Saturday, January 18, 2014

பொங்கல் ஸ்பெஷல் _ திருநாள் _ ஆற்றுத்திருவிழா


தை மாதம் 5 ந் தேதி திருநாள். தெண்பெண்ணை ஆறு ஓடும் வழியில் உள்ள ஊர்களில் எல்லாம் ஆற்றுத் திருவிழா வெகு சிறப்பாக நடக்கும். அதிலும் மேம்பாலம் இருந்துவிட்டால்.....சொல்லவேத் தேவையில்லை ! எங்கு பார்த்தாலும் ஏராளமான கடைகளும் மக்கள் வெள்ளமும் இருக்கும். சுற்று வட்டாரத்திலுள்ள சாமிகள் எல்லாம் வந்திருக்கும். ஆற்றில் எவ்வளவு (அப்போது) தண்ணீர் ஓடினாலும் ஊற்று தோண்டித்தான் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கும்.

இப்போது என்னுடன் திருவிழாவுக்கு வருகிற நீங்க எல்லோரும் 1 முதல் 8 ஆம் வகுப்புக்குள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த வயதைக் கற்பனை பண்ணிக்கோங்க. அப்போதான் ஜாலியா, சோர்வாகாம, முக்கியமா கால் வலிக்காம‌  நடக்க முடியும். வேடிக்கை பார்த்துட்டே பின்னாலே வராம நின்னுட்டிங்கன்னா தொலைஞ்சிருவீங்க. அதனால கவனமா பின்னாலேயே வரணும்.

பண்ருட்டி ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு, கெடில நதிக்கு தீர்த்தவாரிக்கு வந்த சுற்று வட்டார பகுதியில் உள்ள கோயிலின் உற்சவ மூர்த்திகள் மற்றும் ஆற்றில் கூடியிருந்த பொது மக்கள்.
                                       ஆற்றுத்திருவிழாவில் மக்கள் வெள்ளம்.

இன்று எல்லோரது வீடுகளும் கோலங்களால் ஜொலிக்கும். காலையிலேயே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். எல்லோரும் குளித்து முடித்து பொங்கலுக்கு எடுத்த‌ புத்தாடை அணிந்துகொண்டு திருவிழாவிற்கு சென்றுவர துணைக்கு ஆள் சேர்ப்பார்கள்.

ஒவ்வொரு தெருவிலும் ஒன்றிரண்டு கோயில்கள் இருக்கும். காலையிலேயே அதிலுள்ள சாமி சிலைகளை எல்லாம் தனித்தனியாக மாட்டு வண்டியில் வைத்துக்கட்டி ஆற்றில் போய் குளித்துவிட்டு வருவதற்கு தயார் செய்வாங்க.

எங்கள் ஊருக்கு அருகில் ஆறு இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு போவாங்க. வண்டிக‌ள் போகும்போது திருவிழாவிற்கு போகும் பிள்ளைகள் வண்டியில் அமர்ந்துகொள்வார்கள். வண்டிக‌ள் ஆடி அசைந்து போகும்.

காலையிலேயே ஊர் பொதுவில் நிறைய சர்க்கரைப்பொங்கல் செய்வாங்க. செய்து ஒரு குடும்பத்திற்கு ஒன்றென எல்லா குடும்பத்திற்கும் பெரியபெரிய உருண்டைகள் பிடித்து அவற்றை வண்டிகளில் போட்டு வெள்ளைத்துணியால் மூடி, மதியத்துக்கு மேல் எங்க ஊர் சாமி போகும் இடத்திற்கு எடுத்து செல்வார்கள். இந்த வண்டி போகும்போது மீதமுள்ள மக்கள் கூடவே நடந்துபோவார்கள்.

எங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊர் அருகில் போகும்போது ஆற்றின் கரை வரும். சாலையில் நடந்தால் வெயில் அடிக்கும் என்பதால் மரங்கள் அடர்ந்த கரையின்மேல் நடப்பார்கள். ஆற்றின் கரையின்மேல் ஒத்தையடிப்பாதை இருக்கும்னு நினைக்கிறேன். ஏனென்றால் எல்லோரும் ஒருவர் பின்னால் ஒருவராக போவாங்க.

