Thursday, March 19, 2015

என்ன அப்பா இவர் ? ____ (தொடர்ச்சி)

........ அவரது பையனைப் பற்றி நான் சொன்னதும் அவருக்கு என்மேல் இன்னும் பாசம் அதிகமாகிவிட்டது.

தனது வீட்டுக்காரரின் ஆறு மாத ப்ராஜக்ட் மேலும் நீட்டித்திருப்பதால், தான் இங்கு வந்ததாகவும், எப்போது வேண்டுமானாலும் இந்தியா திரும்பவேண்டியிருக்கும் என்றும், அதற்குள் சில இடங்களை சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்றும் கூறினார்.

வாரத்தில் ஒரு நாள்தான் வருவார். சில சமயங்களில் அதுகூட வரமாட்டார். மொத்தமே எண்ணி நான்கைந்து முறைதான் சந்தித்திருப்பேன்.

அம்மா வந்துள்ளதை அவரது பையன் பார்த்துவிட்டால் போதும், விளையாட்டோ அல்லது ஓய்வோ ஓடிவந்து கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விட்டுத்தான் செல்வான்.

தன்னிடம் வருகின்ற பந்தை அவன் அடித்துவிட்டால் எல்லோரும் கை தட்டுவதைப் பார்த்து, மகிழ்ந்து, அடுத்து வரும் பந்தை கண்டு கொள்ளாமல்,  தான் ஏதோ சாதனை நிகழ்த்திய‌துபோல்(சாதனைதான்) சுற்றிலும் ஒரு பார்வை பார்ப்பான் பாருங்கோ ..... அது கொள்ளை அழகாக இருக்கும்.

பயிற்சியாளரோ உடன் விளையாடும் பிள்ளைகளோ யாருமே எதுவுமே சொல்லமாட்டார்கள். மாறாக அவனை உற்சாகப்படுத்துவர்.

இதுவரை எல்லாமும் நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் வழக்கம்போல் நான் உட்பட பலரும் கோர்ட்டுக்கு வெளியே நின்றும், உட்கார்ந்துகொண்டும் இருந்தோம். நவம்பர் மாதமாதலால் சீக்கிரமே இருட்டத் தொடங்கியிருந்தது.

விளையாடி முடித்த பிள்ளைகள் வழக்கம்போல் பெற்றோர் வந்து அழைத்து போகும்வரை உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர். என் மகள் மாதிரியான வாண்டுகள் பெற்றோர் வந்தும்கூட வீட்டுக்கு போகாமல் தன் தோழமைகள் விளையாடுவதை ரசித்தும், உற்சாகப்படுத்திக்கொண்டும் இருந்தனர்.

திடீரென ஒரு குரல், "ச..... எழுந்து வா" என்ற குரல் கேட்டு திடுக்கிட்டுப் போனேன். திரும்பிப் பார்த்தால் அச்சு அசலாக அந்தக் குட்டிப் பையன் போலவே இருந்தார் ஒருவர். சந்தேகமே இல்லை, இது சாய் அப்பாதான் என்பது புரிந்தது.

அந்த வட்டத்துக்குள் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்த சாய் தன் அப்பாவின் குரலைக் கேட்டதும் எல்லோரிடம் bye சொல்லிவிட்டு எழுந்து வந்தான்.

அதற்குள் என்ன அவசரமோ, "எரும மாடு மாதிரி வர்றத பாரு, சீக்கிரம் வா" என்றார்.

'அப்பா என்ன சொல்கிறார்' என்பது பையனுக்கு புரிந்ததோ என்னவோ அவனது முகம் சுருங்கிவிட்டது.

இந்தப் பேச்சுக்கள் எல்லாம் நம் ஊரிலும் கேட்டதுதான் என்றாலும், அவையெல்லாம் கோபத்தில் வந்திருக்குமே தவிர, இவ்வளவு வெறுப்பில் வந்திருக்காது.

கிராமத்தில் கேட்காத வார்த்தைகளா ? அல்லது கடைத்தெருவில் நுழைந்தால் கடைக்காரரிடம் பெறாத வார்த்தைகளா ?

அங்கு எல்லோருமே சத்தம் போட்டு பேசுவதால் அவற்றின் வீரியம் தெரியாது. ஆனால் இங்கு ? யாருக்கும் புரியப் போவதில்லை, இருந்தாலும் ?

அடுத்த தடவை அவனது அம்மா வந்தால் 'எப்படி அவரை எதிர்கொள்வது' என எனக்குக் கொஞ்சம் கூச்ச‌மாக இருந்தது.

