 |
படம் இணையத்திலிருந்து. வெளிநாட்டுப் பெண்மணிகளை நம் நாட்டு பெண்களாக்கியது மட்டும் நான் :) | |
'வரு'வும் 'சாரு'வும் பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் மட்டுமல்ல, தங்களின் எதிர்மறையான குணங்களாலும் பிரிக்க முடியாத, நெருங்கியத் தோழிகளாக உள்ளனர்.
பள்ளியில் வேலை செய்கின்ற அவர்களில் ஒருவர் கணித ஆசிரியை என்றால் மற்றொருவர் மொழிப்பாடம். இதிலும் வேறுபாடுதான்.
இவர்களைப் போலவே இவர்களின் கணவர்களும் எதிர்மறையானவர்கள்தான். இப்போதைக்கு இவர்களைப் பற்றிய வம்பு நமக்கெதுக்கு. அதுதான் பதிவின் முடிவிலே தெரிந்துவிடப் போகிறது !
வரலஷ்மி ப்ரியா அதாங்க நம்ம 'வரு' கலகலப்புக்குப் பஞ்சமில்லாதவர். துணிச்சலாகப் பேசும் தைரியமிக்கவர். முக்கியமாக எந்த ஒரு வேலையையும் ஆறப் போடமாட்டார்.
அப்படின்னா நம்ம சாருமதி அதாங்க நம்ம 'சாரு' மருந்துக்கும் சத்தம்போட்டு பேசமாட்டார். அமைதியோ அமைதி. தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர். அவ்வப்போது கொஞ்சம் சோம்பேறித்தனம் எட்டிப்பார்ப்பது உண்டு.
இப்படியான குணமுள்ள இவர்கள் தோழிகளானதில் ஏதும் சந்தேகமில்லைதானே !
வெளியூர் என்பதால் 'வரு' சீக்கிரமே பள்ளிக்கு வந்துவிடுவார். மதிய உணவுடன் காலை உணவையும் கட்டிக்கொண்டு வந்துவிடுவார்.
உள்ளூர் வாசம் என்பதால் சாரு சரியான நேரத்திற்குதான் வருவார்.
வழக்கம்போல் ஒருநாள் காலையில் வரு வேலைக்கு வந்தபோது அதிசயமாக இவருக்குமுன் சாரு அங்கிருந்தார்.
வரு, "என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க ?" என்று சொல்லிக்கொண்டே பள்ளியின் 'கேட்'டுக்கு வெளியே வாங்கிய ரோஜாக்களில் ஒன்றை 'ஹேர்பின்'னுடன் 'சாரு'வுக்குக் கொடுத்தார்.
மேசையிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்து, "அந்த ஆளு இன்னைக்கு லீவு போட்டுட்டு வீட்ல உக்காந்திருக்கு, அதான் பிரச்சினை வேண்டாமே என முன்னமேயே கிளம்பி வந்துட்டேன்" என்று சொல்லும்போதே 'சாரு'வுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.
"லீவுதானேன்னு கொஞ்சம் நிம்மதியா இருக்க விடறதில்ல, வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு இடத்தில் மாற்றிமாற்றி வைக்க வேண்டியது. எந்த பொருள் எங்க இருக்குன்னே மறந்து போச்சு. ஒரு நாளைக்கு இந்தப் பக்கம் திரும்பியிருக்கும் சோஃபா அடுத்த வாரமே வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருக்கும். கடுப்பா இருக்கு வரு" என்றார் சாரு.
"கேக்க நல்லாத்தானே இருக்கு, வீடும் சுத்தமாச்சு, பார்க்கவும் புதுசா இருக்கும்" என்றார் வரு.
சுட்டெரிப்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "இந்த வேலையை அவரே செஞ்சிட்டா ஒரு பிரச்சினையும் இல்ல. என்னையும் செய்யச் சொல்லும்போதுதான் பிரச்சினை பூதாகரமாவுது. ஒருவார்த்தை பேசுறதுக்குள்ள ஆயிரம் வார்த்தைகள் வந்து விழுது, சமயத்துல கையும் நீண்டுடுது, அப்படித்தான் நேத்தும் .... " சாரு'வுக்குக் கண்கள் குளமாகின.
" கை நீட்றதெல்லாம் ரொம்பவே ஓவர்தான் " என்று சொல்லிக்கொண்டே வரு தன் 'ஃப்ளாஸ்க்'கிலிருந்த 'காபி'யை இரு கோப்பைகளில் ஊற்றி தனக்கொன்றும், காலையில் சாப்பிடாமல் வந்திருக்கும் தன் தோழிக்கும் ஒன்றைக் கொடுத்தாள். (ஹி ஹி படத்தினால் காலைச் சிற்றுண்டி 'காபி'யாகிவிட்டது)
"பிள்ளைங்க, வீடு, வேலை .... எவ்ளோதான் முடியும் ? இவர் போயி கதவைத் தொறந்தா ஆஃபீஸு, இல்லாட்டி லீவு, ஆனா நமக்கு அப்படியா ? பசங்களே வராட்டியும் நாம வந்துதானே ஆகணும் " விடுவதாயில்லை சாரு.
" நீங்கள்ளாம் கொடுத்து வச்சவங்க வரு. உங்க வீட்ல நீங்க சொன்னதை கேட்கிறார், ஒரு வார்த்தை அதிர்ந்து பேசமாட்டேன்கிறார். இப்படி அமைஞ்சா கோயில் கட்டி கும்பிடலாம், இதுவும் இருக்கே !! " என்றார் கோபமாக . கை நீண்டதால்தான் மரியாதை இல்லாமல் போனதோ !
இடைமறித்த வரு, "நீங்க வேற, நாள் முழுசும் கத்தினாலும் ஒரு வார்த்தை பதிலா வராது, ஏதாவது பதில் வந்தாத்தானே நம்ம பேச்சுக்கு ஒரு மரியாதை இருக்குன்னு நினைக்கலாம். கை நீட்றத சொல்லல, மத்தபடி அது மாதிரி அமைஞ்சா கோயில் என்ன, கோயில் கட்டி கும்பாபிஷேகமே பண்ணலாம் " என்றார்.