Thursday, April 10, 2014

நடைப் பயிற்சி !!


மூன்று வருடங்களுக்குமுன் ஒரு சமயம் உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது. மருத்துவரை சந்திக்க நேரம் கேட்டதற்கு, 'ஒரு வாரத்திற்கும் மேலாகும்' என்று சொல்லி ஒரு தேதியைக் கொடுத்தனர்.

எங்க அம்மாவுக்கு diabetes இருப்பதால், அவருடன் எனக்கு இருக்கும் பிரச்சினையை முடிச்சு போட்டு 'ஓகே, சர்க்கரை வந்தாச்சு, அதுல சந்தேகமே இல்லை' என்ற முடிவுக்கு வந்து, எங்கம்மா என்னென்ன சாப்பிடுவாங்க, சாப்பிடமாட்டாங்க என்பதெல்லாம் ஏற்கனவே அத்துப்படி ஆனதால் உணவில் எனக்கு நானே ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவர பெரிய லிஸ்ட் ஒன்றைத் தயார் செய்துகொண்டிருந்தேன்..

எனக்கு இனிப்பு மீதெல்லாம் அந்தளவுக்கு விருப்பம் கிடையாது. ஆனால் இப்போதோ சர்க்கரையை அள்ளிஅள்ளி சாப்பிட வேண்டும்போல் இருந்தது. இனிப்பு நிறைந்த பழங்களை சுவைக்க வேண்டும்போலும் இருந்தது. 'சர்க்கரை என்றால் இப்படித்தான் நினைக்கத் தோன்றுமோ' என்றெல்லாம்கூட‌ நினைத்தேன்.

ஊரில் தமுக்கு அடித்து சொல்லாததுதான் குறை. இதுதான் சாக்கு என்று எல்லோருக்கும் ஃபோனைப் போட்டு சர்க்கரை வந்துவிட்டதாகவே சொல்லி புரளியைக் கிளப்பிவிட்டேன். அம்மாவும், ஒரு அக்காவும் தீர்மானமாகச் சொன்னார்கள்  'நீ வேணா பாரு, அப்படியெல்லாம் இருக்காது' என்று. இவர்கள் வாய் முகூர்த்தம் பலிக்க வேண்டுமே !

மருத்துவரைப் பார்க்க வேண்டிய நாளும் வந்தது, போனேன்.

நான் சொன்ன பிரச்சினையையும், அம்மாவுக்கு சர்க்கரை இருப்பதையும் வைத்து, 'ஒருவேளை சர்க்கரையால்கூட(type 2 diabetes) இந்தப் பிரச்சினை இருக்கலாம். ஆனால் இதனால்தான் என்று உறுதியாக சொல்ல முடியாது. எதற்கும் ப்ளட் டெஸ்ட் எடுத்திட‌லாம்' என்று அதற்கு பரிந்துரை செய்தார்.

'டைப் 2 டயாபடீஸாக இருந்தால், மருந்து மாத்திரையில் கண்ட்ரோலுக்கு கொண்டு வரலாம். அல்லது உடற்பயிற்சி செய்து உணவுப் பழக்கத்தை மாற்றி, உடல் எடையைக் குறைப்பதன் மூலமும் கண்ட்ரோலில் வைத்திருக்கலாம்' என்றார். இப்போதுதான் இப்படியான ஒரு விஷயத்தைக் கேள்விப்படுகிறேன்.

"அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்க மருந்து எடுத்துக்கறீங்களா அல்லது லைஃப் ஸ்டைலை மாத்திக்கிறீங்களா" என்று கேட்டார்.

நான் மருந்து எடுத்துக்கொள்வதாக சொன்னேன், இவரோ 'லைஃப் ஸ்டைலை மாத்திக்கோ' என்றார்.

மருத்துவர் புன்னகைத்தவாறே(!), முடிவெடுக்க சிறிது அவகாசம் கொடுத்தார்.

'சரி'யென நானும் சொல்ல, லைஃப் ஸ்டைலை மாற்றிக்கொள்ள வேண்டிய‌ சில விஷயங்களை மருத்துவர் சொன்னார். அதைத்தான் அப்படியே கீழே எழுதியுள்ளேன்.

