Tuesday, March 3, 2015

மலரும் வத்தல் நினைவுகள் !இன்று வத்தல் போடுவதற்காக நேற்றிரவு அரிசிகூழ் செய்து வைத்தேன். அதிகாலை விழித்ததும் போய் வத்தலைப் பிழிந்துவிடலாம் என நினைக்கும்போதே என்னையறியாமலேயே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. வேறென்ன? மலரும் நினைவுகள்தான் !

ஒரு சமயம் மே மாதத்தில் வத்தல் போடுவதற்காக அம்மா கூழ் செய்து கொடுத்தார்கள்.

ஒரு வயதுகூட நிரம்பாத என் மகள், அதுபோல் இரண்டு வயதுகூட நிரம்பாத ஒரு சகோதரியின் மகன், இவர்களுடன், மற்ற சகோதர,சகோதரிகளின் பிள்ளைகளும் வீட்டில் இருந்தார்கள். இவர்களை வைத்துக்கொண்டு வத்தல் போடுவது எங்களுக்கு மிகப்பெரிய சவால்தான்.

காலையில் அழகாக மல்லிகைப் பூ போன்று இட்லிகளை சுட்டு, சட்னி & சாம்பாருடன் பாடிப்பாடி அழைத்தாலும் இவர்கள் வரமாட்டார்கள். ஆனால் இந்த வத்தலுக்கான கூழை 'இன்னும் இன்னும்' என கேட்டு வாங்கி சாப்பிட்டே காலி பண்ணிவிடுவார்கள்.

அன்று இதற்காகவே பயந்துகொண்டு "யாரும் மெத்தைக்கு(மாடி) வரக்கூடாது, நாங்கள் வரலாம் என்று சொன்ன பிறகுதான் வரவேண்டும்" என்று கண்ணாமூச்சு ஆடுவதுபோல், கொஞ்சம் விஷயம் தெரிந்த‌ பெரிய பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு, 'பிள்ளைகளை ஏமாற்ற வேண்டாமே' என ஒரு குண்டானில் கூழ் எடுத்து தனியாக மூடி ஆற வைத்திருந்தோம்.

மெத்தை ரூம் கதவு உடைபடாததுதான் குறை. சும்மா போட்டு தட்டுதட்டுன்னு தட்டி, "இப்போ வரலாமா, இப்போ வரலாமா"ன்னு கேட்டு எங்களை 'உண்டுஇல்லை'ன்னு பண்ணிவிட்டார்கள் குட்டீஸ்கள்.

வேகாத அந்த வெயிலில் தலையில் துணியைப் போட்டுக்கொண்டு, வேர்த்து, விறுவிறுத்து  நீளநீளமாக நான்கைந்து காட்டன் சேலைகளில் ஒருவழியாக வத்தல் போட்டு முடித்துவிட்டு, "சரி, இப்போ நீங்க வரலாம்" என்று குரல் கொடுக்கவும், 'திபுதிபு'வென எல்லோரும் மேலே ஏறி வந்தனர்.

சகோதரியின் இரண்டு வயது மகன் என்று சொன்னேனே, அவன் கொஞ்சம் விஷயம் தெரியாத அப்பாவி மாதிரியே இருந்து ஏதாவது விபரீதமாக செய்துவிடுவான்.

வந்தவனுக்கு வத்தலைப் பார்த்ததும் எப்படி இருந்ததோ தெரியவில்லை, ஒரு சேலையின் நுனியில் ஒரே ஜம்ப். அவ்வளவுதான், வழுக்கி வத்தலில் விழுந்தவன் சேலையின் நீளத்தை அளப்பதுபோல் 'சொய்ங்ங்ங்.....' என மறுநுனியில் 'அம்ம்ம்ம்ம்மாஆஆஆ' என கதறினான்.

விழ ஆரம்பித்ததும் சீரியஸாகிப் போன நாங்கள் இருவரும் பிறகு அவன் எழுந்து நின்ற கோலத்தைப் பார்த்து விழுந்துவிழுந்து சிரித்தோம். ஏதோ 'ஃபன்' (fun) என நினைத்து வத்தலில் குதிக்க முற்பட்ட மற்ற மக்களையும் ஒருவழியா கீழே அழைத்து வருவதற்குள் ....... வத்தல் போட்ட சோர்வைவிட இதுதான் எங்களைப் படுத்திவிட்டது.

இதுக்குத்தான் எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க, "நீங்க எல்லோரும் பேசாம போய் உக்காருங்க, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று. ஆனால் அம்மா வேலை செய்வதைப் பார்க்க எங்களுக்குத்தான் மனசு கேக்காது.

வழக்கம்போல அன்றும் அந்த வத்தல் காய்ந்து பொரித்து சாப்பிட்டிருந்தால்கூட மறந்து போயிருப்போம். ஆனால் 'வத்தல்' என்றாலே இன்றும் நினைத்து சிரிக்கும்படி அமைந்துவிட்டது அன்றைய நிகழ்ச்சி.

