொழப்பு நிறைந்த‌ கெமிக்கல் தண்ணீர் அந்தத் தெரு நடை பாதை முழுவதும் ஆக்கிரமித்திருந்ததை.

சில அடிகள் தூரம்தான் போயிருப்பேன் ஒரு 15 வயது, வெள்ளைவெளேரென, ஒல்லியான, உயர‌மான, ஸ்கூல் பையன் தன் புத்தகப் பையுடன் ஜுரத்துடன் வந்ததுபோல் ஹும் ஹும் என்று முணகிக்கொண்டே மிதிவண்டியை ஓட்டிச் செல்லாமல், தள்ள முடியாமல் தள்ளிக்கொண்டு  சென்றான்.

அவனைப் பார்த்ததும் பாவமாக இருந்தது. அருகில் வந்து கடந்த‌போதுதான் தெரிந்தது, அவன் துணியெல்லாம் திட்டுத்திட்டாக ஈரம் இருந்ததை. பாவம் இந்த கொழகொழ தண்ணீரில் வழுக்கி விழுந்து நடக்க முடியாமல் நடந்துபோகிறான் போல, இப்படியே நாள் முழுவதும் எப்படி வகுப்பறையைக் கவனிப்பது என்று நினைத்துக்கொண்டே சென்றேன்.

நல்லவேளை, அவன் என் முன்னால் விழாமல் இருந்தானோ, தப்பித்தேன். இதுவே என் முன்னால் விழுந்திருந்தால் என் நிலைமை தர்மசங்கடத்திற்கு உள்ளாகியிருக்கும். சிறியவர், பெரியவர் என்றில்லை, யார் கீழே விழுந்தாலும் கட்டாயம் என்னைப் பார்த்து கோபக் கணையை வீசாமல் போகமாட்டார்கள். அப்படியானால் நான் செய்வது.......? என்னை நானே மாற்றிக்கொள்ள வேண்டும்.

சில அடிகள்தான் மேலே சென்றிருப்பேன், சொய்ய்ய்ங்... நொடிக்கும் குறைவான நேரத்தில் என்ன நடந்ததுன்னே தெரியாது, நான் ஒரு காலை மடக்கியும் ஒரு காலை நீட்டியும் கீழே உட்கார்ந்திருக்கிறேன். என்ன நடந்திருக்கும் என சுதாரித்து எழுந்திருக்கக்கூட யோசிக்காமல் விழுந்துவிழுந்து சிரித்தேன்.

நம்புங்க, சுற்றிலும் யாரையுமே காணோம். இருந்திருந்தால் 'என்ன இது யாரோ விழுந்த மாதிரி இப்படி சிரிக்குதே' என்று நினைத்துக் குழம்பியிருப்பர். குளிர் அதிகமாக இருப்பதால் இன்று வழியில் யாரையும் காணோம். !

நல்ல வேளை, உட்கார்ந்த நிலையிலிருந்தே ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இடது முட்டிப் பகுதியில் மட்டும் லேஸான வீர அடையாளத்துடன் அதாங்க சிறிது ஈரத்துடன் நடையைக் கட்டினேன்.

இப்போது வலைச்சரமாவது ஒன்னாவது ! நினைவு முழுவதும் சிரிப்பும் எதனால் விழுந்தேன் என்ற நினைவுகளுடனும்தான்.

இவ்வளவு நாளும் இந்த வழியில்தானே நடக்கிறேன். இன்று மட்டும் என்ன வந்தது? இதே ஈரத்தில் பலமுறை போயிருக்கிறேனே! இது எனக்குப் பிடித்தமான ஒன்றாச்சே.

சுந்தருக்கும், மகளுக்கும் ஃபோன் செய்து விஷயத்தை சொன்னால், அவர்களிருவருமே சொல்லி வைத்தாற்போல் சில நிமிடங்கள் விடாமல் சிரித்துவிட்டு, புரியாத சிரிப்பு மொழியில் ஏதோ ஒன்றை சொன்னார்கள். அது "வரவா, ஹாஸ்பிடல் போகணுமா", என்பதாகத்தான் இருக்கும் என நானே அதை மொழி பெயர்த்துக்கொண்டேன்.

