Sunday, September 7, 2014

பசுமை நிறைந்த நினைவுகள் ........ (2 )

                                     


ஒருநாள் நான் எனது சகோதரியின் வீட்டு சோளக் கொல்லைக்குப் போனேன். சோளம் செடியை அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்தேன். அங்கே ஒரு செடியின் சோளப் பூவின் அருகே மண்ணாலான குடம் போன்ற அமைப்பு இருந்தது. விசாரித்ததில் அது 'குளவியின் கூடு' என்பது தெரியவந்தது.

"இந்தக் குடத்தை செய்த குயவன் குளவியா!  " என்று என்னால் நம்பவே முடியவில்லை. இதைப் பார்த்ததும் நான் பசுமையான அந்தப் பழைய நினைவுகளுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

அந்த நினைவுகள்தான் என்ன? படித்துத்தான் பாருங்களேன் .

பத்தரூட்டு ஆயாவும் தாத்தாவும் !

நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது திடீரென பக்கத்து வீட்டிற்கு கொசவமூட்டு(குயவர் வீடு என்பதைத்தான் இவ்வாறு சொல்லியுள்ளோம் என்பது பின்னாளில்தான் எனக்குத் தெரிய வந்தது) ஆயாவும் தாத்தாவும் குடி வந்தனர். 'பத்தரூடு' என்றும் சொல்லுவோம்.

தாத்தாவுக்கு 80 வயதிற்கும் மேலிருக்கலாம். பல் ஒன்றுகூட கிடையாது. தலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கறுப்பும் வெளையும் கலந்த சில முடிகள். அவற்றை சேர்த்து சிறு குமுடி(குடுமி) கட்டியிருப்பார். தாத்தா ஒரு வார்த்தைகூட பேசி நான் கேட்டது கிடையாது. அவ்வளவு அமைதி.

ஆனால் ஆயாவோ அவருக்கு நேரெதிர். ஆயாவுக்கு அவரைவிட பத்து வயதிற்கும் குறைவாகவே இருக்கும். நெற்றி நிறைய மிகப் பெரிய குங்குமப் பொட்டு வைத்திருப்பார். இருவரும் படு ஆக்டிவ்வாக இருப்பார்கள்.

மூன்று பெண்களுக்குத் திருமணமாகியும் அவர்களின் உதவியின்றி தனித்து வாழ்ந்து தங்களின் பெண்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தனர்.

தினமும் தாத்தா ஒரு சக்கரத்தைப் பயன்படுத்தி களிமண்ணில் நீர்விட்டு நன்றாகப் பிசைந்து நிறைய சட்டி பானைகள் செய்வார். அதன் பிறகுதான் பெரிய வேலையே ஆரம்பிக்கும். ஈரப் பானைகளை மடியில் வைத்துக்கொண்டு துணிகள் சுற்றப்பட்ட மர உருண்டை ஒன்றை பானையின் உள்ளேயும் டேபிள் டென்னிஸ் பேட்ல்ஸ் மாதிரியே மரத்தாலான ஒன்றை பானையின் வெளியேயும் வைத்துக்கொண்டு தட்டி தட்டியே பானையை முழுமைப்படுத்துவார்.

ஆயா அவற்றை பைசா செலவில்லாமல்(நாங்க எல்லோரும் அவங்களுக்கு வாலண்டியர்ஸ்) சின்ன பிள்ளைகள் உதவியுடன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்சென்று காய வைப்பதும், காய்ந்ததும் ஓரிடத்தில் அடுக்கி வைக்க உதவுவதும், கொத்தாக மணிமாலைகளை பானைகளின்மேல் உருட்டி அவற்றை வழவழப்பாக்கி ..... இப்படியாக இது வாரக்கணக்கில் போகும்.

ஒரு நல்ல முகூர்த்த நாளாகப் பார்த்து வீட்டின் முன்புறமோ அல்லது பின்பக்கமோ இதுவரை செய்த பானை சட்டிகளை விறகுகளுடன் சேர்த்து அடுக்கி வைத்து மண்ணால் பூசி மெழுகி தீ வைப்பாங்க. அதற்கு 'சூளை'ன்னு பேர். சூளைகளை போடும் அன்று மழை வராமல் இருக்க வேண்டுமே என்று வேண்டிக்கொள்வார்கள்.

ஒரு நாள் முழுவதும் எரிந்து முடிந்த பின்னர் ஆயா சூளையைப் பிரித்து பானைகளை பார்த்துப் பார்த்து எடுத்து வைப்பார். நாங்கள் எல்லோரும் அவற்றை பத்திரமாக அவர் சொல்லும் இடத்தில் கொண்டு வைப்போம். அங்கேயே முக்கால்வாசி பானைகள் விற்றுத் தீர்ந்துவிடும். கருப்பாக இருப்பவை வேகாதவை என்றும் அவற்றை மிகக் குறைந்த விலையிலும் விற்று ஒரு வழியாகத் தேற்றிவிடுவார் ஆயா.

மீதியை ஆயா ஆள் வைத்து ஊர் ஊராகச் சென்று விற்று வருவார். கணக்கெல்லாம் வாய் வழிதான். எப்படித்தான் நினைவிருக்குமோ தெரியாது. சூளை முடிந்து சில நாட்களுக்கு ஆயா தினமும் வசூலுக்குக் கிளம்பிவிடுவார்.

