கொள்ளை அழகுடன் !
என்னைப் பார்க்கவில்லையாம் !
அவிழ்த்து விடேன் !!
கோடையில் ஊருக்குப் போயிருந்த சமயம் ஒரு உறவு வீட்டிற்கு முதல்முறை போனபோது அம்மாவின் வயிற்றில் இருந்தவர், மூன்று வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அவ்வீட்டிற்கு சென்றபோது இப்படி ஜம்மென்று கொள்ளை அழகுடன் இருந்தார்.
பார்த்ததும், 'அட, நம்ம பிரேம்குமார் மாதிரியே இருக்கே' என்று க்ளிக்'கிக்கொண்டு வந்தேன்.
டிசம்பர் மாதம், விடுமுறையில் வீட்டிற்கு வந்த மகளுடன் ஊரில் எடுத்த புகைப் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, "அம்ம்ம்மா, கேமராவுல இது எப்படி வந்துச்சு?" என்ற மகளின் ஆச்சரியக் கேள்வியால், 'வீட்டுக்குள் இருந்த மகளைத் தோட்டத்திற்கு அழைத்துபோய் காட்டாமல் விட்டுவிட்டேனே' என்று என்னையே நான் நொந்துகொண்டேன்.
" ..... அவங்க வீட்டிற்கு போயிருந்தபோது, எங்க பிரேம்குமார் மாதிரியே இருக்கவும் 'க்ளிக்'கினேன்", என்றேன்.
உங்களை மாதிரியேதான் மகளும், "யாரும்மா உங்க பிரேம்குமார் ?" என்று கேட்டாள்.
ஆமாம், யார் அந்த 'பிரேம்குமார்' ?
நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது எங்கள் வீட்டிற்கு மாடு ஒன்றின் திடீர் வருகை. வந்த சில நாட்களிலேயே அது கன்று ஒன்றை ஈன்றது. அச்சு அசலில் படத்தில் இருக்கும் இந்த கன்று போலவேதான் இருந்தது அது.
அதுக்கு நான் வைத்த பெயர்தான் பிரேம்குமார். அப்போது நான் படித்துக்கொண்டிருந்த துப்பறியும் கதையின் நாயகனின் பெயர்தான் அது.
எங்கிருந்து கூப்பிட்டாலும் முழு பெயெரோ அல்லது பிரேம் என்றாலோ அக்கன்று 'டக்'கென திரும்பிப் பார்க்கும். வளர்ந்த பிறகும் அப்படியேதான்.
இப்போதும் நாங்கள் சகோதரசகோதரிகள் ஒன்றாகக் கூடினால் எங்க 'பிரேம்' பற்றி பேசாமல் இருக்கமாட்டோம்.
பெயர் வைப்பதை இத்துடன் நிறுத்தமாட்டேன். பிடித்தவர்களின் வீட்டில் குழந்தை பிறந்தாலும் அவர்களின் குழந்தைக்கு ஒரு பெயரை வைத்துவிடுவேன். யார்யாரெல்லாம் வளர்ந்த பிறகு என்னைத் திட்டினாங்களோ !
ஆண் குழந்தை என்றால் பெரும்பாலும் கதையின் நாயகனாகவே இருப்பார்கள். பெண் குழந்தையாக இருந்தால் உடன் படித்த & பிடித்த தோழிகளின் பெயராக இருக்கும்.
இப்படித்தான் அண்ணனின் மூன்று குழந்தைகளுக்கும் பெயர் வைத்தேன். நல்லவேளை, எங்க அப்பா எல்லா பெயர்களையும் மாற்றி வைத்துவிட்டார். ஆனாலும் பெண்ணுக்கு மட்டும் நான் வைத்த பெயரே இன்றளவும் கூப்பிடும் பெயராக உள்ளது.
மாடு என்றாலே பெரும்பாலும் 'லஷ்மி'னுதான் பேர் வைப்பாங்க. ஆனால் நான் கொஞ்சம் வித்தியாசமாக இல்லையில்லை அதிவித்தியாசமாக, ஆமாங்க 'லஷ்மி' என பெண்ணின் பெயரை வைக்காமல் 'பிரேம்குமார்' என ஆணின் பெயரை வைத்திருக்கிறேன் என்பது சமீபத்தில்தான் தெரிந்தது.
நான் பயம் இல்லாமல் பழகியது கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டி, கோழிக்குஞ்சு இவைகள் மட்டுமே. இவர்களின் கொள்ளை அழகில் மயங்கிவிடுவேன்.
கன்றுக்குட்டியும், ஆட்டுக்குட்டியும் திடீர்திடீர் என எழுந்து குதிக்க ஆரம்பித்து விடுவார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் நம் கால் விரல்களைப் பதம் பார்த்துவிடுவர். கோழிக் குஞ்சுகளின் கண்களுக்கு மை தீட்டிய மாதிரியே இருக்குமே, அது மனதைக் கொள்ளைகொள்ளும்.
ஆனாலும் இவர்களின் அம்மாக்கள் இவர்களை நாம் தொடுவதைப் பார்த்துவிட்டால் தீர்ந்தோம்.
மாடு கயிறை அறுத்துக்கொண்டு முட்ட வந்துவிடும். ஆடு அந்தளவிற்கு இல்லையென்றாலும் அதுவும் கோபப்படும். கோழி சொல்லவேத் தேவையில்லை, பறந்துபறந்து அடிக்கும்.
ஆனால் இவற்றை வளர்ப்பவருடன் நாம் ஒட்டிக்கொண்டு சென்றால் ஓரளவுக்குப் பிரச்சினை இருக்காது. இதுமாதிரி நிறைய வீடுகளுக்கு படையெடுத்திருக்கிறேன்.
இப்போது இவர்கள் எல்லோரும் எங்கேயோ போய்விட்டார்கள், பார்க்கவே முடியவில்லை !