Wednesday, May 6, 2015

சுற்றுலா லிஸ்ட் !



எனக்கு விஷயம் தெரிந்து, "ஓ. இப்படியெல்லாம்கூட இடங்கள் இருக்கிறதா ? கண்டிப்பாக இங்கே சென்று எப்படி இருக்குன்னு பார்த்து வர வேண்டும் !" என்ற ஆவல் ஏற்பட்டது முதன்முதலில் முகலாயர்களின் வரலாறு அறிமுகம் ஆன‌போதுதான்.

ஆம், நான் முதன்முதலில் சென்று பார்க்க வேண்டும் என நினைத்தது பாபர் மசூதியைத்தான். முதல் ஆசையே இப்படி முடிஞ்சு போச்சே !

பாபரைப் பற்றி படித்தபோது மகனுக்காகத் தன் உயிரையே கொடுக்கத் துணிந்த அந்த‌ செண்டிமென்டான விஷயத்தால்கூட ஒருவேளை ஈர்த்திருக்கலாம்.

அடுத்து ஜும்மா மசூதி, தாஜ்மஹால், செங்கோட்டை, இரும்புத் தூண் என எல்லாமும் வரிசைகட்டி வந்தன.

பாடப் புத்தகத்தில் உள்ள இந்திய வரைபடத்தைப் பார்த்து சென்னைக்கும் கன்னியாகுமரிக்குமான தொலைவு, அடுத்து சென்னையிலிருந்து நேரே டில்லிக்கு உள்ள தொலைவை ஸ்கேல் உதவியுடன் அளந்து பார்த்து, ஒப்பிட்டு எல்லாமும் பக்கத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டது என எல்லாமும் வேடிக்கைதான்.

நாளடைவில் தாஜ்மஹால் ஒரு உலக அதிசயம் என்பதைக் கேள்விப்பட்டு, இப்போது உலக அதிசயங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் இரண்டு வகுப்புகள் முன்னால் போய்க்கொண்டிருக்கும் சகோதரியைக் கேட்டுக் குறித்துக்கொண்டேன்.

விருப்பத்தில் முதலாவதாக இடம் பிடித்தது 'தாஜ்மஹால்'தான்.  அடுத்து இடம் பிடித்தது சீனப் பெருஞ்சுவர். பீஸா நகரத்து சாய்ந்த கோபுரம் அடுத்தது என பட்டியல் நீண்டுகொண்டே போனது.

அதன் பிறகான சுற்றுலா எண்ணம் உள்ளூரை விட்டுவிட்டு, உலகளவில் பரந்து விரிந்தது என்பதுதான் உண்மை. எப்படியாவது உலக அதிசயங்களைப் பார்த்துவிட வேண்டுமென ஆசை.

உலக அதிசயங்களின் வரிசை அடிக்கடி மாறும் என்பதுகூட‌ அப்போது எனக்குத் தெரியாது. இந்த உலக அதிசயங்கள் ஏழா அல்லது ஒன்பதா என்பதில் இன்னமும் குழப்பம்தான்.

அப்பாவை அழைத்துப் போக சொல்ல முடியுமா ?  சொன்னாலும் நடக்கிற காரியமா ?

எனவே வேலைக்குப் போனதும், பணத்தை சேமித்துக்கொண்டு, முதல் வேலையாக‌ ............. !  ஹா ஹா ஹா !!

வந்தது வாய்க்கும், கைக்குமே பத்தவில்லை. வாழ்க்கை என்பது என்னவென்று புரிய ஆரம்பித்ததும் சுற்றுலா எண்ணத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டாச்சு.

இப்படியாக நான் பாட்டுக்கும் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென‌ Jurassic Park படம் வந்தது. படம் பார்த்தபோது Dinosaur ஐ விட அதில் வரும் நீர்வீழ்ச்சியைப் பார்த்துத்தான் நான் வியந்தேன்.

பிறகு அது நயாகரா என்று கேள்விப்பட்டு, அதை நானும் நம்பி, அக்காட்சி 'எப்படி எடுக்கப்பட்டது' என்ற சூட்சுமம் தெரியாமல், எப்போதாவது ஒரு சான்ஸ் கிடைத்தால் நயாகராவைப் பார்த்துவிட வேண்டும் என முதல்முறையாக உலக அதிசயங்களில் இருந்து வெளியில் வந்தேன்.

லிஸ்டில் இருந்த ஒன்றையாவது பார்த்தேனா என்றால் ? :)))))  அதுதான் இல்லை.

சில வருடங்களுக்கு முன்புகூட 'மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தால், உலக அதிசயத்தில் இடம்பெறச் செய்யலாம்' என ஓட்டு போடச் சொன்னார்கள். 

கண்டிப்பாக ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் , "அட, நானும் ஒரு உலக அதிசயத்தைப் பார்த்துவிட்டேனே" என பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் என ஆசையாக இருந்தேன் !

ஒருசமயம் இதுவரை இரண்டு நாடுகளாகப் பிரித்துக்கொண்டிருந்த‌ ஒரு சுவரை உடைத்துக்கொண்டு மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடியதைப் பார்த்து எனது லிஸ்டில் அந்த இடத்தையும் சேர்த்துக்கொண்டேன்.

இப்போது புது உறவு ஒன்று அங்கே பூத்திருப்பதால் என்றைக்காவது அதுவும்கூட‌ நிறைவேறலாம்.

