Saturday, March 29, 2014

சுளை(வை)யான நினைவுகள் !


                                                   உங்களுக்குத்தான், எடுத்துக்கோங்க !!


மகள் வீட்டுக்கு வந்த சந்தோஷத்தில் கடந்த ஞாயிறன்று $ 15 க்கு நாங்கள் வாங்கிவந்த பலாப்பழம்தான் இது. நான்கு நாட்களுக்கு வீடு பலாப்பழ வாசனையால் திளைத்தது.

சில வருடங்களுக்கு முன்புவரை, இங்கு வந்து மிஸ் பண்ணியதில் இந்த பலாப்பழமும் ஒன்று. இப்போது பரவாயில்லை, கீற்றுகள், முழு பழம் என கிடைக்கிறது. 

ஒவ்வொரு முறை பலாப்பழத்தை அரியும்போதும் எங்களுக்குள் சில நினைவுகளைப் பகிர்ந்துகொள்வோம், தனியாக அரியும்போதும் அந்த நினைவுகள் வந்துபோகும்.  அவைதான் இன்றைய பதிவு.
                                             ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


பலாப்பழம் வாங்குபவர்களுக்குத் தெரியும், அதிலுள்ள சிரமங்கள் என்னவென்று. வாங்குமிடத்தில் பலாப்பழத்தை அரிந்துகொண்டிருப்பவர் மஞ்சள் நிறத்தில் குண்டுகுண்டு சுளைகளாக, சுவைத்துப் பார்த்தால் இனிமையாக இருப்பவைகளை கூறு போட்டு விற்றுக்கொண்டிருப்பார்.

நம்பி, அவரிடம் ஒரு முழு பழத்தை வாங்கிவந்து, நான்கைந்து நாட்கள் பழுக்கவைத்து, பழுத்துவிட்டதா என ஆங்காங்கே குட்டிகுட்டியா சதுர வடிவ ஓட்டைகள் போட்டு, முடிந்தவரைக்கும் பலத்தையெல்லாம் உபயோகித்து ஓட்டை வழியாக  ஒரு சுளையை பல பாகங்களாகப் பிச்சு எடுத்து சாப்பிட்டுப் பார்த்து, உறுதி செய்துகொண்டு அரிந்து பார்த்தால் .......... ஒன்று பழம் பழுக்காமல் இருக்கும், அல்லது அதிலுள்ள சுளைகள் குடல்(சக்கை) சைஸிலேயே  இருக்கும். வெறுத்துப் போய்விடும்.

சரி இதெல்லாம் தேவையேயில்லை, அரியும்போதே சுளைகளாக வாங்கி வந்துவிடலாம் எனப் பார்த்தால் நமக்குமுன்னே அவற்றைத் தூக்கிப்போக ஈக்கள் தயாராக இருக்கும். அதுக்குப் பயந்தே என்னவானாலும் பரவாயில்லையென ஒரு நம்பிக்கையுடன் முழு பழத்துடன் வீடு திரும்புபவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.

அம்மா வீட்டில்  பழத்தை எப்படி அரிவதென்றெல்லாம் தெரியாது. அப்பா ஒரு பெரிய‌ முழு பழத்தை நீளவாக்கில் நான்காகப் பிளந்து, நடுவிலுள்ளத் தண்டை நீக்கிவிட்டுக் கொடுத்துவிடுவார். வெட்டுபட்ட இடத்தில் பாதிக்குப் பாதி சுளைகள் கன்னாபின்னான்னு பிஞ்சுபோய் கிடக்கும். அவற்றை மேலும் பிச்சு உதறி எடுப்பது எங்கள் வேலையாக இருக்கும்.

ஆனாலும் ஒரு குஷி, என்னன்னா, பிஞ்சு போனதையெல்லாம் இஷ்டத்துக்கும் சாப்பிட்டுக்கொள்ளலாம், முழுசா இருக்கறத மட்டும் 'குண்டான்'ல(பாத்திரத்தில்) போட சொல்லுவாங்க. அந்த வயதில் இதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும் !