["ஒருவேளைக்கு ஒரு தானிய உணவைத்தான் எடுத்துக்கொள்ளணும். பல‌ தானிய உணவு வேண்டாம். ஒவ்வொரு வேளைக்கும் தானியத்தை மாற்றிமாற்றி சாப்பிட வேண்டும். உதாரணத்திற்கு ஒருவேளை அரிசிச் சாப்பாடு என்றால் அடுத்த வேளை கோதுமை, அதற்கடுத்த வேளை கேழ்வரகு, இப்படி மாற்றி சாப்பிட வேண்டும். சாதாரண அரிசியைவிட ப்ரௌன் ரைஸ் நல்லது.

(சாதம் கொஞ்சம்+சப்பாத்தி என்றில்லாமல் சாதம் சாப்பிடப்போகிறீர்களா சாதம் மட்டுமே போதும். சப்பாத்தி என்றால் சப்பாத்தி மட்டுமே போதும். இதிலும் அதிலுமாகக் கலந்து சாப்பிட வேண்டாம் என்பதுதான் அது)

இதுவரை இனிப்பு நிறைய சாப்பிட்டால் அதைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். அதுபோலவே எண்ணெயில் பொரித்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

(கவனிக்கவும், "சுத்தமாக சாப்பிடவேக் கூடாது, தொடவேக் கூடாது,  தொட்டால் கை மேலேயே போட்டுடுவேன்" என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தாமல் நாசூக்காக சொல்லி புரிய வைத்தார். எந்நேரமும் மிக்ஸர், முறுக்கு, எல்லடை, பகோடா, பஜ்ஜி என நொறுக்கிய‌ எனக்கு இதை விட முயற்சித்தபோது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது) 

பழங்களிலும் கேலரி அதிகமிருப்பதால் ஒரு நாளைக்கு ஒரு பழம் போதும். உதாரணத்திற்கு ஆப்பிள் என்றால் அன்றைக்கு ஒரு ஆப்பிள் போதும். அதுபோலவே மற்ற பழங்களும். (உதிரிப் பழமானால் உதாரணத்திற்கு செர்ரி என்றால் ஒரு கையளவு எடுத்துக்கொள்வேன்)

முக்கியமாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது கையைக் காலை வீசி fast walking செய்ய வேண்டும். முடிந்தால் jogging செய்யுங்கோ. ரொம்ப நல்லது. இதுக்கெல்லாம் புரோட்டின் அவசியம், முட்டை எடுத்துக்கோங்க, 'டோஃபு'வில் ப்ரோட்டின் இருப்பதால் அதையும் சேர்த்துக்கலாம்.அசைவ சாப்பாடு சாப்பிடுவதாக இருந்தால் மீன், சிக்கன் எடுத்துக்கலாம்.

ப்ளட் டெஸ்ட் ரிஸ‌ல்டில் சர்க்கரை இருந்தாலும் இல்லாட்டியும் இதை ஃபாலோ பண்ணுங்க. அடுத்த ஆறு மாதம் கழித்துப் பார்க்கும்போது உங்கள் எடையில்
10lbs  குறைத்துப் பார்க்கவேண்டும்" என்றார்]


சொல்லிவிட்டார், ஆனால் குறைப்பது யார் ? ஆனாலும் மருத்துவர் சொன்னதையெல்லாம் விடாமல் ஃபாலோ பண்ணி 6 மாதத்தில் 9 lbs  குறைத்தேனே !

"டைப் 2 டயாபடீஸ் உள்ளவர்களுக்கென லைஃப் ஸ்டைலை மாற்றிக் கொள்வதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மருத்துவமனையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஒரு வகுப்பு போனால் போதும்" என்றும் சொன்னார்.

நான் 'போகிறேன்' என்றேன்.

'ரிசல்ட் வந்ததும் போகலாம்' என்றார். (போக வேண்டிய சூழல் ஏற்படவில்லை)

A1c (கடந்த 3 மாத ரீடிங்)  ரிஸல்டில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நார்மல் என்றதும் மருத்துவர் என்னை தொலைபேசியில் அழைத்து விவரங்களைக் கூறி  "நான் சொன்னவற்றை கவனத்தில் கொள்ளுங்கள், அதுவே போதும்" என்றார்.

