படம் உதவி_கூகுள்
கடந்த இரண்டு வாரமாகவே எங்கம்மாவிடம் தொலைபேசியில் பேசும்போது " மஹா சிவராத்திரிக்கு பாப்பா வீட்ல இல்லன்னு கொழுக்கட்டை செய்யாம விட்டுடப்போற, செஞ்சு சாப்பிடுங்க" என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
நானும் உதட்டளவில் "சரிம்மா" என்றே சமாளித்தேன்.
சென்ற வியாழக் கிழமையும் அதேமாதிரி, "போன வாரம் செய்யலனாக்கூட பரவாயில்ல, இன்னிக்கு மஹா சிவராத்திரி முடிந்து எட்டாம் நாள், செஞ்சு சாப்பிடும்மா" என்றார்.
எப்படியும் இன்னும் ஒரு பதினைந்து நாளில் செய்யப் போகிறேன், நடுவில் இப்போது எதற்கு என்று விட்டுவிட்டேன்.
"அதுசரி, மஹா சிவராத்திரிக்கும், கொழுக்கட்டைக்கும், குடை இராட்டினத்துக்கும் என்ன சம்மந்தம்?" என்றுதானே கேட்கிறீர்கள் !
எங்கள் ஊரில் மஹா சிவராத்திரி அன்றும், அதற்கு அடுத்த எட்டாவது நாளும் கொழுக்கட்டையும், சுண்டலும் செய்து குலதெய்வத்தை வழிபடுவது வழக்கம். எங்கள் ஊரில் பெரும்பாலானோரின் குலதெய்வம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்.
குலதெய்வமாக இருப்பதால் வருடத்தில் பலமுறை இக்கோயிலுக்கு செல்வோம். மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் விசேஷமானது. அதைத்தொடர்ந்து மயானக் கொள்ளை, அடுத்து தேர் என திருவிழா களைகட்டும்.
திருவிழாவின்போது அவரவர் நிலத்தில் விளைந்த தானியங்கள், சில்லறை காசுகள், கொழுக்கட்டை போன்ற திண்பண்டங்கள் சூறை விடப்படும். அதாவது கூட்டத்தை நோக்கி அவற்றை வாரி இறைப்பர். திண்பண்டங்களாக இருக்கும் பட்சத்தில் பறந்து வரும் அவற்றை பிடித்து சாப்பிடுவதில் ஒரு மகிழ்ச்சி நிச்சயம் உண்டு. தானியங்கள் பொதுமக்களின் காலில் மிதிபட்டு அடுத்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை.
ஜாலியாக இருந்தாலும் கூடவே கொஞ்சம் பயமும் வரும். கோயில் இருப்பது சுடுகாட்டுப் பகுதியில். அதுவுமல்லாமல் திருவிழா சமயத்தில் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய அரவான் பொம்மையை படுக்க வச்சிருப்பாங்க. எங்கே நின்றிருந்தாலும் என கண்கள் அந்த அரவானை நோக்கியே போகும். இரவு கோயிலில் தங்குவதானால் பயத்தினால் விடியவிடிய தூக்கமே வராது.
வருடந்தோறும் மஹா சிவராத்திரி அன்று இந்தக் கோயில் திருவிழாவும், குடை இராட்டினமும் என் மனதில் வந்து பளிச்சிட்டுப் போவது வாடிக்கையாகிவிட்டது.
எனக்கு ஒரு நான்கைந்து வயது இருக்கலாம், அப்பா, அம்மா, தம்பியுடன் நானும் இத் திருவிழாவிற்கு போனேன். மற்ற எதுவுமே எனக்கு நினைவில்லை, குடை இராட்டினத்தைத் தவிர. இன்றும் இதன்மீது ஒரு ஈடுபாடு உண்டு.
