Friday, July 12, 2013

Flea Market



Flea Market என்றதும் பயந்துறாதீங்கோ!  பாவித்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் சந்தை. சொல்லப்போனால் மீள்சுழற்சி (Recycle) மாதிரிதான்.

திறந்த வெளியில் எண்ணிலடங்கா கடைகள் இருப்பதாலும், பொருள்களின் விலை குறைவாக இருப்பதாலும், அதனால் மக்கள் கூட்டம் அலைமோதுவதாலும்கூட‌ இந்தப் பெயர் வந்திருக்கலாமோ என்னவோ!

மின்னொளியும், AC யும் உள்ள கடைகளையேப் பார்த்துப்பார்த்து சலிப்படைந்தவர்களுக்கு இங்கு போவது ஒரு ஆறுதல்.

இந்தக் கடைகளில் பயன்படுத்திய பொருள்களும், புதிய பொருள்களும்கூட‌ விற்பனை செய்கிறார்கள். நாம் நினைத்தே பார்த்திராத பொருள்களை எல்லாம் இங்குள்ள கடைகளில் பார்க்கலாம். மொத்தத்தில் இங்கு இல்லாத பொருள்களே இல்லை எனலாம்.

பழைய பொருள்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உகந்த இடம் இது. சிலர் சில பொருள்களை வாங்கி வைத்துக்கொண்டு கடைகளைச் சுற்றி வரும்போது இதையெல்லாம்  எப்படி யோசித்து வாங்குகிறார்கள் என ஆச்சரியமாக இருக்கும்.

மேலும் பொருளை bargain / பேரம்பேசியும் வாங்கலாம் என்று சொல்கிறார்கள். பொருள்க‌ளின் உண்மையான விலை தெரிந்தால்தானே பேரம்பேசி  வாங்குவதற்கு!

நான் போவது ஜாலியா வேடிக்கை பார்க்க மட்டுமே. வீட்டிலிருந்து கிளம்பும்போதே எந்தப் பொருளும் வாங்கக்கூடாது என்ற கொள்கை கோட்பாடுகளுடன்தான் போவேன். என்னை மாதிரியான ஆட்கள் இருந்தால் பொருளாதாரம் எங்கே முன்னேறும்?

பசிக்கு சாப்பாட்டுக் கடைகளும், தாகத்திற்கு தண்ணீர் விற்பனையும் உண்டு. சில ஊர்களில் உள்ள Flea மார்க்கெட்டுகளில் பொழுதுபோக்கு வசதிகளும் உள்ளன.

காலை நேரத்தைவிட நண்பகலுக்குமேல் பொருள்களின் விலையில் கொஞ்சம் குறைத்து தருவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

இத்தனைக் கடைகளையும் சுற்றிப் பார்ப்பதற்குள் சோர்ந்துவிடுவோம். அதனால் இங்கு வருவதென்றால் வேறு வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு மட்டுமே வருவது நல்லது.

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை நாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள‌ ஒரு கல்லூரியின் மிகப் பெரிய பார்க்கிங் லாட்டில் இந்தக் கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கடைகள் இருக்கும்.

இங்கு 825 கடைகளும், தட்பவெப்ப நிலை கைகொடுத்தால் 15,000 லிருந்து 20,000 வாடிக்கையாளர்கள் வருவதாகவும் சொல்லப்படுகிறது.

நம்மைச் சுற்றியுள்ள பகுதியில் இதுமாதிரியான கடைகள் இருந்தால் ஒருதடவை போய் பார்த்துவிட்டு வருவோமே!

இந்த சந்தையில் உள்ள ஒருசில கடைகள் மட்டும் கீழேயுள்ள படங்களில் உள்ளன.


Friday, July 5, 2013

Calla lily


அழகான இந்த வெள்ளைப் பூவிற்கு ஆப்பிரிக்கா தாயகமாம். அங்கு Varkoor என்ற பெயரில் அழைக்கப்படுகிற‌தாம். பன்றியின் காதுபோல் இருப்பதால் இந்தப் பெயராம்.