 'வாக்' முழுவதும் ஒரே யோசனை + சிரிப்பு. எதனால் இது நடந்தது? அப்படியானால்.......? இன்று பிறந்த நாள்கூட இல்லையே ஒரு வயது அதிகமாக !

 சரி வீட்டுக்குப் போனதும் காலண்டரில் மறக்க முடியாத இன்றைய தேதியை, அதாங்க ஏதோ ஒன்று ஆரம்பமாவதைக் குறித்து வைக்க வேண்டும் என நடையைக் கட்டினேன்.

இனி பார்த்து ஜாக்கிரதையாகத்தான் நடக்க வேண்டுமோ! ஆனாலும் ஒரு மணி நேர நடையில் இரண்டு நிமிடங்கள் முன்னாலேயே வீட்டிற்கு வந்துவிட்டேன். சில நாட்களில் இரண்டு நிமி கூடுதலாகக்கூட ஆகும். ஆனால் இன்று இரண்டு நிமி முன்னாலேயே வந்துவிட்டேனே. விழுந்ததால் குறைந்தது 10 நிமிடங்களாவது லேட்டாக வந்திருக்க வேண்டுமே.

வீட்டிற்குள் நுழைந்ததும் சோகமாக காலண்டரில் அந்த‌ தேதியை பேனாவால் ஒரு வட்டம்போட்டு, சில வரிகளையும் எழுதி வைத்தேன்.

இவர் 'லன்ச்'சுக்கு வீட்டுக்கு வந்தார். 'யானை வரும் பின்னே......' பழமொழியைப்போல் முதலில் சிரிப்பு சத்தம்தான் கேட்டது. நானும் விழுந்துவிழுந்து சிரித்தேன்.

இவர் போன‌ பிறகு உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். நான் விழுந்தது சரி, ஆனால் அந்த குட்டிப் பையன்.......? இதே கேள்வி பலமுறை திரும்பத்திரும்ப‌ வந்து அலையடித்தது.

பையன் விழுந்தால் மட்டும் நீர் காரணம், நான் விழுந்தால் மட்டும்......?  அதானே  !! 

அடித்துப்பிடித்து ஓடி காலண்டரில் இருந்த வட்டத்தையும், எழுத்துக்களையும் அழிப்பானால் அழிக்க முடியாது என்பதால் விரலாலேயே சுரண்டி எடுத்துவிட்டேன்.

சுரண்டல் இருப்பதால் பார்க்கும்போதெல்லாம் அது நினைவுக்கு வரும் என்று நினைத்து காலண்டரின் பக்கத்தையே மாற்றி, அதற்குள் ஜனவரி 2014 என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறது.

                                                                   ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Saturday, December 7, 2013

ஒத்தக்கால்ல நின்னாவது போஸ் கொடுத்திட்டோமில்ல !!


நம்புங்க, (கொ)க்குக்கு ஒரு கால்தான் !!!


ஒருக்கால் நம்ப முடியலைன்னா............. !!


 நம்பியாச்சு, நெஜமா இவ‌ர் கொக்கேதான் !!


அவ்வ்வ்வ்வ், கடேஏஏசில‌ இப்படி (என்)காலவாரி விட்டுடிச்சே !!

Thursday, December 5, 2013

நேரம்.....நல்ல நேரம் !!

புதுமனை புகுவிழாவிற்கு முதல் நாள் மாலையே வந்திருந்த வெளியூர், உள்ளூர் உறவுகள் எல்லாம் இரவு சாப்பாடு முடிந்ததும், அங்கேயே புது வீட்டில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு, அதிகாலை கிரஹப்பிரவேச‌ம் முடிந்ததும், காலை சாப்பாடு முடிந்ததும் முடியாததுமாக அவரவர் ஊருக்கு செல்ல ஓவ்வொருவராக கிளம்பிக்கொண்டிருந்தனர்.

ஆமாம், வேலைக்கு செல்ல வேண்டிய பெரிய‌வர்கள், பள்ளிக்குத் திரும்ப வேண்டிய பிள்ளைகள் என ஆளுக்கொரு திசையில் வாகனத்தைப் பிடிக்க பறந்துகொண்டிருந்தனர்.