நான்கு பெட்டிகள் உடைய சிறிய(அப்போதைக்கு அதுவே பெரியது) குடை ராட்டினம் ஒன்று குட்டீஸ்களை ஏற்றிக்கொண்டு சுற்றிசுற்றி வந்தது. நானும் ஏற வேண்டும் என்று அடம் பிடித்ததால்(எங்க வீட்ல இதுக்கு நான் ரொம்ப ஃபேமஸ்) என்னை ஏற்றிவிட்டனர். என் தம்பியும் அழ ஆரம்பித்ததால் அவனையும் என் பக்கத்தில் உட்கார வைத்து பார்த்துக்கொள்ள சொன்னார்கள். அவனுக்கு பேசக்கூட தெரியாது, இரண்டு வயதுக்கும் குறைந்த வயதுடைய குட்டிப் பையனாக இருந்திருக்கலாம்.
ராட்டினம் சுழல ஆரம்பித்தது. நன்றாகத்தான் இருந்தது. கொஞ்சம் வேகம் எடுத்ததும் உள்ளுக்குள் தம்பி விழுந்திடுவானோன்னு ஒரு பயம் ஓடியது. விழுந்தால் எப்படி பிடிப்பது ? என்னாகும்? என பல கேள்விகள் அடுக்கடுக்காய் வந்ததால் எனக்கு என்ன செய்வதென தெரியாமல் கத்த(இதிலும் நான் ரொம்ப ஃபேமஸ்) ஆரம்பித்துவிட்டேன்.
எங்கப்பாவோ பயந்துவிட்டார். ராட்டினம் சுற்றுபவரிடம் நிறுத்த சொல்லி சொன்னார். அவரோ இடையில் நிறுத்தமாட்டேன் என்றார். இரண்டு பேருக்கும் சரியான சண்டை. சண்டை முற்றி இராட்டினக்காரர் பாதியிலேயே நிறுத்தி என்னை வீசியடிக்காத குறையாகத் தூக்கிப் போட்டார். அதற்கும் சண்டை நடந்தது. இங்குதான் முதன்முதலில் குடை ராட்டினத்துடனான தொடர்பு ஆரம்பித்தது.
அதன்பிறகு வருடந்தோறும் ஆடி மாதத் திருவிழாவிற்கு கொஞ்சம் தொலைவிலுள்ள எங்கள் சித்தி வீட்டிற்கு போய் அங்கிருக்கும் மிகப்பெரிய குடை ராட்டினத்தில் ஏறி ஒருநாளைக்கே பலமுறை என சுற்றுவோம்.
பெண் பிள்ளைகளெல்லாம் இராட்டினத்திலுள்ள பெட்டியிலும், ஆண் பிள்ளைகள் எல்லாம் சுற்றிலும் உள்ள யானை, சிங்கம், புலி போன்ற உருவங்களில் உட்கார்ந்தும் சுற்றுவோம். விலங்கு உருவங்களில் உட்கார்ந்து சுற்ற எனக்கு தீராத ஆசை உண்டு.
அதன்பிறகு மேலிருந்து கீழாக சுற்றும் நான்கு பெட்டிகள், எட்டு பெட்டிகள் என இருக்கும் ராட்டினத்தில் (Ferris wheel ?) ஏற ஆரம்பித்தேன்.
திருமணத்திற்கு பிறகு பெங்களூரு போனபோது(மே மாதம்) அங்கு நடந்த பொருட்காட்சிக்கு போனோம். அங்கு ஜாயின்ட் வீல் (Giant Wheel) இருந்தது. அதில் ஏறுவதற்காக வரிசையில் காத்திருந்தோம். என் சகோதரியின் குடும்பமும் வந்திருந்தது.
எங்களுக்கு முன் சென்றவர்களை சுமந்துகொண்டு ஜாயின்ட் வீல் சுற்ற ஆரம்பித்ததும். நிறைய குரல்கள் பயத்தினால் கத்தியது கேட்டது. நான் இவரிடம் 'பெரியவங்க இப்படியெல்லாமா கத்துவாங்க !' என கமெண்ட்டிக் கொண்டிருந்தேன்.