ஐ! ஆப்பிரிக்க மொழியில் இரண்டு வார்த்தைகள் தெரிந்துவிட்டது. Vark  என்றால் அம்மொழியில் பன்றியாம், அப்படின்னா Oor என்பது காதாகத்தான் இருக்க வேண்டும்!

இந்த பூச்செடி எங்கள் வீட்டிற்கு எதிரில் உள்ளது. நல்ல பச்சை நிறப் பிண்ணனியில் வெள்ளை நிறப் பூக்கள் கொள்ளை அழகு!

சென்ற மாதம்வரை நிறைய பூக்களுடன் இச்செடி மிகமிக அழகாக இருந்தது. இப்போது செடி முழுவதும் வதங்கி, துவண்டு, தரையோடு தரையாகக் காய்ந்துபோய் காட்சியளிக்கிறது.

காய்ந்துதான் போய்விட்டதே, பிடுங்கிவிடுவார்களோ என்ற கவலை இல்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் வழக்கம்போல் அதே இடத்தில் புது செடி நன்கு துளிர்த்து, வளர ஆரம்பித்துவிடும். அதுவரை 'ப்ளாக்'கில் பார்த்துக் கொள்வோமே!!

இந்தச் செடியின் இன்றைய (08/12/13) நிலை.......


மீண்டும் துளிர்விட்டு பசுமையாக வளர ஆரம்பித்துவிட்டது. பார்க்கவே அழகா இருக்கில்ல !!!

Sunday, June 30, 2013

வாங்க, மீண்டும் ஊர் சுற்றுவோம் !! ____(தொடர்ச்சி)


மீண்டும் ஒருமுறை கல்லூரியைச் சுற்றிப் பார்த்துவிடலாம் என‌ பேசிக்கொண்டே இறங்கி நடக்க ஆரம்பித்தோம். இவர் 'அந்தப் பக்கம் பார்க்கிங் லாட்தான் இருக்கு, வேண்டாம்' என்றார்.

'கல்லூரியின் பார்க்கிங் லாட் எப்படி இருக்குன்னு பார்க்க வேணாமா?' என்றேன். அங்கங்கே நிறைய இடங்களில் பார்க்கிங் லாட் இருந்தது.

இவருக்கு கொஞ்சம் கடுப்புதான், வேறு வழியில்லாமல் வந்தார். குறைந்தது மூன்று மணி நேரத்தை ஓட்ட வேண்டுமே!

பார்க்கிங் லாட் தாழ்வான பகுதியில் இருந்தது. கொஞ்சம் தொலைவிலேயே வரிசையாகக் கூடாரங்களும்,மக்கள் நடமாட்டமும் தெரிய ஆரம்பித்ததும் இவர் கண்டுபிடித்துவிட்டார். இந்நேரம் நீங்களேகூட யூகிச்சிருப்பீங்க.

ஆமாங்க, கல்லூரியின் ஒரு பார்க்கிங் லாட்டில் ஒருபகுதியில் ஒவ்வொரு சனிக் கிழமையும் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணிவரை ஃபார்மர்ஸ் மார்க்கெட் உண்டு.

'உனக்கு முதலிலேயே தெரியுமா? சொல்லாம இருக்க மாட்டியே!', என்றார். இரண்டு நாட்களாக இந்த சீக்ரெட்டைக் காப்பாற்ற நான் பட்டபாடு எனக்குத் தானே தெரியும் !!

இந்தளவிற்கு ரகசியத்தைக் காப்பாற்றியதால் இனி  பழக்கம்பெனி விவரங்களைக்கூட என்னுடன் பகிர்ந்து கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இவர் ரூட்டை பிரிண்ட் எடுத்து வைக்க‌ சொன்னபோது, கல்லூரியின் பெயரைப் போட்டதும் இதுதானே முதலில் வந்தது.

(மனித நடமாட்டத்தைக் காணோமே என கவலை கொண்டவர்களுக்கு இந்தப் படங்கள் கொஞ்சம் ஆறுதல் அளிக்கலாம்.)


சரி இந்த ஊர் மார்க்கெட் எப்படி இருக்கும்னு போய் பார்த்தோம். நாங்கள் இருக்கும் ஊரில் உள்ள‌து போலவேதான் இருந்தது.