மிக நெருங்கிய உறவுகள் மட்டுமே, மேற்கொண்டு அங்கு தங்கியிருந்து, மீதமுள்ள வேலைகளைப் பார்த்துக்கொண்டும், அந்த சாக்கில் தங்கள் உறவுகளோடு அள‌வளாவியும் நேரத்தைப் போக்கினர்.

அந்த நெருங்கிய உறவுகளில் பாலாவும் ஒருத்தி. உறவுப் பிள்ளைகளுடன் த‌ன்னுடைய‌ இரண்டு வயது மகளும் ஆர்வமாக விளையாடியதால் அவளால் மகளை அங்கிருந்து பிரித்து கூட்டிக்கொண்டு செல்ல மனமில்லாமல், தான் வேலை செய்யும் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அன்றைக்கு விடுப்பு எடுத்துக்கொள்வதாகக் கூறிவிட்டு, வேலைக்குப் போகாமல் மட்டம் போட்டுவிட்டாள்.

கிரஹப்பிரவேச நிகழ்ச்சியை நல்லவிதமாக‌ முடித்த சந்தோஷத்திலும், களைப்பிலும்  த‌ன் சகோதரி அவள் அருகில் வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறாரே தவிர அவரது பார்வை முழுவதும் பாலாவின் மகளைவிட்டு துளியளவும் நகரவில்லை.

சகோதரி பாலாவைப் பார்த்து,  "ஏய், நான் ஒன்னு சொல்லுவேன், கேட்பியா?" என்றார்.

சகோதரி எதையோ சொல்ல வருகிறார் என்ற ஆவலில் 'சொல்லு' என்றாள் பாலா.

'உன் மகள் பிறந்த நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன், அதனால...".

அதற்குள் பாலா இடைமறித்து "அதனால?" என்றாள் சந்தேகத்துடன்.

"அவள் ஜாதகம் சரியில்லைன்னு நினைக்கிறேன். நல்ல ஜோஸியராப் பார்த்து அவள் ஜாதகத்தைக்காட்டு" என்றார் சகோதரி.

"அப்படியா? அவள் ஜாதகம் சரியில்லைன்னு எத வச்சி சொல்ற" என்றாள் பாலா.

"ஒரு வீட்ல ஒரு குழந்தை பிறந்துச்சுன்னா, நல்ல வேலை கிடைப்பது, மனை வாங்குவது, வீடு கட்டுவதுன்னு நிறைய வசதி வாய்ப்புகள் பெருகணும். இதில் எதுவுமே உனக்கு அமையலயே", என்றார்.

மேலும் "இப்போ எங்களையே எடுத்துக்கோ, என் பையன் பிறந்ததும் இந்த மனையை வாங்கினோம், அதற்குள் வீடும் கட்டிவிட்டோம், அவனின் நல்ல நேரம் இன்னும் சில மனைகளும் வாங்கும் பாக்கியம் அமைந்தது, நம் அப்பாகூட சொன்னார், என் பையனின் ஜாதகம் மாதிரி எல்லோருக்கும் அமையாதாம்" என்று பெருமையுடன் சொன்னார், பாலாவின் மகளுடன் விளையாடிக்கொண்டிருந்த தன‌து மூன்று வயது மகனைப் பார்த்து .

"அதுதான் அப்பாவே சொல்லிட்டாரே, பிறகென்ன?" என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் பாலா.

வசதி வாய்ப்புகள் பெருகினால் மட்டும்தான் மகிழ்ச்சியா என்ன ? பண வசதி மட்டும்தான் வாழ்க்கையா? இல்லை அதுதான் அதிர்ஷ்டமா?

பாலாவுக்கு எந்தக் குறையும் இல்லாமல் நன்றாகத்தானே இருக்கிறாள். அப்படியே குறைகள் இருந்தாலும் அதற்கும் த‌ன் குட்டிப் பாப்பாவுக்கும் என்ன சம்ப‌ந்தம்? புரியவில்லை அவளுக்கு.

"சரி, என் மகளோட‌ பிறந்த நேரம் & ஜாதகம் சரியில்லைன்னே வச்சிப்போம், அதுக்கு என்ன செய்வதாம்?" என்றாள் பாலா.