அடுத்தடுத்த வாரங்களில் சாய்'யையும் காணோம், அவனது அம்மாவையும் காணோம். ஊருக்குத் திரும்பியிருப்பார்களோ !

என் மகளைக் கேட்டபோது, அவனுக்கான சிறப்புப் பள்ளியில் இடம் கிடைத்து சென்றுவிட்டதாகக் கூறினாள்.

நல்லவேளை, சாய் அம்மாவை நான் மீண்டும் சந்திக்காமல் போனேன் !

22 comments:

 1. வணக்கம்
  சொல்லி முடித்த விதம் வெகு சிறப்பு.. மகன் மூலமே தந்தையை அறிந்தீர்கள்... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன்,

   ஹ்ம், தெரியாமலே இருந்திருக்கலாம். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

   Delete
 2. கதையா...? உண்மை நிகழ்வா...?

  ReplyDelete
  Replies
  1. ஆ ஆ , லேபிளில் 'கதை'ன்னு போட்டும் சந்தேகம் வந்துவிட்டதே !

   Delete
 3. அப்பாவின் வெறுப்பைப் பற்றிப் படித்ததும் , சாய் ஐ நினைத்து மனம் கனத்து விட்டது சித்ரா.
  தனபாலன் சார் கேட்பது போல் நானும் கேட்கிறேன் ," கதை தானே இது ?" (உண்மை நிகழ்வாக இருக்கக் கூடாது என்று மனம் ஏங்குகிறது .

  ReplyDelete
  Replies
  1. மனம் ஏங்கியும் என்னங்க‌ செய்வது ? ஒவ்வொரு அப்பாவும் ஒவ்வொரு மாதிரிபோல !

   Delete
 4. எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அனிதா, இவர்கள் எல்லோரும் சேர்ந்ததுதான் சமூகமாயிற்றே !

   Delete
 5. உண்மையிலேயே மனம் கனத்துவிட்டது. எனக்கு கதை வாசித்ததும் உடனே கருத்து போடமுடியவில்லை. அதே யோசனை.என்ன செய்வது இப்படியும் மனிதர்கள்........

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்வது ? 'பையனின் நிலையைப் புரிந்துகொள்ள முடியாத அப்பாவாக இருக்கிறாரே' என எனக்கும் நீண்ட நாட்கள் வேதனையாகத்தான் இருந்தது.

   Delete
 6. Replies
  1. கவியாழி கண்ணதாசன்,

   இது கதைதான். கொஞ்சம் நீளமானதால் இரண்டு பாகமாக்கிவிட்டேன்.

   உங்கள் வருகையில் மகிழ்ச்சி.

   Delete
 7. என்ன மனிதரோ :( சிலர் இப்படித்தான்

  ReplyDelete
  Replies
  1. அஞ்சு,

   என்ன செய்வது :(

   Delete
 8. நிஜத்திலும் நான் பார்த்திருக்கேன்
  இப்படி உலாவும் சில ஜந்துக்களை ...

  ReplyDelete
  Replies
  1. விஷயம் தெரிந்தவர்களே இப்படி நடந்துகொள்ளும்போது எரிச்ச்ச்சல் வருகிறது .

   Delete
 9. இரண்டும் வாசித்தோம். நிகழ்வா?! கதையானாலும் உண்மை நிகழ்வு போல் உள்ளது. என்றாலும் சாய் மனதைத் தொட்டு விட்டான். இப்படியும் அப்பாவா? அதுவும் இந்தக் காலத்தில்! ஆச்சரியமாக இருக்கின்றது....

  ReplyDelete
  Replies
  1. கீதா,

   இந்தக் காலத்திலும் இதுபோல, அதிலும் படிச்சவங்களே இப்படி இருப்பது ஆச்சரியமாத்தான் இருக்கு. வருகைக்கு நன்றி கீதா !

   Delete
 10. என்ன அப்பா இவர்! - இப்படியெல்லாமும் மனிதர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்....:((

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஆதி, இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் !

   Delete
 11. என்ன் அப்பா இவர் சங்கடமாய் இருக்கு இன்னும் எத்தனை காலம் அந்த மனிதரிடம் போராடணும் அம்மாவும் மகனும்

  ReplyDelete
  Replies
  1. எழில்,

   நமக்கே சங்கடமாய் இருக்கும்போது அவர்களின் நிலையை நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

   Delete