Monday, January 6, 2014

பொங்கல் ஸ்பெஷல் _____ பெரும்பொங்கல்

 
படம் உதவி கூகுள்

தை மாதம் முதல் தேதி பெரும்பொங்கல். பொங்கல் கொண்டாட்டத்தின் முக்கியமான நாள் இன்றுதான்.

அறுவடை செய்த புது நெல்லின் புது பச்சரிசியில் பொங்கல் செய்து சூரியனுக்கு படையல் செய்வதுதான் பெரும்பொங்கல் என்று சொல்வார்கள். சூரிய உதயத்தில் படையல் செய்ய வேண்டும் என்றும் சொல்வார்கள். ஆனால் எங்கள் ஊரில் சூரிய அஸ்தமனத்தின் போதுதான் படையல் செய்வார்கள்.

இன்று அதிகாலையில் எழுந்து தெருவில் உள்ள மண் தரையில் மாக்கோலம் போட்டு, அதில் பல நிறப் பொடிகளைத் தூவி அழகாக்குவோம். பொங்கல் பானையும், கரும்பும் கோலத்தில் இருக்கும். பூசணிப் பூ அலங்காரமும் உண்டு.

வீடு, வாசல் எல்லாம் கழுவிவிட்டு, நேற்றே ஊற வைத்துள்ள வெள்ளமணக் கட்டியில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி, நீர்க்கக் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து அதை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு லேஸாக பிழிந்துவிடுவதுபோல் செய்து மோதிர விரலின் உதவியால் கோலத்திற்கான கோடுகளை வீடு முழுவதும் வரைந்து, யாரும் மிதித்து விடாமல் அது காயும்வரை பாதுகாத்து வைப்பது ஒரு சந்தோஷம்.

பெரிய வாசற்படியிலுள்ள அழகான கிளியுடன் கூடிய டிசைன்களுக்கு இடையில் ஒவ்வொரு சாமந்திப் பூவாக நிறைய‌ வைப்போம். கதவு, சன்னல்களில் பூசை, மஞ்சள், குங்குமம் எல்லாம் வைத்து, அதன்மேல் சந்தனம் தெளித்துவிட்டு, பார்க்கவே மங்களகரமாக இருக்கும். ஏமாந்தாற்போல் கதவுகளில் சாய்ந்துவிட முடியாது.

கழனியில் இருந்து நெற்கதிர்கள், மாவிலைகள், பிரண்டை போன்ற இன்னும் சில இலைகள் எல்லாம் பறித்துவந்து சணல் கயிறின் உதவியுடன் எங்கப்பா நிறைய தோரணங்கள் கட்டுவார். வீட்டில் நிறைய அறிவுகால்கள் உண்டு. எல்லாவற்றிலும் இந்தத் தோரணம் கட்டப்படும்.

இந்தத் தோரணத்திலுள்ள நெல்லைக் கொறிப்பதற்கு நிறைய சிட்டுக் குருவிகள் வரும். எங்கள் வீட்டிலேயே குடும்பமாக இருந்தன. அவற்றிற்கு மாவு சலிக்கும் சல்லடை வைத்து வீடு கட்டி வைப்பார். வீட்டில் எந்நேரமும் கீச்சுகீச்சு சத்தம்தான்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமாக பொங்கல் செய்யப்படும். ஒருசில வீடுகளில் அவரவருக்கு சொந்தமான‌ கழனியில் பொங்கல் செய்து படையல் செய்து வீட்டிற்கு எடுத்துவர நள்ளிரவாகிவிடும். எங்கள் வீட்டில் தோட்டத்திலேயே தோட்ட வாசல்படிக்கு நேராக அடுப்பு தோண்டி வீட்டிலேயே செய்துவிடுவோம்.

காலையிலேயே உறவு மாமா ஒருவர் வந்து தோட்டத்தில், மண்தரையில்,  நீளவாக்கில் ஒரு அடுப்பு தோண்டுவார். அவர் கொஞ்சம் ஏமாந்தால் போதும், கடப்பாரை எங்கள் காலில்தான் இருக்கும். அந்த அளவிற்கு அவர் அடுப்பு தோண்டுவதை கிட்ட நின்று வேடிக்கை பார்ப்போம். தோண்டும்போது வரும் மண்ணை புதையல் மாதிரி நீ, நான் என போட்டிபோட்டு எடுக்க முற்படுவோம். சமயங்களில் திட்டும் விழும்.

