படம் உதவி கூகுள்
உழவுத் தொழிலுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடுவதுதான் மாட்டுப்பொங்கல்னு சொல்லுவாங்க.
நேற்று மாதிரியேதான் இன்றும் கோலம் போடுவது, நல்ல நேரம் பார்ப்பது, பொங்கல் வைப்பது எல்லாம். ஆனால் இன்று ஒரு பெரிய பானையில் மட்டும் வெள்ளைப் பொங்கல். பொங்கல் வேகும்போதே அதிலிருந்து பொங்கல் தண்ணீர் என்று கொஞ்சம் தண்ணீரை ஒரு பெரிய சொம்பில் எடுத்து வைத்துக்கொள்வார்கள்.
வீட்டிலுள்ள கத்தி, கடப்பாறை, படி, அரிவாள்மனை போன்ற அதாவது உழவுக்கும், சமையலுக்கும் உதவும் எல்லா பொருள்களையும் கழுவிக் காயவைத்து பூசை, பொட்டிட்டு பொங்கல் மேடையில் கொண்டுவந்து வைப்பாங்க. மாலை 5 மணிக்கெல்லாம் படையல் செய்திடுவாங்க. ஞாயிறு என்றால் மட்டும் 6 மணிக்குமேல்.
அவரவர் வசதிக்கேற்ப அசைவ உணவு சமைக்கப்படும். இன்று எல்லோரும் நல்லெண்ணெய் தேய்த்து தலை குளிப்பாங்க.
இன்றுதான் எல்லோரும் பொங்கலுக்கு எடுத்த புத்தாடையை அணிவோம். தெருவிலுள்ள எல்லா பிள்ளைகளின் கையிலும் பலூன் இருக்கும்.
இன்று மாலை 'மாடு மிரட்டுவது' என்று ஒன்று நடக்கும். அதற்காக காலையிலேயே மாடுகளின் கொம்புகளை சீவிவிட்டு, குளிப்பாட்டி, அவரவர் சார்ந்திருக்கும் கட்சி அல்லது பிடித்த வண்ணங்களை ( paint ) அவற்றின் கொம்புகளில் அடித்து விடுவர்.
கொம்புகளின் இடையில் பலவண்ண பலூன்களை கட்டிவிடுவாங்க. நெற்றியில் மஞ்சள் குங்குமம் & சந்தனம், கழுத்தில் தோரணம், மாவிலை மாலை போடப்படும். அவை என்னமோ ஏதோ என மிரண்டுதான் போயிருக்கும்.
இதுதவிர வீட்டிலுள்ள வாகனங்களை கழுவி துடைத்து பூசை, பொட்டிட்டு, சந்தனம் தெளித்துவிட்டு, வாழைக்கன்றுகள், தோரணம், மாவிலை மாலைகள் போடப்பட்டு, பலூன்கள் கட்டப்பட்டு தயாராக இருக்கும்.
மாலை 5 க்குமேல் ஊர் முழுவதும் தமுக்கு அடித்து மாடுகளை மாடு மிரட்டும் இடத்திற்கு அனுப்ப தயாராக வைக்கச்சொல்லி சொல்லுவாங்க. உடனே தெருவில் தண்ணீர் தெளித்து கோலம் போடப்படும்.
மீண்டும் ஒருமுறை அனுப்ப சொல்லி சொன்னதும் எல்லோரது வீட்டிலிருந்தும் தாம்பூலத்தட்டு, பழம், தேங்காய் எல்லாம் எடுத்துக்கொண்டு, மாடுகளை அழைத்துக் கொண்டுபோய் ஒரு இடத்தில் கூடுவார்கள். சில மாடுகள் முரண்டு பிடித்து எதிர் திசையில் ஓட ஆரம்பிக்கும். எங்கள் ஊரில் இரண்டு இடங்களில் மாடுகள் கூடும்.
கூட்டம்கூட்டமாக ஆண்கள், பெண்கள் எல்லோரும் அங்கு போவாங்க. ஒருமுறையாவது போயிருக்கலாமோ என்று இப்போதும் நினைப்பதுண்டு. அங்கு என்ன நடக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நீண்ட நேரம் கழித்து அங்கிருந்து மாடுகள் மிரண்டுபோய் ஓடிவரும். அவை தானாகவே அவரவர் வீடுகளுக்குப் போய் சேர்ந்துவிடும். அல்லது சிலர் தேடிக்கொண்டிருப்பாங்க.
