Saturday, April 25, 2015

இன்பச் சுற்றுலா _ 4

விடுதியில் தங்கி படித்தபோது பல சுற்றுலாக்கள் சென்றோம். சிக்கனம் கருதி அப்பாவுக்கு உதவுவதாக நினைத்து நாங்களாகவே சில சுற்றுலாக்களைத் தவிர்த்துவிட்டோம். அவற்றுள் கடைசியாக சென்ற சுற்றுலா மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு ஊருக்குத்தான் செல்லுவார்கள். ஏனோ அந்த தடவை மட்டும்  10 & 12 வகுப்புகள் ஒன்றாக செல்ல ஏற்பாடானது. அப்படியானால் ..... அப்படியானால் ....... சகோதரியுடன் செல்வேன். நினைக்கும்போதே சந்தோஷமாக இருந்தது.

தனியாகப் போனால் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும், அதுவே சகோதரியுடன் போனால் அவர் நம்மைப் பார்த்துக்கொள்வார் என்பதால்தான். இப்போதும் இந்த பாதிப்பு என்னுள் உண்டு :(

செல்லப்போவது திருச்சி என்றதும் என் சகோதரிக்கு ஒரு யோசனை. "ஏன் (தாய்)மாமாவை அங்கு வந்து நம்மை பார்க்கச் சொல்லக்கூடாது" என்று.

அவர் இராணுவத்தில் இருந்ததால் அவரைப் பார்க்கவோ, பேசவோ எனக்கு பயம். அதனால் மனதுக்குள் "வேண்டாமே" என்றிருந்தது.

சகோதரி வழக்கம்போல் இன்லேண்ட் லெட்டரின் முதல் முழு பக்கத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டு பின்னால் உள்ள பக்கத்தை எனக்கு ஒதுக்கினார்.

நானும் ஏதோ இரண்டு முழு பக்கக் கட்டுரையை நான்கைந்து வரிகளுக்கு மிகாமல், கருத்து மாறாமல் எழுதச்சொன்ன மாதிரி அவர் எழுதியதையே சுருக்கி நான் எழுதினேன். ஒட்டி போட்டுவிட்டு பதிலுக்காகக் காத்திருந்தோம்.

நல்லவேளை, சுற்றுலா செல்லும் நாள்வரை பதில் வரவில்லை. 'அப்பாடா, தப்பித்தோம்' என்றிருந்தது எனக்கு.

நான்கு பேருந்துகளில் சென்றோம். வழியில் நிறுத்தி காலை உணவாக ப்ரெட் ஜாம் சாப்பிடக் கொடுத்தனர்.

சமயபுரம் சென்று மாரியம்மனை வணங்கிவிட்டு, அங்கிருந்து நேரே கல்லணையில் இறக்கி விடும்போது 'பனிரெண்டு மணிக்கெல்லாம் தண்ணீர் வசதி இருக்கும் இடமாகப் போய்ப் பார்த்து சாப்பிடுவோம், அதுவரை சுற்றிப் பாருங்கள் ' என்று கூறி எங்களை அவிழ்த்துவிட்டனர்.

அவ்வளவுதான், கல்லணை முழுவதும் மாணவிகள். அணையின் குறுக்கே நடக்கும்போது சிலீரென்று எழும்பி அடித்த சாரலால் பலமுறை மீண்டும்மீண்டும் குறுக்கே ஓடினோம். கீழே பார்த்தால் தண்ணீரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து துள்ளிக் குதித்த மீன்களை ரசித்தபடியே வந்தோம். ஆங்காங்கே இருந்த சிலைகளையும், பசுமையையும் ரசித்தோம்.

மாமாவுக்குக் கடிதம் போட்டதோ, பதில் வராததோ அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. எனக்குத் தேவை 'மாமா அங்கே வரக்கூடாது' என்பதுதான். என் வேண்டுதல் நிறைவேறியதில் அளவிலா மகிழ்ச்சி.

இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தோம். இடையில் 'அக்க்க்காஆஆஆ' என ஒரு குட்டிப்பெண் ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டாள். அவளைப் பார்த்ததும் ஏகத்துக்கும் சந்தோஷம், ஆனாலும் அவளின் அப்பா வந்திருப்பாரோ என கவலையும் தொற்றிக்கொண்டது.

"'மாமா'வால வர முடியல, அதனாலதான் நானும் பாப்பாவும் மட்டும் வந்தோம்" என அக்கா(மாமாவின் மனைவி) சொன்னதும்தான் எனக்கு உயிரே வந்தது.

அக்கா அல்வாவும், மிக்ஸரும் செய்து கொண்டு வந்திருந்தார். சாப்பிட சாப்பிட அமுதமாய் இனித்தது. ஆமாம், அக்காவைப் போலவே அவரது சமையலும் சூப்பராக இருக்கும். பழங்கள் எல்லாம் வாங்கி வந்திருந்தார். ஏதேதோ கதைகளை எல்லாம் பேசிக்கொண்டே காலி பண்ணினோம்.

