Thursday, January 2, 2014

புதுவருட நல்வாழ்த்துக்கள் !!

டிசம்பர் 30 ந் தேதி மாலை 7:00 மணியளவில் பிருந்தா கொத்துமல்லி & புதினா துவையல் அரைப்பதற்காக மிக்ஸியை எடுத்து, கழுவி & தண்ணீர் வடிக்கப்பட்ட இலைகளை பெரிய ஜாரில் அமுக்கு அமுக்கென்று அமுக்கி (இதுதான் பிரச்சினையே), கூடவே சிறிது புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து ஸ்விட்சைப் போட்டவுடன் வழக்கத்திற்கு மாறாக‌ இன்று  'கடகட' வென்ற‌ சத்தத்துடன் மிக்ஸி ஓடியது.

'என்னதிது, புளியங்கொட்டை அரைபடுதா ?' என நினைத்து ஒரு முறை ஜாரில் உள்ள எல்லாவற்றையும் துழாவி, அலசிப் பார்த்துவிட்டு மீண்டும் ஜாரில் போட்டு ஓடவிட்டதும், இம்முறையும் முதலில் வந்த சத்தமே மீண்டும் வரவும், மீண்டும் ஒருமுறை எல்லாவற்றையும் ஒரு தட்டில் கொட்டி,.....படிக்கிற உங்களுக்கே இவ்வளவு கடுப்பா இருக்குன்னா, பிருந்தாவின் நிலை எப்படி இருந்திருக்கும் ?

ஜாரின் பின்புறத்தை எல்லாம் நன்றாகப் பார்த்துவிட்டு, சிறிது தண்ணீர் விட்டு ஓடவிட்டும், இம்முறையும் ...... !!

சரியென வேறொரு ஜாரில் கொட்டி,.....ம்ஹூம், சத்தம் வந்ததே தவிர, உள்ளேயுள்ள ப்ளேடு சுற்றவில்லை. இப்போது முதல் முறையாக மிக்ஸியை மட்டும் ஓட விட்டபோதுதான் தெரிந்தது, ஜாரையும், மிக்ஸியையும் பொருத்துமிடத்திலுள்ள ப்ளாஸ்டிக் பட்டன்கள் (கப்ளர்/Coupler) கொட்டியுள்ளது என்று .

பிருந்தாவுக்கு சோகம்னா சோகம், அப்படியொரு சோகம். புதுவருடம் ஆரம்பிக்க இடையில் ஒருநாளே உள்ள நிலையில் இவ்வளவு சோகம் வந்து அப்பிக் கொண்டதே . அவசரத்திற்கென இந்த ஊர் மிக்ஸி கராஜில்(Garage)  தூங்கிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் நம்ம ஊர் மிக்ஸி மாதிரி வருமா !

பிருந்தா புலம்பிய புலம்பலில் அவள் கணவர் 'நாளைக்காலை முதல் வேலையாக கடைக்குபோய் இதே மாதிரி ஒரு மிக்ஸியை வாங்கிடலாம்' என்றார். அது 'மனைவியின் மேல் உள்ள பாசத்தினாலா' அல்லது 'தேங்காய் சட்னியின்மேல் உள்ள பிரியமா' தெரியவில்லை. அந்த வார்த்தைகள் அந்நேரத்திற்கு அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.

மிக்ஸி வாங்கும்போதே மேலும் ஒருசில பொருள்களையும் தன் தம்பி கேட்டு வாங்கிக் கொடுத்தது நினவிருக்கிறது. அதில் இது இருக்குமா தெரியவில்லையே.

விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ள அவளது பெண் 'அம்மா, சின்ன மாமாகூட புதுச்சேரி போய்ட்டு வாங்கினோமே, அந்த மிக்ஸியா?' என்றாள்.

'ஆமாம்' என்றாள் பிருந்தா.