"ஜாதகத்தை நல்ல ஜோசியரிடம் காட்டினால் அவரே என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை சொல்லுவார், அதை நீ செய்துவிட்டால் தோஷம் ஏதும் இருந்தால் நீங்கிவிடும்" என்றார் சகோதரி.

'இதுதான்' என்று சகோதரி முடிவே பண்ணிவிட்டார்போல் தெரிந்தது பாலாவுக்கு.

"என்னதான் சகோதரி உறவு என்றாலும் இவர் யார் த‌ன் மகளைக் குறை சொல்ல ? எந்த சரியில்லாத ஜாதகமா இருந்தா என்ன? எங்கள் வீட்டு பொக்கிஷம் அல்லவா எங்கள் மகள் !" என பாலா தனக்குத்தானே  சொல்லிக்கொண்டு, தன் சகோதரியைப் பார்த்து, "நீங்கவே முடியாத தோஷம்னு ஜோஸியர் சொல்றாருன்னு வச்சுப்போம், அப்போ என்ன செய்வதாம்?" என்றாள்.

இதை சற்றும் எதிர்பாராத சகோதரி "ஏய், நீ இதுமாதிரி ஏதாவது ஏடாகூடமா சொல்லுவேன்னு எனக்கு முன்னமே தெரியும், இருந்தாலும் நீ நல்லா இருக்கணுமேன்னு சொன்னேன், இதைக் கேட்பதும் கேட்காததும் உன் விருப்பம்" என்றார்.

ஏன்தான் இன்றைக்கு விடுப்பு எடுத்தோமோ என்றிருந்தது பாலாவுக்கு.

இதையெல்லாம் யோசித்து சொன்ன தன் சகோதரியால், அந்தக் குட்டிப் பாப்பா பின்னாளில் நல்ல நிலைக்கு வராமலா போய்விடப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டதே !!

Tuesday, December 3, 2013

பொழுது போகாதபோது.......(தொடர்ச்சி)


எங்கிருந்து 'க்ளிக்'கினேன் என்பது இப்போது தெரிந்துவிடப்போகிறது  !


இவ்வளவு நேரமும் காருக்குள்ளிருந்து ரியர்வியூ மிரர் வழியாக 'க்ளிக்'கிவிட்டு...........


இப்போது கண்ணாடியைத் தவிர்த்துவிட்டு அப்படியே திரும்பி எடுத்தபோது.....

என் பொழுதைப் போக்குகிறேன் என்று சொல்லி உங்கள் பொழுதையெல்லாம் வீணடித்துவிட்டேன், ஹா   ஹா  !!

இது ஒரு ரெஸ்டாரண்ட். உள்ளே போனால் விரைந்து வெளியே வருவது கடினம். அதனால் இவர் மட்டும் போய் வாங்கிவருவார். நீண்ட நேரம் ஆகும்போது (இந்த குறிப்பிட்ட இடத்தில் காரை பார்க் செய்திருந்தால் மட்டும்) நானும் மகளும் சுவரில் தெரியும் அந்த பெரிய கண்ணாடி வழியாக‌ இவர் உள்ளே போய் ஆர்டர் செய்வது, வெயிட் பண்ணுவது, வாங்கிக்கொண்டு கதைத்திறந்து வெளியே வரப்போவது என ஒன்று விடாமல் காரின் ரியர்வியூ மிரர் வழியாகப் பார்த்து லைவ் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருப்போம்.

இப்போதெல்லாம் நான் மட்டுமே தனியாக..... எவ்வளவு நேரம்தான் தனியாக கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டிருப்பது. சும்மா காமிராவை ரியர்வியூ மிரரை நோக்கி வைத்து வருகிறாரா என பார்த்துக் கொண்டிருந்தபோது எடுத்தவைதான் இந்தப் படங்கள்.

Monday, December 2, 2013

பொழுது போகாதபோது....



ஒரே காட்சிதான், ஆனால் எதிரெதிர் திசையில்....?

Any 'க்ளூ'...........அதுதான் இரண்டாவது படத்தில் ஒட்டிக்கிட்டிருக்கே !

என்னன்னு யோசிச்சிட்டு, நாளையே வந்திடுறேங்க‌ !!