வசூல் எல்லாம் முடிந்த பிறகு இருவரும் நல்ல துணி உடுத்திக்கொண்டு  உறவுகளைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். சில நாட்கள் கழித்துத்தான் திரும்புவார்கள்.

முகூர்த்த நாட்கள் என்றால் ரொம்பவே பிஸியாயிடுவாங்க. ஒவ்வொரு திருமணத்திற்கும் வேலைப்பாடுகள் நிரம்பிய இரண்டு பானைகளும், அவற்றிற்கு அதே வேலைப்பாடுடன் கூடிய மூடிகளும் செய்வாங்க.

வேலைப்பாடு என்றால் பானைகளில் கிளிகளும் இயற்கை சூழலும் நிரம்பிக் காணப்படும். ஏதேதோ காய்களையும், பழங்களையும் பறித்து வந்து கசக்கிப் பிழிந்து ஊறவைத்து பல வண்ணங்களைத் தயார் செய்வாங்க.

இன்றும் என் மனக்கண்ணில் அந்தக் கிளிகளும்,  மான் கூட்டமும், மயில்களும், அடர் பச்சை, சிவப்பு, நீலம், ப்ரௌன் நிறங்களும் அடிக்கடி வந்துபோகும். இந்த டிசைன்களை வரைவதற்கு தாத்தா எங்கே போய் வகுப்பெடுத்துக்கொண்டார்?

இவற்றையெல்லம் அன்று ஒன்றும் தெரியாமல் ரசித்துப் பார்த்தேன். இதுவே இன்றைய நாளாக இருந்தால் வண்ணங்களை எப்படி உருவாக்கினார் என்று வீடியோவுடன் பதிவிட்டிருக்கலாம்.

அதேபோல் குலதெய்வ வழிபாட்டுக்கு குதிரைகள் செய்து தருவார். அதன்மேல் வீரன் உட்கார்ந்து இருப்பது போலவும் இருக்கும். நிறைய வீரர்களையும் செய்வார். அவையும் பார்க்க அழகாக மூக்கும் முழியுமாக இருக்கும்..

எங்கள் வீட்டில் என்னிடம் யாராவது பக்கத்தில் இருக்கும் தண்ணீர் டம்ளரை நகர்த்தச் சொன்னால்கூட கண்டுகொள்ளமாட்டேன். மறந்துபோய்கூட தூசு துறும்பை இந்தண்டை, அந்தண்டை நகர்த்தமாட்டேன். ஆனால் இவர்கள் வீட்டிற்கு விடாமல் வேலை செய்வேன்.

அப்பா, அண்ணன் வீட்டில் இல்லையென்றால் அங்குதான் போய் சக்கரத்தை சுற்ற முயற்சிப்பதும் பானைகளைத் தட்ட முற்படுவதுமாக ஏதாவது செய்து கொண்டிருப்பேன். நான் மட்டுமல்ல, என் வயதொத்த எல்லோருக்குமே இதுதான் பொழுதுபோக்கு.

இந்த மகிழ்ச்சி எல்லாம் ஆரம்பப்பள்ளி முடிக்கும் வரைதான். ஆறாம் வகுப்புக்கு வெளியூர் போயாச்சு. விடுமுறையில் வந்தாலும் திடீரென அவர்களுடன் கலக்க கொஞ்சம் கூச்சம் & வெட்கம். எப்போதாவது என்னைப் பார்த்தால் ஆயா கேட்பது "என்ன அண்ண பொண்ணு வீட்டிற்கு வரவே மாட்டிங்குது" என்பார்.

காலங்கள் உருண்டோடியதில் தாத்தா கடவுளுடன் போய் சேர்ந்ததும் ஆயா தன் மகளுடன் போய் இருந்தார். பிறகு அவரும் தாத்தாவுடன் இணைந்துகொண்டார்.

உழைப்பின்றி அடுத்தவர் பொருளை சுரண்ட நினைக்கும் இன்றைய நாளைப் போல் இல்லாமல், அந்தத் தள்ளாத வயதிலும் உழைத்துப் பிழைக்க அவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் ?

8 comments:

  1. மனதைத் தொட்ட மனிதர்கள்......

    இப்படிப்பட்ட மனிதர்களை இப்போது சந்திப்பது கடினம் தான்....

    இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்,

      அவர்களை இப்போது நினைத்தாலும் ஒரு மரியாதை வரத்தான் செய்கிறது.

      வருகைக்கும் நன்றிங்க.

      Delete
  2. உண்மையில் பசுமையான ,இனிமையான நினைவுகள் சித்ரா. என் தாத்தா,பாட்டியும் கூட தனியே யாரையும் சாராமல் (3பிள்ளைகள்) இருந்தவர்கள். பிடிவாதமானவர்கள் அக்காலத்தவர்கள். நல்லதொரு பகிர்வு. பசுமையான ,பழைய நினைவை மீட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியசகி,

      அவர்கள் மனதளவில் தைரியமானவர்கள் போலும். உங்களின் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி.

      Delete
  3. அருமையான நினைவுகள்... புகைப்படத்தில் குளவியின் குடம் அழகு..

    ReplyDelete
    Replies
    1. எழில்,

      ஆமாம், அழகா இருக்கில்ல !!

      பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  4. இனிமையான நினைவுகள். இக்காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களை பார்ப்பது கடினம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆதி, அதனால்தான் சிலரை கடைசிவரை மறக்க முடிவதில்லை.

      வருகைக்கு நன்றிங்க.

      Delete