சிறிது நேரத்திற்குப் பிறகு "வீட்டு சாப்பாடு சாப்பிடுவோமே" என்று சொல்லி இட்லி, தக்காளி சட்னியை எடுத்துக் கொடுத்தா

சின்ன வயசுல‌ சாதாரணமாகவே எனக்கு இட்லி பிடிக்காது. அதுவும் மதிய நேரத்தில் ...?  'வேண்டாம்' என சொல்ல எனக்குக் கூச்சம்.

அதற்குள் மாணவிகளும் உணவுப் பொட்டலங்களுடன் ஆங்காங்கே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். எங்களுக்கும் இரண்டு சாப்பாட்டுப் பொட்டலங்கள் கொடுக்கப்பட்டன. அவர்களுடன் சேர்ந்து புளி சாதத்தையும் உருளைக் கிழங்கையும் ஒரு பிடி பிடிக்க வேண்டும்போல் இருந்தது.

சாப்பாட்டு பார்ஸலில் இரண்டு பேர் சாப்பிடும் அளவில் புளி சாதமும், அதில் பாதியளவிற்கு உருளைக்கிழங்கு பொரியலும் இருக்கும். இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது 'ஆஹா' என்றிருக்கும். முட்டை வேண்டுமென்றாலும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் யாரும் முட்டையைக் கேட்கமாட்டோம்.

"சாதத்த என்னக்கா செய்யிறது ?" என்று சகோதரி கேட்டதும், சுவைத்துப் பார்த்துவிட்டு, "நல்லாதான் இருக்கு, வீணாக்க வேண்டாம், உங்க அக்கா பொண்ணுங்க உங்களுக்கு ஆசையா சாப்பாடு கொடுத்து அனுப்பி இருக்காங்கன்னு மாமாகிட்ட கொடுக்கிறேன்" என்று சொல்லி எடுத்துக்கொண்டார்.

"போகுதே போகுதே புளிசாதம் போகுதே" என மனம் வயலின் வாசித்தது.

நீண்ட நேரம் எங்களுடன் இருந்துவிட்டு, நாங்க எல்லோரும் உச்சி பிள்ளையார் கோவிலுக்குக் கிளம்பும்போது பிரியா விடை கொடுத்துப் பிரிந்தார்.

அன்று மட்டுமல்ல, பல ஆண்டுகள் கழித்து இன்றும்கூட அந்த கடைசி புளிசாதத்தையும் , உருளைக்கிழங்கையும் மிஸ் பண்ணிவிட்டேனே என்ற வருத்தம் உண்டு.

2001 ல் என் சகோதரியோடு மீண்டும் கல்லணை போனபோது பழைய உற்சாகம் வந்துவிடாதவாறு என் மகளும், அவரது பிள்ளைகளும் பார்த்துக்கொண்டார்கள். இவர்களை மேய்க்கவே எங்களால் முடியவில்லை. தண்ணீரும் வறண்டு ஒருவித கெட்ட நாற்றம் அடித்துக்கொண்டிருந்தது. அங்கு இருக்கவே பிடிக்கவில்லை.

எங்களுடன் வந்திருந்த‌ அம்மாவிடம், "எல்லாம் அக்கா பண்ண வேல, கடைசி புளி சாதத்த சாப்பிடாமப் போயிட்டேன். லெட்டர் போடாமலே இருந்திருக்கலாம்" என்று சீண்டினேன். இது அடிக்கடி நான் சொல்லும் டயலாக்'தான்.

அவரும் வழக்கம்போல, "இன்னமும் மறக்கல பாரேன். இவள யாரும்மா புளிசாதம் சாப்பிட வேணாம்ணு சொன்னது? நான் இட்லியே சாப்பிட்டுக்கிறேன்னு சொன்னது யாரு?" என்றார்.

    *********************************************************************************
அதன் பாதிப்போ என்னவோ நான் எப்போது புளி சாதம் செய்தாலும் உடன் உருளைக்கிழங்கும் இருக்கும். கூடவே சர்க்கரைப் பொங்கலும் சேர்த்து சாப்பிட சுவையோ சுவைதான். நீங்களும் கொஞ்சம் சாப்பிட்டுப் பாருங்க !
        
       ********************************************************************************

12 comments:

  1. ஷ்..ஷ் யம்மி புளிச்சாதம்,பொங்கல்,பொரியல்(உருளை) வித்தியாச சுவை, காம்பினேஷன். நானும் இப்படி ஒரு டிபரண்ட் ஆக ஒரு உணவு சாப்பிடுவேன்.வீட்டில் அம்மா,இப்போ கணவர் ஏசுவாங்க.
    அதானே..!! நீங்க உங்களுக்கு பிடிச்சத சாப்பிட்டிருக்கலாம்.இப்ப யோசிக்கதேவையில்லை. சில செயல்களை (நினைப்பதும்)உடனே செய்திடனும்.பிறகு யோசித்துப்பயனில்லை.