இது முடிந்த உடனே அவரவர் வீட்டிலுள்ள வாகனங்களை எடுத்துக்கொண்டு பொங்கலோ பொங்கல் என்று சொல்லிக்கொண்டு ஊர் முழுவதும் சுற்றி வருவாங்க. யார்யார் வீட்டில் என்னென்ன வாகனங்கள் உள்ளன என்பதை பந்தாவாக சொல்லிக்கொள்ள இது நல்ல சான்ஸ்.
இவற்றுடன் மாட்டு வண்டியும் பறக்கும். நானும்கூட இதில் போயிருக்கேன். ஆனால் வழியில் கொஞ்சம் பயமாத்தான் இருக்கும். சிலசமயங்களில் குடை சாய்ந்ததும் உண்டு. ஆனாலும் விடாமல் போய்விடுவதில் ஒரு இன்பம்.
வண்டி வந்து நின்ற பிறகு மாடுகளுக்கு தீபாராதணை காட்டி, சிதறு தேங்காய் உடைப்பாங்க. வீட்டில் எவ்வளவு தேங்காய் இருந்தாலும் சிதறு தேங்காயை எடுக்கும் யாராவது ஒருவர் அதிலிருந்து சிறிது கொடுத்து சாப்பிட்டால் அதன் ருஸியே தனிதான்.
கார், டிராக்டர், இரு சக்கர வாகனங்கள் என பலமணி நேரத்திற்கு ஊரை சுற்றுவாங்க. இதில் குட்டிப் பிள்ளைகள் வைத்திருப்பவர் பாடுதான் திண்டாட்டம். அவர்களும் ஊரைச் சுற்றிவரும் ஆசையில் இருப்பாங்க. வாகனங்களின் எண்ணிக்கை குறந்தபிறகு அவர்களை வைத்துக்கொண்டு வீட்டிலுள்ளோர் மெதுவாக சுற்றி வருவாங்க. இந்த ஊர்வலம் முடியவே நன்றாக இருட்டிவிடும்.
இது எல்லாம் முடிந்த பிறகு வீட்டில் படைப்பாங்க. மாடுகளுக்கும் சாதம், வாழைப்பழம் எல்லாம் சாப்பிடக் கொடுப்பாங்க. பிறகு எல்லோரும் சாப்பிடுவாங்க. தினமும் சாப்பிடும் கரும்புதான், ஆனாலும் இன்று யாருக்கும் பயப்படாமல் கரும்பை ஒருகை பார்க்கலாம்.
அதன்பிறகு அப்பா ஒரு தாம்பூலத் தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து அதில் காசு வைத்து அம்மாவுடன் சேர்ந்து நின்று வீட்டில் உள்ள எல்லோருக்கும் கொடுப்பாங்க. நாங்க ஒவ்வொருவரும் அவங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு தட்டிலுள்ள தாம்பூலத்தை எடுத்துக்கொள்வோம்.
வெளியாட்களும், பிள்ளைகளும்கூட நிறையபேர் வருவாங்க. ஏற்கனவே சொன்னேனே, சில்லறையைப்பற்றி, அது இதுக்குத்தான். வருகின்ற எல்லோருக்கும் காசு, தாம்பூலம் வைத்து கொடுப்பாங்க. எல்லா வீட்டிலும் இது நடக்கும்.
வருடாவருடம் நடக்கும் இது 1999 ஆம் வருடத்துடன் முடிந்து போனது. 2000 ஆம் ஆண்டின் பொங்கல் வர ஒரு மாதத்திற்கு முன்னரே எங்க அப்பாவை இழந்துவிட்டோம். அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் அம்மாவிடம் வாங்கினேன்.
2001 ல் நான் இங்கு வந்துவிட்டதால் அதுவும் நின்று போனது. தம்பி மட்டும் எல்லா விசேஷங்களுக்கும் அம்மாவிடம் ஆசி வாங்குவது தொடர்கிறது. மற்றவர்கள் அவரவர் குடும்பம், வேலை என்ற அலைச்சலில் மறந்துபோயினர்.
இந்த நிகழ்ச்சி எல்லாம் மனதிற்கு இதமானது. எங்கிருந்தாலும் வருடந்தோறும் மாட்டுப்பொங்கல் அன்று இந்த நிகழ்வுகள் மனதில் வந்து ஒரு சந்தோஷத்தையும், அதைத்தொடர்ந்து கண்கள் குளமாவதும் வாடிக்கையாகிவிட்டது.