ஆனால் இங்கு கொஞ்சம் கடைகளும் அதிகம், கூட்டமும் அதிகமாக இருந்தது. நம்ம ஊர் சமோசா கடை ஒன்றும் தென்பட்டது.



தொலைவில் இருந்து பார்க்கும்போதே முதல் கடையில் ஒரு பெரிய வரிசை இருந்தது. ஒருவேளை இந்த ஊரில் நுழைவுச்சீட்டு எதுவும் வாங்க வேண்டுமோ என நினைத்துக் கொண்டே வந்தேன்.

ஆனால் அது சோளக்கதிருக்கான வரிசை என்பது அருகில் வந்த பிறகுதான் தெரிந்தது. வரிசை ஒருபக்கம் என்றாலும் அது வெள்ளை சோளம் என்பதால் நாங்கள்  வாங்கவில்லை.



தேவையான‌ காய்கறிகள், பழங்களுடன் அங்கிருந்து கிளம்பி எதிரிலேயே இருந்த ஒரு பெரிய மேடான மரங்கள் நிறைந்த புல்வெளியில் வந்து சிறிது நேரம் அமர்ந்து, வாங்கிய சோளப் பொரியில் பாதியைக் காலி பண்ணிவிட்டு பிறகு கிளம்பியாச்சு.

வெயிலுக்கு நிறைய பேர் அங்குதான் தஞ்சமடைந்திருந்தனர்.

வளாகத்திலுள்ள மற்றொரு ஃபவுன்டெயின் / Fountain. வெயிலுக்கு அங்கு கொஞ்ச நேரம் நின்றது ஆஹா என இருந்தது.


இப்படியாக ஃபார்மர்ஸ் மார்க்கெட்டை சுற்றிவிட்டு எங்க பார்க்கிங் லாட்டுக்கு வந்து சேர்வதற்குள் எப்படியோ ஒருமணி நேரம் ஓடிவிட்டது.

மீதமுள்ள இரண்டு மணி நேரத்தை ஓட்ட வேண்டும். இந்த வெயிலிலும் நிறைய பேர் தங்கள் ஆளுயர 'பெட்' டுடன் மேலே ஏறுவதும், கீழே இறங்குவதுமாக ஜாகிங் போய்க் கொண்டிருந்தார்கள்.

இடங்கள் அழகாக இருந்ததால் எனக்கும் விருப்பம்தான், கீழேயெல்லாம் போய் இறங்கி, ஏறி நடந்து வர‌. ஆனாலும் அடிக்கடி செய்திகளில் அடிபடும் mountain lion பிரச்சினையால் எங்கும் போகவில்லை.

நல்லவேளை, அங்கிருந்த ஒரு மரத்தினடியில் இருந்த மரப் படிக்கட்டுகளில் போய் உட்கார்ந்தோம். ஏதோ நம்ம ஊர் உணர்வு வந்தது. ஜில்லுன்னு மலைக் காற்றுவேறு வீசியது.

மரத்தின் நிழலைவிட்டு ஒரு அடி நகர்ந்தால்கூட அனல்காற்று அடித்தது. அதனால் மரத்தடியை விட்டு நகரவேயில்லை.

தேன்சிட்டு ,வண்ணவண்ண குருவிகள் எல்லாம் எங்களைச் சுற்றி சர்வ சாதாரணமாக வந்துபோயின. அவைகளின் 'கீச்கீச்' சத்தம் இதமாக இருந்தது.

அங்கு தேன்சிட்டு தேனெடுத்த‌ வீடியோக்களில் ஒன்று, இதோ உங்களுக்காக!!


 கொஞ்சம்கூட பயமே இல்லாமல் எப்படி போஸ் கொடுக்கிறது !!


கொஞ்சம் தொலைவில் சான்பிரான்ஸிஸ்கோ ஏர்போர்ட்டில் அடுத்தடுத்து இறங்கப்போகும் விமானங்கள் கொஞ்சம் தாழ்வாகப் பறந்து சென்றன.

மேலும் கொஞ்சம் தொலைவில் தெரிந்த பசிபிக் கடலில், கப்பல்கள் போய்க் கொண்டிருந்தன. இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்ததால் முக்கியமாக  கணினி இல்லாததால் நேரம் போனதே தெரியவில்லை.

