Wednesday, August 19, 2015

ஈச்சம் பழத்தின் இனிய நினைவுகள் !!

 கடலூர் டூ புதுவை போகும் வழியில் வாங்கிய ஈச்சம் பழம்
ஒவ்வொருவருக்கும் அவரவர் வீட்டில் ஏதோ ஒரு இடம் ஸ்பெஷலாக இருக்கும். அப்படித்தான் எனக்கும் எங்கள் வீட்டில் மெத்தை ரூம் ரொம்பவே ஸ்பெஷல்.

எங்களின் ஒட்டுமொத்த குறும்புத்தனங்களும் அரங்கேறிய இடமாயிற்றே !

அந்த அறைக்கு இரண்டு வழிகள், ஒன்று வெளி நடையில் இருந்து, மற்றொன்று வீட்டுக்குள்ளிருந்து. அதனால் ஓடிப் பிடித்து விளையாட வசதியாக இருக்கும்.

எங்களுக்குப் பிடித்தது, ஆனால் அதுவே பெரியவர்களுக்குப் பிடிக்காதது என நிறைய விஷயங்கள் உண்டு.

அவற்றுள் முக்கியமானது பழம் பழுக்க வைப்பது.   அதற்கு ஏற்ற இடம்தான் இந்த மெத்தை ரூம். நல்ல வெளிச்சமும், காற்று வசதியும், கொஞ்சம் தவிடு மூட்டைகளும் இருப்பதால் ரொம்பவே பிடிக்கும்.
ஈச்சமரம் மாதிரியே இங்குள்ள மரம்
பெரும்பாலானவர்களின் வீட்டுத் தோட்டத்தில் ஈச்ச மரங்கள் ஒன்றிரண்டு இருக்கும். அதில் இப்படித்தான் குலைகுலையாகக் காய்கள் காய்க்கும்.

எப்படியோ எங்களுக்கும் இந்தக் காய்கள் கிடைக்கும். அவற்றை மெத்தை ரூமிலுள்ள தவிடு மூட்டைகளில் மறைத்து வைத்து பழுக்க வைப்போம்.

ஒவ்வொரு முறையும் தவிடு அள்ளும்போதும் திட்டு கிடைக்கும். தவிடு எடுக்கறவங்க," உங்க அப்பா வரட்டும், சொல்றேன்" என்பார்கள்.

அம்மவைத் தாண்டித்தான் விஷயம் அப்பாவிடம் போகும். அதனால் ஒரு நம்பிக்கை, அம்மா கண்டிப்பாக  போட்டுக் கொடுக்கமாட்டாங்கன்னு :)

எதற்கு வம்பு என ஒரு சிறிய கூடையில் கொஞ்சம் தவிடு போட்டு அதில் இந்தக் காய்களில் பாதியைப் போட்டு மேலே கொஞ்சம் தவிடு தூவி கூடையை ஒரு ஓரமாக வைத்து பழுக்க வைப்போம்.

மீதி காய்களை வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு போய் இரண்டு மனைகள் தள்ளியுள்ள எங்கள் தோட்டத்தில் உள்ள வைக்கோல் போரில் துளைத்து, அதில் இந்த ஈச்சங்காய்களைக் கொட்டி மூடிவிடுவோம்.

காய்கள் கொஞ்சமாவது செங்காயாக இருந்தால் பழுக்கும். படு பிஞ்சாகத்தான் எங்களுக்குக் கிடைக்கும். அதைத்தான் பழுக்க வைப்போம்.

தினமும் போய் அவற்றை பார்த்துவிட்டு வருவோம். எப்போதெல்லாம் பார்க்கப் போகிறோமோ அப்போதெல்லாம் 'பழுத்தாச்சா' என தின்று பார்ப்போம்.

பச்சைக் காய்களாதலால் மேல் தோல் காய்ந்து போகுமே தவிர பழுக்காது. கடைசியில் காய்ந்துபோய் ஒன்றுக்கும் உதவாமல் போகும்.

ஒழுங்கா அவை மரத்திலேயேப் பழுத்தாலும் சாப்பிட சுவையாக இருந்திருக்கும். அதை 'பழுக்க வைக்கிறோம்' என்ற பெயரில் பிஞ்சிலேயேப் பறித்து வீணாக்குவதே வருடந்தோறும் நடக்கும் வேடிக்கை.

சோகமயமாக இருக்கும் எங்களுக்குக் கடைசியில் யார் வீட்டிலிருந்தாவது குலைகுலையாக ஈச்சம் பழங்கள் கொடுத்துவிடுவார்கள். பிறகென்ன இஷ்டத்திற்கும் பிச்சு பிச்சு பறித்து தின்போம்.

ருசித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் சுவையை ! பனங்கிழங்கு, நுங்கு மாதிரிதான் இதுவும்.
ஃப்ரெஷ் பேரீச்சம் பழம்
அமெரிக்கா வந்தபோது உழவர் சந்தையில் படத்திலுள்ள இந்த பழங்களைப் பார்த்ததும், ஏதோ பிஞ்சு தேங்காய்கள் என்றுதான் முதலில் நினைத்தேன். 'இதை வைத்து என்ன செய்வார்கள்?' என ஒரு சந்தேகம்.