எங்கள் முறை வந்தது. ஒரு சுற்று, இரண்டு சு.....ற்......று, மூன்று சு.....................ற்........................று, ......... ..... அவ்வளவுதான், நிறுத்தச்சொல்லி கத்த ஆரம்பித்துவிட்டேன்.
மேலே ஏறும்போது வெயிட்டாக உணர்வதால் ஒன்றும் தெரிவதில்லை. ஆனால் கீழே இறங்கும்போது பெட்டியை விட்டு தூக்கி வீசுவதுபோல் இருக்கவும் பயத்தினால் கண்ணை மூடிக்கொண்டேன். இவர்களெல்லாம் 'விதான் சௌதா தெரியுது பாரு' என ஏதேதோ சொன்னார்கள்.
நான் கண்களை மூடிக்கொண்டிருந்ததால் ஒன்றும் தெரியவில்லை, தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை..
சுற்றி முடித்து இறங்கி வரும்போது கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது. இவரோ "இந்தக் கூட்டத்துல யார் கத்தினாங்கன்னு யாருக்குத் தெரியும் ! அப்படியே தெரிஞ்சாதான் என்ன!" என்றார். ...ம்......அதுவும் சரிதான்.
இருந்தாலும் மனம் நினைத்தது, 'நம் அப்பா மட்டும் இங்கே இருந்திருந்தால் ........?'
எப்போதாவது வீட்டிலுள்ள குட்டீஸ்களுடன் கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடக்கும் பொருட்காட்சிக்கு போகும்போது இந்த ஜாயிண்ட் வீலில் அவர்களை ஏற விட்டுவிட்டு கீழேயிருந்து வேடிக்கை பார்ப்பதோடு சரி.
USA வந்த பிறகு ஏகப்பட்ட ride ல ஏறியாச்சு. முக்கியமா சொல்லணும்னா எங்க ஊர் பக்கத்திலுள்ள ஒரு amusement park ல் இருந்த ஒரு பெரிய குடை ராட்டினம் மாதிரி இருந்த celebration swings என்னைக் கவர்ந்தது.
ஏற்கனவே சொன்னேனே அந்த சிங்கம், புலி இருக்கை மாதிரியே, ஆனால் விலங்கு உருவம் இல்லாமல் தனித்தனியாக சேஃப்டி பெல்டுடன் கூடிய குட்டிகுட்டி ஸீட்டுகள் நீளமான இரும்பு சங்கிலியுடன். சுற்ற ஆரம்பித்ததும் ................ ஆஹா ! ..............மேலே உயரப் போய்விட்டது. நல்ல வேகம். பல நாள் ஆசை தீர்ந்ததில் அளவிலா மகிழ்ச்சி !
ஒவ்வொரு வருடமும் மஹா சிவராத்திரி வரும்போதும், அதைத்தொடர்ந்து கூடவே இந்த இனிய நினைவுகளும் வந்துபோவது சுகமானதாகத்தான் உள்ளது..
இதோ எங்கள் ஊரில் கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழா ஆரம்பித்து விட்டது... யார் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும்... ஒரு ரவுண்ட் சென்று வருகிறேன்... ஹிஹி...
ReplyDeleteரசனைக்கு வாழ்த்துக்கள்...
யார் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும், ஜாலியா உங்க ஊர் கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழாவில் ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க. வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
Deleteகுடை ராட்டினத்தில் நானும் உங்களுடன் சுற்றி வந்த மாதிரியே இருந்தது சித்ரா. மிகவும் அருமையாக உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு விட்டீர்கள். நான் ராட்டினத்தில் ஏறினால் கண்டிப்பாக தளி சுற்றல், வாந்தி என்று கலை கட்டி விடும். அதனால் பார்ப்பதோடு சரி, இந்த விளையாட்டெல்லாம்.
ReplyDeleteநன் முதலில் எழுதிய கருத்து வந்ததா தெரியவில்லையே!