தோண்டும்போது வரும் மண்ணை வைத்து இரண்டு பெரியபெரிய பானைகள் வைத்து பொங்கல் செய்வதற்கு ஏற்றவாறு 5 கொம்மைகள் வைப்பார். அவை  சாணம் போட்டு மெழுகி வைக்கப்படும். அடுப்பில் ஈரம் போக வேண்டும் என்பதற்காக தவிடு, வேர்க்கடலைத் தோல் என போட்டு வைப்பர்.

அடுப்பில் விறகு வைத்து எரிய வைக்க இரண்டு வழிகள் வைப்பார். இது தவிர அடுப்பை சுற்றிலும் இருந்து விறகு வைத்தும் எரிய வைக்கலாம்.

மீதமுள்ள மண்ணை வைத்து அடுப்பிற்கு எதிரே ஒரு பொங்கல் மேடை செய்யப்படும். அதில் கோலம் போட்டு ஒரு செங்கல்லில் இரண்டு சாணப் பிள்ளையார்களைக் கையால் பிடித்து வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து, அவற்றின் இடையில் அருகம்புல் சொருகி, பூ வைப்பாங்க. அதற்குப் பக்கத்திலேயே வைக்கோல் அல்லது மண்ணால் பானைகளை வைக்க ஒரு இடம் செய்திருப்பர்.

பெரும்பொங்கல் அன்று 11 அல்லது 9 சின்னபடி அரிசி வேகுமளவிற்கு ஒரு பெரிய பானையும், 3 அல்லது 5 சின்னபடி சர்க்கரைப்பொங்கல் வைப்பதற்கு ஒரு பானையும், அவற்றிற்கான மூடிகளும் தயாராயிருக்கும். பானைகளுக்கு பூசை, பொட்டிட்டு, மஞ்சள் கிழங்குடன் கூடிய செடியைக் கட்டி வச்சிருப்பாங்க.

பொங்கலைக் கிண்டிவிட நீளமான துடுப்பு (மரக்கரண்டி) செய்யப்படும்.

நல்ல நேரம் பார்த்துதான் பானையை அடுப்பில் வைப்பாங்க. வைத்து அதில் நிறைய தண்ணீர் ஊற்றி மூடி, தண்ணீர் ஏதும் கசிகிறதா என்று பார்த்துவிட்டு,  கொஞ்சம் பாலும் சேர்த்து, அதன்பிறகு பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டி, வேறொரு கற்பூரத்தை ஏற்றி அடுப்பிலுள்ள விறகில் போட்டு பற்ற வைப்பாங்க.

பானையிலிருந்து தண்ணீர் கசிந்தாலோ அல்லது ஓட்டை ஏதும் இருந்து தண்ணீர் வெளியேறினாலோ கெட்ட சகுனமாக நினைப்பாங்க‌.

அதன்பிற‌கு கடகடவென அடுப்பை எரிய விடவேண்டும். பானை பத்திரம் ! உலை கொதித்ததும் பச்சரிசியை அப்படியே கொட்டிடுவாங்க.

பொங்கல் பொங்கி வெளியே வழிய வேண்டும். அப்போது பொங்கலோபொங்கல் என அடுப்பை சுற்றி நின்று சத்தம் போடுவாங்க.  பொங்கலை எங்க அம்மாதான் கிண்டி விடுவாங்க. மண் பானையாச்சே !!

கூடவே பக்கத்திலேயே தயாராகும் சர்க்கரைப் பொங்கலையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொங்கல் இரண்டும் தயாரானதும் நல்ல பலசாலிகளாக இரண்டு பேர் சேர்ந்து இறக்கி வைத்து மூடி வச்சிடுவாங்க. மாலை ஆறு மணிக்குதான் படைப்பாங்க. அடுப்பில் நிறைய நெருப்பிருக்கும். அதில் தண்ணீர் சுடவைத்து மீண்டும் ஒரு குளியல்.

இன்று எல்லோரும் தலை குளிப்பாங்க. வடை பாயஸத்துடனோ அல்லது அது இல்லாமலோ சைவ சாப்பாடு தயாராகும்..