அடுத்த வாரம் போனபோது அதே காய்கள். இந்த முறை கேட்டாச்சு. 'ஃப்ரெஷ் பேரீச்சம் பழம்' என்றனர்.

எங்களுக்கோ ஈச்சம் பழத்தின் நினைவு வரவும், விலை அதிகமானாலும் பரவாயில்லை என வாங்கித் தின்று பார்த்தோம். சுவை ஈச்சம் பழத்தின் செங்காய்களைப் போலவே இனிப்பாக இருந்தது.

அதிலிருந்து எப்போது, எங்கே பார்த்தாலும் கொஞ்சமாவது வாங்கிவிடுவோம்.


படத்திலுள்ளவை இந்த வாரம் ஒரு மெக்ஸிகன் பழக்கடையில் வாங்கியவை. முன்புபோல் உழவர் சந்தைக்கு வராத சில பழங்களில் இதுவும் ஒன்று.

ஆனாலும் உழவர் சந்தையில் கிடைக்கும் பழத்தின் சுவைபோல் வெளியில் வாங்கும் பழத்தில் இருப்பதில்லை.

எனக்கொரு சந்தேகம், பழமாகக் கிடைக்கும்போது எதற்காக நாங்கள் அவற்றை ஒளித்து & மறைத்து பழுக்க வைத்தோம் என இதுவரை புரியவில்லை.

ஆனால் இங்கே வாங்கிய காய்களை இதுவரை பழுக்க வைக்க முயற்சித்ததில்லை.

மெத்தை ரூமுக்கும், தவிட்டுக்கும், வைக்கோல் போருக்கும் எங்கே போவது :)

10 comments:

  1. ம்..ம்ம் இம்முறை சாப்பிடாமல் வந்ததில் இதுவும் ஒன்று. சீசன் இல்லை. நாங்கள் ஸ்டோர் ரூமில் தான் பழங்கள் பழுக்கவைப்பது.. இப்பழங்கள் தேடி பற்றைகள் இருக்கும் பக்கம் போகனும். வீட்டில் வேலைசெய்பவரிடம் சொல்லி பிடுங்கிவிப்போம். ஈச்சம்பழத்தின் ருசியே தனிதான்.
    பேரீச்சைப்பழம். இங்கும் கிடைக்கிறது.அனேகம் ரமழான் காலப்பகுதியில் கிடைக்கும். எகிப்தில் வேண்டியளவு சாப்பிட்டாச்சு.!!
    ஞாபகப்படுத்தியாச்சு ..!! ஈச்சம்பழத்துக்கு எங்கன போவேன்...!

    ReplyDelete
    Replies
    1. இப்போ இந்த மரங்களையே ஊர்ல பார்க்க முடியல. ஈச்சம்பழம், நாவல் பழம் எல்லாம் கடலூர் டூ பாண்டிச்சேரி சாலையில் கிடைக்குது. அதனால கொஞ்சம் சாலையோரங்களைக் கவனிச்சிட்டே போவேன்.

      அடுத்த தடவ ஊருக்குப் போகும்போது கட்டாயம் நினைவுபடுத்துகிறேன்.

      எகிப்தில் இன்னும் சூப்பரா இருந்திருக்குமே !! நன்றி ப்ரியா!

      Delete
  2. இனிய நினைவுகள்.....

    நெய்வேலி நினைவுகள் எனக்குள்ளும்! :)

    ReplyDelete
    Replies
    1. ஓ, பதிவு நினைவுகளை அசைபோட வைத்துவிட்டதா :)

      வருகைக்கு நன்றி வெங்கட்.

      Delete
  3. ஆஹா..!! ஈச்சம்பழம் கண்ணை கவருதே!

    நானும் ஊரில் இருந்தப்போ சாப்பிட்ட நினைவு வருகிறது!
    இங்கு அதற்குப் பதில் பே..ரீச்சம் பழம் வாங்கிக் கொள்கின்றோம்!

    வாழ்த்துக்கள் சித்ரா!

    ReplyDelete
    Replies
    1. இங்கும் அதே கதைதான். ஃப்ரெஷ் பேரீச்சம் காய்களைப் பார்க்கும்போது ஈச்சம் பழ நினைவு வரத்தான் செய்கிறது. வருகைக்கு நன்றி இளமதி.

      Delete
  4. ..அழகான நினைவுகள்.... ஈச்சம்பழம் படங்கள் அழகு ...ஆனனா சுவை ....ஐயோ சாப்டதே இல்ல ...

    ReplyDelete
    Replies
    1. அனு,

      இன்னும் சாப்டதில்லையா !! கண்டிப்பா உங்க ஊர்ல இருக்கும், எதுக்கும் ஒரு ஃபோன் பண்ணி கேட்டு வைங்க ! வருகைக்கு நன்றி அனு.

      Delete
  5. இனிய நினைவுகள்! சாப்பிட்டிருக்கின்றோம்...

    கீதா: அமெரிக்க ஃப்ரெஷ் டேட்ஸ் அதான் ஈச்சம் பழம் சாப்பிட்டுருக்கேன்...நல்லாருகும்...இப்ப இங்க சென்னைல கிடைக்கறதே இல்லை பாக்கணும் எங்காவது கிடைக்குதானு...

    ReplyDelete