Tuesday, May 26, 2015

மல்லாட்டைக்குப் போவ‌ணும் !

முன்குறிப்பு :-

முன்பெல்லாம் எங்கள் ஊரில் மல்லாட்டை பிடுங்குகிறார்கள் என்றாலே திருவிழா போல் இருக்கும். கொல்லி எங்கும் மக்கள் நடமாட்டமும் கூடவே அவர்களின் பேச்சு சத்தமும் அதிகமாக இருக்கும். சூரியன் மறைந்தும் சில மணி நேரங்கள்வரை இது நீடிக்கும்.

இதெல்லாம் ஒரு இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால். இப்போது எல்லாமும் போய் கொய்யா தோப்பும், சவுக்கு மரங்களும்தான் எங்கும் காட்சியளிக்கின்றன. காரணம் ஆட்களின் பற்றாக்குறையும், விவசாயத்தில் ஏற்படும் நஷ்டமும்தான்.

இக்கதையில் வரும் நாயகியின் பெயர் இராணி. பெயரிலாவது வசதியுடன் உலவ விடுவோமே ! நாயகனாக இருந்திருந்தால் ? ......... இராஜா என்றே சூட்டியிருப்பேன்.
                                                                                                                     படம் உதவி:கூகுள்

இராணிக்கு பக்கத்து ஊரில் நெருங்கிய உறவிலேயே, அவளுக்கு விருப்பம் இல்லாமலேயேத் திருமணம் முடிக்கப்பட்டது. அதைக் காரணம் சொல்லியே ஆரம்ப வருடங்களில் வாழாமல் அம்மா வீட்டிலேயே இருந்தாள்.

அப்பாவின் திடீர் மறைவுக்குப் பின்னால் தனக்குப் பின்னாலுள்ள மூன்று தம்பிகளை வைத்துக்கொண்டு அம்மா படும் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு, 'அம்மாவுக்குத் தன்னைப்பற்றிய வேதனையையாவது கொஞ்சம் குறைப்போமே' என்ற எண்ணத்தில், வேறு வழியில்லாமல் வாழ வந்தாள். இதோ மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகியும்விட்டாள்.

கணவன், மனைவி இருவருமே கூலிவேலை செய்து பிழைப்பவர்கள்தான். காலை, மாலை என விடாமல் ஓடிக்கொண்டே இருப்பவர்கள்தான். ஆனாலும் ராணியின் வேகமும், உற்சாகமும் அவளது கணவனுக்கு சுட்டுப் போட்டாலும் வராது.

சுத்தம்னா சுத்தம் அப்படியொரு சுத்தம். டைல்ஸ், மார்பிள்ஸ் வைத்து கட்டப்பட்ட இன்றைய நவீன‌ தரையே பார்த்து வெட்கப்படும் அளவில் அவள் வீட்டின் மண் தரை இருக்கும்.

எல்லோருக்கும் வருடத்தில் ஒருமுறைதான் பொங்கல் வரும். பொங்கலின் போதுதான் வீட்டை சுத்தம் செய்வார்கள். ஆனால் இவளோ வருடம் முழுவதும் வீட்டின் பொக்கைபோரை எல்லாம் மண் கொண்டு அடைத்து பூசி, சாணம் போட்டு மெழுகி தரையைக் கண்ணாடிபோல் பளபளப்பாக‌  வைத்திருப்பாள்.

மாலை ஆறு மணிக்கு அடுப்பை பற்ற வைத்து உலையில் அரிசியைப் போட்டுவிட்டு வீட்டின் எதிரில் இருக்கும் முருங்கை மரத்தின் துளிர் இலைகளைப் பறித்து கீரையை ஆயவும், சோறு வெந்து வரவும் சரியாக இருக்கும்.

பருப்பு வாங்க முடியாமலோ அல்லது சிக்கனம் கருதியோ கஞ்சி வடித்த தண்ணீரையே மீண்டும் அடுப்பில் ஏற்றி கீரையைப் போட்டு கடைந்து வைத்துவிடுவாள்.