    //"போகுதே போகுதே புளிசாதம் போகுதே" என மனம் வயலின் வாசித்தது.// ஹா.ஹா..ஹா செம.
    குறைந்த வாடகை நிறைந்த சேவை..........// இச்சேவை எங்களுக்கு தேவை. நாங்க போகவிருக்கும் டூருக்கு பஸ் வருமா.......ஆ.
    ரசித்து மகிழ்ந்த நினைவுகளை சூப்பரா எழுதியிருக்கிறீங்க சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியா,

      பெரும்பாலும் நானும் என‌க்குப் பிடிச்சதத்தான் சமைக்கிறேன் ! இவரிடம் கேட்டால் 'உனக்குப் பிடிச்சத செய்' என்பார். பொண்ணு வீட்ல இருந்த வரைக்கும் கேட்டுகேட்டு செய்வேன்.

      "இச்சேவை எங்களுக்கு தேவை" ____ ஹா ஹா ! வரும்வரும், வண்டியை நம்பித்தானே இருக்கிறோம் !

      சென்ற சுற்றுலா பின்னூட்ட பாதிப்பால இந்த வாக்கியத்தை எழுதும்போது ப்ரியாதான் மனசுல வந்தாங்க. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ப்ரியா.

      Delete
  2. சூப்பரான சுற்றுலா அந்தக் காலத்தில் புளி சாப்பாடு அனைவருக்கும் பிடித்தமானது இப்ப உடல் சூடு பிடிக்கிறதென்று வீட்டில் செய்து ரொம்ப வருடங்களாயிற்று பதிவைப் படித்ததும் ஆசையா இருக்கு என்றாவது ஒருநாள் செய்யணும்

    ReplyDelete
    Replies
    1. எழில்,

      புளிசாதம் செஞ்சு பல வருடங்கள் ஆகிறதா ! சட்டுபுட்டுன்னு சீக்கிரம் செஞ்சு சாப்பிடுங்க ! வருகைக்கு நன்றி எழில்.

      Delete
  3. மூன்றாவது முறையாக பின்னூட்டம். கனெக்ட் ஆவதில்லை. புளியஞ்சாதத்திற்கு என்ன கோபமோ. கல்லணை புளியஞ்சாதத்தை நாநும் மிஸ் பண்ணூகிறேன். இதுவாவது போகிறதா பார்க்கலாம். அன்புடன்

    ReplyDelete
    Replies

    1. காமாக்ஷிமா,

      கல்லணை புளிசாதம் பார்சல் இந்நேரம் கையில் கிடைச்சிருக்குமே !

      புளி சாதத்தைவிட பின்னூட்டம் சுவையா இருக்கே! அன்புடன் சித்ரா.

      Delete
  4. புளிசாத நினைவுகள் எல்லோருக்கும் சுவையானவை. எனக்கும் சிறு வயதில் கல்லணை சென்ற அனுபவம் உண்டு. அப்போது தண்ணீர் நிறைய இருந்தது. கல்லூரிப் பருவத்தில் சென்றபோது, அணை காய்ந்து பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தது. அதனாலோ என்னவோ, அதன்பிறகு கல்லணைக்கு செல்லவே தோன்றவில்லை.

    ReplyDelete
    Replies
    1. மலரும் நினைவுகளால் மகிழ்ந்து, மீண்டும் அங்கே போகும்போது அந்த இடம் அப்படியே இருக்க வேண்டும் என்ற நம்முடைய எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறும்போது, மீண்டும் அங்கே செல்லத் துணிவில்லாமல்தான் போகிறது.

      உங்கள் நினைவுகளையும் இங்கே பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி ஆறுமுகம்.

      Delete
  5. கல்லணைக்கு நாங்களும் கல்லூரியிலிருந்து ஒரு நாள் சுற்றுலா சென்றிருக்கிறோம்...... அப்போது கிடைத்த அனுபவங்கள் எனது மனதில்......

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  6. கல்லணை அருமையான இடம்....ஆனால் இப்போதெல்லாம் பழையபடி இல்லை. தண்ணீருஇன் வருத்தும் மழைக்காலங்களில் மட்டுமே...என்னதான் இருந்தாலும் நீங்க அந்த புளி சாதத்தை மிஸ் பண்ணியிருக்கக் கூடாதுதான்....விடுங்க அதான் இப்ப சாப்பிடுறீங்களே....ஆனா என்ன கல்லணை மிஸ்ஸிங்க்....ஹூம் ஒண்ணு இருந்தா ஒண்ணு இருக்காது....ஹஹ் வாழ்க்கைத் தத்துவம்?!!!!!

    அருமையான அனுபவ விவரணம்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, கல்லணை என்றாலே புளி சாதமும் உருளைக் கிழங்கும்தான் மனசுல பதிஞ்சுபோய் இருக்கு. பதினைந்து வருடங்களுக்கு முன்பே அப்படி இருந்தபோது இப்போது எப்படி இருக்கும் என நினைக்கவே முடியாது.

      வருகைக்கு நன்றி கீதா.

      Delete