Friday, July 12, 2013

Flea MarketFlea Market என்றதும் பயந்துறாதீங்கோ!  பாவித்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் சந்தை. சொல்லப்போனால் மீள்சுழற்சி (Recycle) மாதிரிதான்.

திறந்த வெளியில் எண்ணிலடங்கா கடைகள் இருப்பதாலும், பொருள்களின் விலை குறைவாக இருப்பதாலும், அதனால் மக்கள் கூட்டம் அலைமோதுவதாலும்கூட‌ இந்தப் பெயர் வந்திருக்கலாமோ என்னவோ!

மின்னொளியும், AC யும் உள்ள கடைகளையேப் பார்த்துப்பார்த்து சலிப்படைந்தவர்களுக்கு இங்கு போவது ஒரு ஆறுதல்.

இந்தக் கடைகளில் பயன்படுத்திய பொருள்களும், புதிய பொருள்களும்கூட‌ விற்பனை செய்கிறார்கள். நாம் நினைத்தே பார்த்திராத பொருள்களை எல்லாம் இங்குள்ள கடைகளில் பார்க்கலாம். மொத்தத்தில் இங்கு இல்லாத பொருள்களே இல்லை எனலாம்.

பழைய பொருள்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உகந்த இடம் இது. சிலர் சில பொருள்களை வாங்கி வைத்துக்கொண்டு கடைகளைச் சுற்றி வரும்போது இதையெல்லாம்  எப்படி யோசித்து வாங்குகிறார்கள் என ஆச்சரியமாக இருக்கும்.

மேலும் பொருளை bargain / பேரம்பேசியும் வாங்கலாம் என்று சொல்கிறார்கள். பொருள்க‌ளின் உண்மையான விலை தெரிந்தால்தானே பேரம்பேசி  வாங்குவதற்கு!

நான் போவது ஜாலியா வேடிக்கை பார்க்க மட்டுமே. வீட்டிலிருந்து கிளம்பும்போதே எந்தப் பொருளும் வாங்கக்கூடாது என்ற கொள்கை கோட்பாடுகளுடன்தான் போவேன். என்னை மாதிரியான ஆட்கள் இருந்தால் பொருளாதாரம் எங்கே முன்னேறும்?

பசிக்கு சாப்பாட்டுக் கடைகளும், தாகத்திற்கு தண்ணீர் விற்பனையும் உண்டு. சில ஊர்களில் உள்ள Flea மார்க்கெட்டுகளில் பொழுதுபோக்கு வசதிகளும் உள்ளன.

காலை நேரத்தைவிட நண்பகலுக்குமேல் பொருள்களின் விலையில் கொஞ்சம் குறைத்து தருவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

இத்தனைக் கடைகளையும் சுற்றிப் பார்ப்பதற்குள் சோர்ந்துவிடுவோம். அதனால் இங்கு வருவதென்றால் வேறு வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு மட்டுமே வருவது நல்லது.

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை நாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள‌ ஒரு கல்லூரியின் மிகப் பெரிய பார்க்கிங் லாட்டில் இந்தக் கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கடைகள் இருக்கும்.

இங்கு 825 கடைகளும், தட்பவெப்ப நிலை கைகொடுத்தால் 15,000 லிருந்து 20,000 வாடிக்கையாளர்கள் வருவதாகவும் சொல்லப்படுகிறது.

நம்மைச் சுற்றியுள்ள பகுதியில் இதுமாதிரியான கடைகள் இருந்தால் ஒருதடவை போய் பார்த்துவிட்டு வருவோமே!

இந்த சந்தையில் உள்ள ஒருசில கடைகள் மட்டும் கீழேயுள்ள படங்களில் உள்ளன.


10 comments:

 1. இங்கும் வாரவாரம் ஞாயிற்றுகிழமை இந்த ஃப்ளீ மார்க்கட் ஒருபுறமும், உழவர் சந்தை ஒரு புறமும் நடக்கும் சித்ராக்கா! நான் போயிருந்தப்ப எனக்கு படமெடுக்கும் பொறுமை இல்லாதால கம்முன்னு வந்துட்டேன், வெயில் வேற!! நீங்க கலக்கிட்டீங்க! :)

  ReplyDelete
  Replies
  1. உங்க ஊரில் வாராவாரம் உண்டா! இங்கு பக்கத்து ஊரில் வாரத்தில் 4 நாட்கள் உண்டு.

   இரண்டு வரிசைக்கபுறம் வெயிலில் எனக்கும் ஒன்றும் முடியவில்லை. படங்கள் எல்லாம் இவர் எடுத்தது. எனக்கு பார்த்து முடித்தால் போதும் என்றாகிவிட்டது.