மறுநாள் அந்த மரத்திலுள்ள முருங்கைக் காய்களே புளிக்குழம்பு அல்லது காரக்குழ்பு என்ற பெயரில் குழம்பில் மிதந்துகொண்டிருக்கும்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து வெளியே தள்ளிக்கொண்டிருக்கும் வயிறை 'துளியளவு உள்ளே தள்ள முடியாதா !' என்ற ஏக்கத்தில் இருப்பவர்களுக்கு மத்தியில் இவர்களுக்கு 'வயிறு என்ற ஒன்று இருக்கிறதா ?' என்பதே தெரியாமல் வறுமையில் உள்பக்கமாக இழுத்து கட்டப்பட்டதுபோல் இருக்கும். உடலில் எலும்பைத் தவிர கிள்ளியெடுக்க துளி சதை இருக்காது.

ஊரில் மாசி மாதம் பிற‌ந்ததுமே இங்கொன்றும் அங்கொன்றுமாக மல்லாட்டை பிடுங்க ஆரம்பித்துவிடுவார்கள். இது பங்குனி, சித்திரையில் சூடு பிடித்துவிடும்.

இதோ ராணியும் மல்லாட்டைக்குத் தயாராகிவிட்டாள். முறம், கூடை எல்லாம் எரவானத்திலிருந்து(பரண்) தூசி தட்டி எடுக்கப்பட்டுவிட்டது. சாக்குகள் தயாராயின.

பொங்கலுக்கு வாங்கிய பானைகளைத் துடைத்துக் காய வைத்து மல்லாட்டை கொட்டி வைக்கத் தயார் செய்துவிட்டாள்.

மல்லாட்டை பிடுங்கும்போது ஒரு நாள் தவறாமல் வேலைக்குப் போய் சேர்த்து வைப்பாள். அதிகாலையே எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு முதல் நாள் பொறுக்கிய மல்லாட்டையை வாசலில் கொட்டிவிட்டு கூடையுடன் கிளம்பிவிடுவாள்.

போகும் வழியில் எந்தக் கொல்லியில் உள்ள செடிகளில் நிறைய மல்லாட்டை இருக்கிறது என பேசிக்கொள்கிறார்களோ அந்த கொல்லிக்கு நடையைக் கட்டுவாள்.

மல்லாட்டைக்குப் போகும்போது அவளுக்கு காலை, நண்பகல் இரண்டு வேளை சாப்பாடு மிச்சம். என்னதான் கொல்லிக்காரர்கள் 'மல்லாட்டையத் திண்ணாதீங்க‌, ஆஞ்சி(ஆய்ந்து) கூடையில போடுங்க‌' என சுற்றிசுற்றி வந்தாலும் பிடுங்குபவர்கள் தின்ற மீதிதான் கூடையில் விழும்.

மாலையில் பிடுங்கிய மல்லாட்டைக்கு கூலி வாங்கிக்கொண்டு வீடு திரும்புவாள்.

மல்லாட்டைக்குப் போகும் நாட்களிலெல்லாம் இரவு ஏழு மணிக்குமேல்தான் வீட்டுக்கு வந்து அடுப்பே பற்ற வைப்பாள். சோறு வேகும்வரை பிள்ளைகள் இவள் கூலியாக வாங்கி வந்த மல்லாட்டையைக் கொறித்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

அடுத்த நாள் காலையில் வீட்டு வாசலில் கொட்டப்பட்ட மல்லாட்டையை அவளது கணவன் அவற்றை ஒன்றின்மேல் ஒன்று இல்லாமல் விரவிவிட்டு காய வைப்பான். காய்ந்ததும் மாலையில் பள்ளி விட்டு வரும் அவளது பிள்ளைகள் சாக்கில் அள்ளி வைத்துவிடுவார்கள்.

இவையெல்லாம் வருடந்தோறும் நடக்கும் நிகழ்ச்சிகள்தான்.

வழக்கம்போல் இந்த வருடமும் மல்லாட்டைக்குப் போனாள். முதல்நாள் கூலியை வாங்கிக் கொண்டுவந்து படுத்தவள்தான், அடுத்த நாள் கண் விழித்தது பக்கத்து ஊரிலுள்ள அரசு பொது மருத்துவமனையில்.