பொங்கல் மேடையில் ஒரு சிறு பூசணிக்கீற்று, கரும்பு,  தேங்காய், பழம் எல்லாம் வைத்து படையல் செய்வோம்.

பெரும்பாலான தோட்டங்களில் பேத்தி இலை என்று ஒரு இலை கிடைக்கும். உள்ளங்கையில் வைத்து சாப்பிடும் அளவில் சிறுசிறு இலைகளாக இருக்கும். அவற்றைப் பறித்து வந்து கழுவிவிட்டு அதில்தான் பொங்கல் படைப்பாங்க. படைத்த பிறகு இலையுடன் எடுத்து கையில் வைத்துக்கொண்டு சாப்பிட லாவகமாக இருக்கும்.

தோட்டத்தில் படையல் செய்து முடித்தவுடன் பானைகளை உள்ளே எடுத்துக் கொண்டுபோய் சாமி அறையில் வைத்துவிட்டு, வீட்டுக்குள் தயாரான சாப்பாடு இப்போது படையல் செய்யப்படும்.

பிறகு சர்க்கரைப் பொங்கல் & சாதாரண பொங்கல் இரண்டையும் உறவு & தெரிந்தவர்கள் வீடுகளுக்கு கொடுத்தனுப்புவார்கள். அவர்களின் வீடுகளில் இருந்தும் எங்கள் வீட்டிற்கு அவர்கள் செய்த பொங்கல் வரும்.

அடுத்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள்.

நிறைய சாதம் மீதமாகும். எத்தனை நாட்கள் இருந்தாலும் இந்த சாதம் வீணாகாமல் 'கல்'லு மாதிரியே இருக்கும். அடுத்த நாள் மீதமானதை கரைத்து மாடுகளுக்குக் கொடுத்துவிடுவார்கள்................(தொடரும்)

18 comments:

 1. Replies
  1. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க தனபாலன்.

   Delete
 2. நல்வாழ்த்துக்கள். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், நல்வாழ்த்துகளுக்கும் நன்றிங்க ஆஸியா.

   Delete
 3. உங்கள் பொங்கல் நினைவுகள் மறக்காமல் நடந்ததை அப்படியே அழகான நடையில் அருமையாய் சொல்கிறீர்கள். உங்கள் சிட்டுக் குருவி வீடு ,மிகவும் ரசித்தேன் இரு சொல்ல வேண்டும். சிட்டுக் குருவிகளை இங்கெல்லாம் இப்பொழுது இல்லை. சிட்டுக் குருவிகளைத் தொலைத்து விட்டோம். அடுத்த தலைமுறைக்கு பார்ப்பதற்கு இல்லாமல் போய் விடும் அபாயம் இருக்கிறது.

  உங்கள் பொங்கல் சிறப்பு .சுவையாய் இருக்கிறது. தொடருங்கள்.....

  ReplyDelete
  Replies
  1. போன வருட பொங்கலைக் கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் சிறு வயது நினைவுகள், ஒவ்வொரு வருடமும் அம்மா செய்வதைப் பார்த்துப்பார்த்து அப்படியே மனதில் பதிந்துவிட்ட‌து. பாராட்டுக்கு நன்றிங்க.

   தினமும் அதிகாலை தூக்கக் கலக்கத்துடன் இரண்டு புறாக்கள் (ஒருவேளை இங்குதான் தூங்கறாங்களோ !!), சிட்டுக்குருவிகள், தவிட்டுக்குருவி மாதிரியானவை, தேன்சிட்டு இவையெல்லாம் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள இரண்டுமூன்று செடிகளுக்கு வாடிக்கையாளர்களாகி விட்டனர். பூ, இலைகள், குச்சி என ஒன்றையும் விடுவதில்லை.

   Delete
 4. தொடரட்டும் நினைவுகள்.....

  நானும் தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றிங்க வெங்கட்.

   Delete
 5. மலரும் நினைவுகள் படித்தேன் மேடம். பலரும் மறந்து போன மாட்டுப்பொங்கல். சிறு வயது ஞாபகம் எட்டிப்பார்க்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க !! அடுத்த பதிவு எங்க ஊர் மாட்டுப் பொங்கல்தான்.