Tuesday, June 25, 2013

வாங்க, மீண்டும் ஊர் சுற்றுவோம் !!



ஒரு சனிக்கிழமை  இங்குள்ள‌ ஒரு கல்லூரிக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு வாய்ப்பு எப்படி கிடைத்திருக்கும் என உங்களுக்கே தெரியும். இப்படியெல்லாம் போனால்தான் உண்டு.

மகளுக்கு தேர்வு மையம் கொஞ்சம் தொலைவிலுள்ள ஒரு கல்லூரியில் போட்டிருந்தனர். ஏறக்குறைய 40 நிமிடம் ஃப்ரீவேயில் போக வேண்டும்.

கல்லூரி, அதுவும் மலைப்பகுதியில் இருக்கிறது என்பதால் நானும் அவர்களுடன் தொற்றிக் கொண்டேன்.

காலை 10:00 மணி தேர்வுக்கு நாங்கள் முதல் ஆளாக 8:15 க்கே போயாச்சு. மீதமுள்ள நேரத்தை எப்படி கழிப்பது? கல்லூரி முழுவதையும் சுத்தோ சுத்துன்னு ஜாலியாக சுத்தினோம்.

கீழே படத்திலிருப்பது மேலேயுள்ள கட்டிடம்தான், கொஞ்சம் அருகில் சென்று பார்த்தபோது..



கல்லூரி ஒரு மலைப்பகுதியில் இருந்தது. சமீபத்தில் கட்டியதுபோல‌. எல்லா கட்டிடங்களும் புதிதாக இருந்தன. மலைப்பகுதி என்பதால் ஒவ்வொரு கட்டிடத்தையும் ஒவ்வொரு இடத்தில் மேலேயும் கீழேயுமாக கட்டியிருந்தது அழகாக இருந்தது.

சுற்றிலும் எங்கு பார்த்தாலும் கொள்ளை அழகாக இருந்தது. பசுமையான மலைகள், பார்க்க ரம்மியமாய் இருந்தது.


 தொலைவில் அமைதியும், ஆழமும் நிறைந்த‌ பசிபிக் பெருங்கடல்!


 வாங்க, அப்படியே உள்ளே இங்குமங்கும் நடந்து போகலாம்.


அதோ தொலைவில் உள்ள fountain / ஃபவுன்டெயினை.......


......அருகில் சென்று பார்ப்போமே! வெயிலுக்கு இதமாக இருக்கும்.


அதோ கூடாரங்களாகத் தெரிகிறதே, அங்கு நீச்சல் சம்பந்தமான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.


ஒருமணி நேரத்திற்கும் மேலாக சுற்றிவிட்டு சரியாக‌ 9:30 மணிக்கு  தேர்வறைக்கு வந்து சேர்ந்தோம். 9:45 மணிக்கு தேர்வு கண்காணிப்பாளர் வந்து பிள்ளைகளை கைப்பேசியை ஆஃப் செய்யச்சொல்லி சிறிது நேரமும் கொடுத்து எல்லோரையும் உள்ளே அனுப்பினார்.

சரியாக உள்ளே நுழையும்போது ஒரு பையனின் செல்ஃபோன் முழு சத்தத்துடன் சிணுங்கியது. கண்காணிப்பாளரும் சிரித்துக்கொண்டே அதை ஆஃப் செய்யும்வரை காத்திருந்து உள்ளே அனுப்பினார்.

இதுவே எங்கள் ஊராக இருந்திருந்தால்...  அந்த நாட்களை மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டேன். தெரியவில்லை, ஒருவேளை இப்போது மாறியிருக்கலாம்!

பிள்ளைகள் எல்லோரும் உள்ளே சென்று கண்காணிப்பாளர் கதவை மூடும்வரை அங்கேயே நின்றிருந்துவிட்டு காருக்கு வந்தோம். மதியம் 1:00 மணிக்கு மேல்தான் தேர்வு முடியும். இவ்வளவு நேரமும் எப்படி, எங்கே இருப்பது?