உடலில் தெம்பு இல்லாததாலோ அல்லது பசியினால் நாள் முழுவதும் அளவுக்கு அதிகமாக பச்சை மல்லாட்டையைத் தின்றுத்தின்று தண்ணீரைக் குடித்துக்கொண்டே இருந்ததாலோ என்னவோ,  இரவு முழுவதும் வயிற்றுப்போக்கு, வாந்தி என உடல்நிலை கெட்டு, எழுந்து உட்காரக்கூட முடியாத நிலையில் மாட்டுவண்டி கட்டி அழைத்து வந்திருந்தனர்.

உடல்தான் மருத்துவமனையில், உள்ளம் முழுவதும் மல்லாட்டைக் கொல்லிகளில் !

மல்லாட்டைக்குப் போய் நிறைய கூலி வாங்கிவந்து காய வைத்து, எடுத்து வைத்துக்கொண்டால் 'தின்றத்துக்கு இன்னா இருக்கு' என்று பிடுங்கி எடுக்கும் பிள்ளைகளுக்கு வருடத்திற்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கலாம்.

உரித்த பயறை செக்கில் கொடுத்து எண்ணெய் ஆட்டி வைத்துக்கொண்டால் வருடத்திற்கு குழம்பு தாளிக்கலாம், தீபாவளிக்கு அதிரசம், முறுக்கு, வடை என எல்லாமும் சுட்டு பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம்.

எண்ணெய் ஆட்டும்போது கிடைக்கும் புண்ணாக்கை விற்று காசாக்கி செலவுக்கு வைத்துக்கொள்ளலாம் ....... இவ்வாறெல்லாம் மனது நினைத்துத் துடித்தது.

"சீக்கிரமே உடல்நிலை தேறி மல்லாட்டைக்குப் போவ‌ணும்" என்று ராணியின் உள்ளம் கிடந்து அடித்துக்கொண்டதே தவிர, உடல் அசையக்கூட மறுத்தது.

*******************************************************************************

இந்த நிலை ராணிக்கு மட்டுமல்ல, ஆணோ, பெண்ணோ பெரும்பாலானோரின் அன்றைய நிலையும் இதுதான்.

*******************************************************************************

11 comments:

  1. உடல்தான் மருத்துவமனையில், உள்ளம் முழுவதும் மல்லாட்டைக் கொல்லிகளில் !//
    ஆம்.... கதை நல்லா இருக்கு...சித்ரா...
    ஆளையே..காணோமே...நலமா ? சகோ

    ReplyDelete
    Replies
    1. நலம்தான் உமையாள். விசாரிப்புக்கு நன்றியும் மகிழ்ச்சியும். வருகைக்கு நன்றி உமையாள்.

      Delete
  2. வணக்கம்

    இவைஎல்லாம் மறக்க முடியாத காலங்கள் ....

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனிதா மனிதத்தை இழந்தாயடா..:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சரியாவே சொன்னீங்க, அவை மறக்க முடியாத காலங்கள்தான். வருகைக்கு நன்றி ரூபன்.

      Delete
  3. "மல்லாட்டை" 2முறை வாசிச்சாச்சு. மனதை தொட்டுவிட்டது. அழகான யாதார்த்தமான எழுத்தில் வடித்திருக்கிறீங்க சித்ரா. எனக்கும் எங்க ஊரில் நடந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது. சூப்பர்,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஓ, உங்க ஊர் நினைவுகளை ஞாபகப்படுத்தியதில் மகிழ்ச்சி ப்ரியா. கூடவே இருந்து பார்த்ததால் எழுத்துக்களும் அப்படியே வந்துவிட்டது.

      நேரில் இருந்து பார்ப்பதுபோல் எழுதும் பரியாவின் கை வண்ணத்தில் உங்க ஊர் கதைகளையும் படிக்க ஆசை, முயற்சி செய்யுங்கோ !! வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ப்ரியா.

      Delete
    2. "ப்ரியாவின் கைவண்ணத்தில்" னு திருத்தி படிங்க.

      Delete
  4. மனதைத் தொட்ட அழகான கதை! இது போன்ற பெரும்பாலானோரின் வாழ்க்கை இப்படித்தான் செல்கின்றது....ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. வறுமையுடன், சமயம் பார்த்து நேரமும் சேர்ந்து பழிவாங்கி விடுகிறது, என்ன செய்வது ? கதையைப் படித்துக் கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி கீதா.

      Delete