Thursday, April 2, 2015

உடைந்தது சுக்குநூறாய் !!

இதுநாள் வரையில் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்ததுபோய் இப்போது தாராளமாய் மூன்று பேர் அமரும் 'டெஸ்க்'குகளில் உட்கார வைக்கப்பட்டதும் இந்திராவுக்கு ஒருவித இனம்புரியாத சந்தோஷம்.

வழவழ தரை, பெரிய பெரிய வராண்டாக்கள். எங்கும் வண்ணவண்ண உடைகளில் பெண் பிள்ளைகள், உயர் ரக சேலைகளில் 'சரக்சரக்' என‌ வலம் வரும் ஆசிரியைகள். பெரிய பெரிய கட்டிடங்கள், அவற்றை சுற்றிலும் அடர்ந்த மரங்களும், பெயர் தெரியாத‌ பூச்செடிகளுமாக எங்கும் அழகு வழிந்தோடியது.

மகளின் சுட்டித்தனத்தினாலோ(இருக்   கா   து !), அல்லது பெண்குழந்தைகள் படித்து தங்களின் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற  நல்ல எண்ணத்தினாலோ(இதுதான் உண்மை) என்னவோ இந்திராவின் அப்பா அவளை அவள் ஊரிலிருந்து கொஞ்சம் தொலைவிலுள்ள விடுதியுடன் கூடிய‌ ஒரு பள்ளியில் சேர்த்து விட்டுவிட்டார்.

வகுப்பாசிரியை தாயுள்ளத்துடன் அவளை வகுப்பிற்குள் அழைத்து வந்து அவள் உட்காருவதற்கான இடத்தைத் தேடினார்.

"வேண்டாம், அந்தப் பெண் பக்கத்தில் மட்டும் வேண்டவே வேண்டாம்" என்று அவள் மனம் நினைத்தது. அந்த இடம் ஆசிரியைக்கு முன்னால் உள்ள டெஸ்க்கில் இருந்தது.

வேறொன்றுமில்லை, அப்பெண்ணின் கிராப் தலை இவளுக்கு ஏதோ ஒரு அசௌகரியத்தைக் கொடுத்திருக்கிறது.

'அது அவள் விருப்பம், அவள் கிராப் வைத்துக்கொள்ளட்டும், அல்லது குதிரைவால் போட்டுக் கொள்ளட்டும், அது அவள் இஷ்டம். அதைப் பிடிக்கவில்லை என்று சொல்ல தனக்கு உரிமையில்லை' என்று அறிந்துகொள்ளும் வயதிலோ, பக்குவத்திலோ அவள் இல்லை.

ஆனால் ஆசிரியை இவளுக்கான இடத்தைச் சுட்டியது அப்பெண்ணின் பக்கத்தில்தான்.

"முடியாது" என்று சொல்ல முடியாது. புது இடம், அவளையே அவளால் நம்ப முடியவில்லை, அந்தளவிற்கு அடக்கமும் அமைதியுமாக போய் உட்கார்ந்தாள்.

இவள் மனதிற்குள் அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்தது அப்பெண்ணிற்கு தெரியாதில்லையா ! அது தெரியாமல் அப்பெண் இவளது ஊர், பெயர் எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டாள். வேண்டா வெறுப்பாகத்தான் பதில் வந்தது இந்திராவிடமிருந்து.

பிறகு தன் பெயர் 'மீனாட்சி' என்றும், தான் காரைக்குடியிலிருந்து வந்திருப்பதாகவும் சொன்னதும் இந்திராவின் கண்களில் ஒரு 'பளிச்' ! பின்னே இருக்காதா ! தன் அம்மா பிறந்து, வளர்ந்த ஊராச்சே !

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "நீ ஏன் பாய்ஸ் கட்டிங் வச்சிருக்கே" என்று கேட்டே விட்டாள்.

விடுதியில் இருப்பதால் தன்னால் சரியாகப் பராமரிக்க முடியாது என்பதால் தன் தாய் இவ்வாறு வெட்டிவிட்டதாக அப்பெண் சொல்லவும் இந்திரா தான் நினைத்ததை எண்ணி வெட்கப்பட்டாள்.