அன்று மருத்துவர் சொன்னவை இன்றும் கவனத்தில் உள்ளது.  நடைப் பயிற்சி. போகாமல் விட்டால் அன்று ஏதோ ஒன்றை செய்யாமல் விட்டதுபோல் இருக்கும். காலையிலேயே போய் வந்துவிடுவேன். அதிலும் குளிர்காலத்தில் வெயிலைத் தேடித்தேடிப் போவது ரொம்பவே பிடிக்கும்.

நம்ம ஊரில் ஏன் இதுமாதிரி சொல்வதில்லை !  போனால் மருந்து மாத்திரை இல்லாமல் வெளியே வர முடிவதில்லை.  ஒருவேளை அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இது அமையலாம் !

எனக்கு வந்த பிரச்சினைக்குக் காரணம் வைட்டமின் டி குறைபாடு. பெரும்பாலும் ஆசியாவிலிருந்து குளிர் பிரதேசத்தில் வந்து வசிப்பவர்களுக்கு இது வருமாம். சப்ளிமெண்ட் எடுத்த பிறகு சரியாகிவிட்டது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(பி.கு)


"நோ :) நாங்க காலை பார்த்தா தான் நம்புவோம் சித்ரா :)" _________ என்று சொன்ன பிறகும் காலைப் போடாட்டி எப்படிங்க !!

"அதுக்கு எதுக்கு ரெண்டு எடத்துல ?"

"ஒரு கால்தானே இருக்கு, இன்னொரு கால் எங்கேன்னு" யாரும் கேட்டுடக் கூடாது பாருங்க, அதுக்குத்தான் !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

10 comments:

  1. //ஒரு கால்தானே இருக்கு, இன்னொரு கால் எங்கேன்னு" யாரும் கேட்டுடக் கூடாது பாருங்க, அதுக்குத்தான் !!// ஸ்ஸ்ஸ்ஸப்பபாஆஆஆ! முடீல! ;) :)

    இங்கே அமெரிக்க டாக்டர்கள் மிக நன்றாக பேசி நம் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறாங்க. நல்ல பதிவு! 6 மாதத்தில் 9பவுண்டா..சூப்பர்ப்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இன்னும்கூட கொறச்சிருக்கலாம் மகி. என்னைய ஆள் அடையாளம் தெரியாம தேடப்போய் இவங்க எளச்சிட்டாங்கன்னா, அதனாலதான் அதுவே போதும்னு நிறுத்திட்டேன்.

      நம்ம ஊர்ல சிடுசிடுனுதான் பார்த்திருக்கேன். இதுல சந்தேகம் கேட்பதென்றால் அவ்வளவுதான்.

      Delete
  2. காலைப் பார்த்து விட்டேன்.நீங்கள் நன்றாகவே இரண்டு காலாலும் வாக்கிங் போகிறீர்கள் என்று நம்ப வைத்து விட்டீர்கள். சித்ரா.
    உங்கள் ஊர் மருத்துவர்கள் மாதிரி இங்கும் இருக்கிறார்கள். "Life Style modification ' என்று சொல்லி "dietician : ஒருவரிடம் அனுப்புவார்கள். ஆனால் அவர் சொல்வதைக் கேட்டு வெளியே வரும் போது, " நாளையிலிருந்து நமக்கு சாப்பிட காற்று. குடிக்கத் தண்ணீர் " என்று தோன்றும். இத்ன்ஹா வகுப்புகள் எல்லா ஹாச்பிடளிலும் கட்டாயமாக்கப்பட்டது இபொது. விரைவில் இந்தியா எதில் முன்னிலையில் இருக்கிறதோ இல்லையோ உலகத்தின் டயபெடிக் தலிநாடு என்கிற பதவியை எட்டிப் பிடிப்பதில் தீவிரமாயிருக்கிறோம் என்கிற தகவலை பல ஆராய்ச்சிகள் சொல்கிறது. வருத்தம் தான். என்ன செய்வது?

    நான் நிறுத்திக் கொள்கிறேன்.உங்கள் வாக்கிங்கைத் தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஓ, நம்ம ஊர்லயும் இது வந்தாச்சா ! ரொம்ப வருடங்கள் ஆனதால தெரியல எனக்கு. "நாளையிலிருந்து நமக்கு சாப்பிட காற்று. குடிக்கத் தண்ணீர்" ‍‍‍‍‍‍‍‍________ எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்.