'மாமாகூட, கடைக்காரருடன் பேசி சில முக்கியமான பார்ட்ஸ் எல்லாம் வாங்கினாரே, அதை ச்செக் பண்ணிப் பாரும்மா' என்றாள் பெண் பிருந்தாவின் சோகமான முகத்தைப் பார்த்து. 'அம்மா புலம்பலை நிறுத்தினால்தான் இரவு ஒழுங்காகத் தூங்க முடியும்', என்றுகூட கனித்திருக்கலாம்.

'ஆமாம், ஆனால் உடைந்துபோன இது அதில் இருக்கவேண்டுமே' என்று சொல்லிவிட்டு, எப்போது விடியும் என்று காத்திருந்தாள், கராஜைப் போய் கலைத்துப்போட.

டிசம்பர் 31 ந் தேதி விடிந்ததும் விடியாததுமாக ஓடிப்போய் கராஜிலிருந்து அவசரத்திற்கு இந்த ஊர் மிக்ஸியை எடுத்துக்கொண்டு, நம்ம ஊர் மிக்ஸி வைத்திருந்த பார்சலைப் பிரித்துப் பார்த்தால், உள்ளே ஒரு ப்ளாஸ்டிக் கவரில் ........!! ஆஹா, துள்ளிக் குதிக்காத குறைதான். ஜார்களுக்குத் தேவையான ப்ளேடுகள், உடைந்துபோன அதே கப்ளர் புதிதாக‌........ என மேலும் சில பொருள்கள் ஒரு ப்ளாஸ்டிக் கவரில் இருந்தன.

அவசர  அவசரமாக வீட்டிற்கு வந்து அதை மிக்ஸியில் பொருத்தி ஓட விட்டுப் பார்த்து திருப்தி அடைந்தாள்.

'பரவாயில்லையே, நான்கூட எனக்கு வந்த இந்தப் பிரச்சினையை ஓடஓட விரட்டி விட்டேனே !! இனி புது வருடத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்', என மனதிற்குள் நினைத்தாள்.

உடனே அவளின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

2009 ல் ஊருக்குப் போயிருந்தபோது வாங்கிவந்த மிக்ஸி, தன் தம்பியின் குடும்பத்துடன் பாண்டிச்சேரிக்குப் போய், எல்லா இடங்களையும் சுற்றிவிட்டு, தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு, இரவு வீடு திரும்பும் வழியில், பரோட்டா கடையில் காரை நிறுத்தி, பார்சலுடன் நெய்வேலி வந்து சேர்ந்தது, பல்லுக்கு சரிவரவில்லை என்றாலும் தன் அம்மா பரோட்டாவை விருப்பமுடன் சாப்பிடுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டு சிரித்தது, என ஒவ்வொன்றாய் மனத் திரையில் வந்துபோனது.

அந்தத் தம்பியுடன் ஒரு சிறு பிணக்கு. இரண்டு மாதங்களாகப் பேசுவதில்லை. எல்லாம் ஒரு ஈகோதான்.

சரி, நாளை புது வருடமாச்சே, அந்த சாக்கில் அவனுடன் பேசிவிடலாம் என்றெண்ணி, மகளிடம் 'நாளை மாமாவுக்கு ஃபோன் பண்ணி பேசணும்' என்றாள்.

'கோபமெல்லாம் போயாச்சாம்மா' என்றாள் மகள்.

'எல்லா பொருளுமே அவனுடன் போய்தான் வாங்கி வந்திருக்கிறேன், எதை எடுத்தாலும் அவன் நினைவுதான் வருகிற‌து, எவ்வளவு உதவி செய்திருக்கிறான், இந்த மிக்ஸியகூட எடுத்துக்கோ, அந்த எக்ஸ்ட்ரா பொருள்களை அவனே ஞாபகமாக‌ வாங்கித் தரலைன்னாகூட...... அதனால கண்டிப்பா பேசியே ஆகவேண்டும்' என்றாள் பிருந்தா.