அதற்குள் பக்கத்து 'டெஸ்க்'கில் சிறு சலசலப்பு. புதிதாக வந்த கௌரியை ஆசிரியை டெஸ்க்கின் ஓரத்தில் உட்கார வைத்துவிட்டதால், அவர் போனதும் நடுவில் உட்கார்ந்திருந்த ரேவதி ஆத்திரத்தில் கௌரியைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டுவிட்டாள்.

"என்ன பிள்ளைகள் இவர்கள் ! " என அவள் மனம் நினைத்தது.

இப்போது அவளது வகுப்பில் பல பெயர்களில் பல பிள்ளைகள். அதில் ஒரு பெயர் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அது 'திருமதி'.

திருமணமான பெண்களின் பெயருக்கு முன்னால் இவ்வார்த்தையைப் பார்த்து பழக்கம் . அதுவே பெயராக இருந்தது இவளுக்கு வியப்பையளித்தது.

வகுப்பிலேயே அப்பெண் நன்றாகப் படிப்பாள் என்பது அவளது நடவடிக்கையிலேயேத் தெரிந்தது. வகுப்பிற்குள் வரும் ஆசிரியைகள் அனைவருமே எல்லாவற்றுக்கும் அவளையே அழைத்தனர். வகுப்பின் லீடரும் கூட அவள்தான். ஏனோ எப்போதுமே திருமதி வேர்த்த முகத்துடனேயே இருந்தாள்.

எப்படியோ கடகடவென ஒரு மாதத்திற்கும்மேல் ஓடிவிட்டது. முதல் மாதாந்திரத் தேர்வு விடைத்தாள்கள் வர ஆரம்பித்தன. விடைத்தாள்களைக் கொடுக்குமுன் சொல்லி வைத்தாற்போல் வகுப்பாசிரியைத் தவிர அனைத்து ஆசிரியைகளும் "ஆமாம், இந்த க்ளாஸ்ல இந்திரா யாரு?" என்றுதான் கேட்டனர்.

இந்திரா நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்ததே அதற்குக் காரணம். அங்குதான் இந்திராவுக்குப் பிரச்சினை ஆரம்பமானது. விடைத்தாள்களை இவள் சரிபார்க்கு முன்னமே இவளிடமிருந்து பிடுங்கி திருமதி சரிபார்த்தது இவளுக்குப் பிடிக்கவில்லை. எரிச்சலைத் தந்தது.

அனைத்து பாடங்களின் மொத்த மதிப்பெண் இருவருக்குமே ஒன்றாகிப் போனதுதான் ஆச்சரியம். மொழி பாடங்களைக் கணக்கிட்டு first rank ஐ திருமதி தட்டிச் சென்றாள்.

இதனால் இந்திராவுக்கு எந்த வருத்தமும் இல்லை. இதற்குமுன் இப்படியெல்லாம் ரேங்க் போடும் பள்ளியில் படித்திருந்தால் ஒருவேளை அதைப்பற்றி கவலைப்பட்டிருப்பாள்.

ஆனால் திருமதியோ தினமும் 'நச்நச்' என தொந்திரவு கொடுத்துவந்தாள். "இந்தக் கணக்குக்கு உனக்கு விடை வந்ததா?" என்றால் பரவாயில்லை. மாறாக "இந்தக் கணக்குக்கு உனக்கு மட்டும் எப்படி விடை வந்தது?" என்று கேட்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை.

"இத படிச்சிட்டியா ? அத எழுதிட்டியா ?" என தினமும் தொல்லைதான். அவள் தன்னை நோக்கி வந்தாலே "ஆரம்பிச்சிட்டாய்யா, ஆரம்பிச்சிட்டாய்யா" என தனக்குள் சிரித்துக்கொள்வாள்.

மீனாட்சி, ரேவதி இவர்களையெல்லாம் ஏற்றுக்கொண்ட இந்திராவால் திருமதியை மட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இப்படியே ஒரு வருடமும் ஓடி முடிந்துவிட்டது. கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு படையெடுத்து விட்டனர் மாணவிகள்.

"நான் இந்த வகுப்பு, நீ எந்த வகுப்பு?" என தோழிகளுக்குள் அளவளாவினர்.

இந்திராவின் மனதிலோ 'திருமதி நம் வகுப்பில் இல்லாமல் வேறு வகுப்பிற்கு சென்று விட்டால் நன்றாக இருக்குமே' என்று நினைத்துக்கொண்டாள். ஆனால் வெளியில் சொல்லவில்லை.