   உங்கள் பொங்கல் நினைவுகளையும் எழுதுங்க, உங்க ஊர் பொங்கலை நாங்களும் சுவைக்கிறோம். வருகைக்கு நன்றிங்க.

   Delete
 6. முழுக்க முழுக்க நகரத்திலேயே வளர்ந்துவிட்டதால், நீங்கள் எழுதியதை படிக்கும்போது நிறைய மிஸ் பண்ணிவிட்டது போல இருக்கிறது.
  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கோலம் போடும் வெள்ளை மண் கட்டி இங்கும் கிடைக்கிறது. 'அறிவுகால்கள்' என்றால் என்ன?
  //அவற்றிற்கு மாவு சலிக்கும் சல்லடை வைத்து வீடு கட்டி வைப்பார்// உங்கள் அப்பா குருவிகளுக்கு வீடு கட்டி வைப்பாரா?

  அடுப்பிற்கு தோண்டும் மண்ணில் பொங்கல் பானைகள் செய்வோம் என்று எழுதியிருக்கிறீர்களே, பானையை சுட வேண்டும், இல்லையா?

  5 கொம்மைகள் என்றால் என்ன?

  சூரிய அஸ்தமனத்தின் போது பொங்கல் படைப்பது என்பது கொஞ்சம் வியப்பான செய்தியாக இருந்தது.

  நிறைய கேள்விகள் கேட்டுவிட்டேன். (வரிவிடாமல் படித்து விட்டேன் என்று சொல்லவும் வேண்டுமோ?)

  ReplyDelete
  Replies
  1. அறிவுகால்கள்னா 'வாயிற்படி'ங்க. ஒருவேளை 'நிலைப்படி'ன்னு சொல்லுவீங்களோ !

   'அடுப்பிற்கு தோண்டும் மண்ணில் பொங்கல் பானைகள் செய்வோம் என்று எழுதியிருக்கிறீர்களே, பானையை சுட வேண்டும், இல்லையா?'___________ நீங்க முழுசா படிச்சீங்கன்னு நம்பிட்டேஏஏஏன். பானையை வைத்து சமைக்க அடுப்பு தோண்டும்போது வரும் மண்ணில் கொம்மைகள்....அதாவது பெரிய பானைகளைத் தாங்கும் பெரிய மண் உருண்டைகள் செய்வாங்க‌.

   சிட்டுக்குருவிகளின் முட்டை, குஞ்சு எல்லாம் கீழே விழுந்து உடைந்துவிடும் என்பதற்காக சல்லடையை இரும்பு ஆணி வச்சு கெட்டியாக விழாமல் இருக்க வைப்பாங்க. அவை அதில் தைரியமா, எஞ்ஜாய் பண்ணி தங்குவாங்க. கேள்விக்கணைகள் பாய்ந்தால்தானே பிடிக்கிறது.

   Delete
  2. //தோண்டும்போது வரும் மண்ணை வைத்து இரண்டு பெரியபெரிய பானைகள் வைத்து பொங்கல் செய்வதற்கு ஏற்றவாறு 5 கொம்மைகள் வைப்பார். // இந்த வரிகளை தவறாகப் புரிந்து கொண்டுவிட்டேன்! பானைகள் வைத்து என்பதை பானைகள் செய்வது என்று ....ஹி..ஹி...!
   ஏற்கனவே சொல்லிட்டேன் முழுக்க முழுக்க நகரவாசின்னு....!

   Delete
  3. பின்னூட்டத்திற்கு மீண்டும் வந்து பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றிங்கோ !

   Delete
 7. கோலம் போடுவதைப் பற்றி நீங்கள் சொல்வதிலிருந்தே
  உங்கள் கோலத்தின் அழகை மனதில் உருவகப்டுத்த முடிந்தது.
  நல்ல பதிவு

  ReplyDelete
  Replies
  1. டொக்டர் ஐயா,

   மார்கழி வந்தாலே எங்கிருந்தோ அந்தக் கோலம் போடும் உற்சாகம் வந்து தொற்றிக்கொள்ளும். தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க.

   Delete
 8. உங்கள் நினைவுகளை படிக்கும் போதே நாங்களும் உங்களுடன் கொண்டாடிய உணர்வைத் தந்தது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க.

   Delete