27 comments:

 1. வத்தல்வாசம் இழுக்கிட்டு வந்திடுச்சி :)

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சலின்,

   அதுக்குள்ளே வாசம் வந்துடுச்சா ! நினைத்தேன், பின்னூட்டம் ஏஞ்சலிடமிருந்துதான் இருக்கும் என்று.

   வத்தல் காய்ந்ததும் பொரிச்சு அனுப்பிட்டாப் போச்சு.

   Delete
 2. ம்ம் :) எங்க வீட்ல உப்ப்பு மாங்கா காயவச்சி திரும்பறதுக்குள்ள காலியாகிடும்:) வற்றாத நினைவுகள் தான் இவையெல்லாம்

  ReplyDelete
  Replies
  1. இங்கும் அதேகதைதான் ஏஞ்சல். நடுவிலுள்ள கொட்டை மட்டுமே இருக்கும். இரண்டு பக்கமும் உள்ள சதைப்பற்று காணாமல் போயிருக்கும். ஹா ஹா ஹா ,

   Delete
 3. வத்தல் நினைவு எனக்கும் வந்து விட்டது. அடுத்த வாரம் நானும் வற்றல் திருவிழாவை ஆரம்பிக்க முடிவெடுத்திருக்கிறேன். வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு வற்றல் பிழிவது என்பது மிகப் பெரிய சவால் தான். அதை அருமையாய் நகைச்சுவையோடு எழுதியிருப்பதை மிகவும் ரசித்தேன் சித்ரா.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் வத்தல் நினைவுகள் வந்துவிட்டதா ! அவை இன்னும் நகைச்சுவையாக இருக்குமே. ஆமாம், வாண்டுகளை வைத்துக்கொண்டு செய்வது பெரிய பிரச்சினைதான். ரசித்துப் படித்துப் பாராட்டியதற்கு நன்றிங்க.

   Delete
 4. அருமையான நினைவுகள்....பிள்ளைகள் ஒரு புறம் காக்காய்கள் கூட வந்துவிடுமே....

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்லும்போதுதான் காக்கா நினைவு வருகிறது. காக்காவுக்கு பயந்துதான் நல்ல வெயில் வந்த பிறகு போடுவாங்க. குடை, கண்ணாடி எல்லாம் வைத்துப் பார்த்தாலும் ஒன்றும் நடக்காது.

   நன்றி கீதா.

   Delete
  2. குடை, சவுரி முடி வைச்சு என்ன செஞ்சாலும் நாங்க அசர மாட்டோம்னு காக்காய்ங்க வந்து சூப்பரா டேஸ்ட் பாக்கரோம்னு கொத்திக் கூழ் பரோட்டா ஆக்கிடுவாங்க.....(பெயர் போடாத போது கீதானு கண்டு பிடிச்சுட்டீங்களே....ஏன்னா நார்மலா ரெண்டு பேரும் சேர்ந்து பேசிட்டுத்தான் கமென்ட் போடுவோம்....நண்பர் துளசியும், நானும்......)

   கீதா

   Delete
  3. ஓ, சவுரி முடிகூட வைப்பதுண்டா ! அடுத்த தடவ யாராவது(ஊரில்) வத்தல் போட்டால் ஐடியா கொடுக்கலாம். ஹ்ம் ....ஆனாலும் அசராம வந்து கூழ் பரோட்டா போடுவாங்கன்னு சொல்றீங்க !

   ஒருதடவ நீங்க 'கீதா'ன்னு சொன்னீங்களா, அதன்பிற‌கு அப்படியே போட்டுவிடுவது. ஆனாலும் முதலில் ஏகத்துக்கும் பெயர் குழப்பம் வந்தது.

   Delete
 5. இப்போதே இந்த வெயில் வாட்டுதே...

  இனிய நினைவுகள்...

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா அந்த வெயிலை இந்தப் பக்கம் திருப்பி விடுங்க.

   நன்றி தனபாலன்.

   Delete
 6. வத்தல் போடும் வீடுகளில் இதே பிரச்சனை இருக்கும்போல. எங்க வீட்டில் நானும்,என் ப்ரண்டும், அக்காவும் தான். அதோடு எலுமிச்சை,மாங்கா ஊறுகாய்க்கு) காயவைச்சா போதுமே விடமாட்டோமில்ல. உங்களுக்கு காவல் வைக்கனும் போல என அம்மா சொல்வாங்க. பசுமையான நினைவுகள்.

  ReplyDelete
  Replies
  1. ப்ரியசகி,

   எங்க வீட்டிலும் அம்மாவின் திட்டு கிடைக்கும். வீட்டில் கூட்டம் அதிகம். மாங்காய் ஊறுகாயின் இரண்டு பக்க சதைப் பகுதியும் காணாமல் போகும்வரை நீ, நான் என போட்டி போட்டுக்கொண்டு 'பானையிலிருந்து எடுத்து காய வைக்கிறோம்' பேர்வழின்னு மெத்தைக்குக் கிளம்பிடுவோம்.