ReplyDeleteகுடை ராட்டினம் உங்களுடன் சுற்றி வந்த மாதிரியே இருந்தது . எத்தனை எத்தனை அனுபவங்கள் குடை ராட்டினத்தில். எனக்கு குடை ராட்டினம் என்றால் ஒரே அனுபவம் தான். அதாங்க வாந்தி, தலை சுற்றல் தான்.
உங்க முதல் கருத்தும் வந்திருக்கிறது.
Deleteதலைசுற்றல், வாந்தி இருந்தால் கஷ்டம்தாங்க. குடை ராட்டினம் எப்போதும் என் ஃபேவரிட். ஆனால் மற்ற ரைட் எல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னேயே நிறுத்தியாச்சு. இல்லை போகாததால விட்டுட்டேனா தெரியல. இப்போ கொஞ்சம் பயமும் வந்திருப்பது உண்மைதாங்க. வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க.
குடை ராட்டினம் போன்றவற்றில் பலமுறை போயிருக்கிறேன்..... பயம் இருக்கிறதோ இல்லையோ சத்தம் போடுவது வழக்கம்! அதில் ஒரு ஆனந்தம் வந்து ஒட்டிக்கொள்ளுமே அதற்காக!
ReplyDeleteஇனிய நினைவுகள்.....
பயம் ஒருபக்கம் இருந்தாலும் இவற்றில் ஏறும்போது ஒரு த்ரில் + முடிக்கும்போது ஒரு சந்தோஷம் வந்துவிடுவதும் உண்மைதான். வருகைக்கும் நன்றிங்க.
Deleteநான் இதிலே (giant wheel) போனதே இல்லை. எங்க அக்கா ரொம்ப பயமுறுத்தி விட்டுடுவா. ஓரிரு தடவை குடை ராட்டினத்தில் பெட்டியில உட்கார்ந்து போயிருக்கேன். ஒருமுறை பெங்களூரில் எனது நாத்தனார் குழந்தைகளுடன் குடை ராட்டினம் போல ஒன்று - பெயர் மறந்துவிட்டது - மேலே கீழே, இந்தபக்கம் அந்தப்பக்கம் என்று கோணல் மாணலாகப் போகும். அதில் ஏறிவிட்டு என் நாத்தனார் பெண் அலற ஆரம்பித்து, அலறல் வாந்தியாக மாறி... போதுமடா சாமி! என்று ஆகிவிட்டது. அதற்கப்புறம் அதைப் பார்ப்பதுடன் சரி.
ReplyDeleteஉங்கள் மலரும் நினைவுகள் (கொழுக்கட்டை பண்ணினீங்களா?) ஜாலியாக இருக்கு, படிக்க!
நான் ஒருதடவ மட்டுமே giant wheel ல் போயிருக்கேன். சில ரைட்ஸ் எல்லாம் நெனச்சே பாக்கமுடியாது. எங்க பாப்பா அதுல ஏறி கூலா உட்கார்ந்திருப்பா.
Deleteவாந்தி பண்றாங்கன்னா பயமாத்தான் இருக்கும். கொழுக்கட்டை அடுத்த வாரத்துக்காக வெயிட் பண்ணிட்டிருக்கு. உங்க கருத்துமே படிக்க ஜாலியாத்தான் இருக்கு.
ஜயிண்ட் வீலில் மேலே போகும்போது எதுவும் தெரிவதில்லை. உயரத்துக்கு சென்று கீழே வரும்போது ஏற்படும் கலக்கம் இருக்கிறதே அப்பப்பா இப்போதெல்லாம் குழந்தைகள் முன் ரிஸ்க் எடுத்து மானத்தை ஜயிண்ட் வீலில் ஏற்ற மனம் ஒப்புவதில்லை
ReplyDeleteகேட்டுப்பாருங்க, உண்மையில் நீங்க கத்துறது உங்க பிள்ளைங்களுக்கு சந்தோஷமாத்தான் இருக்கும். அதனால விடாம ஏறுங்க. வருகைக்கும் நன்றிங்க.
Delete