எனக்கும் அவர்களோடு நடந்து போகத்தான் ஆசை. ஆனால் எங்க அண்ணனுடன் என் மூத்த சகோதரி, நான், தம்பி மூன்று பேரும் சைக்கிளில் போவோம்.

 நான் ரொம்ம்ம்ம்ம்ப நல்ல பொண்ணு என்பதால், handlebars  ஐ ஆட்டாமல் வருவேன் என்பதற்காக என்னைத்தான் முன்னால் உட்கார வைப்பார்.

வீட்ல புலி, சிங்கம், கரடியாக அடித்துக்கொள்ளும் நாங்கள் மூன்று பேரும் திருவிழாவிற்கு சென்று வீடு திரும்பும்வரை ஒரு வார்த்தைகூட பேசாமல் நல்ல பிள்ளைகளாக‌ வருவோம். அண்ணனிடம் அவ்வளவு மரியாதை கலந்த பயம். வீடு வந்து சேர்ந்த பிறகு வட்டியும் முதலுமாக அடித்துக்கொள்வோம்.

வாழையிலையில் இட்லிகளை வைத்து, ஒரு தினசரி பேப்பரால் கட்டி, தொட்டுக்கொள்ள தூளும் எடுத்துக்கொண்டு கூடவே ஒரு கூஜாவும் (அப்போது பாட்டில்கள் இல்லை) எடுத்துக்கொள்வோம்.

நாங்கள் முதலில் போவது கரடிப்பாக்கம் நிறுத்தத்தில் உள்ள மேம்பாலம். ரொம்ப ஃபேமஸ். மைலம் முருகன் சாமி எல்லாம் அங்கு வரும். மதியம் ஒரு இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு மீண்டும் சுற்றுவோம்.

கடிக்க மென்மையாக இருக்கும் வயலட் நிற கரும்பு வாங்கி துண்டுகள் போட்டு பை நிறைய வைத்திருப்போம். சிறுவள்ளி கிழங்கு என்று ஒன்று விற்கும். அதுவும் வாங்கி வைப்போம். புல்லாங்குழல், பலவண்ணக் காத்தாடிகள், பலூன் போன்ற இன்னும் பலவற்றை வாங்கித் தந்ததும் பத்திரமாக வைத்துக்கொள்வோம்.

எனக்கும் என் தம்பிக்கும் அங்கு விற்கும் கலர்கலரான ப்ளாஸ்டிக் கண்ணாடிகளின்மீது ஒரு கண் இருக்கும். ஆனால் கேட்கமாட்டோம். நாங்கதான் நல்ல பிள்ளைகளாச்சே !!

நாங்க ஒரு இடத்தில் மட்டும் இல்லாமல் அங்கிருந்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வழியில் ஆற்றில் ஆங்காங்கே நடக்கும் நிறைய திருவிழாக்களை பார்த்துக்கொண்டே வருவோம்.
ஆற்றுத் திருவிழாவையொட்டி விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் தென்பெண்ணையாற்றில்,  தீர்த்தவாரிக்காக கொண்டுவரப்பட்ட ஜானகிபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உற்சவ மூர்த்திகள்.
                              சாமி அலங்காரமெல்லாம் இப்படித்தான் இருக்கும்.

கடைசியில்  மாலையில் எங்கள் ஊர் சாமிகள் நிற்கும் இடத்திற்கு வருவோம். அங்கு எங்க அப்பா இருப்பார். 'சாமிய வேண்டிக்கோங்க' என்று சொல்லிவிட்டு விபூதி & குங்குமம் வைத்து விடுவார்.

சாமிகளை குளிக்கவைத்து அலங்காரம் செய்து, மீண்டும் வண்டியில் வைத்துக்கட்டி, தீபாராதணை காட்டி, சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு உருண்டை என அங்கிருப்பவர்களிடம் கொடுப்பாங்க. இதெல்லாம் நடக்க நேரமாகும் என்பதால் நாங்கள் உடனே அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிடுவோம்.