   அது ஒரு அழகிய கனாக்காலம், திரும்ப வரப்போவதில்லை. நன்றி ப்ரியசகி.

   Delete
 7. வத்தல் நினைவுகள் எங்கள் நினைவலைகளிலும் வந்து விட்டது சித்ராக்கா.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அனிதா,

   ஒரு காலத்துல தங்கை இல்லையேன்னு ஒரு கவலை இருந்ததுண்டு. ஏன்னா 'மேக்கப்' போடத்தான் ! இப்போ ஏகத்துக்கும் தங்கைகள் கிடைச்சாச்சு :) ஆனால் .... ? ஹா ஹா ஹா !

   உங்கள் நினைவலையையும் ஒரு கவிதையா வடிச்சிடுங்களேன்.

   Delete
 8. நீங்கள் சொன்னதுபோல், எனக்கும் பழைய நினைவுகள் வருகிறது. வெத்தல் மிகவும் பிடிக்கும், அதுவும் வெங்காய வெத்தல் ரொம்ப பிடித்தது. அம்மா தனியாக வெத்தல் போடும்போது அந்த வெயிலில் கஷ்டப்படுவதை, பார்க்கும்போது அவர்களை விட என் மனது கஷ்டப்படும் . நானும் கூட இருந்து அவர்கள் அச்சில் வைத்து கொடுக்க நான் பிழிவேன், பெரிய போராட்டமே நடக்கும் போட்டுமுடிப்பதற்க்குள். அதை காயவைத்து,காயவைத்து அனிலடமிருந்தும்,காக்காவிடமிருந்தும் காப்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடும். இரண்டு வருடம் முன்பு, அனுவல் லீவ் இந்தியாவிற்க்கு சென்றபோது எனக்காக அம்மா திரும்பவும் வெத்தல் போட்டுக்கொடுத்தார்கள். வாழ்க்கையில் ஒவொருவருக்கும் கடவுள் கொடுத்த வரம்தான் அம்மா, அந்த அன்புக்கு வாழ்னால் முழுதும் கடன் பட்டிருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டு மெத்தையை ஒட்டியே புளிய மரம் இருந்ததால், வத்தல்ல உப்பு & காரம் சரியா இருக்கான்னு செக் பண்ண‌ அணிலார் வருவார். ஆனால் வத்தலைவிட வேர்க்கடலையைக் காய வைக்கும்போதுதான் அவர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

   அம்மாவுடனான உங்கள் வத்தல் நினைவுகளும் அருமை. நன்றி ராஜேஷ் !

   Delete
 9. அருமையான நினைவுகள்... எங்கள் வீட்டில் நான் ,அண்ணன்களுடன் சேர்ந்து போட்ட நினைவுகள்...இப்பொழுது நானும் அம்மாவும் வத்தல் போடுறோம் ......

  ReplyDelete
  Replies
  1. அம்மா & அண்ணன்களுடனான உங்கள் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி & நன்றி அனு.

   Delete
 10. வருஷம் தவறாம அம்மா இருக்கும் போது வத்தல் போடுவோம். நான் தான் அவர்கள் கூட இருந்து உதவி செய்வேன். நிறைய நினைவுகள் வருகின்றன....சரி அதை விடுவோம்.

  சாகசம் செய்த குறும்பு பையன் தான் நினைவில் வருகிறான். .... அருமையான நினைவலைகள் + வத்தல்....சுவையான பதிவு சித்ரா.

  ReplyDelete
  Replies
  1. உமையாள்,

   வத்தல் போடும்போது அம்மாவின் நினைவு வராமல் இருக்காது. என்ன செய்வது :(

   வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி உமையாள்.

   Delete
 11. அன்பின் அருந்தகையீர்!
  வணக்கம்!

  இன்றைய...
  வலைச் சரத்திற்கு,

  தங்களது
  தகுதி வாய்ந்த பதிவு
  சிறப்பு செய்துள்ளது!

  வருக!
  வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
  கருத்தினை தருக!

  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 12. அன்பின் அருந்தகையீர்!
  வணக்கம்!

  இன்றைய...
  வலைச் சரத்திற்கு,

  தங்களது
  தகுதி வாய்ந்த பதிவு
  சிறப்பு செய்துள்ளது!

  வருக!
  வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
  கருத்தினை தருக!

  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. யாதவன் நம்பி,

   வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தகவலையும் தெரிவித்ததில் மகிழ்ச்சியும், நன்றியும் ! இதோ விரைந்து வருகிறேன்.

   Delete
 13. நான் எங்கே போயிட்டேன். ஓஹோ சென்னையிலிருந்தேனா. பதிவு இன்றுபார்த்தேன். அருமை அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. காமாஷிமா,

   ஒருவேளை இருக்கலாம், சென்னைப் பறவைகள் உங்களை எங்கும் நகராதபடி பிஸியா வச்சிருந்திருப்பாங்க ! வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிமா, அன்புடன் சித்ரா.

   Delete