சமீபத்தில்கூட‌, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த மிக‌ நெருங்கிய உறவு ஒன்று திடீரென தொடர்பு எல்லைக்குள் வந்து, வேலை விஷயமாக தான் வட இந்தியா வந்திருப்பதாகவும், பிடித்தால் அங்கேயே தங்கிவிட முடிவு செய்திருப்பதாகவும் சொல்லிவிட்டு, அடுத்த முறை இந்தியா வரும்போது நேரே, அங்கேயே வந்துவிடும்படி எனக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.

ஆஹா, இன்னார் மூலம் நம் வட இந்திய‌ கனவு நிறைவேறப் போகிறது என நினைத்த சில வாரங்களிலேயே, " சாப்பாடு பிடிக்கல, ஹிந்தி தெரியாம காலத்த ஓட்ட முடியாதுபோல, ஊருக்குக் கிளம்பிடலாம்னு நினைக்கிறேன்" என சொல்ல‌வும், அடித்துப் பிடித்து "அப்படியெல்லாம் கிடையாது, கொஞ்ச நாட்களானால் எல்லாம் சரியாகும்" என சொல்லி, என் கனவை நிறைவேற்றிக் கொள்ள, இஷ்ட தெய்வங்களை எல்லாம் துணைக்கு அழைத்திருக்கிறேன், அழைத்தவரின் மனதை மாற்ற !!

படிக்கும் காலங்களில் மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இடையிடையே பல ஊர்கள் அந்த சுற்றுலா லிஸ்டில் வந்து சேரும். போகிறேனோ, இல்லையோ லிஸ்ட் மட்டும் நீஈஈண்டுகொண்டே இருக்கிறது :)

8 comments:

  1. சுற்றுலா எண்ணங்கள் விரைவில் நிறைவேறட்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா, நிறைவேறினால் வந்து சொல்கிறேனே !

      வருகைக்கு நன்றி தனபாலன்.

      Delete
  2. ஹா...ஹா..ஹா!!! சித்ரா..... சென்னை-டில்லியை ஸ்கேல் கொண்டு அளந்த ஆள் என்றா நீங்க ஒருவராகத்தான் இருக்கமுடியும்.
    நானும் படிக்கும் காலத்தில் எங்க நாட்டிலேயே பார்க்க ஆசைப்பட்ட இடங்கள் இருக்கு. அப்போ எங்களுக்கு பிரச்சனைக்காலம். அதனால நிறைவேறவில்லை. ஐரோப்பாவில் இருந்தா ஈபில்டவர், பீஸா கோபுரம் பார்க்கலாம். சித்ரா சர்வீஸ் ல் ஐரோப்பாவுக்கு டூர் வாங்க. ஹி...ஹி...ஹிஹி
    ரெம்ப பீல் பண்ணாதீங்க சித்ரா..... உங்க ஆசை கண்டிப்பா ஒருநாள் நிறைவேறும்!!!.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியா,

      முன்பெல்லாம் இலங்கை வானொலி நிறைய கேட்பேன். கண்டி, யாழ்ப்பாணம் என சொல்லும்போதெல்லாம் பார்க்க வேண்டும் என நினைப்பதுண்டு. உங்களை மாதிரிதான் பிரச்சினைகள் ஆனதும் எடுத்து மூட்டை கட்டியாச்சு. 'போயே ஆகணும்' என்பதெல்லாம் இல்லை. ஆனாலும் லிஸ்ட் போடாமல் இருக்கமாட்டேன்.

      எங்கட பஸ் சர்வீஸ் அங்கே வந்தால் ஓனர் மட்டுமே வரவேண்டும். பயணிங்க ரெண்டு பேரும் ஏற மாட்டாங்க. கம்பெனிக்குக் கட்டுப்படி ஆகுமா? யோசிச்சு சொல்றேன். அழைப்புக்கு நன்றி ப்ரியா !

      Delete
  3. சுவாரஸ்யம் சித்ரா...ஆசைகள் அனைத்தும் கூடிய விரைவில் ஒவ்வொன்றாக நிறைவேறட்டும். அப்போ தானே நிறைய பதிவுகள் தொடரும். மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் அல்லவா....

    அப்போவே ஸ்கேலால் அளந்து பார்த்து இருக்கிறீர்கள் தூரத்தை....

    ReplyDelete
    Replies
    1. உமையாள்,

      ஹா ஹா ஹா, விவரம் தெரியாத நாட்களில்லையா, அதான்! போய்ட்டு வந்தா கதை அளக்க வசதியா இருக்கும். வருகைக்கு நன்றி உமையாள்.

      Delete
  4. ஹஹ்ஹஹ செம போங்க.....நல்லகாலம் தாஜ்மஹாலைப் பார்க்க வில்லை....அது ஒன்றும் உலக அதிசயமல்ல மக்கள் சொல்லுவது போலவோ நினைப்பது போலவோ....அதை விட இயற்கைதான் பெஸ்ட் அதைப் போன்ற அதிசயங்கள் இவ்வுலகில் உண்டோ சொல்லுங்கள்?!!!! அதனால் இயற்கைச் சுற்றுலா லிஸ்ட் ஒண்ணு ஆரம்பிங்க...இது எப்புடி ஹஹஹஹ்.....என்றாலும் தங்களின் லிஸ்ட் நிறைவேறட்டும்..இறைவனின் அருளால்....வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. சுந்தரும் இதையேதான் சொன்னார்,'நல்லவேளை, நீ அங்குபோய் பார்க்காத வரைக்கும் அது அழகுதான், ஒரு பிடிக்காத ஸ்மெல் வரும்" என்று சொன்னார். இயற்கை அழகே தனிதான்.

      ஹா ஹா ஹா இப்போ 'இன்னொரு லிஸ்ட்' ஆ !! வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி கீதா.

      Delete