மாலை நேரம் ஆகஆக திருவிழாவிற்கு போனவர்கள் எல்லாம் வீடு திரும்புவாங்க. போகும்போது இருந்த உற்சாகம் இப்போது குறைந்து 'எப்போதுதான் வீடு வருமோ' என்பதுபோல் நடந்துபோவார்கள். நடக்க முடியாமல் சாமி வண்டிகள் புறப்படும்வரை காத்திருந்து வருபவர்களும் உண்டு.

ஆற்றுக்கு போன சாமி எல்லாம் ஊருக்குத் திரும்பும்போது இரவு ஆகிவிடும். சாமிகள் ஒவ்வொரு தெருவாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் தீபாராதணை வாங்கிக்கொண்டு போகும்.

இன்றுடன்/இத்துடன் பொங்கல் முடிந்தது. ஆனாலும் பொங்கலை நினைவுபடுத்தும் விதமாக வீட்டின் உள்ளேயும், படிகளிலும் போட்டிருந்த கோலங்கள் மறைய சில நாட்கள் ஆகும். ஆனால் மனதிலிருந்து மட்டும்  நினைவுகள் மறையவே மறையாது...... !!
                                                                                                                    .........(முற்றும்)...........
படங்கள் உதவி_கூகுள்

18 comments:

 1. // வீடு வந்து சேர்ந்த பிறகு வட்டியும் முதலுமாக அடித்துக்கொள்வோம் //

  அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... சில இனிய நினைவுகள் மறக்கவே முடியாது...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. எல்லோருக்கும் சிறுவயது நினைவுகள் இனிமையானவைதான். உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

   Delete
 2. நானும் உங்களோடு சமர்த்தாக நடந்து வந்தேனே . ஆனால் எனக்கு எதவும் வாங்கிக் கொடுக்கவேயில்லையே! பலூன் , பிளாஸ்டிக் கண்ணாடி, ஊதல், ரோஸ்நிற பஞ்சு மிட்டாய், பொம்மைகள் என்று எவ்வளவு இருந்தது . ஒன்று கூட வாங்கித் தரவில்லையே. சர், போகட்டும் இந்த வருடம் விட்டு விடுவோம். அடுத்த வருடம் ஆற்றுத் திருவிழாவிற்குப் போகும் போது எனக்கும் வாங்கித் தரவேண்டும். ஓகேயா......

  எனக்கு இந்த ஆறு, குளம் , அருவி , இதெல்லாம் மிகவும் பிடிக்கும். அதனால் அடுத்த வருடம் கண்டிப்பாக நானும் வருவேன். அவ்வளவு ஆற்றுத் திருவிழாவை அழகாக கண்ணெதிரே கொண்டு நிறுத்தி விட்டீர்கள் . பாராட்டுக்கள் சித்ரா......

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ, குட்டிப்பாப்பா சோகமா இருந்தா மனசு கேக்காதுன்னு + தொலைச்சிடுவீங்கன்னு எல்லாத்தையும் வாங்கி இப்போதான் பார்சல் அனுப்பியிருக்கேன், விடியும்போது சர்ப்ரைஸா கையில இருக்கும் பாருங்க.

   அடுத்த வருடம் நீங்களும் வர தயார், நானும் தயார், ஆனா ஆத்துல தண்ணி வரணுமே, அதுக்கும்மேல முக்கியமா ஆறு இருக்கணுமே !! மணல் கொள்ளையால் பெரியபெரிய பள்ளங்கள் மட்டுமே இருப்பதாகக் கேள்வி. வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.