   Delete
 2. வித்தியாசமான அழகான பொருட்கள் கடைகளில்...!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க, எல்லாப் பொருள்களும் வித்தியாசமாக, அழகாகவே இருந்தன. வருகைக்கு நன்றிங்க.

   Delete
 3. இங்கு வந்த புதிதில் அடிக்கடி போவதுண்டு. வேளைக்கே போகாவிட்டால் தூர எங்காவதுதான் பார்க்கிங் கிடைக்கிறது. பிறகு வாங்குவதையெல்லாம் தூக்கிக்கொண்டு கார் வரை நடக்க கர்ர்ர்ராக இருக்கும். பாதி நாள் இதிலேயே போகிறதென்று இப்போதெல்லாம் போவதில்லை.
  அபூர்வமான பொருட்களும் மலிவாகக் கிடைக்கிறது என்பது உண்மைதான்.

  ReplyDelete
  Replies

  1. வாங்க இமா வாங்க, உங்க ஊரிலும் இந்த சந்தை இருக்கா!!

   நாங்களும் கொஞ்சம் தொலைவில்தான் பார்க் பண்ணிட்டு நடந்து வருவோம்.சுற்றி எல்லா இடங்களிலும் இந்த சந்தைக்கு போகிறவர்கள் இங்கு பார்க் செய்யக்கூடாது என்ற வாசகம்தான் ஆங்காங்கே காணப்படும்.ஒன்றும் வாங்குவதில்லை என்பதால் எனக்கு பிரச்சினையில்லை.இங்கு போவதால் வித்தியாசமான,அழகழ‌கான பொருள்களை பார்த்த திருப்தி கிடைக்கிறது.

   "பாதி நாள் இதிலேயே போகிறதென்று இப்போதெல்லாம் போவதில்லை"_____ உண்மைதான். ஆனால் நான் இங்கு போவதே இதுக்காகத்தான், ஹி ஹி !

   Delete
 4. எல்லாமே ஷோ பீஸ் மாதிரியான பொருட்கள் தானா?
  நானும் இந்த மாதிரியான பொருட்களை வாங்க மாட்டேன்.
  கொஞ்சம் கொஞ்சமா உங்க ஊரைப் பத்தி தெரிஞ்சுக்கறோம்!

  வேண்டாத பொருட்களையெல்லாம் கொண்டு வந்து போட்டுவிட்டு ஓடிடுவாங்களா? அல்லது வேண்டும்ங்கற சாமான்களை வாங்கிகிட்டு ஓடிடுவாங்களா? மார்க்கெட்டின் பேர் நல்லா இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. அதுமட்டுமல்லாமல், எல்லாப் பொருள்களுமே இருக்கின்றன.போன வேகத்துல சில படங்கள் எடுத்தாச்சு.அதுக்கு மேல எடுக்க முடியாமல் சோர்வு + வெயில்.அப்படி எடுத்த படங்களிலும் மக்கள் கூட்டம்.

   "வேண்டாத பொருட்களையெல்லாம் கொண்டு வந்து போட்டுவிட்டு ஓடிடுவாங்களா? அல்லது வேண்டும்ங்கற சாமான்களை வாங்கிகிட்டு ஓடிடுவாங்களா?"_____ஆளுங்களைக் காணோமேன்னு சொல்றீங்களா! மனித முகங்கள் இல்லாத படங்களாகப் போட்டிருப்பது நான்தான் ஹி ஹி.

   உங்களை மாதிரியே எனக்கும் இந்தப் பெயர் பிடிக்கும்.

   Delete
 5. சித்ரா,

  எங்கள் மைலாப்பூர் நவராத்திரி கடைகளை கொஞ்சம் சொகுசாய் மறந்திருப்பது போல் தோற்றமளிக்கிறது. வெறும் பொம்மைகள் மட்டும் தான் ருக்குமா என்ன?
  நல்ல விவரமான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வீட்டுக்குத் தேவையான A to Z வரை எல்லாப் பொருள்களும் இருக்கின்றன.பொறுமையாக நின்று பார்த்து வாங்க வேண்டும்.கொஞ்சம் கடைகளைப் பார்க்கும்போதே அதுதான் காணாமல் போய்விடுகிறதே.

   எடுத்தவற்றுள் மனித முகங்கள் இல்லாதவாறு தெரிவு செய்யும்போது அகப்பட்டவை இந்தப் படங்கள்தான்.மற்ற படங்களைப் போடமுடியவில்லை.

   Delete