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்தார்போல் புது உறவு ஒன்று வந்தது மாமியார் வீட்டு வடிவில். அதன்பிறகு மாவு சுளைகள், இனிப்பு சுளைகள், ஒல்லி சுளைகள், குண்டு சுளைகள் என விதவிதமாக சாப்பிட்டுப் பார்த்தாச்சு. அவங்க வீட்ல சில பலா மரங்கள் இருந்தன. இப்போது வெட்டிவிட்டார்கள்.

இங்கு வந்த புதிதில் நம்ம ஊர் கடை ஒன்றில் சிறுசிறு பலா கீற்றுகள் வாங்கிவருவோம். சில சமயங்களில் நன்றாக இருக்கும், பல சமயங்களில் சொதப்பிவிடும்.

சீஸன் சமயத்தில் உழவர் சந்தையில் பலா கீற்றுகள் கிடைக்கும். விலை அதிகம் என்றாலும் நம்பி வாங்கலாம். புதிதாக, சுவையானதாக இருக்கும். ஏனோ இந்த வருடம் விற்பனைக்கு வரவில்லை.

இப்போதெல்லாம் ஒருசில பழக்கடைகளில் முழு பழங்களாகவே கிடைக்கின்றன. அதனால் முன்புபோல் ஊருக்குப் போனால்தான் சாப்பிட முடியும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை.

இவரோ பழத்தை கத்தியால் சுத்திசுத்தி நறுக்கிக்கொண்டே வந்து, ஒரு சுளையும் பழுதாகாமல் எடுப்பதைப் பார்த்து, இப்போதெல்லாம் நானும் அப்படியே எடுக்கக் கற்றுக்கொண்டேன். ஒரு சுளையையும் பிச்சு உதறாமல் எப்படி எடுத்திருக்கேன் பாருங்க !!

அதுக்காக என்னைப் பார்க்க வருகிறவர்கள் எல்லோரும் முழுபழத்துடன் வந்து ................  நறுக்கித் தரச் சொல்லி எடுத்துப் போகலாம் என எண்ணி வந்தீங்களோ ...............   ஒன்றும் அதிகமில்லை, கூலியாக முழு பழத்தை அப்படியே லபக்கிடுவேன், அவ்வளவே !!!!

இந்த வாரம் முழுவதும் சாம்பார், பொரியல், குருமா, பிரியாணி, மீன்குழம்பு என எல்லாவற்றையும் இந்த பலாக்கொட்டைகள் ஆக்கிரமித்துக்கொண்டன. பலாக் கொட்டைகளை அன்றன்றே பயன்படுத்திக்கொள்வது நல்லது. அப்போதுதான் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

4 comments:

 1. அட போங்க... எச்சில் ஊருகிறது... (ஆனால் நான் சாப்பிடக் கூடாது...!)

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ, சாப்பிடக் கூடாது என்றால் கஷ்டம்தான் ! வருகைக்கு நன்றிங்க தனபாலன்.

   Delete
 2. ஆஹா... பலாச் சுளை!

  பலாப்பழத்திலிருந்து பலாச்சுளைகளை எடுப்பதே ஒரு தனி கலை! நெய்வேலியில் இருந்தவரை நான் தான் எடுப்பேன்.

  இந்தப் பலாச்சுளையில் கொஞ்சம் தேன் விட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள்! ரொம்பவே சுவையாக இருக்கும். பலாச்சுளை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு...

  ReplyDelete
  Replies
  1. பலாச் சுளைகளை சாப்பிடப் போகிறோம் என்று நினைத்தாலே அதை எடுப்பதிலுள்ள சிரமங்கள் காணாமல் போயிடும்.

   பண்ருட்டிக்கும் நெய்வேலிக்கும் இடையில் சாலையில் போகும்போது முந்திரியையும், பலாவையும் பார்த்து ஆச்சர்யப்பட்டதுண்டு.

   தேன் தொட்டு சாப்பிட்டா நல்லாருக்கும்னு சொல்லக் கேட்டிருக்கேன். ஆனால் முயற்சித்ததில்லை. அடுத்த தடவ(எப்படியும் இரண்டரை மாதங்களாகும்) பலா வாங்கும்போது கூடவே தேனையும் சேர்த்து வாங்கி வருகிறேன். வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க வெங்கட்.

   Delete