அதையும்கூட சரியாக சொல்ல முடியாது. தேர்வறையில் தாமதமாக வந்து சேர்பவர்களும் வந்த பிறகுதான் தேர்வையே ஆரம்பிக்கின்றனர். அதனால் ஆரம்பிக்கும் நேரமும் முடியும் நேரமும் மாறுவது இயல்பாகிவிடுகிறது. பிள்ளைகள் டென்ஷன் இல்லாமல் எழுத வேண்டும், அவ்வளவே.

ஏற்கனவே வெதர் ரிப்போர்டில் வெள்ளி & சனி அதிகபட்சமான வெயில் என்று சொல்லியிருந்தனர். வந்திருந்த பெற்றோர்களில் சிலர் காரில் ஏஸி யைப் போட்டுக்கொண்டு கம்ப்யூட்டருடன் பேசிக்கொண்டிருந்தனர். சிலர் கார் / வேனின் கதவுகளைத் திறந்துவிட்டு படுத்துவிட்டனர். சிலர் கட்டிடத்தின் உள்ளே போய் ஏஸி யில் அமர்ந்துவிட்டனர்.

இவரைப் பார்த்தால் எதையோ யோசிப்பது போலவே தெரிந்தது. என்ன யோசித்திருப்பார்! மேலே சொல்லியுள்ள மூன்றுவிதமான பொழுதைப் போக்குவதில் எதைத் தெரிவு செய்வது என்பதாகத்தான் இருந்திருக்கும்.

இந்த வெயிலில் வீட்டுக்கு போய் திரும்பி வருவதெல்லாம் முடியாத காரியம். மீதமுள்ள நேரத்தை எப்படி ஓட்டினோம் என்று அடுத்த பதிவில் பார்ப்போமே!
                                                                                                                            (தொடரும்)
                                                                                                                                  

ம்..ம்..இந்தப் பழம் இங்கே எப்படி வந்தது !!!!

வெயிலைப் பொருட்படுத்தாமல் இவ்வளவு நேரமும் கூடவே வந்து சுற்றிப் பார்த்த உங்களுக்குத்தான் இந்தப் பழத்தட்டு, எடுத்துக்கோங்க.

வெயிலுக்கு இதமாக இந்த ஏப்ரிகாட் பழங்களை சுவைப்போமே! இது கொஞ்சம் மாங்காய் & பீச் இரண்டின் சுவையிலும் இருக்கும்.        

Monday, June 17, 2013

சிலையல்ல, நான்தான் !!



இந்தக் கட்டிடத்தில் உயிருள்ள ஒன்று இருக்கிறது. முதலில் அது எங்கே, என்னன்னு கண்டுபிடியுங்களேன் !!  ( பயந்துடாதீங்க, அடுத்த திகில் கதைக்கான‌ ஒத்திகைதான் )

இரண்டு வாரங்களுக்குமுன் மகளின் flute recital க்காக ஒரு பள்ளிக்கு சென்றோம். அங்கு பல கட்டிடங்கள் இருந்தாலும் இந்த கட்டிடம் மட்டும் என்னைக் கவர்ந்தது.

செட்டிநாட்டு பங்களா மாதிரி இருக்கவும் 'க்ளிக்'கினேன். நான் 'க்ளிக்'கவும் 'இவர்' வந்து அமரவும் சரியாக இருந்திருக்கிற‌து. கட்டிடத்தின் நிறமும் அவருடைய நிறமும் ஒன்றுபோல் இருக்கவும் அவர் அமர்ந்திருப்பதே தெரியவில்லை.

படத்தைக் காமிராவில் பார்த்தபோது முதலில் நான்கூட அது சிலை என்றே நினைத்தேன். மீண்டும் ஒரு 'க்ளிக்'. இப்போது போஸ் கொஞ்சம் மாறியிருந்தது.எனக்கோ ஒரே குழப்பம்.

வந்து அமர்ந்த சில நொடிகளிலேயே பறக்கும்போதுதான் தெரிந்தது அது ஒரு அழகான புறா என்பது.

கண்டுபிடிக்க முடியாதவர்கள் கீழேயுள்ள படங்களைப் பார்த்துவிட்டு பிறகு மேலேயுள்ள படத்திற்கு போகவும்.