[.............மிரண்டுபோன மாடுகளை எவ்வாறு சமாதானம் செய்வது, சொம்பில் எடுத்து வைத்த பொங்கல் தண்ணீர் என்ன ஆனது, கரிநாள் விசேஷம் என்ன என்பதெல்லாம் அடுத்த பதிவில் ..............(தொடரும்) ]
உங்களுடன் நானும் வந்து மாட்டுப் பொங்கல் கொண்ட்டடிய திருப்தி கொடுத்து விட்டீர்களே !
ReplyDeleteநீங்கள் சொல்வது மஞ்சு விரட்டு தானே! இப்பொழுதெல்லாம் அது நடக்க கோர்ட் ஆர்டர் வேண்டுமென்கிறார்கள். எல்லா இடங்களிலும் நடப்பது இல்லை.
பிளாக்கில் Do Not Copy போட்டு விட்டீர்களே!
பொங்கலுக்கு முன்பாகவே பொங்கல் பதிவுகளைப் போட்டு அசத்தி விட்டீர்கள்.
இது மஞ்சு விரட்டு இல்லீங்க. சும்மா மாடுகளைக் கூட்டமாக வைத்திருந்து, அவற்றை சுற்றி தமுக்கு அடித்து, தீபாராதணை காட்டி அனுப்பி விடுவார்கள். இப்போதைக்கு மாடுகளைப் பார்க்கக்கூட முடிவதில்லை. எல்லாம் மாறிப்போனது.
DeleteDo Not Copy ஐ இருக்கட்டுமே என போட்டு வைத்திருக்கிறேன்.
பதிவுகள் முடியவும் பொங்கல் வரவும் சரியாக இருக்கும் என்பதற்குத்தான் முன்னமே போட்டுவிட்டேன். ஒரு ரகசியம் சொல்லட்டுமா, பொங்கலை சென்ற வெள்ளிக் கிழமையே, மகள் வீட்டில் இருக்கும்போதே கொண்டாடியாச்சுங்க. பொங்கலைக் கூடவே வந்து கொண்டாடிக் கொண்டிருப்பதற்கு நன்றிங்க.
இனிய நினைவுகள் மன மகிழ்ச்சியைத் தந்தது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDeleteபொங்கல் விழாவை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் மேடம். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Deleteகண்முன் வந்ததற்கு சிறுவயதிலிருந்தே பொங்கல் விரும்பிய பண்டிகை என்பதால்கூட இருக்கலாம். உங்கள் ஊர் பொங்கல் பண்டிகையையும் நாங்கள் காண சீக்கிரம் பதிவாக்குங்கள்.
ovoru variyaiyum nandraaga eluthukirirgal..ungal nenaivugalaal 90 vayathanaalum pongalai siru pirayathil kondadiyathai pol kondadi kondirupirgal endre nenaika thondrukirathu :)
ReplyDelete90 வயசு போதுமா என்ன !!
Deleteநினைவுகள் இருக்கும், ஆனால் கொண்டாட வேண்டுமே ! எங்க வீட்ல ஜனவரி 3ந் தேதியே பொங்கலைக் கொண்டாடிவிட்டேன். ஒருநாளைக்கு ஊரில் வந்து செட்டிலானதும் தடபுடலாக கொண்டாடிவிடலாம்னு எண்ணம்.
மாட்டுப் பொங்கல் நாங்களும் உடனிருந்து கொண்டாடியது போன்று இருந்தது...
ReplyDeleteஓ, அப்படியா !! சந்தோஷம். வருகைக்கும் நன்றிங்க.
Deleteமாட்டுப் பொங்கல் - கொண்டாட்டங்கள் கண் முன்னே..... தொடர்கிறேன்.
ReplyDeleteசிறுவயது நினைவுகள்...எத்தனை வருடங்கள் ஆனாலும் அப்படியே இருக்கிறது. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றிங்க.
Deleteரொம்பவும் தாமதமாக வந்து இந்தப் பதிவைப் படித்தேன். ஆனாலும், பொங்கல் வருடந்தோறும் கொண்டாடும் பண்டிகை அல்லவா? அதனால் சுவையாகவே இருந்தது.
ReplyDeleteஅடுத்த பதிவிற்குப் போகிறேன்.
தாமதமாக வந்தாலும் வந்துட்டீங்க என்று மகிழ்ச்சிதாங்க. நீங்க வருவீங்கன்னு முன்கூட்டியே தெரிந்துதான் உங்களுக்காக கொஞ்சம் பொங்கல் எடுத்து வச்சிருக்கோம் !!
Delete