'அம்மா, நீ நெஜமாவே ஃபீல் பண்ணி ஃபோன் செய்யப் போறேன்னு நெனச்சுட்டேன். இதுக்காகத்தான்னா வேண்டாம்மா' என்றாள் மகள்.

அசடு பௌண்டு கணக்கில் வழிவதை அவள் முகமே காட்டிக் கொடுத்துவிட்டது.

'ஆங்கிலப் புதுவருடம் போனால் போகிறது, அடுத்தாற்போல் வரும் வருடப் பிறப்பு, மாசப் பிறப்பு என எங்கள் ஊரில் சொல்லும் தை முதல் தேதியில் பேசிவிட்டுப் போகிறேனே' என மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

அதற்கு இப்போதே ஒத்திகையும் பார்க்க ஆரம்பித்துவிட்டாள், 'பேசும்போது எக்காரணம் கொண்டும் மிக்ஸியைப் பற்றி வாயைத் திறக்கவே கூடாது', என்று !!


........எல்லோருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.......!!

28 comments:

 1. அப்பாடா...! புதிய கப்ளர் கிடைத்து விட்டது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க, சின்ன பொருளா இருந்தாலும் அது இங்கே கிடைக்க வேண்டுமே. வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

   Delete
 2. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றிங்க. தங்களுக்கும், தங்கள் குடும்பத்திரினருக்கும் இனிய ஆங்கிலப் புதுவருட நல்வாழ்த்துக்கள் !!

   Delete
 3. பிருந்தா அவர் தம்பியுடன் பொங்கலன்று பேசியதும் ஒரு பதிவு போட்டு விடுங்களேன். பிருந்தாவிடம் மிக்சி பற்றிப் பேசவேண்டாம் என்பதை நினைவுபடுத்திவிடுங்கள்..
  நல்ல அருமையான் பதிவு. அசத்துகிறீர்கள் சித்ரா. வாழ்த்துக்கள்.......தொடருங்கள்.........

  ReplyDelete
  Replies
  1. நல்லதாப்போச்சு, இன்னொரு பதிவுக்கும் ஐடியா கெடச்சிருச்சு. எதைப்பற்றி பேசக்கூடாதுன்னு நெனக்கிறாளோ பேச்சுவாக்கில் அதுதான் முதலில் வரும். இருந்தாலும் சொல்லிவைக்கிறேன். பாராட்டுக்கு நன்றிங்க.

   Delete
 4. :) பிருந்தா! :) பெயர் உங்களுக்குப் புடிச்ச பெயரோ? ;) நகைச்சுவையா எழுதிருக்கீங்க சித்ராக்கா, நல்லா இருக்கு. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  @பிருந்தா மேடம், பொண்ணு சொன்னதைக் கேட்டு தம்பியுடன் பேசுவதை தள்ளிப் போடாதீங்க..போனைப் பண்ணிப் பேசுங்க. இப்படி எல்லாம் யோசிக்கப்படாது..பேசுவதற்கு ஏதேனும் ஒரு சாக்கு, தட்ஸ் ஆல்!

  ReplyDelete
  Replies
  1. ஏதாவது ஒரு பெயர் வேண்டுமே மகி, அதனால் போட்டுக்கொண்டேன். ஆறாம் வகுப்பில், புது ஊரில், புது இடத்தில், பேந்தபேந்த முழித்தபோது, என்னிடம் பேச்சு கொடுத்த முதல் தோழி பிருந்தாவதி.

   பாப்புவுக்கு அம்மா பேச வேண்டும் என்பதுதான் விருப்பம், அதற்கான காரணம்தான் சரியில்லை என்றாள். பொங்கல்தான் வருதே, பார்க்கலாம்.

   வாழ்த்துகளுக்கு நன்றி மகி.

   Delete
 5. நல்ல பகிர்வு....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க. உங்களுக்கும், குடும்பத்திற்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.