   Delete
 3. ஆற்றுத்திருவிழா தென்பெண்ணைக் கரைக்கே கொண்டு சென்று விட்டது. உங்கள் வர்ணிப்பில் ஓர் மகிழ்வான அனுபவம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

   Delete
 4. பொங்கல் நினைவுகள் சூப்பராக இருந்தது... என்றும் பசுமையான நினைவுகளாச்சே...நானும் தம்பியும் அப்படித்தான் அடித்துக் கொள்வோம்... இதெல்லாம் இல்லன்னா தான் கஷ்டம்...:))))

  ஆற்றுத் திருவிழாவை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்... நானும் உங்க கையை பிடித்துக் கொண்டே வந்தது போல் இருந்தது.. காணாம போய்டுவேனோன்னு ரொம்ப பயம்... ஏற்கனவே ஒருமுறை காணாமல் போக இருந்தேன்.... இங்க பாருங்க..

  http://kovai2delhi.blogspot.in/2012/03/blog-post_26.html

  ReplyDelete
  Replies
  1. "நானும் உங்க கையை பிடித்துக் கொண்டே வந்தது போல் இருந்தது"______ சமத்தா வந்ததால திருவிழாவுல வாங்கிய பலூன், விசில், ஊதல், கரும்பு, கண்ணாடி.....எல்லாம் அனுப்பியுள்ளேன், வாங்கிக்கோங்க.

   இந்த ஒரு மாதமும் எனக்கும் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டு, எங்க ஊருக்கே போயிட்டு வந்த மாதிரி இருந்தது. பசுமையான நினைவுகள் மறக்க முடியாததுதான்.

   உங்க பயத்துக்கான காரணம் தெரிந்துவிட்டது. முன்னபின்ன தெரியாத ஊர்ல பயமாத்தானே இருக்கும்.

   Delete
 5. ஆற்றுத் திருவிழா உங்களுடன் நாங்களும் கலந்து கொண்ட உணர்வு..... சில ஆற்றுத் திருவிழா சமயத்தில் தென்பெண்ணை வழியே சென்றதுண்டு....

  ReplyDelete
  Replies
  1. மனதில் பதிந்துபோன இனிமையான, பசுமையான நிகழ்வுகள். எல்லாம் நேற்று நடந்தது போலவே உள்ளது.

   மணலூர்பேட்டை, திருக்கோவிலூர் எல்லாம்கூட‌ மக்கள் வெள்ளத்தில் ஆறு இருப்பதே தெரியாமல் போகும். வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க.

   Delete
 6. dinamalar first photo with news vanthathu...thenponnai aatril anaithu kovil ursava moorthigalukum poojai nadakum endru..padithathum ungal nenaivu..inge paarthal athaye click pani post potrukinga..makilchi :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஞானகுரு.

   Delete
  2. short ah mudichitinga..oru coffee yachum kedaikum nu ethirparthen :P lol

   Delete
  3. நினைவுபடுத்தியதற்கு நன்றிங்க. அது......வந்து........ஆற்றுத் திருவிழாவிற்கு போய் வந்த களைப்பினால்கூட ஹி ஹி காஃபி போட மறந்திருக்கலாம்.

   Delete
 7. I read all the parts..interesting memories akka!

  ReplyDelete
  Replies
  1. நைஸ் மெமொரீஸ்தான். எழுதிய நாட்களில் அந்த நாள் பொங்கலுடன் சுற்றியது போலவே ஓர் உணர்வு. பிஸியான நேரத்திலும் வந்தது மகிழ்ச்சி மகி.

   Delete
 8. பொங்கல் பானை வைக்க அடுப்பு செய்ததிலிருந்து கடைசியாக ஆற்றுத் திருவிழாவரைக்கும் எங்களையும் உங்களுடன் அழைத்துப்போய் எல்லாவற்றையும் அருமையாக விவரித்து விட்டீர்கள்.
  உங்களது மலரும் நினைவுகள் எங்களுக்கும் சில பல பழைய நினைவுகளை திரும்பவும் நினைக்க வைத்துவிட்டது.

  அருமையாக எழுதியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நீங்க சென்னையில் கொண்டாடிய & பெங்களூரில் கொண்டாடும் பொங்கலைப் பற்றியும் நேரம் கிடைக்கும்போது எழுதுங்க. நாங்களும் படித்து மகிழ்கிறோம்.

   இவ்வளவு நாளும் கூடவே பயணம் செய்து வந்ததற்கு நன்றிங்க. பாராட்டுகளுக்கும் நன்றிங்க.

   Delete