தன் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஒரு நோட்டமிட்டாள். 'நல்லவேளை, ஆளைக் காணோம்' என்ற திருப்தி இருந்தாலும் 'நல்லநாள் பார்த்து இன்னொரு வந்து விடுவாளோ' என்றும் நினைத்தாள்.அப்படி வந்துவிட்டால் ... ?

வகுப்பாசிரியை வந்து வருகைப் பதிவேட்டை எடுத்து வாசித்து முடித்த பிறகுதான் நிம்மதி வந்தது. 'அப்பாடி,, திருமதி' பெயர் வருகைப் பதிவேட்டில் இல்லை, அப்படின்னா .... அப்படின்னா ..... வேறொரு வகுப்பில், ஹா ஹா ஹா !!!

ஒருவேளை 'திருமதி' அந்த இரண்டு ஏழாம் வகுப்பினில் ஒன்றில் இருக்கக் கூடும் என அந்த வகுப்பிலுள்ள தன் தோழிகளிடம் விசாரித்தாள். அவர்கள் 'அங்கும் இல்லை' என்றனர்.

இறுதியில், என்னதான் 'நொய்நொய்'னு நச்சரித்தாலும் பள்ளிக்கு அவள் வராதது இந்திராவுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.

ஆசிரியையிடம் கேட்டுப் பார்க்கலாம், ஆனால் அவ்வாறு கேட்கும் தைரியமெல்லாம் அப்போது அவளுக்கில்லை.

ஒரு வாரம் தாக்குப் பிடித்தாள். பிறகு சென்ற வருடம் இவர்களது வகுப்பில் படித்த 'திருமதி'யின் பக்கத்து வீட்டுப்பெண் ப்ரியாவை நினைவுக்கு வரவும் அவளைத் தேடிப் பிடித்து விசாரித்தாள்.

"அவளுக்கு ஹார்ட் ப்ராப்ளமாம், இனிமே ஸ்கூலுக்கு வரமாட்டாளாம் " என்றாள் ப்ரியா.

'வீக்' ஆனது .................................................திருமதியின் இதயம் மட்டுமல்ல, 
உடைந்து சுக்கு நூறாகிப் போனது .........இந்திராவின் இதய‌மும்தான்.

12 comments:

  1. வணக்கம்
    கதை நன்றாக உள்து அற்புதமாக எழுதியுள்ளீர்கள் அதிலும்முடித்த விதம் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ரூபன் !

      Delete
  2. சே...! என்ன கொடுமைங்க இது...?

    ReplyDelete
    Replies
    1. எதிர்பாராமல் எதிர்கொள்வதுதானே வாழ்க்கை :(

      Delete
  3. நல்ல கதை. சோகமான முடிவு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட் !

      Delete
  4. கதை அருமை! பாவம் திருமதி!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. திருமதி பாவம்தான் :(

      கீதா & துளசிதரன் உங்கள் இருவருக்கும் நன்றி !

      Delete
  5. சித்ராஆஆ... என் இதயமும் சுக்குநூறாகீட்டுது. இத எதிர்பார்க்கல.நான் முடிவைச்சொன்னேன்.
    சூப்பரா கதை எழுதுறீங்க சித்ரா.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியசகி,

      இந்திரா திருமதியிடம் கொஞ்சம் பாசமாக இருந்திருந்தால்கூட ஓரளவுக்கு ஜீரணித்திருப்பாள். யாருக்குத் தெரியும் இப்படியெல்லாம் நடக்குமென்று :(

      உங்கள் அனைவரின் உந்துதலால்தான் எழுதவேத் தோன்றுகிறது. பாராட்டுக்கு நன்றி ப்ரியசகி !

      Delete
  6. சில சமயங்களில் நம் மனம் என்ன நினைக்கிறது எதை எதிர் பார்க்கிளது என்பது நமக்கும் புரிவதில்லை சித்ரா
    அருமையானக் கதை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, நாம் ஒன்றை எதிர்பார்க்க, அது வேறு மாதிரியாக மறக்க முடியாதபடி நடக்கும்போது என்ன செய்வது :(

      பாராட்டுக்கும் நன்றிங்க !

      Delete