   Delete
 6. இந்தப் புத்தாண்டில் பழைய பகைகள் மறக்கப்பட்டு, நட்பும், உறவும் பலப்படட்டும் என்கிற செய்தியாக உங்கள் கதையைப் படித்தேன் சித்ரா!

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இருங்க இருங்க, கொஞ்சம் நேராக நின்றுகொள்கிறேன். நம்ப முடியவில்லை, என்னுடைய பதிவிலும் ஒரு கருத்து இருக்கிறதா !!

   எழுதுவதற்கு உற்சாகம் கொடுத்துள்ளீர்கள், இப்போது அதில் ஒரு கருத்தும் இருப்பதாக சொன்னதில் மகிழ்ச்சிங்க.

   Delete
 7. இந்த ஆண்டும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் மேடம்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றிங்க. உங்களுக்கும் இனிய ஆண்டாய் அமைய வாழ்த்துக்கள்.

   Delete
 8. பிருந்தாவுக்கு சோகம்னா சோகம், அப்படியொரு சோகம்./// hahaha nalla eluthirukinga...happy new year to you and your family :))

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம், அவங்க சோகத்துல உங்களுக்கு சந்தோஷமா !! ஏதோ நல்லாருக்குன்னு சொல்லி சமாளிச்சிட்டீங்க !!

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

   Delete
  2. haha comedya thana eluthirukinga :P evalavu periya sogam endralum athu theernthu vitalo ( allathu ) nam manam thirunthi vittalo adutha nimidame makilchi aagum:)) nandri :)

   -Gnanaguru

   Delete
  3. அதுவா, நான் சும்மா சொன்னேன்.

   நல்ல அழகான பெயரை வைத்துக்கொண்டு 'பெயரில்லா' பெயரிலா வருவது ?

   Delete
 9. பேசிவிட்டு எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

  புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக சொல்கிறேன், ஆனாலும் காமாக்ஷி அம்மாவின் பின்னூட்டத்தைப் படித்தபிறகு 'ஈகோ' உச்சாணிக் கொம்பில் ஏறி நின்னு குத்தாட்டம் போட்டுகிட்டிருக்கு.

   வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

   Delete
 10. அதனாலென்ன கூடப்பிறந்தவன். ஹலோ அக்கா நான்தான் பேசறேன் ஆரம்பிக்க வேண்டியதுதானே. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. ம், அதானே...... !!

   என்ன செய்வது, குடும்பம், குழந்தைகள் என்றானபின் உறவுகள் கொஞ்சம் தள்ளிப்போவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது.

   காமாக்ஷிமா, மேலெ ஆதி அவர்களுக்குக் கொடுத்துள்ள பதிலைப் படித்துப் பாருங்கம்மா !! அன்புடன் சித்ரா.

   Delete
 11. காமாட்சிம்மா சொல்வது - ஹலோ நான் அக்கா பேசறேன்... என்று நீங்கள் ஆரம்பிக்க வேண்டியது தானே... என்று சொல்லியிருக்கலாம்னு நினைக்கிறேன்....:))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா !!! எல்லோரிடமும் வலியச் சென்று பேசுவது நானாகத்தான் இருக்கும். எல்லாம் பொங்கலுக்குள் சரியாயிடும்னு நினைக்கிறேன். நன்றிங்க.

   Delete
  2. அச்சச்சோ..நான் எதும்ம்ம்ம்ம்ம்ம்மே சொல்லல்லே! ;) :)

   Delete
  3. ஹா ஹா ஹா இது இன்னும் நல்லாருக்கே! மகி, கரீட்டூ, சொல்லாமல் விட்ட‌துதான் பிரச்சினையே .

   Delete
 12. வணக்கம்

  பதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  தங்ளுக்கும் தங்கள் குடும்பத்தார் அனவைருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..
  இன்னும் தை மாதம் முடியவில்லை .....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரூபன்,

   தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

   Delete