      ஊருக்கு போனா யாரைப் பார்த்தாலும் சர்க்கரை இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். உணவால வருதான்னு தெரியல. கூலி வேலைக்குப் போறவங்க எப்படி சமாளிக்கிறாங்கன்னு தெரியல. வருத்தமாத்தான் இருக்கு.

      Delete
  3. ஹா.... ஹா... இதுவல்லவோ பின்குறிப்பு...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றிங்க.

      Delete
  4. ரசிக்கும் படியான பின் குறிப்பு. உணவுப் பழக்கங்கள் பற்றிச் சொன்னதும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  5. உங்கள் ஊரு மருத்துவர்கள் மாதிரி இங்கு நிச்சயம் இல்லை. எனக்கு இப்படித்தான் உயர் இரத்தத் அழுத்தம் என்று சொல்லி மாத்திரை கொடுத்துவிட்டார் ஒரு மருத்துவர். அந்த மாத்திரை சாப்பிட்டது வாய் ஓயாமல் வறட்டு இருமல்.லேசான தலைவலி எப்போதுமே.
    என் நாத்தனார் பெண் (அமெரிக்காவில் இருப்பவள்) சொன்னாள்: 15 நாட்கள் தொடர்ந்து மருத்துவரிடம் போய் உங்கள் இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்ளுங்கள். (மருந்து சாப்பிடாமல்) பிறகு தீர்மானம் செய்யலாம் என்று. நானும் அதே போல செய்தேன். ரொம்பவும் நார்மல் 130/80 என்ற அளவிலேயே இருந்தது. மாத்திரை சாப்பிடச் சொன்ன மருத்துவரிடம் போய்க் காண்பித்து, தலைவலி, மற்றும் இருமல் பற்றிச் சொன்னேன். மருந்தை நிறுத்தி விடுமாறு சொல்லிவிட்டார். மருந்தை நிறுத்தி இரண்டு நாட்களில் தலைவலி, இருமல் இரண்டும் போயே போச்!
    'உங்களுக்கு அறுபது வயதாகிவிட்டது; எடை அதிகமாக இருக்கிறது. உயர் இரத்த அழுத்தம் இல்லாமல் இருக்காது' என்று அந்த மருத்துவர் என்னுடன் விவாதம் செய்தபோது ரொம்பவும் வருத்தமாக இருந்தது. நான் என் அம்மாவைப்பற்றிச் சொன்னேன். 86 வயதிலும் எந்த ஒரு வியாதியும் இல்லாமல் இருக்கிறார் என்று. அப்புறம் தான் என்னை விட்டார் அந்த மருத்துவர்.

    நீங்கள் சொல்வது போல நானும் நடைப்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்று இருக்கிறேன். தினமும் வீட்டிலேயே BP பார்த்துக்கொள்ளுகிறேன். நடுவில் ஒருநாள் மருத்துவமனைக்குப் போய் பார்த்து வருகிறேன்.

    ராஜி சொல்வதுபோல டயட்டீஷியனிடம் பேசினால் நமக்கு வாழ்க்கையே வெறுத்து விடும்.
    ருஜுதா திவாகர் என்னும் ஒரு பெண்மணி எழுதிய (Don't lose your mind, lose your weight) புத்தகத்தைப் படித்தபின் இந்த டயட்டீஷியன்கள் சொல்வதை நான் கேட்பதே இல்லை. எனது டயட்டீஷியனுக்கும் இவரது புத்தகம் ஒன்று வாங்கி பரிசளித்துவிட்டு வந்தேன்!

    ReplyDelete
  6. ஓ, இவ்ளோ நடந்திருக்கா ! வயசாச்சுன்னா எல்லாம் வந்தே ஆகணுமா என்ன ! இவ‌ங்க ஒரு மருந்தைக் கொடுத்து அது வேற ஒன்ன கொண்டுவந்து விட்டுச்சுன்னா என்ன பண்றது? இதுமாதிரி ஒரு தடவ ஊருக்கு போனப்போ சரியான காமெடியாப் போச்சு. எப்போவாச்சும் அதை பதிவாக்குறேன்.

    ம் .... பரிசுப் புத்தகத்த ப‌டிச்சுட்டு என்ன சொன்னாங்க !

    ReplyDelete